என்எல்சி- நெய்வேலி.
உலகிற்கே மின்உற்பத்தி-வெளிச்சம்!
நிலம் கொடுத்தவர் வாழ்வோ இருட்டு!
தமிழகத்தின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட், இயற்கை எழில் கொஞ்சிய, ஆர்ட்டீசியன் ஊற்றுகள் நிறைந்த,பத்தடி ஆழத்திலேயே நீர் பெருகி நின்ற வளமான செம்மண் பூமியை விழுங்கி நிற்கிறது.
சமீபத்தில் 2,500 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியதாக பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால் அந்த லாபத்திற்கு பின்னே லட்சக்கணக்கான மக்களின் கண்ணீரும், உயிர் வாதையும் அடங்கியுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்!
நெய்வேலி 3 திறந்தவெளி சுரங்கங்களை கொண்டது. அந்த சுரங்கங்களில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு சுரங்கங்களை விரிவாக்கம் என்ற பணியை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான என்எல்சி செய்து கொண்டே வருகிறது.
தமிழகத்தின் முன்னால்தென் ஆற்காடு, தற்போதைய கடலூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 150 கிராமங்களுக்கு மேல் உள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அவர்கள் காலடியில் புதைந்து கிடந்த பழுப்பு நிலக்கரியை வெட்டிஎடுத்து அதிலிருந்து மின்சார தயாரிப்பு மற்றும் நிலக்கரியின் உப பொருட்களை பிரித்து விற்பனை செய்யும் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.
ஏற்கனவே இரண்டு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அதன் விரிவாக்கம் உள்ளபோது தற்போது நான்காவதாக இரண்டாவது சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்கு கம்மாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 50 கிராமங்களை விழுங்குவதற்கு என்எல்சி தயாராகிக்கொண்டு உள்ளது.
தமது சொந்த நிலத்தில் மணிலா, உளுந்து, நெல் மற்றும் காய்கறிகளை பயிரிட்டுக்கொண்டு வாழ்ந்து வரும் மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்துபிடுங்கி எறிய என்எல்சி நிறுவனம் தயாராகிக் கொண்டுள்ளது. அதிகபட்ச நட்ட ஈடு என்ற வாக்குறுதியுடன் களத்தில் இறங்கி நிலங்களை அபகரித்து வருகிறது.
பல தலைமுறைகளாக ஒரு இடத்தில் வாழ்ந்த மக்களை அங்கிருந்து புடுங்கி எரியும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை திடீரென்று மாற்றிக்கொள்வது சாத்தியமே கிடையாது. குறைந்தபட்சம் என்எல்சி க்கு சொந்தமான 1000 ஏக்கர் நிலத்தில் உரிய வசதிகளுடன் கூட்டுப் பண்ணை முறையில் விவசாயத்தை நடத்துவதற்கு என்எல்சி தயாராக வேண்டும் என்று அதன் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க பொதுமேலாளர் திரு.துரைக்கண்ணு முன்வைப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வாதாரத்தையும் நலனையும் பாதிக்காத வகையில் கட்டமைக்கப்பட வேண்டும்.கார்ப்பரேட்டுகளுக்கோ அல்லது பொதுத்துறை நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் அதிகாரவர்க்க முதலாளித்துவத்திற்கோ சேவை செய்வதாக இருக்கக் கூடாது.
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்