(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலிடமிருந்து அதிபர் பியர்ஸ்க்கு எழுதப்பட்ட கடிதம், 1885

1851-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட உடன்படிக்கை ஒன்றினை வாஷிங்டனின் ப்யூஜெட் சவுண்ட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்த சுக்வாமிஷ் மற்றும் பிற செவ்விந்தியப் பழங்குடியினர் எதிர்கொள்ள நேரிட்டது. உடன்படிக்கையின் ஒரு பகுதி, இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பை 150,000 டாலர்களுக்கு விற்க அவர்களை நிர்பந்தித்தது.

சுக்வாமிஷ் பழங்குடியின் தலைவர் சியாட்டில், ஆன்மீக நம்பிக்கையும் தெளிந்த சிந்தனையும் கொண்டவராக இருந்தார். அந்த நிகழ்வை ஒட்டி அவர் உரையாற்றியிருந்தால், அது ஒருவேளை இப்படிதான் இருந்திருக்கும்.)

ந்த ஆகாயத்தை, இந்த நிலத்தின் வெதுவெதுப்பை நீங்கள் எப்படி விற்கவோ வாங்கவோ முடியும்? இந்த யோசனையே எங்களுக்கு விநோதமாக இருக்கிறது. காற்றின் புத்துணர்வையும் நீரின் பளபளப்பையும் நம்மால் சொந்தம் கொண்டாட முடியாதபோது அதை வாங்க மட்டும் எப்படி முடியும்?

இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் மக்களுக்குப் புனிதமானவை. ஒளிரும் ஒவ்வொரு பைன் மர இலையும், ஒவ்வொரு மணற் கடற்கரையும், அடர்வனத்தின் ஒவ்வொரு பனித்திவலையும், ஒவ்வொரு பொட்டல்வெளியும், ரீங்கரிக்கும் ஒவ்வொரு பூச்சியும் எங்கள் மக்களின் நினைவிலும் அனுபவத்திலும் புனிதமானவை. மரங்கள் தம்முள் நீரைக் கடத்தவில்லை, செவ்விந்தியர்களின் நினைவுகளைக் கடத்துகின்றன.

இறந்துபோன வெள்ளையர்கள், விண்ணுலகம் சென்ற பின், தாங்கள் பிறந்த நாட்டை மறந்துவிடுகிறார்கள். ஆனால் இறந்துபோன எங்கள் முன்னோர்கள் ஒருபோதும் இந்த அழகிய பூமியை மறப்பதே இல்லை. ஏனெனில் இதுதான் செவ்விந்தியரின் அன்னை. நாங்கள் இந்தப் பூமியின் அங்கம், இந்தப் பூமி எங்களின் அங்கம்.

நறுமணமிக்க மலர்கள், எங்கள் சகோதரிகள்; மான், குதிரை, பெருங்கழுகு, இவையெல்லாம் எங்கள் சகோதரர்கள். பாறை முகடுகள், பச்சைப் புல்வெளிகளின் ஈரம், மட்டக்குதிரையின் உடற்சூடு, மனிதன் – யாவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

வாஷிங்டனில் உள்ள பெருந்தலைவர் எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாகச் சொல்கிறார், எங்களின் ஒரு பகுதியைக் கேட்கிறார். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கித் தருவதாகவும் அதில் நாங்கள் வசதியாக எங்கள் விருப்பம் போல வாழலாம் என்றும் பெருந்தலைவர் சொல்கிறார். அவர் எங்கள் தகப்பனைப் போன்றவர், நாங்கள் அவரது பிள்ளைகளைப் போன்றவர்கள். ஆகையால் நீங்கள் எங்கள் நிலத்தை வாங்குவது குறித்து பரிசீலிப்போம்.

அதிபர் பியர்ஸ்
ஆனால் அது எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதமானது. ஓடைகளிலும் நதிகளிலும் மினுமினுத்துக்கொண்டு ஓடுவது வெறும் நீர் அல்ல, எங்கள் முன்னோர்களின் குருதி.

நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமானது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும் இது புனிதமானது என்பதைச் சொல்லித்தரவேண்டும். ஏரிகளின் தெளிந்த நீரில் தோன்றும் அமானுஷ்யப் பிரதிபலிப்புகள் ஒவ்வொன்றும் எங்கள் மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் நினைவுகளையும் சொல்லும். நீரின் சலசலப்பு என் பாட்டனின் குரல்.

நதிகள் எங்கள் சகோதரர்கள், அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. எங்களது படகுகளை ஏந்திச் செல்கின்றன, எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கின்றன. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், நதிகள் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சகோதரர்கள் என்பதையும், ஒரு சகோதரனிடம் காட்டும் பரிவைப் போன்று நதிகளிடமும் பரிவு காட்ட வேண்டுமென்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லித்தரவேண்டும்.

வெள்ளையர்களால் எங்கள் வாழ்க்கைமுறையைப் புரிந்துகொள்ள முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு நிலப்பகுதியைப் போலத்தான் இன்னொன்றும். ஏனென்றால் அவர்கள் இரவுநேரத்தில் வந்து அவர்களுக்குத் தேவையானவற்றை நிலத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் அந்நியர்கள். இந்த நிலம் அவர்களுக்கு சகோதரன் அல்ல. மாறாக, அவர்களுடைய எதிரி. நிலத்தை வெற்றிகொண்ட பிறகு அவர்கள் அங்கிருந்து போய்விடுகிறார்கள். ஒரு வெள்ளை மனிதன், தான் விட்டுச் செல்லும் அவனுடைய தந்தையின் கல்லறையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவனுடைய குழந்தைகளிடமிருந்து இந்த பூமியைப் பறிக்கிறான், அது குறித்தும் அவன் அக்கறை கொள்வதில்லை. அவனது தந்தையின் கல்லறை, அவனுடைய குழந்தைகளின் பிறப்புரிமை எல்லாமும் மறக்கப்பட்டுவிடுகின்றன. அவன் தன் தாய், இந்த பூமி, தன் சகோதரன், அந்த வானம் எல்லாவற்றையுமே ஆடுகளுக்கும் அலங்கார மணிகளுக்கும் நிகரான, வாங்கவும் பறிக்கவும் விற்கவும் கூடிய பொருட்களைப் போலவே நடத்துகிறான். அவனுடைய ஆறாப்பசி, இந்த பூமியை விழுங்கி, வெற்றுப் பாலையை மாத்திரமே விட்டுவைக்கப்போகிறது.

எனக்குத் தெரியவில்லை. எங்கள் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டவை. உங்கள் நகரத்துக் காட்சிகள் செவ்விந்தியனின் கண்களை ரணமாக்குகின்றன. செவ்விந்தியன் ஒரு காட்டுவாசி என்பதால், ஒருவேளை அவனுக்கு அது புரியாமல் இருக்கலாம்.

வெள்ளையர்களின் நகரத்தில் அமைதியான இடம் என்று எதுவும் இல்லை. வசந்தகாலத்தில் துளிர்விடும் இலையின் ஓசையோ அல்லது பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும் சத்தமோ கேட்க ஒரு இடமும் இல்லை. நானொரு காட்டுவாசி என்பதால் ஒருவேளை எனக்கு அது புரியாமல் இருக்கலாம்.

இரைச்சல்கள் எங்கள் காதுகளை இம்சிக்கின்றன. தனித்து ஒலிக்கும் இராப்பக்கி பறவையின் கதறலையோ, குளத்தோரத் தவளைகளின் கூச்சலையோ ஒருவனால் கேட்க இயலவில்லை எனில் வாழ்க்கையில் பிறகு வேறு என்னதான் இருக்கிறது? நானொரு செவ்விந்தியன் என்பதால் எனக்கு அது புரியவில்லை. குளத்து நீரின் மேற்பரப்பை உரசிப்போகும் காற்றின் சன்ன ஒலியையும், நண்பகல் மழை கழுவிய அல்லது பைன் மர வாசம் சுமந்த அக்காற்றின் மணத்தையுமே ஒரு செவ்விந்தியன் விரும்புகிறான்.

செவ்விந்தியர்களுக்கு காற்று ஒரு அரும்பொருள். ஏனெனில் அனைத்துப் பொருட்களுக்கும் அதுதான் ஒரே மூச்சுக்காற்று. விலங்கு, மரம், மனிதன் – அனைவரும் ஒரே காற்றைத்தான் பகிர்ந்து சுவாசிக்கிறார்கள். வெள்ளையர்களோ, தாங்கள் சுவாசிக்கும் காற்றின்பால் கவனம் செலுத்துவதாகக்கூடத் தெரியவில்லை. வெகுகாலமாக மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவனுக்கு, வீச்சமும் வாடையும் தெரியாத அளவுக்கு நுகர்திறன் மரத்துப்போய்விடும்.

ஆனால், நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், காற்று எங்களது அரும்பொருள் என்பதையும், காற்று தன் ஆன்மாவை, அது வாழ்விக்கும் அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். இந்தக் காற்றுதான் என் பாட்டனாருக்கு முதல் மூச்சைக் கொடுத்தது, அதுவேதான் அவரது கடைசி மூச்சைப் பெற்றுக்கொண்டது.

மேலும் நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், புல்வெளிப் பூக்களின் நறுமணம் தாங்கிய காற்றை, வெள்ளையர்களும் அனுபவிக்கும் ஒரு தலமாக, தனியாகவும் புனிதமாகவும் அதை நீங்கள் பேணவேண்டும்.

எனவே எங்கள் நிலத்தை வாங்குவது குறித்த உங்கள் முனைவை நாங்கள் பரிசீலிப்போம். அதை ஏற்றுக்கொள்வதென நாங்கள் முடிவு செய்தால் நான் ஒரு நிபந்தனை விதிப்பேன்: வெள்ளையர்கள் இந்த நிலத்தின் உயிரினங்களை தங்கள் சகோதரர்களாக நடத்தவேண்டும்.

நானொரு காட்டுவாசி. எனக்கு வேறெந்த வழியும் தெரியவில்லை.

ஓடும் ரயிலிலிருந்து வெள்ளையர்கள் சுட்டுக் கொன்றதால் புல்வெளிகளில் அழுகிக்கிடக்கும் ஆயிரமாயிரம் எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். நானொரு காட்டுவாசி. எனக்குப் புரியவில்லை, நாங்கள் உயிரோடு இருப்பதற்காக மட்டுமே கொல்லும் எருமையை விடவும் புகைவிடும் அந்த இரும்புக் குதிரை எந்த விதத்தில் முக்கியமானதாக இருக்க முடியும்?

விலங்குகள் இல்லாவிடில் மனிதன் ஏது? எல்லா விலங்குகளும் அழிந்துவிட்டால், மனிதனும் ஆன்மாவின் பெருந்தனிமையில் அல்லாடி மரித்துப்போவான். விலங்குகளுக்கு என்ன நேர்கிறதோ, அதுதான் விரைவில் மனிதனுக்கும் நேரும். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

உங்கள் குழந்தைகளிடம், அவர்களுடைய பாதங்களுக்கு அடியிலிருக்கும் மண், அவர்களுடைய பாட்டனார்களின் சாம்பல் என்பதை நீங்கள் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். வாழ்ந்துசென்ற நம் சுற்றத்தாரால்தான் இந்த பூமி வளமாக இருக்கிறது என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

இந்த பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதைப் போலவே, நீங்களும் உங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். பூமிக்கு என்னவெல்லாம் நேர்கிறதோ, அது எல்லாமும் பூமியின் பிள்ளைகளுக்கும் நேர்கிறது. மனிதர்கள் தரை மீது துப்புகிறார்கள் எனில், அவர்கள் தங்கள் மீதே துப்பிக் கொள்கிறார்கள்.

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்: இந்த பூமி, மனிதனுக்குச் சொந்தம் இல்லை, மனிதன்தான் பூமிக்குச் சொந்தம். இதுதான் எங்களுக்குத் தெரியும்.

குடும்பத்தைப் பிணைக்கும் இரத்த பந்தம் போன்றுதான் எல்லாப் பொருட்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைப் பின்னலை மனிதன் நெய்வதில்லை. அவன், அப்பின்னலின் ஒற்றை இழை மட்டுமே. அப்பின்னலுக்கு என்னவெல்லாம் அவன் செய்கிறானோ, அதையெல்லாம் அவன் தனக்கே செய்கிறான்.

ஒரு நண்பனைப் போல இறங்கி வந்து தன்னோடு பேசக்கூடிய கடவுளைக் கொண்டிருக்கும், வெள்ளை மனிதனும் கூட, இந்தப் பொதுவிதியிலிருந்து விலக்கு பெற இயலாது.

என்ன இருந்தாலும் நாம் அனைவரும் உடன்பிறந்தவர்களே. எங்கள் கடவுளும் அதே கடவுள்தான் என்று ஒருநாள் வெள்ளையர்கள் கண்டுகொள்ளக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் நிலத்தை நீங்கள் சொந்தமாக்க விரும்புவதைப் போலவே எங்கள் கடவுளையும் சொந்தமாக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உங்களால் முடியாது. காரணம், அவர் மனிதர்களின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளை மனிதனுக்கும் சமமானது. அவருக்கு இந்த பூமி மிக மதிப்புவாய்ந்த ஒன்று. இந்தப் பூமிக்குக் கேடு விளைவிப்பது என்பது படைத்தவனை அவமதிப்பது போன்றது.

வெள்ளையர்களும் போய்விடுவார்கள். மற்றெல்லாப் பழங்குடியினரையும் விட சீக்கிரமாகவே அது நடக்கலாம். உங்கள் படுக்கையைத் தொடர்ந்து நீங்கள் அசுத்தப்படுத்திக்கொண்டே இருந்தால், ஒருநாள், உங்கள் மூத்திர வாடையே உங்களை மூச்சுத் திணறவைக்கும்.

ஆனால் ஏதோ ஒரு சிறப்புக் காரணத்தை முன்னிட்டு, இந்த நிலத்தின் மீதும், இந்த நிலத்தில் வாழும் செவ்விந்தியர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தைத் தந்த, இந்தப் பூமிக்கு உங்களைக் கொண்டுவந்த கடவுளின் வல்லமையால், உங்கள் அழிவின்போதும் நீங்கள் பிரகாசிப்பீர்கள்.

எல்லா எருமைகளும் கொல்லப்பட்ட பிறகு, காட்டுக் குதிரைகள் யாவும் பழக்கப்பட்ட பிறகு, காடுகளின் ரகசிய மூலை முடுக்கெல்லாம் மனித வாடையால் நிரம்பிய பிறகு, பழங்குன்றுகளெல்லாம் தந்திக் கம்பிகளின் பொருட்டு சிதைக்கப்பட்ட பிறகு, வரவிருக்கும் ஊழ்வினை என்னவாக இருக்கும் என்பது எங்களுக்கு மர்மமாக உள்ளது.

நன்றி:

தமிழில் :கீதா மதிவாணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here