தமிழ்நாட்டில் ராணுவ போர்ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டையை (Defence Corridor / Military Industrial Complex) அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் மேல் கொண்டுள்ள அக்கறை காரணமாக ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைகிறதா? தமிழ்நாட்டின் தொழில்வளத்தை மேம்படுத்தி, தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரித்து, பொருளாதார தன்னிறைவை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி நடைபெறுகிறதா?
தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகள்கூட தோல் பதனிடுதல், பருத்தி உள்ளாடைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை இந்தியா, பங்களாதேஷ் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் மேற்கொள்வது ஏன்? இந்த நாடுகள் மேலுள்ள அக்கறையா?
தோல் பதனிடுதலும், பருத்தி உள்ளாடை உற்பத்தியும் சூழல் மாசுபாட்டை மிக அதிக அளவில் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. எனவே மேலை நாடுகள், தங்கள் நாட்டின் சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஏழை நாடுகளை சூழல் ரீதியாக சுரண்டி, சூறையாடும் நோக்கத்திலேயே தோல் பதனிடுதல், பருத்தி உள்ளாடை தயாரித்தல் போன்ற தொழில்களை இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தலையில் கட்டுகின்றன. அதுபோலவே அதிக அளவு நீர், மின்சாரம் போன்றவற்றை பயன்படு்த்தும் கார் உற்பத்தி மற்றும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் மொபைல் போன் உற்பத்தி, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி போன்றவையும் தமிழ்நாட்டில் குவிக்கப்பட்டது. தோல் பதனிடும் தொழில் செழித்த வேலூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளிலும், பருத்தி உள்ளாடை உற்பத்திக்கு பெயர் பெற்ற திருப்பூரிலும் நிலத்தடி நீர் நஞ்சாகி பயன்படுத்த தகுதியற்றதாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கார் உற்பத்தி, மொபைல் போன் உற்பத்தி செய்த பகுதிகளின் சூழல் சீர்கேடுகள் வெளிவர சில காலமே உள்ளது.
இந்த நிலையில்தான் பேரழிவுக்கு வழிவகுக்கும் கொலைக்கருவிகளான போர் ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்பேட்டையை தமிழ்நாட்டில் அமைக்க ஒன்றிய அரசு முனைந்து நிற்கிறது. உலகின் நச்சுக் குப்பைத் தொட்டியாக இந்தியா விளங்கினால், இந்தியாவின் நச்சுக் குப்பைத் தொட்டியாக தமிழ்நாட்டை மாற்ற ஒன்றிய அரசு முனைகிறது.
இந்த திட்டத்தை தமிழ்நாட்டை ஆட்சி செய்த கடந்த அரசும் மறுப்பேதும் சொல்லாமல் வரவேற்றது: தற்போதைய அரசும், “சேலம் இரும்பு உருக்காலைக்கு கையகப்படுத்தப்பட்ட கூடுதல் நிலத்தை கொலைக்கருவிகள் தயாரிக்கும் தொழிற்பேட்டைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போர்க்கருவி தயாரிக்கும் தொழிற்பேட்டைக்கும் தேசபக்திக்கும் துளியளவும் தொடர்பில்லை.
உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் இந்த பேரழிவு ஆயுத உற்பத்தித் தொழிலை தமிழ்நாட்டில் செய்யப் போகின்றன. உலகின் எந்தவொரு நாட்டுக்கும் இங்கு உற்பத்தியாகும் பேரழிவு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படலாம். சுருக்கமாக கூறினால் இது ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஒரு சூப்பர் மார்க்கெட். அவ்வளவே! ஆக மொத்தத்தில் கொள்ளை லாபவெறி கொண்ட சில பன்னாட்டு நிறுவனங்கள் மனித சமூகத்தை அழித்தொழிக்கத் தேவையான கொலைக்கருவிகளை தமிழ்நாட்டில் தயாரிக்கப் போகின்றன. அவற்றால் ஏற்படும் சூழல் பேரழிவுகளை, சமூக-பொருளாதார சிக்கல்களை தமிழர்கள் சந்திக்கப் போகிறார்கள்.
சிவகாசிப் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்படும்போது தொலைகாட்சிகள் மூலம் நாம் காணும் காட்சிகளே நம்மை அதிர்ச்சியில் நிலைகுலையச் செய்யும். இந்நிலையில் பட்டாசுப் பொருட்களைவிட பலமடங்கு வீரியம் கொண்ட வெடிபொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் என்னவாகும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
மேலும் உலகின் பல நாடுகளிலும் ராணுவம் தொடர்பான செலவினங்களுக்கு வெளிப்படையான தணிக்கையோ, தகவல் வெளியிடுதலோ நடைமுறையில் இல்லை. இதன் காரணமாக ராணுவ ஆயுதங்கள் தொடர்பான தொழில்நுட்பம் முதல் வணிக ஒப்பந்தங்கள் வரை மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்தத்துறையில் லஞ்சமும், ஊழலும் ஊரறிந்த ரகசியமாகவே உள்ளது. இந்தியாவிலும் நேற்றைய போஃபர்ஸும், இன்றைய ரஃபேலும் பலத்த சர்ச்சைக்குரிய அம்சமாகவே விளங்குகிறது. எனவே மக்களுக்காக குரல் கொடுப்போருக்கு தீவிரவாதி, பயங்கரவாதி, சமூகவிரோதி என்று முத்திரை குத்திவிட்டு, அரசவன்முறையாளர்களை அமைதிப்படையாக சித்தரிக்கும் அவலமும் நடைபெறுகிறது.
போர் ஆயுதத் தயாரிப்பு தொழிற்பேட்டை சுற்றுச்சூழலில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது?
போர் ஆயுதத் தயாரிப்பு தொழிற்பேட்டை உலகளவில் மிகமோசமான மாசுபாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகின் மொத்த கார்பன் உமிழ்வில் மூன்றில் இரண்டு பங்கு ராணுவத்தின் போர்த் தளவாடங்களான போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், டாங்கிகள், வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ இயந்திரங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டினால் ஏற்படுகின்றன.
Global Warming, Militarism and Nonviolence: The Art of Active Resistance என்ற நூலின் ஆசிரியரான முனைவர் மார்டி பிரனகன் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதித்துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். போர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இவர் தரும் பல புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன.
அமெரிக்காவில் இயங்கும் ஐந்து பெரிய ரசாயன நிறுவனங்களை விட, அமெரிக்க ராணுவம் மட்டும் ஐந்து மடங்கு அதிக நச்சுகளை உருவாக்குகிறது. அமெரிக்காவின் மொத்த நுகர்வில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை மட்டுமே 14% பாக்சைட் மற்றும் செம்பு, 11% துத்தநாகம் மற்றும் ஈயம், 10% நிக்கல் மற்றும் 7.5% இரும்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறது. மேலும் தகவல் தொடர்பு சாதனங்களுக்காக வளரும் நாடுகளிலிருந்து எவ்விதமான சூழல்பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் அரிதான ரசாயனப் பொருட்களை கவர்ந்து செல்கிறது.
நச்சுத்தன்மை கொண்ட பேரழிவு ஆயுதங்களின் உற்பத்தி, தரப் பரிசோதனை மற்றும் பயன்பாடு மூலமாக காற்று, நிலம், நீர் போன்ற இயற்கை வளங்களை நஞ்சாக்கி அவ்வளங்களை பொதுச்சமூகம் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
போர்க்காலங்களில் போரின் ஒரு யுக்தியாக எதிரி நாட்டில் வேண்டுமென்றோ, கவனக் குறைவாகவோ காடுகள், சாகுபடி நிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை நஞ்சாக்கி சீரழிக்கும் வேலையும் நடைபெறுகிறது.
அதேபோல அடர்த்தியான காடுகள் இருந்தால் எதிரி நாட்டு வீரர்களோ, போராளிகளோ மறைந்து நின்று தாக்குவதற்கு வழிவகுக்கும் என்று காடுகளும் பெருமளவில் ராணுவத்தால் அழிக்கப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி தாக்கியபோது, கடற்கரைப் பகுதிகளில் அலையாத்திக் காடுகளை உருவாக்கினால் எதிர்காலத்தில் சுனாமித் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறினர். ஆனால் அது இன்றுவரை பொருட்படுத்தப்படவில்லை. காரணம்: தேசப்பாதுகாப்பு!
வியட்நாம் போரின்போது, நேரடி வான்வழித் தாக்குதல்கள் மூலம் வியட்நாமின் 80% க்கும் மேற்பட்ட காடுகள் போரின்போது அழிக்கப்பட்டன, மேலும் தெற்கு வியட்நாமில் 800,000 ஹெக்டேர் (சுமார் 14%) காடுகள் ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சு இரசாயன ஆயுதப் பயன்பாட்டின் மூலம் அழிக்கப்பட்டன, அதே நேரத்தில் விவசாயப் பண்ணைகள் முற்றிலும் பாழடைந்தன.
மஸ்டர்ட் கேஸ் மற்றும் ஏஜென்ட் ஆரஞ்சு போன்ற கொடிய நச்சு இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களும் சுற்றுச்சூழலில் மீட்கவியலாத, பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மனிதர்களுக்கு மரணமும், சிகிச்சையே இல்லாத பெரு நோய்களும் ஏற்படும். மேலும் நிலம், நீர்நிலைகள் மற்றும் பயிர்கள் பல தலைமுறைகளுக்கு பாதிக்கப்படும்.
ராணுவ போர் ஆயுத உற்பத்திக் கேந்திரத்தின் மிகப்பெரிய ஆபத்து அணு ஆயுதத் தயாரிப்பில் உருவாகும். அணு ஆயுத பரிசோதனைக் கூடங்களில் கழிவாக வெளியேறும் யுரேனியம் போன்ற கதிரியக்கப் பொருட்கள் மூலமாக ஏற்படும் சூழல் பாதிப்பு பல ஆயிரம் வருடங்களுக்கு நீடிக்கும். யுரேனியம் உள்ளிட்ட கதிரியக்கப்பொருட்களும் மற்ற இயற்கைத் தாதுக்களைப்போல மண்ணிலோ, பாறைகளிலோ கலந்தே இருக்கும். அவற்றை அகழ்வு செய்து, பிரித்தொடுக்கும்போதும் மண், காற்று மற்றும் நீரில் ஏற்படும் மாசு பல ஆயிரம் வருடங்களுக்கு நீடிக்கும்.
அமெரிக்க ராணுவம் சார்பில் கடந்த 1963ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட அணுஆயுத சோதனைகள் காரணமாக சுமார் 86,000 குழந்தைகளுக்கு பிறப்புக் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும், சுமார் 1,50,000 குழந்தைகளுக்கு அகால மரணம் ஏற்பட்டதாகவும் , சுமார் 20 இலட்சம் பெரியவர்கள் புற்று நோய் காரணமாக உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளததாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
செர்னோபில் அணுஉலையில் விபத்து நடைபெற்று 35 ஆண்டுகளுக்கு பின்னரும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனிதர்கள் இன்றும் குடியேற முடியாத நிலையே உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் போராயுத உற்பத்தி பேட்டைகள் அமைந்தால் என்ன நடக்கும்?
போர் ஆயுத உற்பத்தி பேட்டை பகுதி சட்டரீதியாக தமிழ்நாடு அரசின் அதிகார வரம்பிலிருந்து வெளியேறும்.
பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப இந்தப் பகுதிகளில் இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்களும், தொழிலாளர் நலச்சட்டங்களும் செயலிழக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இந்த நிலை ஏறத்தாழ நிலவுகிறது. எனவே தமிழ்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளோ அந்த வளாகங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதுகூட பகல்கனவுதான். ஏனெனில் அந்த வளாகத்தின் பாதுகாப்புகூட ஒன்றிய அரசின் CRPF போன்ற துணைராணுவப் படைகளிடமோ, நேரடியாக ராணுவத்திடமோ ஒப்படைக்கப்படும். மற்ற வேலைவாய்ப்புகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே!
ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் வணிகக் காப்புரிமை, அறிவுச்சொத்துரிமை, தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி தகவல் அறியும் உரிமைச் சட்டமும் செயலிழக்கும். எனவே இந்த வளாகங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை தமிழ்நாடு அரசோ, ஊடகங்களோ, பொதுமக்களோ தெரிந்துகொள்வதற்கு வழியிராது.
ஆபத்தான ஆயுதங்கள் தயாரிக்கும் பகுதிகள் என்பதால் இந்த தொழிற்பேட்டை முழுவதும் உயர்பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். சாமானிய மக்கள் இந்தப்பகுதிகளுக்கு செல்வது தடை செய்யப்படும். விவசாயிகளின் ஆடு, மாடுகள் அப்பகுதிகளில் மேய்வது கூட தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படலாம்.
இந்த கொலைக்கருவி தயாரிக்கும் தொழிற்பேட்டை கொண்டுவரப்போகும் சூழல் மற்றும் சமூக சீர்கேடுகளை தமிழர்களும், தமிழ்நாடும் பல்லாண்டு காலத்திற்கு அனுபவிக்கப் போகிறோம்.
போர்க்கால ராணுவ யுத்த தந்திரங்களில் முதன்மையானது, எதிரி நாட்டுக்கு இணையாக எதிரி நாட்டுக்கு உதவி செய்யும் சக்திகளையும் தாக்கி சேதம் ஏற்படுத்துவது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படவிருக்கும் போர் ஆயுதங்கள் பூஜை போடுவதற்காக உற்பத்தி செய்யப்படுவதல்ல. இரு நாடுகளுக்கு இடையேயான போர்களிலோ, விடுதலை கோரும் போராட்டக் காரர்களை ஒடுக்கும் உள்நாட்டு போர்களிலோ பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் நாடோ, ஒரு குழுவோ எதிரிக்கு ஆயுதம் வழங்கும் சக்திகளையும் எதிரியாக கருதுவதே இயல்பு. இந்நிலையில் பன்னாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனம் லாபம் ஈட்டுவதற்காக தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப் படலாம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எண்ணத்தில் தொடங்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, காவிரி டெல்டாப் பகுதிகளி்ல் ஹைட்ரோ கார்பன் மண்டலங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக்கு பெரும் சோதனைகளையே அளித்துள்ளன. இப்பகுதி வாழ் மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசும் இத்திட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது. இந்த அனுபவங்களிலிருந்து பெற்ற பாடங்களை கருத்தில் கொண்டு ராணுவ போர் ஆயுத உற்பத்தி தொழிற்பேட்டை அமைக்கும் கருத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டங்களின் சூழலியல் – சமூகத் தாக்கங்களை அலசி ஆராய்ந்து கொள்கை முடிவெடுக்க வேண்டும்.
கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டங்களின்போது அரசுத் தரப்பில் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது: “திட்டத்தின் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தால் வேறு இடத்திற்கு மாற்றி இருக்கலாம். இப்போது இத்தனை செலவு செய்த பின்னர் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது சிரமம்.” எனவே தமிழ்நாட்டில் ஆயுதத் தயாரிப்பு தொழிற்பேட்டைக்கான எதிர்ப்பை அத்திட்டம் தொடங்கும் முன்பே தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் வலுவாக பதிவு செய்வது அவசியம். அவசரமும்கூட!
ஐயன் திருவள்ளுவரும் இந்த அம்சத்தை திருக்குறளில் பதிவு செய்துள்ளதை நினைவு கூறலாம்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
குறள் எண்: 435
(பிரச்சினை நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்)
அறவழியில் பொருள் சேர்த்தால் மட்டுமே இன்பம் கிடைக்கும்
அறம், பொருள், இன்பம் என்பதை ஐயன் திருவள்ளுவன் வகுத்த வாழ்க்கை நெறி. போர்களில் கூட நெறிபிறழாமல் போர் புரிந்தவர்கள் நமது முன்னோர்கள்.
ஆனால் நவீன போர்கள் எவ்வித அறநெறிகளும் பின்பற்றப்படாமல் நிகழ்த்தப்படுகின்றன. மனித உரிமை கோட்பாடுகளையும், பன்னாட்டு சட்டங்களையும் திட்டமிட்டு மீறுவதே நவீன போர்த் தந்திரமாக கருதப்படுகிறது. மனிதர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதிலேயே அறம் சார்ந்த கோட்பாடுகளும், சட்டங்களும் பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எந்த அறநெறியும் அற்ற கொலைக்கருவிகளை உற்பத்தி செய்துதான் தமிழ்நாட்டை தொழில்வளமாக்க வேண்டுமா ? தமிழர்களின் வேலைவாய்ப்பை அதிகரித்து, பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமா? என்பதை தமிழ்நாடு அரசும், தமிழர்களும் சிந்திக்க வேண்டும்.
நன்றி,
பூவுலகின் நண்பர்கள்
- பி.சுந்தரராஜன்