வெளிநாட்டில் மருத்துவப் படிப்பும், நிறைவேறாத மருத்துவர் கனவும்!


ந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனது மகன்/மகள் மருத்துவராக வேண்டும் என்பது சில பெற்றோர்களின் கனவாக உள்ளது. சில மாணவர்களும் அதை இலட்சியமாக கொண்டுள்ளனர். பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவர் ஆகிவிடலாம் என்ற நிலை இருந்தது. அதற்கு ஆப்பு வைக்கும் வகையில்தான் “NEET” தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

இத்தேர்வில் CBSE மாணவர்களும், தேர்வுக்கான தனிப்பயிற்சி பெறும் மாணவர்களுமே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இப்போது NEET தேர்வில் எடுக்கும் மதிப்பெண்தான் அரசுக் கல்லூரியை உறுதி செய்கிறது. அக்கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் கட்டணம் அதிகம் செலுத்தி தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்கின்றனர். அந்த வாய்ப்பும் கிடைக்காதவர்கள் பல இலட்சங்களைக் கொட்டித்தான் மருத்துவராக முடியும்.

இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 84,375 இடங்கள் உள்ளன. இதில் 284 அரசு கல்லூரிகளில் 43,310 இடங்களும், 269 தனியார் கல்லூரிகளில் 41,065 இடங்களும் உள்ளன. இவற்றில் தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே மிக அதிகமாக 69 மருத்துவக்கல்லூரிகள் (அரசு – 37 + தனியார் 32) உள்ளன. முன்மாதிரி மாநிலம் என பொய்யாக கட்டமைக்கப்பட்ட குஜராத்தில் மொத்தம் 32 ( அரசு – 15 + தனியார் – 17) தான் உள்ளன. மாபெரும் மாநிலமான உ.பி யில் இருப்பவை 55 தான். தமிழகத்தில் உள்ள 10,375 இடங்களை வட இந்தியர்கள் பங்கு போடத்தான் NEET அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டு NEET தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். இதில் 8 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் 10% மாணவர்களுக்கு மட்டும்தான் இங்கு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. எஞ்சிய 90% மாணவர்களில் சிலர்தான் தங்களது மருத்துவக் கனவை நிறைவேற்ற வெளிநாட்டு கல்லூரிகளில் சேருகின்றனர். இங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் செலவாகிறது ஆனால் வெளிநாடுகளில் இது 4 முதல் 5 லட்சம் தான். இதுதவிர தங்குமிடம் மற்றும் உணவுக்கு கூடுதல் செலவாகலாம். இருப்பினும் ஒப்பீட்டளவில் இது குறைவுதான்.

அப்படி ரசியா, உக்ரைன், அர்மீனியா, சீனா, கஜகஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் இங்கிருந்து சென்று படிப்பை முடிப்பவர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மனஉளைச்சலில் தவிக்கின்றனர். அவர்கள் இந்தியாவில் மருத்துவராக பயிற்சி செய்ய வேண்டுமெனில், இங்கு நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் ( Foreign Medical Graduate Exam) வெற்றி பெற வேண்டும். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்தில் படித்துவிட்டு வருபவர்கள் இத்தேர்வை எதிர்கொள்ளத் தேவையில்லை. இத்தகைய தகுதித்தேர்வை தேசியத் தேர்வு வாரியம் ( National Board of Examination) நடத்துகிறது. இது முன்பு இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India) என்று இருந்தது.

இந்த தேர்வை எழுதுபவர்களில் 20 சதவீதம் பேர்தான் தேர்ச்சி பெறுகின்றனர். 2013-க்கு முன்பு வரை ஓரளவு எளிதாக இருந்த இத்தேர்வு, மோடியின் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் மிகக் கடுமையானதாக மாறியது. இதில் தேர்ச்சி பெற தவறும் 80 சதவீத மருத்துவ மாணவர்கள் தங்களது மருத்துவர் கனவை கைவிட்டு, காலத்தை வீணாக்காமல் வேறு தொழிலில் அல்லது வேலையில் ஈடுபடுகின்றனர். இத்தேர்வுக்கான பாடத்திட்டம் என்று எதுவும் வரையறுத்துக் கூறப்படவில்லை. உயர் மருத்துவ பட்ட ( Post Graduate ) பாடதிட்டத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுவதுண்டு. பத்தாம் வகுப்பு மாணவனுக்கு 12 ம் வகுப்பு பாடத்தில் கேள்வி கேட்டால் எப்படித் தேற முடியும்? மேலும் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. மறுமதிப்பீடு கோரவும், விடைத்தாளை கேட்டுப் பெறவும் விதிகளில் இடமில்லை. இப்படி வடிகட்டும் நோக்கில் இத்தேர்வு மிகவும் கடினமாக இருப்பதால் தேர்வில் வெற்றி பெறுவது பெரும்பாலானவர்க்கு குதிரைக் கொம்பாகவே உள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் (Medical Council of India) முன்னாள் நிர்வாக இயக்குநர் Dr. விபின் பாத்ரா, “1998 க்கு முன் இத்தகைய தேர்வு இல்லை. மருத்துவ உயர்படிப்புக்கு மட்டும் அரசே மாணவர்களை தேர்வு செய்து சோவியத் மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கு அனுப்பியது. ஆனால் இங்கு மருத்துவர்களின் தேவை அதிகமாகவும், கல்லூரிகள் குறைவாகவும் இருந்ததால் பல நாடுகள் இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தன. நிறைய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு இங்கு பயிற்சி செய்து வந்த நிலையில்தான், 1998-ல் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது” என்கிறார்.

அந்த ஆண்டில்தான் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தன. அப்போது ரஷ்யா மட்டுமே இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது. அதனால் அங்கீகார ரத்துக்கு எதிராக அழுத்தம் கொடுத்தது. எனவே 2001-இல் வெளிநாட்டில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான தகுதித்தேர்வு அறிமுகமானது.

இதை எதிர்த்து சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் தேர்வை ரத்துசெய்ய முடியாது என்றும், பதிலாக இந்தத் தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சலுகையையும் நீதிமன்றம் வழங்கியது. இதன்பிறகு இத்தேர்வை பத்து முறை தொடர்ந்து எழுதி தோல்வி அடைந்தவர்களும் உண்டு. இரண்டு, மூன்று முறை முயன்று பார்த்துவிட்டு, சலிப்புற்று மேலும் பொருளாதார நெருக்கடியால் மருத்துவர் கனவை கைவிட்டவர்களும் உண்டு. ஏனெனில் வெளிநாட்டில் 6 வருடம் படிப்புக்காக செலவிட்டு, இங்கு வந்து எத்தனை ஆண்டுகள் சம்பாதிக்காமல் வெட்டியாக அமர்ந்திருக்க முடியும்?

அப்படியே இந்தத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட நடைமுறை அனுபவம் (Practical Experience) இல்லாததால் மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதற்கும் சில இலட்சங்களை அவர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. ரசியா, ஆர்மீனியா, ஜார்ஜியா போன்ற நாடுகளின் மருத்துவ கல்லூரிகளுக்கு நேரில் சென்று பார்த்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலாளராக பணியாற்றிய டாக்டர் விஷ்வாஸ் மேத்தா,” அங்கு சேருவதற்கு நுழைவுத்தேர்வும் இல்லை. கட்டணமும் அதிகமில்லை. அதேபோல வெளிநாட்டு மாணவர்கள், அங்குள்ள நோயாளியை தொட அனுமதியும் இல்லை. எனவே ஊசி போடுவது, கதீட்டர் பொருத்துவது, பிரசவம் பார்ப்பது என்பதில் செய்முறை அனுபவம் இருக்காது” என்கிறார்.

இவ்வளவு சிக்கல்கள் இருப்பது தெரிந்தும் எதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் என்றால், எப்படியாவது மருத்துவர் ஆகிவிட்டால் நன்கு சம்பாதிக்கலாம், சமூகத்தில் அந்தஸ்து, கவுரவத்துடன் வாழலாம் என்ற எண்ணம்தான் பிரதான காரணமாக உள்ளது. எனவேதான் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் வரை படையெடுக்கின்றனர். மற்றபடி கிராமப்புறங்களில் சென்று ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற சேவை நோக்கில் யாரும் மருத்துவராக ஆசைப்படுவதில்லை.

இங்கு தனியார் கல்லூரிகளில் படிப்பவர்களின் தரமும் வெளிநாடுகளில் படிப்பவர்களின் தரமும் ஏறக்குறைய ஒன்றுதான். இங்கு தனியார் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கும் இதே தகுதித் தேர்வை வைத்தால் பெரும்பாலும் தேற முடியாது. ஏனெனில் அத்தகைய கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளே இல்லாமல் அங்கீகாரம் வாங்க கல்லூரி முதலாளிகள் பல கோடிகளை லஞ்சமாகக் கொட்டுகின்றனர்.

140 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் தோராயமாக 10 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். அதாவது 1400 பேருக்கு ஒரு மருத்துவர். கியூபாவில் 1000 பேருக்கு 6 மருத்துவர்கள், ஆஸ்திரியாவில் 1000 பேருக்கு 5 மருத்துவர்கள் உள்ளனர். இது ரசியா மற்றும் ஜெர்மனியில் 4, அமெரிக்காவில் 3 என்ற அளவில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 1-ஐ விடக் குறைவாக உள்ளது.

கியூபா மருத்துவர்கள்

இந்த விகிதத்தை குறைந்தது 2 என்ற அளவுக்காவது கொண்டு வர வேண்டுமெனில், மேலும் பல அரசு மருத்துவக் கல்லூரிகளை பின்தங்கிய வடமாநிலங்களில் திறப்பதும், தனியார் கல்லூரிகளை தரமுடன் செயல்படும் வகையில் கண்காணிப்பதும், வெளிநாடுகளில் படித்துவிட்டு வருபவர்களுக்கு தேர்வு வைத்து வடிகட்டி அவர்களது மருத்துவக் கனவை சிதைக்காமல் இலவசமாக செய்முறைப் பயிற்சி அளித்து அரசு மருத்துவர்களாக அங்கீகரித்து கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை சில ஆண்டுகள் அளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் கூட, ஏதோவொரு வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் நலனில் அக்கறை இருக்கும் அரசுதான் இதை நடைமுறைப்படுத்த முயலும்!

ஆக்கம் : குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here