பட்ஜெட் 2022 : பெரும்பாலான மக்களை பாதிக்கும் பட்ஜெட்! கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்கும் பட்ஜெட்!


பொதுவாக இந்திய பட்ஜெட்டோ, தமிழக பட்ஜெட்டோ வாசிக்கும் பொழுதும் பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஊடகங்கள் தங்கள் ஆதரவு, எதிர்ப்பு நிலைக்கு தகுந்தவாறு தரும் சில செய்திகளை மட்டும் மேலோட்டமாக கேட்டுக்கொண்டு, அன்றாட வேலைகளில் மூழ்கிவிடுகிறார்கள். மத்தியதர வர்க்கமும், அதற்கு மேற்பட்ட வர்க்கங்களும் பட்ஜெட் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதால் ஆர்வமாய் கவனிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். அதில் வினையாற்ற முயல்கிறார்கள்முயல்கிறார்கள்.

ஒரு குடும்பத்தின் வரவு, செலவை வைத்து அந்த குடும்பம் ஆரோக்கியமாய் இருக்கிறதா?. நெருக்கடியில் இருக்கிறதா, நோய்வாய்ப்பட்டு இருக்கிறதா? என தெரிந்துகொள்ளலாம். குடும்பத்தின் பட்ஜெட்டை கவனித்து வருபவர் பட்ஜெட் நெருக்கடியில் இருந்தால், மிகுந்த மன உளைச்சலில் இருப்பார். நோய்வாய்ப்பட்டு இருந்தால், அவர் இன்னும் நோய்வாய்ப்பட்டுவிடுவார். அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு இந்த நெருக்கடியை ஒன்று சொல்லமாட்டார் அல்லது சொல்லவேண்டும் என்ற உணர்வின்றி இருப்பார். அதனால் ஒவ்வொரு உறுப்பினரும் செல்லம் கொஞ்சி செலவை அதிகப்படுத்தி குடும்ப பட்ஜெட்டை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவார்கள்.

ஒரு குடும்பத்திற்கே இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்றால், ஒரு நாட்டிற்கு ஒப்பிட்டு பாருங்கள். இதன் தீவிரம் புரியும். வேறு எந்த சமூக காரணிகளையும் விட, பட்ஜெட்டை கொஞ்சம் உரசிப் பார்த்தால், ஆள்கிறவர்களின் லட்சணத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த பட்ஜெட் யாருக்கு ஆதரவாக போடப்படுகிறது? யாரை அதிகம் பாதிக்கப்போகிறது? என தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை அல்லவா? பெரும்பான்மை மக்களின் அறியாமையில் தான் சிறுபான்மை கும்பல் இதில் குளிர்காய்கிறார்கள். இதை எப்படி புரிந்துகொள்வது? வாருங்கள். பார்க்கலாம்.

கழுத்தை நெறிக்கும் கடனும், வட்டியும்

ஒரு குடும்பத்தை நடத்த ஒரு நாளைக்கு என்பது ரூபாய் தேவை.. ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு வட்டியாக மட்டும் 20ரூ கட்டவேண்டும். ஆக மொத்தம் மாதம் நூறு ரூபாய் தேவை. பற்றாக்குறைக்கு என்ன செய்ய? தயங்காமல் கையை நீட்டிட வேண்டியது தான்! என சொன்னால்…நீங்கள் என்ன சொல்வீர்கள்? ”அந்த குடும்பம் திவால் தான். சீக்கிரமே தெருவிற்கு வந்துவிடும்” என்றெல்லாம் மோசமாக திட்டாதீர்கள்.  இந்தியாவை இந்த மோசமான நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

காங்கிரசு கட்சி ஆட்சியை விட்டு 2014 ஜூனில் இறங்கிய பொழுது, இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 7 ஆண்டுகளில், அது ரூ. 116 லட்சத்து 21 ஆயிரம்கோடியாக உயர்ந்துள்ளது.

அதை இப்படியும் சொல்லலாம்!  நாடு 1947ல் துவங்கி, சுமார் 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடி ஆண்ட‌ 7 ஆண்டுகளில் மட்டும் 62 லட்சம் கோடி கடன்  அதிகரித்துள்ளது.

இப்படி கைநீட்டி கடன் வாங்குவதெல்லாம், பெரும்பாலும் உலக வங்கியில் தான். அதில் பெரும்பங்கு போட்டிருப்பது உலக ரவுடியான ஏகாதிபத்திய அமெரிக்கா. மற்ற நாடுகள் ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதில் முக்கிய பங்காளிகள். நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளை கடன் என்கிற பெயரில் சிக்க வைத்து, அவர்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற திட்டங்களை கட்டாயப்படுத்தி நிறைவேற்றி கொள்கிறார்கள்.

இது சம்பந்தமாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ “இதுவரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதன்மூலம் எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. ஓரளவு முன்னேற்றம் பெறுவதும், பின்னர் பொருளாதாரச் சரிவைச் சந்திப்பதுமாகத்தான் சுழற்சியாக இருக்கிறது.  தேசிய நெடுஞ்சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இலவசமாக அனுமதிக்காதே! காசு வசூல் செய்!” என்பதெல்லாம் உலகவங்கி கொடுத்த திட்டங்களில் ஒன்று” என்கிறார்.

ஆக, இந்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பற்றாக்குறையை ஈடுகட்டவேண்டும் என்கிற சாக்கில் உலக வங்கியில் கடன்கள் வாங்கி இந்தியாவை கடன் வலையில் வலுவாக சிக்க வைக்கிறார்கள். இன்னொரு வழியாக, முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை வித்து தின்பவன் போல, இத்தனை ஆண்டு காலம் மக்களின் உழைப்பில் எழுந்து நிற்கும் பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்றுத்தள்ளுகிறார்கள். இந்த பட்ஜெட்டில் எல்.ஐ.சியை குறிவைத்து இருக்கிறார்கள்.

பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்கள்

பட்ஜெட் பற்றிய நிதியமைச்சர் உரையில் `பெண்கள்’ என்ற வார்த்தை ஆறு முறைதான் உச்சரித்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்காக பட்ஜெட்டில் எவ்வளவு சிந்தித்துள்ளார்கள் என புரிந்துகொள்ளலாம்.  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டை குறைத்துள்ளார்கள். சென்ற ஆண்டு 4.4% ஆக இருந்த அதன் பங்கு, இந்த வருடம் 4.3% ஆகக் குறைந்துள்ளது.

இரண்டு லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என்றும், புதியதாக உருவாக்கப்படும் அங்கன்வாடிகள் சிறந்த உள்கட்டமைப்பு, ஆடியோ காட்சியமைப்புகள், மற்றும் தூய்மையான சுற்றுப்புறத்துடன் குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சூழலை வழங்கும் என்றும் பட்ஜெட்டில் அறிவித்தார். இந்த அங்கன்வாடிப் பணிகளை, சச்சாம் அங்கன்வாடி (Saksham Anganwadi) மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் (Poshan 2.0 scheme) கீழ்தான் செயல்படுத்த வேண்டும். ஆனால் அந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு 0.7% என்ற மிகக் குறைந்த அளவு உயர்வே கிடைத்துள்ளது. குழந்தைகளின் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கேட்டு வரும் குறைந்தபட்ச நிர்ணய ஊதியம் போன்றவற்றுக்கோ ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பெண்களின் பாதுகாப்பிற்காக நடைமுறையில் இருக்கும் `பேடி பச்சவோ பேட்டி படாவோ’, ஒன் ஸ்டாப் சென்டர்கள், நாரி அதாலத், மகிளா போலீஸ் தன்னார்வலர் மற்றும் மகளிர் ஹெல்ப்லைன் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ₹587 கோடியில் இருந்து ₹562 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரம், குழந்தைகள் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளை உள்ளடக்கிய மிஷன் வத்சலயா திட்டத்திற்கு 63.5% நிதி ஒதுக்கீடு உயர்ந்து ₹900 கோடியாக உள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் SC, ST, சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களுக்கான நலனுக்கான திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் பயனாளிகள் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த செலவு 2021-22 பட்ஜெட் ஒதுக்கீட்டில் 3.2% என்று இருந்து, இந்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 2.5% ஆகக் குறைந்துள்ளது. அரசின் தொலைநோக்குப் பார்வையில் பெண்களுக்கு இடமில்லை என்பதையே இது காட்டுகிறது” என தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது அனைத்திந்திய ஜனநாயக பெண்கள் சங்கம்.

போராடிய உழவர்களை பலிவாங்கிய பட்ஜெட்

கார்ப்பரேட்டுகளுடைய நலனுக்காய் கொண்டு வந்த வேளாண்சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடினார்கள். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சில நூறு பேரை இழந்தும் கூட வெயில், மழை, பனி, கொரானா என எல்லாவற்றையும் எதிர்கொண்டு விடாப்பிடியாக போராடினார்கள். மத்திய அரசு பின்வாங்கியது. அவர்களை பழி வாங்கும் விதமாக, கடந்த ஆண்டு உரங்களுக்கான மானிய தொகை ரூ.1,40,122 கோடி ஒதுக்கியவர்கள், இந்த பட்ஜெட்டில் ரூ. ரூ.1,05,222 கோடிகள் தான் ஒதுக்கியுள்ளார்கள். இது சுமார் ரூ. 34,900 கோடிகள் அதாவது 25 சதவீதம் குறைவு.

பஞ்சாப் மாநிலம் உருவாக்கும் விவசாய உற்பத்தியின் பங்குக்கு கிட்டத்தட்ட ரூ. 3141 கோடி சுமை ஏறப்போகிறது. உரத்தின் விலை இன்னும் உயர்ந்தால், அதன் சுமையும் அந்த விவசாயிகளின் தலையின் தான் விழப்போகிறது.

நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றிய பட்ஜெட்

கடந்த ஏழு ஆண்டுகளாக விலைவாசி கடுமையாக ஏறியிருக்கிறது. ஆனால், தனிநபர் வருமான வரிக்கான இலக்கை கொஞ்சம் தளர்த்தி, சலுகைகள் தருவார்கள் என நடுத்தர வர்க்க மக்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால், அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இந்த நாட்டின் தேசிய முதலாளிகள் 10 லட்சத்திற்கும் மேலாக சம்பாதித்தால், 30% வருமான வரியாக செலுத்தவேண்டும்.  ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் 25.2 சதவிகிதம் வரியாக கட்டினால் போதும் என 2019 பட்ஜெட்டிலிருந்து சலுகை தந்தார்கள். இந்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரிகளுக்கு போடப்படும் சர்சார்ஜை 12 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைத்திருக்கிறார்கள்.

நேர்முகவரியும் மறைமுக வரியும்

நேர்முகவரி என்பது வருமான வரி.  சம்பாதிக்கும் பணத்திற்கு ஏற்ப வரி வசூலிப்பது. இந்த முறை தான் சரியானது. இந்த நேர்முக வரியில் தான் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு 30% சதவிகிதத்திற்கு பதிலாக 25.2% வசூலிக்கிறார்கள்.  மறைமுகவரியான விற்பனை & சேவை வரி என சொல்லப்படும் ஜி.எஸ்.டி வரியை அதிகரிக்கிறார்கள். கொரானாவால் ஊரடங்கு காரணமாகவும், தொழில் நிலைமை ஆரோக்கியமாக இல்லாததாலும், கிட்டத்தட்ட 60 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன என ஆய்வாளர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். மோசமாக நலிந்து கிடக்கும் சிறு, குறு, நடுத்தர முதலாளிகளின் நிலையை கணக்கில் கொள்ளாமல், பட்ஜெட்டில் எந்தவித ஊக்க சலுகைகளும் வழங்காமல், இதற்கு எதிர்மாறாக கரும்பு மிசினில் பிழியப்படும் கரும்பைப் போல பிழிந்து, ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டியில் ஒரு லட்சம் கோடி வசூல் செய்கிறோம் என பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை அதிகரித்துக்கொண்டே சென்றதால், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் என அனைத்துப் பொருட்களும் விலைவாசி எகிறிக்கொண்டே செல்கிறது.  இதற்கு சர்வதேச சந்தை விலை எகிறுவது தான் காரணம், மாநில அரசுகளும் இதில் வரி விதிக்கிறார்கள் என மாநில அரசு மீது பழி போடுகிறார்கள். இதோ மக்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.

கச்சா பேரல் விலையும்/ தில்லி விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல்

2012 ல் $94.05 65.60

2014 ல் $93.17 72.24

2016 ல் $43.29 59.68

2018 ல் $65.23 75.55

2020 ல் $39.68 79.76

2021 ல் $60.68 94.69

2022ல் $85.60 95.41

சென்னையில் ஒரு லிட்டர் விலை 101.40

ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் விலை 108.20

கடந்த ஜூன் 1 ந்தேதி தில்லியில் பெட்ரொல் விலை ரூ. 94.49. இந்த விலை எப்படி விதிக்கப்படுகிறது என்றால்….

கச்சா பேரல் விலை – 5151.00

ஒரு கச்சா பேரல் என்பது 159 லிட்டர்.

ஆக 1 லிட்டர் ரூ. – 32.39

 

சுத்தப்படுத்த ரூ.- 3.60

மத்திய அரசு வரி ரூ. 32.90

(சுங்கம் + சாலைவரி)

பெட்ரோல் பம்பு ரூ. 3.79

மாநில வாட் வரி ரூ. 21.81

ஒரு லிட்டர் ரூ. 94.49

ஆக ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 32.90யும், மாநில அரசு 21.81 யும் வரியாக விதிக்கின்றன.  மத்திய அரசு இதில் எவ்வளவு வரி விதிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பட்ஜெட் குறித்து இன்னும் பல அம்சங்களை விவாதிக்கலாம். கட்டுரை நீண்டு செல்வதால், இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம். ஆக இந்த பட்ஜெட் பெரும்பாலான மக்களுக்கான பட்ஜெட் இல்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ஏகாதிப்பத்திய நாடுகளுக்கும் ஆதரவான பட்ஜெட் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பும் அல்வா கிண்டி பகிர்ந்துகொள்வது சடங்காக செய்வார்கள். இந்த வருடம் கொரானா அச்சுறுத்தலால், அந்த சடங்கை தவிர்த்துவிட்டார்கள்.  பெரும்பாலான மக்களுக்கு பட்ஜெட் என்ன தரும்? என்பதற்கு அரசு மக்களுக்கு சூசகமாக சொல்லும் செயல் தான். நாம் தான் அதை புரிந்துகொள்ள தவறுகிறோம்.

இந்த பட்ஜெட்டில் உங்களுக்கு பிடித்தது எதுவுமே இல்லையா?   இருக்கிறது. மக்களுக்கு எதிரான பட்ஜெட்டை பல மணி நேரம் வாசித்து, அதை ஊடகங்கள் ஒளிப்பரப்பி கடுப்பேத்துவது என்பது இந்த பட்ஜெட்டில் இல்லை. 1.30 மணி நேரத்தில் வாசித்து முடித்துவிட்டார்கள்.

இன்னொரு பாசிட்டிவான விசயம்.  இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை பேரல் பேரலாக தாள்களில் பிரிண்ட் எடுக்காமல் கடந்த ஓரிரண்டு வருடங்களாக டிஜிட்டல் பட்ஜெட் என்ற முறை கொண்டு வந்திருக்கிறார்கள். சில நூறு மரங்கள் வெட்டப்படாமல் தப்பித்தன.

  •  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here