மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பாதியாக குறைந்துள்ளது!


ந்தியாவின் 2022 – 23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீடு 39 லட்சத்து 45 ஆயிரம் கோடிகள். இதில் ராணுவத்துக்கு மட்டும் 5.25 லட்சம் கோடிகள் கொட்டப்படுகிறது. அதே வேளையில், இந்த நாட்டின் எதிர்கால தூண்களாக இருக்கப்போகும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் (அதாவது 40 கோடிக்கும் அதிகமாக இருக்கும்) 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களின் நலனுக்கான ஒதுக்கீடு வெறும் 92 ஆயிரம் கோடிகள்தான். மொத்த பட்ஜெட்டில் 5% ( 2 லட்சம் கோடிகள்) இதற்கு ஒதுக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில் பாசிச மோடி பதவி ஏற்றதில் இருந்து கடந்த எட்டு ஆண்டுகளில் 4.64 சதவீதத்திலிருந்து 2.35 சதவீதமாக குறைந்துள்ளது. கார்ப்பரேட் நலனையே குறிக்கோளாகக் கொண்ட காவி கும்பல், குழந்தைகள் நலனில் காட்டும் அக்கறையின்மையை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.

 ——————-

2014 இல் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது என்பதை பட்ஜெட் குறித்தான பகுப்பாய்வு தெளிவாகக் காட்டுகிறது.

இந்த வரவு செலவு திட்டத்தில் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் இதர வளர்ச்சிகள் கிட்டத்தட்ட இரண்டு டஜன் அமைச்சகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இதில் குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கீடு குறைந்து வருவது குழந்தைகளின் நலன் மீது அரசின் அக்கறையின்மையை பிரதிபலிப்பதாக குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

2013 – 14 ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டின் பங்கு 4.6 % ஆக இருந்தது. இது தற்போதைய 2022 – 23  பட்ஜெட்டில்  2.35% ஆக குறைந்துள்ளது. இதை இன்னொரு வகையில் ஒப்பிட்டுப் பார்ப்போம். இந்தியாவின் மொத்த பட்ஜெட் தொகையானது 2013 – 14ல் 17,94,892 கோடியாக இருந்தது. இது 2022-23 ல் 39,44,909 கோடியாக, அதாவது 119.78% அதிகரித்துள்ளது. ஆனால் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு வெறும் 14.38% மட்டுமே கூடியுள்ளது. 2013-14 ல் 81,075 கோடியில் இருந்து இப்போது 92,736 கோடியாக உள்ளது. உண்மையில் இது 1,50,000 கோடிக்கு மேல் இருக்க வேண்டும்.

நன்றி: business Today

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய செயல்திட்டம் (2016) மத்திய பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 5% குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய திட்டங்களுக்கு செலவிடப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. ஆனால் இப்போது 2.35% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை கவலை கொள்ள வைத்துள்ளது. மேலும் 2020 பொது முடக்கத்தால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகள் கடத்தல் போன்றவை அதிகரித்துள்ளதாகவும் இவ்வாறாக பலவிதங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குழந்தைகளின் உரிமைகளை  பாதுகாக்கும் Child Rights and You (CRY) அமைப்பின் தலைமை அதிகாரியான பூஜா மர்வாஹா, கடந்த பத்தாண்டுகளில் மிக குறைவான அளவிலான ஒதுக்கீடு இது எனவும், குழந்தைகள் தொற்றுநோயால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் கூட மறைமுகமாக உண்மையிலேயே மிகப்பெரிய பாதிப்பு அவர்களுக்குத்தான் எனவும் கூறுகிறார்.

படிக்க:

♦ ஊதாரி மன்னனின் கார்ப்பரேட் பட்ஜெட்!
பட்ஜெட் 2022 -23:  மோடியின் மோசடி வித்தை!

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிந்தனைக் குழாமான Centre for Budget and Governance Accountability ( CBGA) ன் புரோட்டிவா குண்டு (Protiva Kundu) என்பவர்,” இந்திய அரசின் முன்னுரிமை கடந்த 7 ஆண்டுகளாக குழந்தைகள் விஷயத்தில் குறைந்து வருவதை மறுப்பதற்கில்லை. குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு வெறும் கணக்கு தான். எந்தெந்த துறைகள் மூலமாக எவ்வளவு செலவு செய்ய திட்டமிடப்படுகிறது என்ற ஒருங்கிணைந்த அறிக்கை தேவை. நோக்கங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு மற்றும் செலவுத்திட்டம்தான் தெளிவைக் கொடுக்கும். பட்ஜெட் ஒதுக்கீட்டை விட உண்மையான செலவழிப்பு குறைவாகவே இருக்கிறது என்பதையும் அரசின் அறிக்கையே தெளிவாக்குகிறது” என சுட்டிக் காட்டுகிறார். மேலும் இந்த ஆண்டு குழந்தைகளுக்கான இந்தியாவின் பட்ஜெட் ஒதுக்கீடு தொற்றுக்கு முந்தைய பட்ஜெட் ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது எனவும் இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமிருக்கும் என்பதால் ஒதுக்கீடும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது என்றும் கூறுகிறார்.

அரசின் புள்ளிவிவரப்படி பார்க்கும்போது 2019 – 20 பட்ஜெட் மதிப்பீடு 93 ஆயிரத்து 644 கோடி. ஆனால் இதில் 80 ஆயிரத்து 439 கோடி தான் உண்மையில் செலவழிக்கப்பட்டுள்ளது. 2020 – 21 ஒதுக்கீடு 96 ஆயிரத்து 42 கோடி. உண்மையில் செலவழித்தது 77 ஆயிரத்து 482 கோடிதான். இந்தியாவில் குழந்தைகளுக்கான தனி பட்ஜெட் என்பது இல்லை. இருப்பினும் 2008இல் யுபிஏ அரசாங்கம் குழந்தைகளுக்கான செலவினங்களை குறித்த தனி அறிக்கையை அறிமுகப்படுத்தியது. கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என அனைத்து குழந்தைகளுக்கான செலவினங்களையும் உள்ளடக்கியதாக அது இருந்தது.

CRY அமைப்பு  சமீபத்தில் குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டின் துறைவாரியான பகுப்பாய்வை வெளியிட்டது. அதில் குழந்தை பாதுகாப்புக்கு 44.5 சதவீதம் என கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல கல்விக்கும் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை வளர்ச்சிக்கு 10.7% மற்றும் ஆரோக்கியத்திற்கு 6.1% என குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு சென்ற ஆண்டை விட அதிகமாக ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் தொற்றுக்கு முந்தைய ஒதுக்கீட்டை விட இது குறைவுதான் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறது.

Budget 2021: Rights NGOs disappointed with low budgetary allocation for children

தொற்று காலகட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் அதிகரித்துள்ளதை தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. அதேபோல தொற்றுநோய் துவங்கியதிலிருந்து பெற்றோரை இழந்து அனாதையான மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையின் படி பார்க்கும்போது இந்த துறைக்கான தற்போதைய ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. CRY – ன் மர்வாஹா, சமீபகால வரலாற்றில் பள்ளிகள் நீண்ட காலம் தொடர்ந்து மூடப்பட்டதால் குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பில் நிறைய இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளை மையப்படுத்திய நடவடிக்கைகளை விரைவாக எடுக்காவிட்டால் அவர்கள் மீதான பாதக விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்.

படிக்க:

♦  தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் உரிமையே புதிய பணிச் சூழல் சட்டங்கள்!

  சின்னஞ்சிறு குழந்தைகளைக் கொன்று மேக்-அப் சாதனங்களா? கலெக்டர் ஏன் மேக் அப் போடல….?

பள்ளிகள்  மூடப்பட்டதால் படிப்பில் இடையூறு ஏற்பட்டு, குழந்தைகள் பல்வேறு வேலைகளில் ஈடுபடுவது மற்றும் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்படுவது போன்ற நிலையில் அவர்களை மீட்டு பள்ளிக்கு வரவழைப்பது பெரும் சவாலாக இருக்கும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காக உள்ள 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கான எந்த நம்பிக்கையையும் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இந்த பட்ஜெட் அளிக்கவில்லை.

ஸ்னிக்தேண்டு பட்டாச்சார்யா

செய்தி மூலம்:

https://m.thewire.in/article/rights/modi-budget-share-for-children

தமிழில் :

குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here