வள்ளலாரைச் சிந்திப்போம்!

கவிஞர். கரிகாலன்


ஒரு தைப்பூச நாள். வடலூர் செல்கிற சாலைகள் முழுவதும் மனிதர்களின் கருணை வழிந்தோடுவதை கவனித்தேன் . இந்த நாளைப் போலவே மனிதர்கள் காலம் முழுவதும் வாழ்ந்தாலென்ன? என சிந்திப்பேன். காலம் முழுவதும் ஒப்பனைகளோடு வாழ்வது சிரமம்தானே நமது கருணையும் இரக்க குணமும், மிகையுணர்வு அற்றதாக இயல்பானதாக அமைய வேண்டும்.

வாழ்நாள் முழுக்க பாவங்கள் செய்து,  ஒரு நாளில் பரிகாரம் தேடுகிற மனநிலையை மதம் உருவாக்குகிறது. மனிதர்களுக்கு கடவுளையும் கடவுளின் தூதுவர்களையும்
மதமே அடையாளம் காட்டுகிறது.

மதம் காட்டும் தேவதூதுவர்கள் அற்புதம் செய்பவர்கள். அவர்கள் அப்பங்களை ,
மீன் துண்டங்களை , திராட்சை ரசங்களை பெருகச் செய்வார்கள். முடவர்களை நடக்கச் செய்வார்கள். குருடர்களை பேசச்செய்வார்கள். ஊமைகளை பாடச் செய்வார்கள்.

இத்தகைய தொன்மக் கதைகள், தொன்மப் பாத்திரங்கள் ,மானுட வரலாற்றில் தொடர்ந்து தேவைப்படுவதாக இருக்கிறது. அப்படி அற்புதங்கள் நிகழ்த்தியவராக வள்ளலாரையும் இந்து மதம் மாற்ற விரும்புகிறது.

வள்ளலார் ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்த மனிதர். தொடக்கத்தில் குழம்பியவர்.பிறகு தெளிவடைந்தவர். தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளை பாடிய கவிஞர்.தன் சமகாலத்தில் நம்பப்பட்ட பல மாயைத்திரைகளை அகற்ற முயற்சித்த ஒரு கலகக்காரர்.

அவரது வாழ்வை, இயக்கத்தை வழக்கம்போல் இங்கு மிகையாகவும் புனைவாகவும் காட்டுவதற்கு மதவாதிகள் முயல்கிறார்கள். வள்ளலார் வளர்ந்த சென்னை, பிரிட்டிஷ் ஆட்சியில் பெரு நகரமாக மாறிக்கொண்டிருந்தது. வள்ளலார் அந்த சந்தடியிலிருந்து ஒதுங்கி இறைவனைத் தேடுகிற முயற்சியில் இருந்தார்.

இளம் வயதில் அவர் கவிபாடத் தொடங்குகிறார். இறைவனைச் சிந்தித்தவை அந்தக் கவிதைகள். திருமூலர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சேக்கிழார், தாயுமானவர் போன்ற பக்தி இயக்க கவிஞர்களின் தாக்கம் நிரம்பியவராக இருந்தார் வள்ளலார்.

இப் பருவத்தில் பட்டினத்தார் போலவே, வள்ளலாரும் பெண்கள் குறித்த தாழ்வெண்ணங்களோடு இருந்தார். ‘நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல்’ என்றெல்லாம் பாடினார்.

சென்னையில் வாழ்ந்த வள்ளலாரின் இளம் பருவச் செய்திகள் தெளிவாக இல்லை. இத் தருணத்தில் அவருக்கு திருமணம் நிகழ்ந்தது. கூடிய விரைவிலியே மணவாழ்விலிருந்து விலகுகிறார். 35 வயதுக்குப் பிறகுதான் சென்னையிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு  வருகிறார் வள்ளலார்.

1858 இல் கருங்குழியில் வேங்கட ரெட்டியார் என்பவர் வீட்டில் தங்குகிறார். 1867 வரை, இந்தப் பகுதியிலேயே அவரது இயக்கம் நடைபெறுகிறது. பிறகு, 1870 வரை கடலூரில் வசித்திருக்கிறார். வள்ளலார் என்கிற மானுட நேயச் சிந்தனையாளர், வைதீக மறுப்பாளர் எனும் அடையாளம் முழுமையாக கனிந்த காலம் 1865 லிருந்து தொடங்குவதாக கருதலாம்.

இந்துத்துவா காவி பாசிஸமாக  பரவுருகிற நேரம் .காலத்தின் தேவையை உணர்ந்து புரட்சிகர  மாணவர் இளைஞர் முன்னணியினர் (கடலூர் மாவட்டம்), ‘ மனிதநேயத்தை பரப்பும் சுத்த சன்மார்க்க நெறி ! தனி வழிபாட்டு முறையாக அங்கீகரிப்பதே சரி! ‘ எனும் சிறு வெளியீட்டைக் கொண்டு வருவது மகிழ்வளிக்கிறது.

தனது சமயம் அருள் நெறி. 

உலகில் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய துன்பங்கள் ஒழிய, அனைவரும் ஒன்றுபட வேண்டும்.  சாதி சமய காழ்ப்புகளை துறந்து எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுதலே தலையாய அறம் என்றவர் வள்ளலார்.

ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துமத அடிப்படைவாத இயக்கங்கள் வேதமரபையே இந்தியாவின் ஆன்மீகம் என நிறுவப் பார்க்கிறது. ஆனால், வேதமறுப்பு என்பதுதான் இந்திய ஆன்மீகமாக இருந்திருக்கிறது.

வள்ளலார் தீவிர சைவர். அவர் சைவராக விளங்கிய காலத்தில் எழுதப்பட்டவை முதல் ஐந்து திருமுறைகள். அதை வெளியிட அடிகளாரின் தொண்டர்களான இறுக்கம் இரத்தினம் முதலியாரும், தொழுவூராரும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அவரது ஆறாம் திருமுறையை பதிப்பிக்க அவர்கள் தயங்கினார்கள். பெரியார் வெளியிட்டார். ஐந்தாம் திருமுறைக்கும் ஆறாம் திருமுறைக்கும் இடையில் வள்ளலாரிடம் நடந்த transformation என்ன?

பேரிடர்கள்தான் வாழ்வின்மீது உறுதிப்பாட்டை ஏற்படுத்துகின்றன.

1866 இல் நிலவிய கடும் பஞ்ச காலம் வள்ளலாரின் கடவுட் கொள்கையை கேள்விக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட இதே காலத்தில் நீட்ஷேவால் எழுதப்பட்டதுதான் The Gay Science . இந்த நூலில்தான் நீட்ஷேவின் பிரபலமான, ‘கடவுள் இறந்துவிட்டார்’ என்கிற வாசகம் இடம்பெற்றது.

வெகுசன மனம்,  சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி அழைத்துச் செல்லும் அறிவு வலிமையைப் பெற்றிருப்பதில்லை.

சமகாலத்தை மறுக்கின்ற வலிமை நீட்ஷே , வள்ளலார், மார்க்ஸ், அம்பேத்கர் , பெரியார் போன்ற ஆளுமைகளுக்கே  இருந்து வந்திருக்கிறது. வள்ளலார் சத்யஞான சபையை கொடியேற்றி தொடங்கி வைக்கும்போது, இதுவரை செயல்பட்ட தன் அறிவை அற்ப அறிவு என்கிறார்.

‘கொள்ளை வினைக் கூட்டுறவால்
கூட்டிய பல்சமயக் கூட்டமும் அக்
கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறு அக்கலைகள் நாட்டியபல் கதியும் காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம் பிள்ளை விளையாட்டே’

‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எல்லாம் பிள்ளை விளையாட்டே’

மனிதர்களுடைய இருப்பை, மாண்பை, சுயமரியாதையைக் குலைக்கும் நால் வருண மரபை பிள்ளை விளையாட்டு என்கிறார் வள்ளலார்.

‘இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலங் கடையா உரைப்பர்!’

வேதங்கள் , இதிகாசங்களை சாலங்கள் என்கிறார் வள்ளலார். இதனால்தான் ‘ராமகிருஷ்ணரை வியந்தோதும் தமிழர்களே வள்ளலாரிடம் வாருங்கள்!’ என்றார் பெரியார்.

இந்து மதம் வள்ளலாரை
ஒரு mystic character ஆக
காட்ட விரும்புகிறது . அதை
நாம் அனுமதிக்கக் கூடாது.

தண்ணீரில் விளக்கெரித்தவராக, மரணமில்லா பெரு வாழ்வுக்கு வழி சொன்னவராக வள்ளலாரை அது  புனைந்து வருகிறது. வள்ளலார் நெறியை பின்பற்றுபவர்களை மதப்பற்றாளர்களாக மாற்றும் முயற்சி இது.

1865 இல் வள்ளலார் சுத்த சன்மார்க்க சாலையைத் தொடங்குகிறார். 1867 இல் சத்திய தருமச் சாலையை நிறுவுகிறார். 1872 இல் சத்தியஞான சபையை உருவாக்குகிறார். சாதியும் மதமும் சமயமும் பொய் எனும் உண்மையை அவர் வந்தடைந்தபோது, (1867) ஆறாம் திருமுறை எழுதப்படுகிறது.

மத சாஸ்த்திர விரோத கருத்துக்கள் அடங்கிய அந்தத் தொகுப்பை வெளியிட அவரது தொண்டர்களுக்கே விருப்பமில்லை. ஆறாம் திருமுறை அவரது மரணத்திற்குப் பிறகு 1888 இல்தான் வெளிவருகிறது. இப்படி வள்ளலார் மதநிறுவனத்துக்கு எதிராக , ஓர் இயக்கமாகிற போது, அவருக்கு புற/அக நெருக்கடிகள் உருவாகின்றன.

வைதீகச் சீலரான ஆறுமுக நாவலர் போன்றோர் வள்ளலாருக்கு எதிரானவராக மாறுகிறார்கள். வள்ளலாரின் தருமஞான சபையில் அவரது சிந்தனைக்கு விரோதமானவர்கள் நுழைந்துவிடுகிறார்கள்.

ஞானசபை தனக்கு சலிப்பை, உபத்திரவத்தை தருவதாக நண்பர் அப்பாசாமி செட்டியாருக்கு எழுதுகிறார் வள்ளலார். இதன் பொருட்டு தர்மஞான சபையிலிருந்து வெளியேறி, ஒருகட்டத்தில்  மேட்டுக்குப்பத்துக்கு சென்றுவிடுகிறார். இப்படி, மதவாதிகள் வள்ளலார் வாழ்ந்தபோதே அவருக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆன்மீகம் என்பது நூடுல்ஸ் விற்கும் பதஞ்சலி சாமியார் சொல்வது அல்ல. மண்வளம் அழித்து மனவளம் பெருக்கச் சொல்லும் வாழும் கலையும் அன்று. மலை திருடி,  காடு திருடி அனைத்துக்கும் ஆசைப்படச் சொல்வதும் கிடையாது.

கார்ப்ரேட் புரோக்கர்களும், காவிப் போர்வையில் கேளிக்கை விடுதி நடத்துபவர்களும், துளசி தீர்த்தத்தில் விஸ்கி கலந்து கொடுப்பவர்களும், தங்களை ஆன்மீகவாதிகள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆன்மீக மனம் வேறு. அது நிர்வாணத்தை, நாடுவது. அதிகாரச் சுமையை தலையிலிருந்து இறக்கி வைக்க எத்தனிப்பது. எல்லா மனிதர்களுக்குமான சமத்துவத்தை , மன விடுதலையைச் சிந்திப்பது.

மதநம்பிக்கைக்கும், ஆன்மீக நம்பிக்கைக்கும் இடைவெளி உள்ளது. மதம் அதிகாரத்தை, சமத்துவம் இன்மையை, அதர்க்கத்தை விரும்புவது.

ஆன்மீகமென்பது ஒருவித மெய்யியல் தேடல். விட்டு விலக விரும்புவது. வாழ்வுக்கும் துன்பத்துக்குமான தர்க்கத் தொடர்பை ஆராய விரும்புவது. அத்தகைய மெய்யியல் தேடல் வள்ளலாருக்கு இருந்தது.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதிலும் லட்சியம் வைக்க வேண்டாம். சைவம்,வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம்,சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என நவீன ஆன்மீகம் பேசிய மகான் அவர்.

மனிதர்கள் எல்லோரும் ஆன்மீக வாதிகளாக வேண்டும் என்பதும் அவசியமில்லை. அவர்கள் எண்ணங்களால் மட்டும் ஆனவர்களல்லர். உடம்பாலும் ஆனவர்கள். உடலும் மனமும் எதிரெதிர் திசையில் செல்லக்கூடியது.

தனியார்மயமும் பா.ச.க வும் பரிந்துரைக்கும் ஆன்மீகம் புத்தரும், மகாவீரரும், வள்ளலாரும் போதித்ததல்ல. கார்ப்ரேட் ஆன்மீகம் போதிப்பது தனிமனித  மன நிம்மதியை.புத்தரும் வள்ளலாரும் விரும்பியதோ உலகளாவிய மானுடகுல விடுதலை.

இதனால்தான் வருணக் கோட்பாட்டை எதிர்த்த அம்பேத்கருக்கு பௌத்தம் மீதும் , திராவிட இயக்கங்களுக்கு சன்மார்க்கம் மீதும் கரிசனம்  இருந்தது. இன்று புரட்சிகர அமைப்புகளும் மத சிந்தனைக்கு மாற்றாக வள்ளலாரின் சன்மார்க்க நெறியை உரையாட முன்வந்திருப்பது வரவேற்கத் தகுந்தது.

பெரியாருக்கு வள்ளலார் மீது மரியாதை இருந்தது. ஞானசபை வரை வந்த பெரியார் புலால் உண்பவர் என்பதால் சபைக்கு உள்ளே நுழையவில்லை. அறிவுச் சுடரை தெய்வமென அறிந்த மண்ணில், பாபா முத்திரையை  தீண்டுவரோ தமிழர்?

சுயமரியாதையை, மனித மாண்பை,   போற்றுவதே ஆன்மீகம் என்றறிவோம் . வள்ளலாரை துதிக்காதீர்கள். அவரை சிந்திக்க முற்படுங்கள் எனக் கூறுகிறார்கள் தோழர்கள். இந்துத்துவாவுக்காக மாற்றாக, வள்ளலாரின் சன்மார்க்க நெறியை புரட்சிகர சிந்தனைக்கு இயைந்ததாக வாசிக்க முற்படுகிறார்கள். தோழர்களுக்கு வாழ்த்துகள்!

  • கவிஞர். கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here