தொலைதூரப் பேருந்துகள் ஹோட்டல்களில் நிறுத்துவது குறித்தும் அங்கு கழிவறை வசதிகள், சரியான தரத்திலான உணவுகள் மற்றும் பொருத்தமான விலைகள் ஆகியவற்றில் இருந்து சிக்கல்கள் குறித்தும், அவை ஓரளவு சரி செய்யப்பட்டது குறித்தும் கூட ஏற்கனவே மக்கள் அதிகாரம் இணையதளத்திலேயே கட்டுரைகளாக தந்துள்ளோம். தற்போது கூடுதலாக மேலும் சில விவரங்களை – தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.

“முகப்பற்ற” பேருந்து நிறுத்தங்கள்!

நாம் ஒரு சாலையில் புதிதாக பயணிக்கும் போது, எந்த ஊருக்குள் நுழைகிறோம்? அல்லது எந்த பேருந்து நிறுத்தத்தை அடைகிறோம்? என்பதை அவ்வளவு எளிதாக சென்னைக்குள் புரிந்து கொள்ள முடியாது. பேருந்து நிறுத்தத்தை பார்த்தும் கூட அவற்றை கண்டுபிடிக்க முடிவதில்லை.

ஏனெனில் சென்னை முழுக்க உள்ள பேருந்து நிறுத்தங்களில் அந்த நிறுத்தத்தின் பெயர் முகப்பில் இருப்பதில்லை. அதற்கு மாறாக தமிழக அரசின் விளம்பர பேனர்களோ அல்லது கார்ப்பரேட்டுகளின் விளம்பர பேனர்கள் தான் பேருந்து நிலையம் முழுவதையும் ஆக்கிரமித்து உள்ளன.

சாலையில் பயணிக்கும் ஒருவர் தற்போது இருக்கும் இடத்தை கண்டறிய என்ன வழி? ஒன்று கூகுள் மேப்பை எடுத்து அதில் தேடிப் பார்க்க வேண்டும். அல்லது சாலையோரங்களில் உள்ள கடைகளில், பெயர் பலகைகளில், ஊர் அல்லது பகுதி குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தேடிப் படித்துப் பார்த்து முடிவுக்கு வர வேண்டும்.

விளம்பரங்களும் பேருந்து பயணிகளின் துயரமும்
விளம்பர படங்களால் நிரம்பியிருக்கும் பேருந்து நிறுத்தங்கள்

பேருந்து நிறுத்தத்தின் முகப்பில் அதன் பெயரை எழுத வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. சில இடங்களில் எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியால் இப்பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது என்று அந்த எம்எல்ஏவின் அல்லது எம்பியின் பெயரை கொட்டை எழுத்தாக பதிவிட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.

சாலையில் பயணிப்பவர்களுக்கு எம்எல்ஏவின் பெயர் முக்கியமா? அது எந்த இடம் என்பதை தெரிந்து கொள்வது முக்கியமா? தொகுதி மேம்பாட்டு நிதி என்பது எம்எல்ஏ அல்லது எம்பிக்களின் குடும்ப சொத்து அல்லவே? மக்களின் பணம் தானே? இது கூட புரியாதவர்களா நம் அரசியல்வாதிகள்? அப்படி தமது பெயரை கண்டிப்பாக எழுத வேண்டுமென்றால், அதை உட்புறத்தில் சிறியதாக எழுதிக் கொள்ளலாமே.

பேருந்துகளும் தப்பவில்லை!

பேருந்து நிறுத்தங்களை மட்டும் வாடகைக்கு விட்டு விடவில்லை; பேருந்தின் பக்க கண்ணாடிகளையும், அல்லது பேருந்தின் வெளிப்புற பகுதியையும் கூட வாடகைக்கு விற்று விட்டார்கள்.

பேருந்தில் இருந்து வெளிப்புறத்தை பார்க்கும் கண்ணாடியானது, அதாவது ஜன்னல்களுக்கு மேலே இருக்கும் கண்ணாடியானது ஓட்டைகளைக் கொண்ட ஸ்டிக்கர்களால் மூடப்பட்டு விட்டது. பேருந்து நிற்கும் போது அந்த சிறு துளைகள் மூலமாக வெளியே இருக்கும் எதையும் தெளிவாக பார்க்க முடியாது. ஒருவேளை பேருந்து நகரும் போது ஓரளவு வெளிப்புறத்தில் உள்ளதை பார்க்க முடியும்.

விளம்பரங்களும் பேருந்து பயணிகளின் துயரமும்

அதாவது பேருந்து நின்றவுடன் அது எங்கே நிற்கிறது என்பதை பேருந்துக்குள் நின்று கொண்டு பயணிப்பவர்கள் வெளிப்புறத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. இருக்கையில் அமர்ந்து உள்ளவர்கள் ஜன்னல் மூலம் பார்க்க வாய்ப்பு என்ற வகையில் தப்பித்தார்கள். இப்படி உள்ளே இருப்பவர்களுக்கு எந்த இடத்தில் இருக்கிறோம்? என்று வெளியே பார்க்க முடியாதபடி கண்ணாடி ஜன்னல்களில் கூட ஸ்டிக்கரை ஒட்டி மறைத்து காசு பார்க்க வேண்டும் என்று சிந்திப்பவர்களை என்னவென்று சொல்வது? இத்தகைய முடிவெடுத்து அமல்படுத்தும் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் அரசு பேருந்தில் பயணித்தால் தானே நமது கஷ்டம் அவர்களுக்கு புரியும்.

மின்சார ரயில்களில் இத்தகைய தடுமாற்றம் இல்லை. ஏனென்றால், அடுத்து எந்த நிறுத்தம் வருகிறது என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கிறார்கள் அல்லது டிஜிட்டல் போர்டு மூலம் விளம்பரப்படுத்துகிறார்கள். எனவே இந்த தடுமாற்றம் இல்லை. ஆனால் நகரப் பேருந்தில் பழக்கம் இல்லாத வழித்தடங்களில் பயணிப்பவர்கள் நிலை கொடும் அவஸ்தை தான். இப்போதுதான் சில பேருந்துகளில் இதைப் பொருத்தி வருகிறார்கள்.

போக்குவரத்து கழகத்தின் வருவாய் பெருக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். அந்த உயரிய நோக்கத்தில் இருந்து தான் பேருந்தின் வெளிப்புறங்களில் கார்ப்பரேட் விளம்பரங்களுக்கு குத்தகைக்கு விட்டு காசு பார்க்கிறார்கள். இது சரி என்றால், போக்குவரத்து துறையின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் பயணிக்கும் அரசு வாகனங்களில் கூட இத்தகைய விளம்பரங்களை செய்து காசு பார்க்கலாம் தானே. கிரிக்கெட் வீரர்களின் சீருடைகளில் விளம்பரங்கள் இருப்பது போல போக்குவரத்து அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்களின் சீருடையில் கூட விளம்பரங்களை செய்து காசு பார்க்கலாம் தானே! அத்தகைய விளம்பரம் செய்யப்பட்ட வாகனங்களில் செல்வது, விளம்பர சீருடைகளை அணிவது அவர்களுக்கு மட்டும் கௌரவ குறைச்சலாக படுகிறதோ!

அலைக்கழிக்கப்படும் பயணிகள்!

பேருந்து நிலையங்களில் ஒவ்வொரு பேருந்தும் புறப்பட இருக்கும் நேரத்தை ஏதோ ஒரு வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். இன்னும் எத்தனை நிமிடத்தில் நிகழ்ச்சி தொடர உள்ளது என்று கவுன்டவுன் போட்டு பார்வையாளர்களை பிடித்து நிறுத்துகின்றன தொலைக்காட்சி சேனல்கள். அதுபோல் ஏன் பேருந்து நிலையங்களில் காட்சிப்படுத்த முடியாது?

ரயில் நிலையங்களில் எந்த வண்டி எந்த பிளாட்பார்மில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படுகிறது என்று தொடர் விளம்பரம் செய்கிறார்கள் தானே! அதையே பேருந்து நிலையங்களில் ஏன் செய்யக்கூடாது.

படிக்க:

  சென்னையில் மின்சாரப் பேருந்துகள்! தமிழக அரசை வாழ்த்த முடியுமா?

 “நெடுஞ்சாலை மோட்டல் உணவகங்கள் : ஒரு கொடுங்கனவு “

மக்கள் முதலில் வந்து நிற்கும் பேருந்தில் ஏறி இடம் பிடித்து காத்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென ஒரு பேருந்து தாமதமாக உள்ளே வந்து, அவசர அவசரமாக இருப்பவர்களை ஏறச் சொல்லி கிளம்பி விடுகிறது.

பலம் உள்ளவர்கள், இளையவர்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிதாக வந்து நின்ற பேருந்தில் இருக்கையை பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால் வயதானவர்களோ, நோயாளிகளோ இப்படி போட்டி போட்டு இடம் பிடிப்பது சாத்தியமற்றது. ஏன் இந்த குறைந்தபட்ச ஏற்பாட்டை கூட போக்குவரத்து கழகங்கள் செய்ய முன் வருவதில்லை.

இந்த “அற்ப” விஷயங்கள் முக்கியமா?

மேற்கண்டவை எல்லாம் பெரிய அரசியல் பிரச்சினைகளோ, பெரிய பொருளாதார சிக்கல்களோ இல்லை தான். அதே நேரம் இவை அற்ப விஷயங்களும் அல்ல. அன்றாட மக்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை கணக்கில் எடுத்து சரி செய்ய வேண்டியது தான் ஒவ்வொரு துறையில் உள்ள அதிகாரிகளின் கடமை. ஒவ்வொரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையும் கூட.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கு தாம்பரம் செல்ல வெளியே வந்தால், அங்கே இடதுபுறத்தில் கட்டணக் கழிவறை உள்ளது. அங்கு சிறுநீர் கழிக்க கூட பத்து ரூபாயை வசூலிக்கிறார்கள். இது போல் பல இடங்களிலும் நடக்கிறது. இதுவெல்லாம் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்கிறது என்று கடந்து போக முடியுமா?

மூத்திரத்தை அடக்கு!

இரண்டு மணி நேரம் பேருந்துகளிலோ அல்லது புறநகர் ரயிலிலோ பயணித்து கீழே இறங்குபவர்கள் கழிவறையை பயன்படுத்த 10 ரூபாயை கொடுத்தாக வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தினால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகும்? ஒருவர் ஒரு மாதத்திற்கு 600 ரூபாயை சிறுநீர் கழிக்க மட்டுமே செலவிட்டாக வேண்டும். அல்லது சிறுநீரை அடக்கி வைத்திருந்து வேறு பல நோய்களுக்கு உடலை பலியாக்க வேண்டும். இதுவும் ஒரு வகையில் வழிப்பறிதானே!

ஆட்சியாளர்கள் தமது சாதனைகளாக பலவற்றையும் விளம்பரப்படுத்தி மகிழ்கிறார்கள். சரிதான். ஆனால் மாநிலத்தின் தலைநகரிலேயே இத்தகைய அவலங்கள் இருப்பதை கண்டு கொள்ளாமல் கடந்து போகலாமா?

நாம் போக்குவரத்து துறையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுவதையோ, அல்லது அனைத்து சேவை துறைகளும் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதையோ இங்கு விவரித்து எழுதவில்லை தான். அதே நேரம் இதில் சுட்டிக்காட்டப்பட்டவையும் அலட்சியப்படுத்தக் கூடாதவை தான்.

ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மக்கள் நலனுக்காக சிந்தித்தால் மாற்றம் அல்லது விடியல் நிச்சயம் வரும். நமக்காக சிந்திக்கவும், செயல்படுத்தவும் மறுத்தால் நாம்தான் களத்தில் போராடி மாற்றத்தை வர வைக்க வேண்டும். பயணிகளான மக்கள் ஒன்றுபடுவோம்.

இளமாறன்

4 COMMENTS

  1. கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள பிரச்சினை சரிதான் கூடுதலாக அரசு பேருந்தை முறையாக தினசரி உள்ளே சுத்தம் செய்வது கிடையாது?
    பஸ் சீட்டில் சின்ன பாதிப்பு ஜன்னல் சரியாக திறக்க முடியாதது அல்லது கண்ணாடி இல்லாமல் ஓப்பனாக இருப்பது,உள்ளே நிற்க்கும் பயணிகளுக்கு கைபிடிகள் அமைக்காதது மேற்கூரைகள் சரியான அமைக்காமல் மழைகாலத்தில் உள்ளே உள்ள அனைத்து சீட்களிலும் மழை நீர் தேங்கிநிற்பது போன்ற என்னற்ற குறைகளை உடனே தனியார் பேருந்து போல் சரி செய்வது கிடையாது.
    இப்படி மக்கள் அரசு பேருந்துக்குள் அன்றாடம் அவதி பட்டுதான் வருகிறார்கள் என்பது மக்கள் ஒற்றுமையாக கேள்வி கேட்காததும் போராட்டம் நடத்தாதையும் தான் காட்டுகிறது.
    இதை தட்டி கேட்டால் தான் மக்கள் நல பேருந்துகள் இயக்கும்.

  2. விளம்பர பெயர் பதாகை அகற்ற வேண்டிய அரசு விளம்பரத்தை அள்ளி தெளித்து வருகிறது எம் எல் ஏக்களின் பெயரும் பேருந்து ரயில்பெட்டிகள் அனைத்து விளம்பரங்களையும் அகற்றப்பட வேண்டியது மாநகராட்சியே அகற்றும் வரை நாடெங்கும் இச்செய்தியை பரப்ப செய்வோம்,

  3. எங்கும் விளம்பரம் எதிலும் விளம்பரம்.,

    கட்டுரை மிகவும் சிறப்பு..

    ஆட்சியாளர்கள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் அவர்களின் வீடுகளிலும் விளம்பரங்களை செய்து கொள்ளலாம், அதேபோல் அவர்கள் அணியும் ஆடைகளிலும் விளம்பரங்களை செய்து கொள்ளலாம் என்பது சிறப்பான கண்டனம் அருமை..

    மக்களுக்காக அரசு இருக்க வேண்டுமே தவிர விளம்பரங்களை வைத்து வியாபாரம் செய்யும் விளம்பரதூதராக அரசு இருக்கக் கூடாது அவ்வாறு இருப்பது என்பது வேதனைக்குரியது..

  4. விளம்பரங்களும் பேருந்து பயணிகளின் துயரமும்!

    கட்டுரை ஆசிரியர்: தோழர் இளமாறன்

    சென்னை மாநகர பேருந்து விளம்பரங்கள் குறித்தும் இதனால் பேருந்தின் வழித்தடம் பேருந்து செல்லும் ஊர் தெரியாமல் மக்கள் அலைகழிக்கப்படுவது ஒரு துயரம் செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது நீங்கள் குறிப்பிட்டது சரியே.

    பேருந்தில் உள்ள விளம்பரங்களை போல் அரசு போக்குவரத்து அதிகாரிகள் எம்எல்ஏ எம்பிக்கள் கிரிக்கெட் வீரர்களை போல் விளம்பர சட்டைகளை போட்டுக் கொண்டு அலுவலகம் செல்வார்களா ? என்ற கேள்வி சரியே!
    சிறுநீர் கழிக்க ரூபாய் 10 இரண்டு மணி நேரம் ஆனாலும் பேருந்தில் காத்துக் கிடக்க வேண்டும் என்ற சம்பவமும் சரியே ஆனால் கழிப்பிடம் குறித்து தனியாக ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here