பத்திரிக்கை செய்தி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளியில் அமைந்திருக்கும் எஸ் கே எம் பூர்ணா ஆயில் நிறுவனத்தில் வேலை புரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது கொண்ட கம்மோத்ராம் என்ற தொழிலாளி ஆவின் லாரி பின்புறமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தை நிர்வாகத்தின் மூலம் அறிந்து அங்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்க “இறப்புக்கு நீதி வேண்டும், உரிய இழப்பீடு வேண்டும்.” எனத் தொழிலாளர்கள் அணிதிரண்டு முற்றுகையிட்டனர். நிர்வாகமானது, “உயிரிழந்த தொழிலாளருக்கு 12 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் தொகை மட்டும்” பெற்றுக் கொடுப்பதாக கூற, வெறும் வாய் வாக்குறுதி வேண்டாம், காசோலை அல்லது பணமாக கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு, நிவாரணம் கேட்டு வட மாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதை விரும்பாத எஸ்.கே.எம் நிறுவனத்தின் கண்ணசைவிற்கு காத்திருந்த காவல்துறையினர் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலை தடுத்த தொழிலாளர்களை சமூக விரோதிகளாக சித்தரித்து சிலர் பேசியும், எழுதியும் வருகின்றனர். வடமாநில தொழிலாளிகளை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கின்ற, நடத்துகின்ற மனநிலையுடன் வாழ்வது இயல்பாகி விட்டதே இதற்கு காரணம். தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் கூலி குறைப்பு என்கிற சுரண்டலினூடே பன்னிரண்டு மணி நேரம் அவர்களது உழைப்பு சுரண்டப்படும் சூழலிலும் சிக்கித் தவிக்கின்றனர்.

பொருளாதார ரீதியிலான பாதுகாப்பற்ற நிலையில், அவர்களுக்கு மிஞ்சியிருக்கும் அச்சத்தின் காரணமாகவே பிணத்தை எடுக்க விடாமலும், பிணம் இருக்கும் போதாவது அந்த குடும்பத்துக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்திலும் தடுத்துப் போராட்டத்தில் ஈடுபடும் செயல் நடந்தேறியுள்ளது. இந்த போராட்டம் நிச்சயமாக ஒருநாள் நிகழ்வல்ல. பிணத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர்கள் போராடும் அளவிற்கு செல்வதற்கு அவர்கள் மீதான தொடர் அடக்குமுறையின் வெளிப்பாடு அது. அந்தளவிற்கு நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதே அவர்களது இந்த போராடும் நிலைக்குக் காரணம்.

Erode issue press 001

வடமாநில தொழிலாளர்களின் பிணங்களின் மீது கட்டப்படும் பாலங்கள், ஆலைகள், ஆலைகளில் எடுக்கப்படும் உற்பத்தி என தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் ரத்தமும் சதையுமாக இரண்டற கலந்துவிட்டனர். அவர்கள் இல்லாமல் தமிழகம் உறங்க முடியாது; விழிக்கவும் முடியாது. இன்றும் குறைந்த கூலிக்கு வடமாநில தொழிலாளர்களை தேடும் தமிழக முதலாளிகள் இல்லாமலில்லை. எஸ்.கே.எம். நிறுவனத்தில் நடந்த இந்த சம்பவம் கூட, தமிழ்நாடு போலிசை வடமாநிலத் தொழிலாளர்கள் அடித்து விரட்டியதாக அந்தத் தொழிலாளர்களைக் குற்றவாளியாகச் சித்தரித்து செய்திகள் பரப்பப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக அந்தத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளை லாபமீட்டும் முதலாளிகள் மீது எந்த கோபமுமின்றி, அத்துக்கூலிக்கு வேலை பார்க்கும் தொழிலாளிகள் மீது வர்க்க கண்ணோட்டமின்றி, வெளிமாநிலப் பிரச்சினையாக மாற்றி வெறுப்பை உமிழ்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.

வேலையிடத்தில் நிகழ்த்தப்படும் கொடுமைகளைத் தாண்டி, வடமாநில தொழிலாளர்கள் வாழும் கொட்டடி கூடாரங்களை நாம் பல்வேறு இடங்களில் பார்த்திருப்போம். இடம் சுத்தமாக இருக்காது. அவர்கள் வாழ்விடத்தை, இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டார்கள், என அவர்கள் மீது வெறுப்பைக் கக்கும் கண்ணோட்டத்துடன் நடத்தப்படும் பல்வேறு வன்முறைகள் உள்ளிட்டவற்றின் உச்சபட்சம்தான் இதுபோன்ற கொலைகள். இதனை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது. அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் கொத்தடிமைத்தனமான உழைப்புச் சுரண்டலின் காரணமாகவே அவர்களது உணவு முறை, பழக்க வழக்கம், வாழ்விடம் அமைந்துள்ளது.

அழுக்கானவர்கள். எனவே அவர்கள் குற்றவாளிகள் என்ற முன்முடிவுடன் இயல்பாக வியாபித்திருக்கும் இந்த பார்ப்பனீய சாதிய அடுக்கு மனோநிலை தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு இசைவாகவே அமையும். பெருகிவரும் கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய இந்த நேரத்தில் மொழி, சாதி, மதம் என்ற பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், சுரண்டலுக்கு எதிராக அவர்களுடன் கரம் கோர்த்து நிற்பதே தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமையாகும். அப்போது தான் இன்று நாட்டையே அச்சுறுத்தும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தமுடியும்.

இப்படிக்கு,
இரா.லோகநாதன்,
மாநில பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 94444 42374

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here