அமுலாக்கத்துறை: மோடி – ஷாவின் பிரம்மாஸ்திரம்!

சமீபத்தில் மகாராஷ்டிராவில் அமுலாக்கத்துறை ஏகப்பட்ட ரெய்டுகளை சுறுசுறுப்பாக‌ நடத்தியது.  இப்பொழுது சிவசேனை கட்சியை உடைத்து, பா.ஜனதா ஆட்சியில் கச்சிதமாக உட்கார்ந்துவிட்டது.

0
113


2024 தேர்தலுக்கு மற்ற அரசியல் கட்சிகள் தயாராகிறார்களோ இல்லையோ,  பாரதீய ஜனதா வெறித்தனமாக இறங்கி வேலை செய்துவருகிறது. தேர்தலுக்கு முன்பாகவே களத்தில் தன்னை எதிர்த்து நிற்கிற அனைத்துக் கட்சிகளையும் பலவீனப்படுத்த அமுலாக்கத்துறை என்னும் (வெறி நாயை மன்னிக்கவும் சில வார்த்தைகளை பயன்படுத்த பார்லிமென்ட் தடை செய்திருப்பது நினைவுக்கு வருகிறது) வலுவான அஸ்திரத்தை தயார் செய்துவிட்டது.

எட்டு ஆண்டுகளில் 3010 ரெய்டு!

2004 துவங்கி 2014 வரை காங்கிரசு ஆட்சியில் அமுலாக்கத் துறை 112 சோதனைகளை மட்டும் நடத்தியுள்ளது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு  2014 துவங்கி 2022 வரை கடந்த எட்டு ஆண்டுகளில் 3010 ரெய்டுகளை நடத்தியிருக்கிறது. அதாவது 27 மடங்கு  அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் 47 இடங்களில் ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது.

அடேங்கப்பா! 3010 ரெய்டா! மோடிஜீ சூப்பர்ல‌! அப்படியே கணக்கில் வராத பணத்தை எல்லாம் கைப்பற்றி, மூட்டை மூட்டையா கொண்டு வந்து பல ஆயிரம் கோடிகளை கொட்டி அரசு கஜானவை நிரப்பி இருப்பாரே என நினைத்தால்… 17 ஆண்டுகளில் போடப்பட்ட 5400 வழக்குகளில் 23 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளார்கள் என்ற செய்தி கேட்டதும், புஸ்ஸூன்னு ஆயிருச்சு!

இதில் தான் ட்விஸ்டு.  சமீபத்தில் மகாராஷ்டிராவில் அமுலாக்கத்துறை ஏகப்பட்ட ரெய்டுகளை சுறுசுறுப்பாக‌ நடத்தியது.  இப்பொழுது சிவசேனை கட்சியை உடைத்து, பா.ஜனதா ஆட்சியில் கச்சிதமாக உட்கார்ந்துவிட்டது.

அதே போல, கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கூட அப்பப்ப‌ ரெய்டு நடந்தது.  ஒரு ஆள் கூட ‘உள்ளே’ போகவில்லை. ஆனால் திரைமறைவு பேரங்கள் கச்சிதமாய் நடைபெற்று, அதிமுக வழியாக பா.ஜனதா ஆட்சி செய்தது இதோ, தீதி மம்தா ஆளும் மேற்கு வங்கத்திலும் ரெய்டு செய்துகொண்டே இருக்கிறார்கள்.  இதெல்லாம் உங்க நினைவுக்கு வரிசையா வரும். அதற்கெல்லாம் நான் பொறுப்பாக மாட்டேன்..


இதையும் படியுங்கள்: ஐடி ரெய்டுகள் எதற்கு?


 

200 பேர் வழக்கு தாக்கல்

அமுலாக்கத்துறை சட்டம் (2002) குடிமக்களை தான்தோன்றித்தனமாக கைது செய்தல், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல், பிணை மறுக்கப்படுதல் ‍ என அதன் பல அபாயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பி உச்சநீதி மன்றத்தில் 200 பேருக்கும் மேலாக வழக்கு தொடுத்தார்கள். உச்சநீதி மன்றம் எல்லோருடைய நியாயமான‌ வாதங்களையும் வாங்கி குப்பை கூடையில் போட்டுவிட்டது.

உதாரணங்களாக :

காவல்துறை வழக்கு போடும் பொழுது, முதல் தகவல் அறிக்கையை  (FIR) குற்றம் சாட்டப்பட்டவர் பெறுவதற்கு உரிமை உண்டு.

அமுலாக்கத்துறை போடும் வழக்கு அறிக்கை என்பது துறையின் உள்ளார்ந்த ஆவணம். ஆகையால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுப்பது கட்டாயமில்லை என வாதாடியது. இதை உச்சநீதி மன்றமும் சரிதான் என மண்டையை ஆட்டிவிட்டது.

குற்றம்சாட்டப் பட்ட ஒருவர் காவல்துறையினர் முன் அளிப்பதாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அமலாக்கத்துறையினர் முன் கூறப்பட்டதாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அமலாக்கத்துறையினர் பதிவு செய்திடும் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் வெளிவர வேண்டுமானால் இரு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திட வேண்டும். அதாவது குற்றம்சாட்டப்பட்டவர்,  குற்றத்துடன் முதல் நோக்கில் தான் குற்றமற்றவர் என்பதை, அந்த குற்றம் தொடர்பான முதல் நோக்கிலேயே நிரூபிக்க வேண்டும். (The accused has to make a case that he or she is prima facie not guilty of the offence) அடுத்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்ந்து அதுபோன்ற குற்றத்தைச் செய்ய மாட்டேன் என்று நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்திட வேண்டும். அதாவது, தான் குற்றமற்றவர் என  நிரூபிக்கும் பொறுப்பை (the onus of proof)  குற்றம்சாட்டப்பட்டவர் பக்கமே தள்ளிவிட்டிருக் கிறது உச்சநீதிமன்றம்.

அபாயம் தேர்தல் கட்சிகளுக்கு மட்டுமில்லை! பெரும்பான்மை மக்களுக்கும் தான்!

காவி பாசிச கும்பல் ஒவ்வொரு மாநிலத்திலும் அமுலாக்கத்துறை போன்ற எல்லா ‘சட்டப்பூர்வ’ வழிகளையும், தனது குண்டர் படைகளை வைத்துக் கொண்டு சட்டப்பூர்வமில்லாத வழிகளையும் பயன்படுத்தி ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி வருகிறது. “தேர்தல் ஜனநாயகம்” எனப்படும் முகமூடியை கழற்றி எறிகிறது.

 

தேர்தல் கட்சிகள் புலம்புகிறார்கள்.  பா.ஜனதா கூட்டணி கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு சட்ட வழிகளை “முறையாக”‌ பயன்படுத்த வலியுறுத்தி கடிதம் அனுப்புகிறார்கள். ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் காங்கிரசு தலைவர்கள் சோனியா, ராகுல் மீது விசாரணையை துவங்கியதும், காங்கிரசு கட்சியினர் தெருவில் இறங்குகிறார்கள். பிறகு மக்கள் விலைவாசியாலும் கஷ்டப்படுவது திடீரென நினைவுக்கு வருகிறது. போராடுகிறார்கள். கேலிக்கூத்து.

காவி பாசிச கும்பல் எதிர்கட்சிகளை முடக்குவதோடு மட்டும் நிற்கமாட்டார்கள். ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பவர்கள் மீதும் அமுலாக்கத்துறையை ஏவிவிடுவார்கள்.  கைது செய்வார்கள். பிணை தரமாட்டார்கள்.  குற்றமற்றவர் என நாமே வாதாடவேண்டும்  என்பார்கள்.

மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்றால் ஜனநாயக, புரட்சிகர சக்திகளுடன் இணைந்து தெருவில் இறங்கி போராடுவது தான் இதற்கு ஒரே தீர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here