ஒரு ”கொலை”யும் தொடரும் புலன்விசாரணையும்!

கடந்த ஜனவரி 29 அன்று மதுரையில் மகனை கொன்றதாய், வயதான தாய், தந்தையை கைது செய்திருக்கிறார்கள். பல ஊடகங்களில் அன்று மற்றும் அடுத்த நாள் முழுவதும் ஏதோ வீடு புகுந்து கொள்ளையடித்த திருடனை சிசிடிவி உதவியுடன் கையும் களவுமாய் பிடித்த கதையை சொல்வது போல பரபரப்பாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கூலி தொழில் செய்து வரும் 72 வயதான முருகேசன், 60 வயதை தொடும் கிருஷ்ணவேணி அம்மாவின் மகன் மணிமாறனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். தொடர்ந்து குடிக்கும் பிரச்சனையால், வேலைக்கு செல்லாமல் இருந்ததால், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு தாய், தந்தையுடன் இருந்து வந்துள்ளார். இத்தனை வயதாகியும், கூலி வேலை செய்யும் வயதான தந்தை பெத்த கடமைக்கு சோறு தான் போடமுடியும். தினமும் குடிக்குமா காசு கொடுக்க முடியும்?

 

தந்தையின் வாக்குமூலப்படி, அன்றைக்கும் குடிக்க காசு கேட்டு, அம்மாவிடம் தகராறு செய்துள்ளான். மோசமாக திட்டி, தாக்கியும் உள்ளான். கோபத்தில் கட்டையை எடுத்து அப்பா தாக்கியதில் சம்பவ இடத்திலேயே செத்தும் போய்விட்டான். தங்கள் மகனை தானே கொன்றதாய் ஊரார் தூற்றுவார்களே என அவமானத்துக்கு அஞ்சி, பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி, தாங்கள் வைத்திருந்த சைக்கிளில் இரவோடு இரவாக கொண்டு சென்று வைகை ஆற்றில் எரித்து இருக்கிறார்கள்.

ஆக, மகன் எப்பேர்ப்பட்ட குடிகாரனாய் இருந்தாலும், அவன் கொடுக்கும் டார்ச்சரை பெற்றோர்கள் தாங்கிக்கொண்டிருக்கவேண்டும். அப்படி பொறுத்துக்கொள்ளாமல், கட்டையை எடுத்து தாக்கியதால், அவர்கள் ஈவிரக்கமற்ற பெற்றோர்கள். மேலும் அப்படியே போய் போலீசிடம் சரணடைந்து, தங்களுக்கு இந்த அரசு கொடுக்கும் தண்டனையை சந்தேசமாய் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும்.
அதற்கு பதிலாக அவர்களே சுடுகாட்டில் போய் எரிப்பது போல, வைகையாற்றில் எரித்தது மாபெரும் குற்றம். அதற்கான தண்டனையை அவர்கள் சிறையில் சில ஆண்டுகள் அடைபடவேண்டும். இப்படி இந்த வழக்கை எளிதாக முடித்துவிடலாமா?

குடியால் சமூகத்தில் எழும் பல பிரச்சனைகளை தினமும் செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம். கொஞ்சம் அதிகமாக தெரிகிறதா? ஒரு நாள்விட்டு ஒருநாள் பார்த்துவருகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். குடியால் என்னென்ன பிரச்சனைகள் என்று தேடிப்பார்த்தால்… மதுவால் சமூகத்தில் 40% சாலை விபத்துக்கள், 35% தற்கொலைகள், 80% பாலியல் வன்புணர்ச்சிகள் அதிகரித்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவிக்கிறது. ஆக குடி என்பது தனிநபரை மட்டுமல்ல! சமூகத்தை கடுமையாக பாதிக்ககூடிய பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

நாம் குடிகாரர்களையும், குடி நோயாளிகளையும் பிரித்து புரிந்து வைத்திருக்கிறோமா? என்றால் இல்லை. தன்னைச் சுற்றி நிகழும் எந்த ஒன்றிற்கும், எவ்வித முடிவும் எடுக்க முடியாமல், யாரையும் நம்ப முடியாமல், தான் பொறுப்பேற்றுக் கொண்ட பணியை செய்ய முடியாமல், தான் குடிக்கின்ற மதுவின் அளவை கட்டுப்படுத்த முடியாமல், தன்னால் யாருக்கெல்லாம் பிரச்சனை என்பதை உணர முடியாமல், சதா மதுவைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு, அதனை எப்படியெல்லாம் பெற முடியுமோ அந்தந்த வழிகளைக் கண்டறிந்து, தன் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி, குற்ற உணர்வுடனும், பய உணர்வுடனும், சமூக நன்மதிப்புகளை இழந்து, உடனே சாக முடியாமல், வாழ்ந்து செத்துக் கொண்டிருப்பவர் தான் குடிநோயாளி என்கிறது மருத்துவ உலகம்.

குடிநோயின் சார்பு நோயாளிகள் யார்? மதுவுக்கு அடிமையானவர் மட்டும் தான் குடி நோயாளியா என்றால் இல்லை. அவரோடு அன்றாடம் போராடி, அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர், நண்பர், என நீளும்பட்டியலில் உள்ள அனைவருமே குடிநோயின் சார்பு நோயாளிகள் என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

மக்கள் தங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால், மருத்துவர்களை பார்க்கிறார்கள். மருந்து எடுத்து சரியாகிவிடுகிறார்கள். ஆனால், வீட்டில் ஒரு ஆள் குடிக்கிறார் என்றால், அவர் குடிகாரரா? குடி நோயாளியா என தெரியாமல் தான் அவர்களுடைய குடும்பத்தினர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அதில் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, எப்பொழுதுமே மன உளைச்சலில் தான் உழல்கிறார்கள்.

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யவேண்டிய அரசோ, அதற்கு நேர் எதிராக தெருவுக்கு ஒரு சாராயக் கடையைத் திறந்து கல்லா கட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 5198 அரசின் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு 70 கோடி லாபமும், பண்டிகை நாட்களில் 100 முதல் 300கோடிக்கும் மேலாக லாபம் ஈட்டுகிறார்கள். 2018-19 ஆண்டில் ரூ. 31158 கோடியும், கொரானா ஊரடங்கு சில மாதங்கள் இருந்த நிலையிலும் கூட 2020-21ல் ரூ. 33811 கோடிகளில் லாபம் ஈட்டியிருக்கிறது.

இந்த நிலை மாறுமா? குடிநோய்க்கான சிசிச்சை என்பது வெறும் தனிநபராக (ஒற்றை உயிரியல் Biological Frame Work எனப்) பார்த்து நோயாளிகளை மீட்க முடியாது என்பது நடைமுறை. உள – சமூகவியல் – அரசியல் – பொருளாதார காரணிகளை உள்ளடக்கிய சிகிச்சை முறையை கையாளாவிட்டால், குடிநோயாளிகள் மீண்டும் மீண்டும் குடிக்கச் செல்வதைத் தடுக்க முடியாது” என்கிறார் அரசு மனநல மருத்துவரான இராமனுஜம். தனிநபர்களாக இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது என்றாகிவிட்டது அல்லவா?

மக்கள் மத்தியில் சாராயக் கடைகளுக்கு எதிராக இருந்த குமுறல்களை எல்லாம் ஒன்றாய் இணைத்து சாராயக்கடைகளை உடைக்கும் போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு மக்கள் மத்தியில் தொடர் பிரச்சார இயக்கத்தை, டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தை தொடங்கி வைத்தது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் போராட்டமாய் எழுந்தது. விளைவு அந்த ஆண்டில் நடந்த தேர்தல் வாக்குறுதியாக அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளும் வாக்குறுதியாக பூரண மதுவிலக்கை அறிவித்தார்கள். முதலில் கடைகளை அடைக்க முடியாது என திமிராக அறிவித்த ஜெ, எங்கே தோற்று போய்விடுவோம் என பயந்து, கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை குறைப்போம் என அறிவித்தார். ஜெயித்த பிறகு சொல்லித்தொலைத்துவிட்டோமே என்பதற்காக கடைகளின் எண்ணிக்கையை பெயரளவிற்கு குறைத்தார்.

அதற்கு பிறகு மக்களுடைய போராட்டங்கள் இல்லை என்று ஆன பிறகு, 2021 தேர்தலில் டாஸ்மாக் பேசுபொருளாக இல்லை. ஆகையால், அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.

ஆக, மக்கள் தனித்தனியாக இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். மீண்டும் மக்களை ஒருங்கிணைத்து போராட வேண்டியது மக்கள் மத்தியில் வேலை செய்கிற ஜனநாயக சக்திகளின், முற்போக்கு, புரட்சிகர அமைப்புகளின் கடைமையாக இருக்கிறது.

செய்தி ஆதாரம்:
நியூஸ் 7 செய்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here