அதிகரிக்கும் தற்கொலைகள்; அலட்சியப்படுத்தும் மோடி அரசு

கொரானா ஊரடங்கு, தொழில் முடக்கம் என பல காரணங்களால், தொடர்ச்சியான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆகையால், வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க, கடன் தொல்லையால் செய்யப்படும் தற்கொலைகளை தடுக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என மாநிலங்கவையில் (09/02/2022) காங்கிரசைச் சேர்ந்த ராகுல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை இணையமைச்சர் “கடந்த 2018 முதல் 2020 வரைக்குமான  மூன்று ஆண்டுகளில் வேலையின்மை, திவால் அல்லது கடன் காரணமாக 25000 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  இதில் கடன்சுமையால் 16091 மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  வேலையில்லாத காரணத்தால் 9140 தற்கொலை செய்துள்ளனர். குறிப்பாக கொரானா காலத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முயல்வதன் மூலம் தீர்வு காண முயல்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

தற்கொலைகளைத் தனித்தனியாக ஊடகங்களில் பார்க்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் ஒவ்வொரு நாளும்  எந்தவித சலனமும் இல்லாமல் கடந்துபோகிறோம்.  இப்படி தொகுத்து, சொல்லும் பொழுது, எத்தனை ஆயிரம் மனித உயிர்கள், எல்லாம் நம்மைச் சுற்றி வாழ்ந்த சகமனிதர்கள் என யோசிக்கும் பொழுது பதைபதைக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் ஒவ்வொரு வருடமும் எட்டு லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை 2018ல் அறிவித்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 2192 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.  இதில் இந்தியாவின் பங்கு (2019ல்) 1,53,052 . உலகில் 100 பேர் தற்கொலை செய்கிறார்கள் என்றால், அதில் 19பேர் இந்தியாவில்  தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 420 பேர் தற்கொலையால் சாகிறார்கள். ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னாலும் 25பேரை தற்கொலையிலிருந்து  சக உறவுகள், மனிதர்கள் காப்பாற்றிவிடுகிறார்கள். ஒரு தற்கொலையால், சொந்தங்கள், நண்பர்கள் என  135 பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது உலக சுகாதார உலகம்.  அப்படியென்றால் இதன் தீவிரத்தை நம்மால் உணரமுடியும்.

மோடி அடுத்தடுத்து அறிவித்த திட்டங்களாலும், கொரானா காலத்தில் எடுத்த மோசமான நடவடிக்கைகளாலும் இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் தற்கொலைகளும் அதிகரித்திருக்கிறது என்பதை  அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே நிருபிக்கின்றன.

மாணவர்களின் தற்கொலைகள்

ஐஐடி, ஐஐஎம், இந்திய அறிவியல் கழகம் போன்ற இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கல்லூரியிலும், விடுதியிலும் தற்கொலை செய்துகொண்டவர்களைத் தான் கணக்கில் எடுத்துள்ளார்கள். வீடுகளில், வெளியிடங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்கிறார் திராவிட பகுஜன வேதிகாவின் நிறுவனரும் தலைவரும் ஹைதராபாத் மத்திய பல்கலை கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி அறிஞருமான முனைவர் ஜிலுகர ஸ்ரீனிவாஸ்.

மாணவர்களின் பெரும்பாலான தற்கொலைகளுக்கு சாதியப் பாகுபாடு தான் காரணம். மாணவர்களிடையே, ஆசிரியர்களிடம் இருக்கும் ஆதிக்க சாதி மனோபாவத்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை இழிவுப்படுத்துகிறார்கள் என்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் மூத்த மாணவரும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் தலைவருமான முன்னா கூறுகிறார்.

தற்கொலை செய்த மாணவர்களை வகைப்பிரித்து பார்த்தால், 24 மாணவர்கள் பட்டியல் சாதியினர் (SC),  41 மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் (OBC),  பட்டியல் பழங்குடி பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் மூவர்,  சிறுபான்மையினர் பின்னணி சார்ந்தவர்கள் 3 மாணவர்கள் ஆக 58% மேலே முன்னா சொன்னது உண்மை என விளங்கும்.

தற்கொலைகளுக்கான காரணங்களை ஏற்றுக்கொள்ளும் அரசு, தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்பொழுதும் போல ”மகிழ்ச்சி, உடற்பயிற்சி, யோகா” என மேலோட்டமாகவும், அலட்சியமாகவும் பேசுகிறது.  எப்படி தடுப்பது? என ஆய்வு செய்த குழு,  ”விடுதிகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளை கழட்டிவிடுங்கள்” என்று சொன்ன ஆலோசனைகளில் ஒன்றை மட்டும் நாட்டின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விடுதி அறைகளில் உடனடியாக அமுல்படுத்தியிருக்கிறது.

விவசாயிகளின் தற்கொலைகள்

இந்தியாவில் மற்ற பிரிவினர்களின் தற்கொலைகளை விட விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம் என்பது பலமுறை அம்பலமான விசயம். 1995  துவங்கி 2015 இருபது ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இதில் நிலம் உள்ளவர்கள் தான் விவசாயிகள் என்ற கணக்கில் வருவார்கள்.  ”நாம செத்துப்போனா, நம்ம குடும்பம் தெருவில் நிற்கும் என நினைத்த விவசாயி தன் குடும்பத்தோடு சாகும் பொழுது குடும்ப உறுப்பினர்கள் இந்த தற்கொலை பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள்” என்பது முக்கிய செய்தி.

மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலைகள் வெளி உலகத்திற்கு அம்பலமானதும், தன் ஆட்சியில் இந்த பிரச்சனை வந்துவிட கூடாது என ”புத்திசாலித்தனமாக” யோசித்த மோடி அரசு, கணக்கெடுப்பு முறையையே மாற்றிவிட்டது என்கிறார் ஊரக விவகார ஆய்வாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான சாய்நாத். உழவர்களில் கணிசமானவர்களை, மற்ற தொழில்புரிவோர் எனும் பிரிவுக்கு மாற்றினார்கள். இதனால், உழவர் தற்கொலையின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. ஆனால், ’மற்ற தொழில் புரிவோர்’ வகையினரின் தற்கொலை 128 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது” என மர்மத்தை போட்டு உடைத்தார். பிறகு 2016ல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சார்பில் உழவர்கள் தற்கொலை விவரத்தை மட்டும் வெளியிடாமல் அரசு நிறுத்தி வைத்தது.

ஆக இந்தியாவின் முதுகெலும்பாய் இருக்கிறார்கள் என விவசாயிகளின் தற்கொலைகளின் தகவலை தான் இத்தனை அலட்சியமாக ஆட்சியாளர்கள் கையாள்கிறார்கள். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் திட்டங்களை அறிவிக்காமல், விவசாயிகளின் தற்கொலைகளை அதிகரிப்பதற்கு போட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வெயில், மழை, பனி, கொரானா என  எல்லாவற்றையும் துணிவாக எதிர்கொண்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடினார்கள். விளைவு அரசு பின்வாங்கியது.

இதோ தற்கொலை செய்துகொண்ட பல ஆயிரம் உழவர்களில் ஒரு உழவர் சாவதற்கு முன்பு எழுதிய தற்கொலை குறிப்பு

“அரசியல்வாதிகளும், பெரும் தொழிலதிபர்களும் பாக்கி பணத்தைக் கட்டாமல் இருந்தால் அரசு அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முதலாளிகள் கடன் வாங்கினால் கடனை திருப்பிக் கட்ட அவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கின்றனர். மேலும் அவரது கடன்களைத் தள்ளுபடியும் செய்கின்றனர். ஆனால் ஒரு சாதாரண மனிதன் சிறிய தொகை கட்டாமல் விட்டால் கூட அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று விளக்கம் கூட கேட்பதில்லை.

கொரோனா காரணமாக என்னால் பாக்கி தொகையைக் கட்ட முடியவில்லை. சிறிது கால அவகாசம் தந்திருந்தால் நான் அந்த தொகையைக் கட்டி இருப்பேன். என்னால் எனது குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய உடல் பாகங்களை விற்று பாக்கி தொகை எடுத்துக் கொள்ளவும்”

–     ராஜ்புத், விவசாயி, மத்திய பிரதேசம், 02/01/2021  

வேலையின்மை, கடன்சுமையில் தற்கொலை செய்தவர்களின் சடலங்களை தொடர்ந்து சென்றால், தோண்ட தொண்ட குழந்தைகளின் உடல்கள் கிடைக்க துவங்கி மூத்த குடிமக்களின் உடல்கள் வரை வந்துகொண்டே இருக்கின்றன.  தற்கொலை என்பது சுயவிருப்பத்தில் தன்னைத் தானே கொலை செய்வது என்கிறது மருத்துவ உலகம்.  தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் கொடுத்த குரல்களையும், கதறல்களையும் இந்த அரசுகள் கேட்க தயாரில்லை. அதனால் இவைகளை தற்கொலையில் எப்படி சேர்க்கமுடியும்?  ”உயர் கல்வி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆகையால் அங்கு நடந்த மாணவர்களின் தற்கொலைகளுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் மத்திய பல்கலை கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி அறிஞருமான முனைவர் ஜுலுகர ஸ்ரீனிவாஸ்.  மற்ற பிரிவினர் மக்களின் தற்கொலைகளுக்கும் ஆள்கிற மோடி அரசு தான் பொறுப்பேற்கவேண்டும்.

இவைகளைப் பற்றியெல்லாம் எதற்கும் கவலைப்படாத  ஆளும் காவி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின், தரகு முதலாளிகளின் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்கிறார்கள்.  அவர்கள் இட்ட கட்டளையை உடனே நிறைவேற்றுகிறார்கள். மக்களை திசை திருப்புவதற்கு நாட்டில் கலவரங்களை தூண்டிவிடுகிறார்கள். நாட்டை எப்பொழுதும் பதட்டமாகவே வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரிவிலும் பல ஆயிரங்களில் தற்”கொலை”கள் செய்த மக்களின் பிரதிநிதிகள் நாம் தாம். அவர்களின் குரல்களின் நியாயத்தை நாம் தாம் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் ஓங்கி ஒலிக்கவேண்டும்.  அதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் நீதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here