மேற்குவங்க மாநிலத்தில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைத்த உடனே “ஒரே நாடு, ஒரே உணவு” என்ற தனது திட்டத்தின் படி சைவ உணவை மக்கள் மீது திணிப்பதற்கு தொடங்கி விட்டது.

கொல்கத்தா மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை “International society for Krishna kanshi consciousness” (ISKCON) என்ற அமைப்பிற்கு மாநில பாஜக அரசு வழங்கியுள்ளது. இந்த அமைப்பானது இந்திய அரசுடன் கூட்டு சேர்ந்து மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற இந்த அமைப்பு பள்ளிகளில் முட்டை வழங்குவதை நிறுத்திவிட்டது. இந்த அமைப்பு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் பள்ளிகளில் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்க இந்துக்களிடையே காளியும், துர்க்கையும் மிகப் பிரபலமான தெய்வங்களாக உள்ளன. அவர்கள் காளி தெய்வத்திற்கு ஆட்டுக் கறியையும் மற்றொரு தெய்வமான துர்க்கைக்கு மீனையும் படையல் இட்டு வழிபட்டு வருபவர்கள். அதுமட்டுமின்றி, மேற்கு வங்க மக்களில் 98 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுபவர்கள்.

இந்த நிலையில் மேற்கு வங்க பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவில் கொடுக்கப்பட்டு வந்த முட்டையை நிறுத்துவது என்பது அந்த மக்களின் உணவு பழக்கத்தின் மீதான மிகப்பெரும் தாக்குதல் என்பதே உண்மை.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மொத்த பெண்களில் 71.4 சதவீதம் பெண்கள் ரத்த சோகை உள்ளவர்கள் என்றும் ஐந்து வயது வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 25 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என்றும் 2021 இல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 5 -ல் (National Family Health Survey 5) குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் சுமார் 80 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் மதிய உணவு உண்பவர்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவில் வழங்கப்பட்ட வந்த முட்டையை நிறுத்துவது என்பது எவ்வளவு பெரிய சத்து குறைபாட்டிற்கு மேற்குவங்க மாநில மக்களை தள்ள இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் முட்டைக்கு பதிலாக புரதம் மிக்க சைவ உணவை வழங்குவதன் மூலமாக மாணவர்களின் சத்து குறைபாட்டை போக்க உள்ளதாக இந்த நிறுவனம் இப்பொழுது கூறியிருக்கிறது.

படிக்க:

 மாணாக்கர்களை மூடநம்பிக்கையில் மூழ்கடிக்கும் சமூக அக்கறையில்லா ஆசிரியர்கள்!

 உணவு பாசிசம்: அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை!

சைவ உணவில் உள்ள புரதம் என்பது முழு நிறைவான புரதம் அல்ல. அரிசி, கோதுமை, ராகி, கம்பு, திணை, சாமை போன்ற தானியங்களிலும் துவரம் பருப்பு பாசிப்பருப்பு கொள்ளு பருப்பு சுண்டல் பட்டாணி போன்ற பருப்பு வகைகளிலும் மனித உடலுக்கு தேவையான எல்லா வகையான அமினோ அமிலங்களும் சரியான விகிதத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. சைவ உணவு சாப்பிடுபவர்கள் மனித உடலுக்கு தேவையான முழு நிறைவான புரதத்தை பெற வேண்டுமெனில் மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் இரண்டு அல்லது மூன்று வகையான சைவ உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டி இருக்கும். இதற்கு மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் முட்டை ஒரு முழுமையான (Complete) புரத உணவு. மனித உடலுக்குத் தேவையான 9 வகையான அத்தியாவசிய அமினோ அமிலங்களும் போதுமான அளவில் உள்ளன.

புரதச்சத்து மிக்க சைவ உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் பொழுது முட்டையின் விலை ஒப்பிட்டு அளவில் குறைவாக உள்ளது. எனவே செலவு என்ற வகையிலும் சத்து என்ற வகையிலும் முட்டை தான் சிறந்த தேர்வாக இருக்க முடியும்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் உணவில் ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் பார்ப்பன உணவு பழக்கத்தை திணிப்பது என்பது பன்முகத்தன்மை கொண்ட இந்திய மக்களின் உணவு பழக்கத்தை சிதைப்பதற்கான முயற்சியைத் தவிர வேறுஅல்ல.

இப்பொழுது முட்டையை கொடுக்க முடியாது என்பவர்கள் பிறகு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் வெங்காயமும் பூண்டும் சேர்க்க முடியாது என்பதையும் கூறுவார்கள். (பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் தங்களது உணவில் வெங்காயத்தையும் வெள்ளைப் பூண்டையும் சேர்த்துக் கொள்வதில்லை. இந்தியாவின் நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் அவர்கள் “நான் வெங்காயம் பூண்டு சாப்பிடுவது கிடையாது” என்று கூறியதை இங்கு அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

மக்களின் தொன்று தொட்டு வரும் உணவுப்பழக்கத்தை கைவிட்டு விட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் பாசிசத் தாக்குதல்தான். இதற்கு அடிபணிவது என்பது சுதந்திரத்தை இழந்து அடிமையாக வாழ்வதற்கு ஒப்பானது.

மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் இத்தகைய அடிமைத்தனத்தை அந்த மாநில மக்களின் மீது திணிக்க முயற்சிக்கிறது பாசிச பாஜக அரசு. இதையே இந்தியா முழுமைக்கும் திணிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே கட்சி என்று இந்தியாவில் எல்லாவற்றையும் ஒரே… ஒரே… ஒரே…என்று மாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச கும்பல்.

இதை எதிர்த்து முறியடிக்காவிட்டால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலிடம் அடங்கி ஒடுங்கி அடிமையாகக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைவரும் ஈடுபடவேண்டும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here