அறிவிப்பு
அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,
மக்கள் அதிகாரம் சார்பில் அனைவருக்கும் வணக்கம்.
இதுவரை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு புதுவை என்ற முகநூலில் எமது அமைப்பின் போராட்ட நிகழ்வுகளை, செய்திகளை, நேரலை இணையக்கூட்டங்களை பதிவிட்டு வந்தோம்.
அதன் தொடர்ச்சியாக மக்கள் அதிகாரம் இணைய தளத்தை விரைவில் தொடங்கயிருக்கிறோம்.
பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், பெரும் மக்கள் திரளுக்கு மறுக்கப்படுகின்ற, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை மீட்கும் அரசியல் போராட்டத்திலும் அனைவரையும் கருத்தளவில் இணைக்கும் முயற்சியாக மக்கள் அதிகாரம் இணைய தளத்தை தொடங்கி இருக்கிறோம்.
நீங்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் என பலருக்கும் இந்த இணைய தளத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.
மக்கள் அதிகார தோழர்களும், புதிதாக மாநில நிர்வாகிகளாக பொறுப்பேற்றிருக்கும், தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளை சார்ந்த தோழர்களும் பெருமளவில் நமது இணைய தளத்தின் கருத்துக்களை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு செல்ல தேவையான பங்களிப்பை செய்ய வேண்டும் என தோழமையோடு கேட்டுக் கொள்கிறோம்.
கொரோனா உயிரிழப்பு, ஊரடங்கு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, சிறு தொழில் நாசம், இளைய தலைமுறையின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலையில் கல்வி கொள்கை, கல்வி நிலையங்கள், விவசாயிகளை வாழ்வை பறிக்கும் வேளாண் சட்டங்கள், தொழிலாளி வர்க்கத்தை கொத்தடிமையாக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள், காலனி ஆட்சியை மிஞ்சும் ஊபா, என்ஐஏ ஆள்தூக்கி கருப்பு சட்டங்கள், பெரும் மக்களை அகதிகளாக்கி நிரந்தர அமைதியின்மையை ஏற்படுத்தும் குடியுரிமையை பறிக்கும் குடியுரிமை சட்டங்கள் இப்படி கொத்து குண்டுகளாக மக்கள்மீது நாள்தோறும் இடியாக இறங்கி கொண்டே இருக்கிறது.
கொரோனா சாவிலும் ஆதாயம் அடைந்த கார்ப்பரேட் வரிசையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முதலாளி வேதாந்தா அனில் அகர்வாலும் ஒருவன்.
13 பேர் துப்பாக்கிசூட்டிற்கு பலியாகி ரத்தத்துளியில் சட்டப்படி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என சொல்லிக்கொண்டு கொல்லைப்புறமாக திறக்க முயற்சிக்கிறான். ஆக்சிஜன் தயாரிக்க மூடிகிடக்கும் இந்த ஆலையை விட்டால் வேறு நாதியில்லை என்பது மாபெரும் ஒன்றிய அரசுக்கு இழிவானதாக தெரியாது. காரணம் ஒன்றிய மோடி அரசு வேதாந்தாவின் கூட்டாளி.
கொரோனாவாலும், ஊரடங்காலும் தடுப்பூசி இல்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், தடுப்பூசி உற்பத்திக்காக 700 கோடி செலவில் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு இயங்காமல் உள்ள செங்கல்பட்டு ஆலையை தமிழ்க அரசிடம் ஒப்படையுங்கள் என்ற கோரிக்கை கிடப்பில் போட்டுள்ள ஒன்றிய மோடி அரசு ஒரே நாளில் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி தருகிறது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலும் தூத்துக்குடியிலிருந்து அகற்றும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றக்கோரி போராட வேண்டும். ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் வளாகத்தை கையகப்படுத்தி தமிழக அரசே செய்ய வேண்டும்.
ஜாலியன்வாலாபாக் போன்ற தூத்துக்குடி துப்பாக்கிசூடு படுகொலையை யாரும் மறந்து விட முடியாது. டெல்லி என்றைக்கும் ஓரவஞ்சனையாக தமிழக மக்களுக்கு எதிராகத்தான் நிற்கும். இன்று கார்ப்பரேட் காவி பாசிசம் கைகோர்த்துக் கொண்டு இந்திய நாட்டுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலாக அடக்கி ஒடுக்கி வருகிறது. இவற்றை அனைவரும் ஐக்கியப்பட்டு அனைத்து வழிகளிலும் போராடி முறியடிக்க வேண்டும்.
மக்கள் அதிகார இணையதளத்திற்கு தங்களின் பங்களிப்பை, ஆதரவை முழுமையாக வழங்குமாறு மீண்டும் உங்களிடம் கோரி முடிக்கிறேன் நன்றி, வணக்கம்.
தோழமையுடன்:
தோழர். சி. ராஜு வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம். தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு – 9597138959.