ஹரி-ஹர(அரி-அர) புத்திரன் ஐயப்பனுக்கு… ரூ.1000/- கோடியை கொட்டித் தள்ளும் மார்க்சிஸ்ட் முதல்வர் பினராய் விஜயன்!
2025 செப்டம்பர் 20-ல், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டம், பம்பை திரிவேணியில் உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டை கேரள (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்) முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். பல்வேறு மாநிலங்கள், அயல்நாடுகளில் இருந்தெல்லாம் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
‘ஜாதி – மத எல்லைகளைத் தாண்டிய வழிபாட்டுத் தலமாக உள்ள சபரிமலைக்கு அனைத்து மதத்தினரும் வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோயில் போல சபரிமலை ஐயப்பன் கோயிலை புகழ்பெற்ற யாத்திரை தலம் ஆக்குவதே இந்த சங்கமத்தின் நோக்கம்’…
‘உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டும் என்பதற்காக வளர்ச்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் சபரிமலை கோவிலுக்கு வரும் பாதையின் விரிவான மேம்பாட்டுக்காகப் பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் மேலாகவே செலவிடப்படும்; இப்பணிகள் 2022 முதல் 2039 ஆம் ஆண்டு வரை மூன்று கட்டங்களாக நடைபெறும்’…
The Global Ayyappa Sangamam at Pampa marks a historic moment in reaffirming Kerala’s secular legacy. Organised by the Travancore Devaswom Board as part of its platinum jubilee, it celebrates Sabarimala’s universal message of devotion, fraternity & inclusivity, while opening new… pic.twitter.com/LzPFMVgRDq
— Pinarayi Vijayan (@pinarayivijayan) September 20, 2025
‘அறிவியல் பூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தில் சபரிமலைக்கு ரயில் பாதை, விமான நிலையம், எளிமையான போக்குவரத்து, வாகன நிறுத்துமிடம், ஓய்வு மையங்கள், பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதும் அடங்கும் ‘…
… என்றவாறு புளகாங்கிதம் அடைந்து ‘பக்தி பரவசம் சொட்ட’ பேசியுள்ள விவரங்கள் ஏதோ ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்தோ, இந்துத்துவ பற்றாளர்களோ, காவி உடை தரித்த சங்கராச்சாரிகளோ மடாதிபதிகளோ உதிர்த்த வார்த்தைகள் அல்ல. மாறாக கேரள மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கட்சி முதலமைச்சர் பினராய் விஜயன்தான் இவ்வளவு ‘தெளிவுபட’ப் பேசியுள்ளார்.
மாநாட்டை எதிர்த்த கேரள எதிர்கட்சிகள்
இந்த மாநாட்டிற்கு காங்கிரஸ், பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் அதனை துச்சமென உதறித் தள்ளிவிட்டு ‘வெற்றிகரமாக’ மாநாட்டை நடத்திவிட்டதாக ‘பில்டப்’ காண்பித்ததோடு, அவர்களுக்கு ‘பதிலடி’ கொடுப்பதாக எண்ணிக்கொண்டு கீழ்க்கண்டவாறு ‘மார்க்சியவாதி’-யான பினராய் விஜயன் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.
‘சங்கமத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல உண்மையான பக்தர்கள். மற்றவர்கள் பக்தர்கள் போல தங்களைக் காட்டிக்கொண்டு சங்கமம் மாநாட்டை தடுக்க முயற்சிக்கின்றனர் ‘ எனப் பேசினார்.
படிக்க: பார்ப்பன பாசிஸ்டுகள் அறநிலையத் துறையை ஏன் குறி வைக்கிறார்கள்?
இந்த மாநாட்டில் பங்கேற்க, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலினை அழைத்திருந்தார் பினராய் விஜயன். மு க ஸ்டாலின் என்ன நினைத்தாரோ தாம் கலந்து கொள்ளாவிட்டாலும் அழைத்ததற்காக பினராய் விஜயனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, சுயமரியாதை – பெரியார் பிறந்த மண் என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டிலிருந்து, தமது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஆர்எஸ்எஸ் பாணியிலான காவி வேஷ்டி புகழ் பெற்றவருமான சேகர்பாபுவையும், பக்திப் பரவசத்தில் ஊறி திளைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனையும் அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் அம்மாநாட்டில் பங்கேற்று குத்துவிளக்கும் ஏற்றியுள்ளனர். சேகர்பாபுவோ தமிழ்நாட்டில் இருந்து, இந்த மாநாட்டில் ஆயிரம் பேரை பங்கேற்கச் செய்வதற்கான வழிவகைகளை செய்திருந்தார்.
அறிவியல் கண்ணோட்டம் துளியுமற்ற கேரள மார்க்சிஸ்ட்டுகள்!
அறிவியல் சாதனங்களை கோவிலின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவது குறித்து துளியும் வெட்கப்படவில்லை பினராய் விஜயன். மார்க்சியவாதிகள் அறிவியலை முன்னெடுத்துச் சென்று அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை கரை சேர்ப்பதே பிரதான பணியாகக் கொண்டியங்க வேண்டும்.
தங்களது வறுமைக்கும், பசிக்கும், பட்டினிக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும், ஆண்டவன் அவனவன் தலையில் எழுதிய ‘ஊனி எழுத்து’ என்று ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டே கருத்தியல் ரீதியாக உழைக்கும் மக்களின்மீது மூளையில் பதிய வைத்து விட்டார்கள்.
ஆக, மக்கள் மீது படிந்து கிடக்கும் அப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை அகற்றிட கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள்… நாட்டில் காவி இருள் முன்னிலும் பல மடங்கு வேகமாக பரவி வரும் இக்காலச் சூழலில் மக்களின் அறியாமையை அகற்ற வேண்டிய பணி இவர்கள் முன் கூடுதலாக காத்துக் கிடக்கின்றன.

ஆனால் அதைவிடுத்து, மார்க்சியம் பேசிக்கொண்டே – பெரியாரிசம் பேசிக்கொண்டே ஆர்எஸ்எஸ்- பாஜக- இந்துத்துவ சக்திகளுக்கு நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்லர் எனப் போட்டி போட்டுக் கொண்டு கோவில்களுக்குக் குடமுழுக்கு நடத்துவது, பல்லாயிரம் கோடி தொகைகளை கொட்டி அழுவது, பாலாபிஷேகம் நடத்துவது; எண்ணற்ற திருவிழாக்களை கொண்டாடுவது எனக் கேடுகெட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அல்லது அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களின் நம்பிக்கைக்கு வால்ப் பிடிக்கின்றனர்.
ஏனெனில் அவர்களுக்கு வாக்கு வங்கி முக்கியம்! பதவி சுகம் முக்கியம்! கொள்கை கோட்பாடுகள் தூசுக்குச் சமம் என்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு விட்டனர். சந்தடி சாக்கில் கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடமே (பார்ப்பனர்களிடமே) விட்டுவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
ஆனால் அது எப்படியோ சமாளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘ சாதி மதங்களை தாண்டிய வழிபாட்டுத்தலமாக விளங்கும் ஐயப்பன்’ எனப் பூரித்து பேசும் பினராய் விஜயன், ஐயப்பன் கோவில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதற்கு கண்டனரு – மோகனருகள் என்ற பார்ப்பனர்களை தவிர்த்து தகுதி படைத்த சூத்திர பஞ்சம மக்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்காக என்னென்ன திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசும் காவி மயம்; நீதித்துறையும் காவி மயம் என்பதால் சட்டமன்றங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என சட்டம் இயற்றினால் கூட பார்ப்பனர்கள் தங்களுக்குரிய நீதிமன்றச் செல்வாக்கு, காவி அரசுச் செல்வாக்கு இவற்றைக் கொண்டு முறியடித்து விடுகின்றனர்.
அப்படியெனில் மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து எப்படி விடுபட செய்யப் போகிறோம்? குறைந்த பட்சம் ஆன்மீகத்தில் மூழ்கியுள்ள மக்களின் வழிபாட்டுத் தலங்களான கோவில்களில் அனைத்து சாதியினரையும் எப்படி அர்ச்சர்களாக்க வீறு கொண்டு எழப் போகிறோம்? பார்ப்பனச் சதியை எப்படி முறியடிக்கப் போகிறோம்? என்பதைப் பற்றி எல்லாம் மார்க்சிஸ்ட் அரசாங்கத்திற்கோ திராவிட மாடல் பேசும் திமுக அரசிற்கோ துளியும் அக்கறை இல்லை என்பதையே அவர்களது நடவடிக்கைகள் மெய்ப்பிக்கின்றன. இவர்களே இக்கதி என்றால் மற்ற ஓட்டு கட்சியினர் எப்படி இருப்பர்?
சபரிமலை ஐயப்பனும் –
மகர விளக்கு ரகசியமும்!
இவை ஒருபுறம் இருக்க; இந்த சனாதனப் பார்ப்பனக் கூட்டம் சாதி அடுக்குகளை உருவாக்கி, சாதி தீண்டாமையையும் நிலை நிறுத்தி வைத்ததோடு மட்டுமல்லாமல் கடவுளர்களைப் பற்றி கட்டுக்கடங்கா புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.
இன்னும் ராமன், விநாயகர் போன்ற பல கடவுளர்களின் கதைகளை எல்லாம் தோலுரித்தால் தந்தை பெரியார் ‘அதுகளுக்கு’ச் செய்த ‘மரியாதை’ போதாது என்றே தோன்றும். அவற்றை இத்தலைப்பில் நாம் விவரிப்பின் நீண்டு விடும் என்பதால் ‘கதாநாயகன்’ ஐயப்பனைப் பற்றி பரிசீலிப்போம்.
ஐயப்பன் வரலாறு என்பதே எத்தனை எத்தனை வகை?
பிரமாச்சாரன் என்றொரு அரக்கன் இருந்து கொண்டு தேவர்களுக்கு துவேஷம் செய்தானாம். சிவபெருமானே ஆடிப்போனானாம். உடனே மகாவிஷ்ணு (திருமால்) என்ற ஆண் கடவுள் மோகினி வேடம் தரித்தாராம்; அந்த மோகினிமீது மோகம் கொண்டு அரக்கன் பிரம்மச்சரன் களியாட்டம் போட்டதில் காட்டில் பெற்று போட்டது தான் ஐயப்பனாம்.
இன்னொன்று ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு பாடுகின்ற பொழுது கூறுவதைப் போல ‘ஹரி-ஹர (அரி-அர) புத்திரனே, ஐயப்பனே சரணம்’ என்ற கதைப்படி சிவனும் மகாவிஷ்ணுவும் கலவியில் ஈடுபட்ட பொழுது வெளிப்பட்ட விந்துவை கையில் ஏந்தியதால் உருவான கையப்பனே நாளடைவில் மருவி ஐயப்பனானான் என்ற ஒரு கதையும் உண்டு. இன்னும் பல கதைகள் உண்டு. ஆக ஐயப்பன் வரலாறு ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் என்பதேயாகும்.
எவ்வளவு ஆபாசம்? அசிங்கம்? எழுத்து வடிவத்தில் கொண்டு வருவதற்கே நமக்கு கை கூசுகிறது.
அதிலும் ஐயப்பன் மார்கழி 10-ல் பிறந்தானாம். அவனுக்கு உத்திர நட்சத்திரமாம். பஞ்சமி திதியாம். வாகனம் ‘புலி’யாம்!
அதனால் தான் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மாலையிட்டு விரதம் துவக்கும் நாளை மார்கழி மாதம் ‘உத்திர நன்னாளில்’ துவங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
தை மாதம் (ஜனவரி) சபரிமலைக்குக் ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்று படையெடுத்துச் செல்கின்றனர்.
பணக்காரர்களைப் பற்றி முதலாளிகளைப் பற்றி இது விடயத்தில் நாம் கவலை கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பின்பற்றி உழைக்கக்கூடிய தொழிலாளர், விவசாயிகள், சிறு வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பயணப்படுகிறார்களே… காலத்தையும், நேரத்தையும், பொருளையும் வீணாக்கி தமது வாழ்வு பறிபோனதற்கான உண்மைக் காரணத்தை புரிந்து கொள்ள மாட்டாமல் அறியாமையில் சிக்கி தவிக்கிறார்களே என்று எண்ணுகின்ற பொழுதுதான் மனம் வலிக்கின்றது. எல்லையற்ற வேதனை கொள்ளச் செய்கிறது.
1970-களிலேயே ‘மகரஜோதி’ என்பது அப்பட்டமான பொய் என்பதை கேரளத்தைச் சேர்ந்த வடசேரி எம் ஆர் சோமநாதன் (நாயர்) அம்பலப்படுத்தினார்.
மூடநம்பிக்கையற்ற மூன்று அரசு அலுவலர்களை பொன்னம்பலமேட்டிற்குச் சென்று பரிசோதித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்; ‘அற்புதத்தின்’ பெயரால் ஆயிரம் ஆயிரம் மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்குவது; அறியாமையில் மூழ்கடிப்பது கொடூரமான செயல் என 16-12-1973 ‘ஜன யுகம்’ மலையாள இதழில் எம். பிரபா என்பவர் அம்பலப்படுத்தினார்.
மகர ஜோதிக்கு எவ்வித தெய்வீகத் தன்மையும் கிடையாது அது மோசடி என்பதை 16-01-1982 தேதியிட்ட பிலிட்ஸ் ஆங்கில ஏடு படங்களுடன் அம்பலப்படுத்தியது.
சில ஆண்டுகளுக்கு முன் கையும் களவுமாக பிடிபட்ட பந்தம் பிடித்து வந்த மின்வாரிய ஊழியர்களை இழுத்து வந்தார்கள் கேரள பகுத்தறிவாளர் கழகத்தினர். மகரஜோதி புரட்டை வெளிச்சமாக்க விசாரணை கோரினர். கடைசியில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரியும் ‘மகரஜோதி’ என்று அழைக்கப்படும் வெளிச்சம் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு மின்வாரிய மற்றும் வனத்துறை ஊழியர்களின் ஒத்துழைப்போடு அரங்கேற்றும் கைவரிசையே தவிர அது ‘சுயமாக’த் தோன்றும் ‘அருள் ஒளி’ அல்ல என முன்னாள் கேரள முதல்வர் ஈ கே நாயனார், கேரளா பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் இட முருகுவிடம் 06-01-1990-ல் அறிவித்து அம்பலப்படுத்தினார். ஆனால் மக்களின் நம்பிக்கையை தகர்க்க நாங்கள் விரும்பவில்லை என்பதாக நாயனாரும் பின்னர் வந்த முன்னாள் முதல்வர் அக்சுதானந்தனும் நழுவிக் கொண்டனர். இன்று உள்ள முதல்வர் பினராய் விஜயனோ கோடிக்கணக்கில் செலவழித்து மாநாடு நடத்துகிறார்; லட்சோப லட்சம் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற பொழுது கல்லுக்கு கொட்டி அழுகிறார்கள் மார்க்சிஸ்ட் கள். ஆயிரம் ஆயிரம் கோடிகளை இந்த புரட்டுத் தெய்வத்திற்கு வாரி வழங்குகிறார்கள்.
மகர ஜோதி அல்லது மகர விளக்கு என்பது ஐயப்பனின் மகிமையால் தென்படும் ஒளி என்றும், அதாவது மகரஜோதி தெரியும் நாள் அன்று முதலில் ஒரு பருந்து பறக்கும் என்றும் சரியாக மாலை 6:00 மணிக்கு மகர ஜோதி தெரியும் என்றும் சரடு விடுகிறார்களே, அது உண்மையா?
சபரிமலை பொன்னம்பல மேட்டில் தென்படும் ‘மகரஜோதி’ கேரள அரசின் மின் வாரியத்தால் செய்யப்பட்ட செட்டப் தான். (அப்போதைய) மின்வாரிய ஜீப் டிரைவர் கோபி என்பவராலும் அதற்கு பின்னர் பலராலும் கற்பூரத்தை பெரிய பாத்திரத்தில் பற்ற வைத்து தூக்கி காண்பிக்கப்படும் ஜோதி தான் மகரஜோதியின் ரகசியம் இதனை கொச்சியில் இருந்து வெளிவரும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேடு 18-01-1981-லேயே தெளிவாகவே அம்பலப்படுத்தியது. ஆக ஜோதியை கும்பிட வேண்டும் எனில் கோபியை கும்பிட்டால் போதுமானது என்பதுதான் உண்மை நிலை.
உழைக்கும் மக்கள் நலனில் அக்கறையுள்ளோர் செய்ய வேண்டியதுதான் என்ன?
‘மதம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகும்; இதயமற்ற உலகின் இதயமாகும்; ஆன்மா அற்ற நிலையில் உள்ள ஆன்மா ஆகும்; மக்களை மயக்கும் அபினி (போதை வஸ்து) ஆகும்’ – என்றார் ஆசான் கார்ல் மார்க்ஸ்.
மதங்களின் அடிப்படையில் தான் கடவுளர்கள் அதிகமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் இந்து மதத்தில் உழைக்காமலேயே உண்டு கொழுக்கும் பார்ப்பனக் கூட்டம், இந்தக் கோயில்களை உருவாக்குவதற்கு ‘அடித்தளமாக’ இருந்து காரியமாற்றி மக்களை மடமையில் ஆழ்த்துவதற்கு பெரும்பங்காற்றிருக்கிறார்கள்.
படிக்க: நடப்பது ஸ்டாலின் ஆட்சியா? துர்காவின் ஆட்சியா?
கோவில் கருவறைகளை தமது சொந்த சொத்துரிமை போல பாவித்துக்கொண்டு உழைக்கும் மக்களாம் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மக்களை கருவறைக்குள் நுழைய விடாமலும், தகுதி பெற்ற இம்மக்களை அர்ச்சகர்கள் ஆக விடாமலும் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.
மக்களின் அறியாமை அவர்களுக்கு பெரும் மூலதனம் ஆகிவிடுகிறது. அதனால் தான் திருமணம், குழந்தை பிறப்பு, வீடு குடியேற்றம், இறப்பு, பின்பு திதி என சகலத்திலும் உழைக்கக்கூடிய மக்களே அந்த ஈனர்களை அழைத்து வேதம் ஓதச் செய்கிறார்கள்.
இந்த மடமையை ஒழிக்க மார்க்சிஸ்ட்டுகள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் மக்களை சாதி வேறுபாடுகள் இன்றி திரட்டி போர்க்களம் காண வேண்டி உள்ளது. அதுவன்றி மக்களின் பிற்போக்கு சிந்தனையோட்டத்திற்கு ஏற்ற வகையில் முற்போக்கு பேசுபவர்களும் வால்பிடித்துச் சென்றால் அம்மக்களை கரை சேர்க்க முடியாது.
இன்றைய இந்தியாவின் மறு காலனியாக்கச் சூழலில், கார்ப்பரேட் காவிப் பாசிசம் என்பது – தேசம் கடந்த முதலாளிகளும், ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ காவிக் கூட்டமும் இணைந்து உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டி வாழ்க்கையின் விளிம்பு நிலைக்குத் தள்ளும் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை முறியடிக்க வேண்டிய பாரிய பணி நம் முன் காத்து கிடக்கிறது!
அத்தோடு இடைக்காலத்தில் புழுத்து நாறும் பாராளுமன்ற ஜனநாயகத்தை புரட்டிப்போட்டு ஜனநாயகக் கூட்டரசை நிறுவிட வேண்டியதும் பிரதான கடமையாகக் கொள்ள வேண்டி உள்ளது.
அதற்கான களம் காண்போம்! சமர் புரிவோம்!
- எழில்மாறன்







உண்மையாகவே அருமையான கட்டுரை போல முற்போக்கு சிந்தனை பேசக்கூடிய திராவிட அரசு தமிழகத்திலும் சரி கேரளாவிலும் சரி இந்த மூடர்களுக்காக தனது முற்போக்கு சிந்தனையாளர்கள் அடிமையாக இருப்பதை சுட்டி காட்டி அற்போக்கு சிந்தனைகளை அடகு வைத்துள்ள வரை விவரித்து அருமையாக இருக்கிறது அதோடு மார்க்ஸ் எழுதிய மதம் எப்படிப்பட்டது அது மனிதனுக்கு இழைக்கப்பட்ட போதை என்பதனை உதாரணத்துடன் விளக்கி உள்ளீர் சிறப்பு தோழர்
உண்மையாகவே அருமையான கட்டுரை போல முற்போக்கு சிந்தனை பேசக்கூடிய திராவிட அரசு தமிழகத்திலும் சரி கேரளாவிலும் சரி இந்த மூடர்களுக்காக தனது முற்போக்கு சிந்தனையாளர்கள் அடிமையாக இருப்பதை சுட்டி காட்டி முற்போக்கு சிந்தனைகளை அடகு வைத்துள்ளதுவரை விவரித்து அருமையாக இருக்கிறது அதோடு மார்க்ஸ் எழுதிய மதம் எப்படிப்பட்டது அது மனிதனுக்கு இழைக்கப்பட்ட போதை என்பதனை உதாரணத்துடன் விளக்கி உள்ளீர் சிறப்பு தோழர்
மிக சிறப்பு தோழரே….
மக்களின் வாழ்வாதாரத்தையும் உழைப்பையும் உறிஞ்சும் காவி கும்பல்கள், அவர்கள் கட்டமைக்கப்பட்ட இந்த ஆன்மீக சிந்தனை தான் என்பதை ஆகப் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிர கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் என்ற போர்வையில் மக்களிடம் பிற்போக்கு அரசியலை புகட்டும் செயலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது…
என்ற வகையில் கேரளா கம்யூனிஸ்டுகள் அவர்களின் இந்த ஆன்மீக போக்கு மக்களை மடையர்களாக மாற்றும் செயல் என்பதை தெளிவாக விளக்கி கட்டுரை பதிவிட்டுள்ளார்..
இன்று உழைக்கும் மக்களுக்கு பொது எதிரியான ஆர்எஸ்எஸ் பாஜக நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து அவர்களுக்காகவே சட்டங்களையும் திட்டங்களையும் வகுத்துக் கொண்டு இருக்கும் சூழலில், கார்ப்பரேட்டுகளின் நிழலில் தன்னுடைய அகண்ட பாரத கனவை நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் இது போன்ற நடவடிக்கை என்பது கேரளா கம்யூனிஸ்ட் கட்சியை கடும் விமர்சனத்துக்குரியது, மக்களின் மத நம்பிக்கையை ஓட்டாக அறுவடை செய்வது கம்யூனிஸ்ட்களின் அரசியல் அல்ல..
காவி கும்பல்களுக்கு
சேவை செய்வதும்
கம்யூனிஸ்களின் வேலை அல்ல….
மாறாக மக்களுக்கு எதிராய்ப் போன இந்த கார்ப்பரேட் காவி பாசிச கும்பல்களை நாட்டை விட்டு விரட்டி அடித்து, மக்களுக்கான பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை இப்போது தேவை… ✊✊🙏
போலி கம்யூனிஸ்ட் வாதிகளின் முகமூடி கிழித்தெரியப்பட்டுள்ளது. இது போன்ற மாநாடுகள் நடத்துவதற்கு என்ன காரணம் என்று சில கம்யூனிஸ்ட் தோழர்களிடம் கேட்டால் இது போன்ற மாநாடுகள் நடத்தாவிட்டால் பாஜகவினர் கேரளத்தில் ஆட்சியைப் பிடித்து விடுவார்கள் என்ற ஒரு பயம் உள்ளதாகவும் சில தோழர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆட்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டால் இவர்களும் சனாதானவாதிகளாக மாறிவிடலாமே. கேரளத்தில் மார்க்சியம் தோற்று விட்டதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. தக்க சமயத்தில் தலைவர் அவர்களின் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.