வதவதவென்று புள்ளையை பெத்து தள்ளுங்க”!
பாண்டேக்கள் பதட்டம்!


பாசிஸ்டுகளையும் பாசிச கூலி பிரச்சாரகர்களையும், கருத்துப் பிரச்சாரம் மட்டும் நடத்தி வீழ்த்தி விட முடியாது. அதுவும் பார்ப்பன பாசிச சக்திகளை அவ்வளவு லேசாக கருதிக் கொண்டு கடந்து போகக் கூடாது.

சமீப காலமாக சாணக்கியா என்ற சமூக இணையதளத்தில் பாண்டேக்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. சமீபத்தில் மோகன் என்ற பார்ப்பன சங்கத்தின் பேச்சாளர் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. மத்தியில் மோடி கும்பல் அதிகாரத்துக்கு வந்த பிறகு இவர்கள் துளிர்விட்டு ஆடத் துவங்கியுள்ளனர்.

தமிழகத்தில் இயங்கும் ’தாம்ப்ராஸ்’ எனப்படும் பார்ப்பனர்கள் சங்கம் பாசிச ஜெயாவின் ஆட்சியில் இருந்தே ’நம்மவா ஆட்சி’ என்று பூணூலை உருவிக் கொண்டு குதித்தனர். கராத்தே பைட், கர்லா கட்டை வெயிட் என்றும், ஆர்எஸ்எஸ்-சின் ஷாகாக்களின் மூலம் கம்பு சுத்துவது முதல் துப்பாக்கி பயிற்சி வரை மேற்கொள்ளத் துவங்கினர். ’கராத்தேவும் கற்போம், காயத்திரியும் ஓதுவோம்’ என்றெல்லாம் முழக்கமிட துவங்கி, இன்று வெளிப்படையாக பார்ப்பன சாதி திமிருடன் வீதியில் இறங்கி விட்டனர்.

அந்த வரிசையில் ஆதிசைவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பாண்டே, சாதி குறித்தும் தீண்டாமை போன்ற சமூக அநீதிகள் குறித்தும் கொக்கரிப்பதையும், பிதற்றுவதையும் பார்க்காதவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். கூடவே ஆன்மீக பொறுக்கியான நித்தியின் ஏழாம் அறிவு குறித்தும் புரிந்து கொண்டால் நாம் எந்த அளவு காட்டுமிராண்டிகளிடம் சிக்கியுள்ளோம் என்பது தெளிவாகும்.

OOO

ரங்கராஜ் பாண்டேவுக்கும் நித்தியானந்தாவுக்கும் ’அடியார்கள்’ என்ற பெயரில் அடிமைகள் தேவைப்படுகிறார்கள். அதே சமயம் பார்ப்பான் கடல் கடந்து போகக்கூடாது என்ற விதியை ஐ.டி பார்ப்பனர் முதல் சவுண்டி பார்ப்பனர் வரை யாரும் கடைபிடிப்பதில்லை. லோகமும் கெட்டுப் போனதால், பொருளாதார தேவைகள் அதிகரித்து விட்டது. அதனை ஈடுகட்ட ஏதாவது ஒரு வேலைக்கு போயாக வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் வேதபாடசாலைகளுக்கு அம்பிகள் கிடைக்காமல் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை அரைகுறையாக நடைமுறைக்கு வந்து விட்டது. இதன் விளைவாக காலப்போக்கில் எல்லா சாதியினரும் அர்ச்சகர் வேலையில் சேருவது தவிர்க்க முடியாத அளவுக்கு வந்து விடும். எதற்காக கோயிலில் போய் “சுக்லாம்பரதரம் சொல்லிண்டு” என்று பார்ப்பன இளைஞர்கள் மத்தியில் ஒரு சிந்தனை வந்து விட்டால், ’வர்ணமாம் பிராமணே குரு’ என்ற நிலைமைக்கு அதோகதிதான் என்று பாண்டேக்களின் பூணூல் பதட்டமைகிறது.

ஒரு உதாரணமாக விழுப்புரம் கீழ் அனுமார் கோயில் தெருவில் ’மகா பெரியவா’ சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் பிறந்த இடம் என்று ஒரு மடம் உள்ளது. அதில் பார்ப்பனர்களை சாஸ்திரிகளாக்கவும், பட்டாச்சாரியார்களாக்கவும் வேதபாடசாலையும் உள்ளது. அங்கே வருடத்திற்கு பத்து சிறுவர்கள் கூட சேருவதில்லை. மேலும் அந்த அக்ரஹாரத்தில் உள்ள அறுபது வீடுகளில் இப்போது பத்து வீடுகளில் மட்டுமே பார்ப்பனர்கள் வசித்து வருகிறார்கள்.

மீதி வீடுகள் மார்வாடிகளிடம் விற்கப்பட்டு விட்டன. இது தான் பல கிராமங்கள் துவங்கி நகரம் வரை உள்ள பொசிசன் ஆகும். அம்பிகள் அனைவரும் பாண்டே கூறுவதைப்போல மூளை வீக்கத்தினால் தேசங்கடந்து விட்டனர். இப்போது வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆறு லட்சம் பேர் தங்களது இந்திய குடியுரிமையை திருப்பி அளித்து விட்டார்கள் என்ற செய்தியுடன் இதை இணைத்து புரிந்துக் கொள்ள வேண்டும்.

பக்தர்களை மயக்கி கல்லா கட்டும் ஸ்ரீஸ்ரீ, ஜக்கி, பாபா போன்ற கார்ப்பரேட் சாமியார்களுக்கு பஞ்சமில்லை ஆனால் உள்ளூரில் உள்ள கோவில்களுக்கு மணியடிக்கவும், திதியின் அடிப்படையில் திவசம் செய்யும் சவுண்டி பார்ப்பான்களுக்கும் டிமாண்ட் ஆகிவிட்டது.

எனவேதான் பாண்டேக்கள் பதறுகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தேவைப்படுவது அடியாட்கள். இந்த அடியாட்களை பார்ப்பனரல்லாத சாதியினரிடமிருந்து உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் கோயில் அர்ச்சகர் பணிகளுக்கு பார்ப்பனர்கள் மட்டும்தான் வரவேண்டும்/இருக்க வேண்டும் என்பது மனு தர்மத்தின் விதி.. ஆனால் டிமாண்டோ அதிகமாகி கொண்டே போவதால் பாண்டே “நம்மவா ஆத்துல நாலைந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்! ஒரு குழந்தையை வேதம் படிக்க அனுப்புங்கள்” என்று சொல்கிறார்

அதே பாண்டே சொல்கிறார். இருபத்தாறு கோடி மக்கள் ஒருவேளை உணவின்றி தவிக்கின்றனர் என்று! ஏன் அவர்களிடமிருந்து குழந்தைகளை தத்தெடுத்து பார்ப்பன மரபில் வளர்த்து அர்ச்சகர்கள் ஆக்க வேண்டியதுதானே!? அது முடியவே முடியாது! ஏனென்றால் பிறப்பால் பார்ப்பனன் என்ற தகுதியை தேடுகிறார்கள். அதனால்தான் பார்ப்பனப் பிள்ளைகளை பெற்க வலியுறுத்துகிறார்.

இந்த கொரோனா காலத்திலும் சிற்றூர் தெய்வங்கள் இருக்கும் கோயில்களில் விழாக்கள், வழிபாடுகள் நடந்தன. ஆனால் பார்ப்பனர் ஆதிக்கத்தில் உள்ள ஆகமவிதிப்படி நடக்கும் கோயில்களில் எதுவும் கிடையாது. அதனால் கோயில்களில் உண்டியலில் காசு போடாதீர்கள்! அர்ச்சகர் தட்டில் போடுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்து கொண்டே இருந்தார்கள். அர்ச்சகர் குடும்பம் வாடுகிறது. நிதியுதவி செய்யுங்கள் என்று கொஞ்சம் பேர் கல்லா கட்டினார்கள்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் குருக்கள் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு இறந்து போனார். உடனே சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்து ஒரு மாதத்தில் பதினைந்து லட்சம் ரூபாய் வசூல் செய்து விட்டார்கள். இவ்வாறு அனுதாபம் தேடி வசூலிக்கும் சாணக்கியா வகையாறாக்கள், கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞனின் குடும்பத்திற்கு தொடர்ந்து நிதியை வழங்கி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் இருநூறு பேர்கள் அர்ச்சகர் ஆனதும் இவர்களுக்கு பயம் வந்து விட்டது. கருணாநிதியை விட டேஞ்சரானவர் ஸ்டாலின் என்கிறார் ஹெச். ராஜா. போதாக்குறைக்கு இந்து அறநிலையத் துறை அறிவித்திருக்கும் கோயில் நகைகளை அரசு மூலதனமாக மாற்றும் திட்டம் இவர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. அதனால்தான் பெத்து தள்ளுங்கள் என்று கூக்குரலிடுகிறார்கள்.

இவர்களே போற்றும் ஜகத்குரு சங்கராச்சாரி போஸ்டிங்கிற்கு தற்போது வந்துள்ள சுமார் ஒன்றரை டன் எடையுள்ள ’சின்ன சங்கராச்சாரி’ தகுதியானவர் இல்லை என்பது இவர்களுக்கு தெரியும். ஏனென்றால் அவர் வேத விற்பன்னரோ, சாஸ்திரங்களை கற்ற மேதையோ அல்ல!

ஆனால் பார்ப்பனர் சாதியில் பிறந்த தகுதி ஒன்று மட்டுமே சங்கராச்சாரி ஆக மாறுவதற்கு போதுமானதாக இருந்தது.

கொரானா ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தங்களது ஏழாம் அறிவால் ‘சொதர்மா’ (அ) சுதர்மா டிரஸ்ட் ஆரம்பித்ததாக தனக்குத்தானே புகழ்ந்துக் கொள்கிறார்கள். ஆனால் கொரானா வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதை இதுவரை அந்த வைராலஜி துறையாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை நம்ம ஜீ கண்டு பிடித்ததை கேக்கும் போதே புல்லரிக்கிறது.

தீண்டாமை ஷேமகரமானது என்ற சங்கரனின் வாரிசுகளை, அவர்கள் விரும்பும் வகையில் சமூக புறக்கணிப்பு செய்து ஒதுக்கி வைப்பதே நாட்டுக்கு ஷேமகரமானது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்..

ஞானசூரியன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here