செப்டம்பர் 1989-ல், அன்றைய திமுக ஆட்சியில் ஊரகப்பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துகளைப் பேணிக் காத்திடல், சிறு சேமிப்பு திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக  ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற அடிப்படையிலே, மொத்தம் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளுக்கு 25 ஆயிரத்து 234 மக்கள் நல பணியாளர்கள் அப்போது நியமனம் செய்யப்பட்டார்கள். முதன்முதலாக இவர்களின் மாத சம்பளமே ரூ200 தான்!

இந்த மக்கள் நலப் பணியாளர்கள் மாநில உள்துறையின் கீழ் கிராம பஞ்சாயத்துக்களுக்காக  நியமிக்கப்பட்டனர்.  அவர்கள் முதியோர் கல்வியை ஊக்குவிப்பது, மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்குவது, தெரு விளக்குகளை பராமரிப்பது, சத்துணவு கூடங்களை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஆயினும் அவர்கள், மூன்று தடவை அதிமுக ஆட்சியின் கீழ் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் அமைப்பினர், ”எங்களுக்கு, மக்கள் நலப் பணிகளில் 10 முதல் 25 வருட அனுபவம் உள்ளதால் எங்களை கரோனா வைரஸ் தடுப்புப்பணியில் ஊதியமின்றி தன்னார்வலராக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். எனவே, எங்கள் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது!.

முதன் முதலாக 1991-ல் இப்பணியிடங்கள் அன்றைய அ.தி.மு.க. அரசால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு பின்பு மீண்டும் இப்பணியிடங்கள் 1997 அன்று தோற்றுவிக்கப்பட்டு ரூ 500 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு 1,500 வரை உயர்த்தப்பட்டது!. பின்னர் மீண்டும் அமைந்த அ.தி.மு.க. அரசால் 2001 ஆம் ஆண்டு  மீண்டும் மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள்  ரத்து செய்யப்பட்டன.

2006-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மீண்டும் இப்பணியிடங்களைத் தோற்றுவித்து, ஊராட்சிக்கு ஒருவர் என 12 ஆயிரத்து 618 மக்கள் நல பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. படிப்படியாக இவர்கள் சம்பளம் உயர்த்தப்பட்ட நிலையில், கடைசியாக 2011 ல் ரூ 5,000 ஊதியம் பெற்றனர்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இறுதியாக 2011-லும் அன்றைய ஜெயலலிதா அரசால் மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன.

இரவு தெரு விளக்கு எரிவது, குடி தண்ணீர், வீட்டு வரி, சிறு சேமிப்பு, சுகாதார திட்டம் கழிப்பறைவசதி திட்டம் போன்றவற்றை பராமரிக்கின்ற பணிகளில் இந்த மக்கள் நலப் பணியாளர்கள் செயல்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ”மக்கள் நலப் பணியாளர்கள் என்ற பெயரில் கட்சிக்காரர்களை நியமித்து அரசு கஜானாவிலிருந்து சம்பளம் தந்தது திமுக அரசு” என பலத்த குற்றச்சாட்டுகள் பல தரப்பிலும் தொடர்ந்து வைக்கப்பட்டன!

அதிமுக அரசாங்கம் 13,500 மக்கள் நலப் பணியாளர்களை  2011 ஆம் ஆண்டு நவம்பர் 8 ல் பணிநீக்கம் செய்த போது வேலை நீக்கப்பட்டதன் உடனடி விளைவாக, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்துபோனார். இன்னொரு ஊழியர் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். பின்னர் இந்த மக்கள் நலப் பணியாளர்கள் தற்கொலை குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன! இந்த சொற்ப ஊதியத்திற்காக விலை மதிப்பற்ற தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட இந்த எளிய மனிதர்கள் மீது ஏனோ கடைசி வரை ஜெயலலிதாவிற்கு இரக்கமே பிறக்கவில்லை! ஆனால், இவர்களும் போராடுவதை நிறுத்தவில்லை!

மக்கள் நலப் பணியாளர்களுக்கான சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள்!

இ‌ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுகுணா, மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 31.5.2012 வரை பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாலும், இந்த விவகாரத்தின் உண்மை நிலையை கருதியும், அவர்களை பணிநீக்கம் செய்து அரசு பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இ‌ந்த இடைக்கால தடையை எதிர்த்து அதிமுக அரசு போட்ட வழக்கை ‌விசா‌ரி‌த்த தலைமை ‌‌நீ‌திப‌தி இ‌‌க்பா‌ல் மற்றும் நீதிபதி சிவஞானம் கொ‌ண்ட அம‌ர்வு, த‌மிழக அர‌சி‌ன் மேல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌நிராக‌ரி‌த்தது. ”ஒ‌வ்வொரு முறையு‌ம் உதை‌த்து‌ ‌விளையாட ம‌க்க‌ள் நல‌ப்‌ப‌ணியாள‌ர்க‌ள் கா‌ல்ப‌ந்து அ‌ல்ல” எ‌ன்று‌ம் ‌‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌ப்‌பி‌ல் கூ‌றியது பெரும் கவனம் பெற்றது!

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் , நீதிபதி சுகுணா உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சுகுணா இறுதி விசாரணை நடத்தினார்.

மக்கள் நலப் பணியாளர்கள் சார்பாக வக்கீல்கள் வைகை, சந்திரகுமார் ஆகியோரும், அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மூத்த வக்கீல் என்.ஆர்.சந்திரன் ஆகியோர் வாதாடினார்கள்.  ”இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறவில்லை. ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றெல்லாம் வாதிட்டனர்!

முடிவாக நீதிபதி சுகுணா அளித்த தீர்ப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது:

இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்த்த போது, மக்கள் நல பணியாளர்கள் கடந்த 1989ம் ஆண்டு முதல் ஆட்சி  மாற்றங்களின் போது மீண்டும், மீண்டும்  பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது.

இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு அரசு கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை.  தமிழக அரசு இதில் எந்திரத்தனமாக நடந்துள்ளது என்றும் தெரிகிறது. இப்படி பல ஆயிரம்  மக்கள் நல பணியாளர்கள் ஒரே இரவில் பணியில் இருந்து தூக்கி எறியப்பட்டது  சட்ட விரோதமானது. பணி நீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது. அதை ரத்து செய்கிறேன். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அவர்களுக்கு சேர வேண்டிய அனைத்து பணி  பலன்களை அரசு வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டத்தின் கடனை வசூல்செய்வது, போலியோ தடுப்பு முகாம், எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடத்துவது, சிறுசேமிப்பு திட்டதின் பயனாளிகளுக்கு வழங்குவது, மாற்று திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு உதவிகளை பெற்று தருவது, அரசின் பல்வேறு நல திட்டங்களை கிராமப்புற மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, ஆகிய பணிகளை மக்கள் நல பணியாளர்கள் செய்கிறார்கள்.  எனவே அவர்களுக்கு கடந்த அரசு பணி வரை முறை செய்தது. அரசின் இன்சூரன்ஸ் திட்டத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாயப்பு உறுதி திட்டத்தை கிராமப்புறத்தில் அமல்படுத்தும் பணிகளை அவர்கள் செய்துள்ளனர். எனவே, மக்கள் நல பணியாளர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்.”

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த தீர்ப்பு மக்கள் நலப் பணியாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது! ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நிலைக்க அதிமுக அரசு ஒப்பவில்லை!

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா அரசு அதிரடியாக உச்ச நீதிமன்றம் சென்றது! உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கூட இவர்கள் மீண்டும், மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வியப்பு தெரிவித்தனர். பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிலர் வேறு வேலைகள் தேடிச் சென்றுவிட்டனர். மற்றும் பலரோ இந்த வேலை மீண்டும் கிடைக்கும் என்று இடையறாது மாவட்டம் தோறும் போராடி வந்தனர்!

இவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டதால் திமுக விசுவாசிகள் என்ற நினைப்பும் அதிமுக அரசுக்கு இருந்துள்ளது. நிஜத்தில் அன்றாடம் காய்ச்சிகளான இவர்களை ஜெயலலிதா பணி நீட்டிப்பு செய்திருந்தால், அவருக்கும் விசுவாசம் காட்டி இருப்பார்கள் என்பதே யதார்த்தம்! தங்களுக்கு யார் கஞ்சி ஊற்றுகிறார்களோ, அவர்களையே கடவுளாக பாவிக்கும் நிலையில் தான் இன்றளவும் ஏழைகள் உள்ளனர்!

இந்த முறை திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது தொடங்கி இந்த மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டன! முதல் பட்ஜெட் உரையிலேயே இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என பி.டி.ஆர்.தியாகராஜன் தெரிவித்து இருந்தார். முதல்வர் ஸ்டாலினும் இதை உறுதிபடுத்தி இருந்தார்!

இந்த வழக்கு இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின், ’’மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள “வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்” என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நல பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும்.இதில் இறந்து போனவர்களின் வாரிசுகள் விரும்பினால் அவர்களுக்கும் பணி வழங்கப்படும்!

மக்கள் நல பணியாளர்கள் ஏற்கனவே கிராம ஊராட்சி பணிகளில் பணியாற்றியதை கருத்தில் கொண்டு, ரூ 5,000 மதிப்பு ஊதியத்துடன் அவர்களுக்கு கிராம ஊராட்சி பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கவும், இதன்படி இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டு மொத்த மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.’’ என தெரிவித்துள்ளார்!

உண்மையில் ஊராட்சிகளில் மக்கள் நலப் பணியாளர்களுக்கான தேவைகள் உள்ளன! இது மிகச் சிறந்த ஊரக வேலை வாய்ப்பளிக்கும் திட்டம் தான்! எளிய மக்கள் வேலைவாய்ப்பு பெறும் இதில் இயன்ற வரை கட்சி ஆதிக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். இவர்களை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் கிராம மக்களுக்கும் நன்மை கிடைக்கட்டும்!

  • சாவித்திரி கண்ணன்

நன்றி: அறம் இணைய இதழ்

1 COMMENT

  1. மக்கள் நலப்பணியாளர்கள் வேலை தருவதை மகிழ்வோடு பகிரும் மக்கள் அதிகாரம்.

    கொராணவுக்காக பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் வீட்டிற்கு அணுப்பப்பட்டதை பற்றி பேச மறுப்பது ஏன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here