பீஸ்ட் இயக்குநர் செக்யூரிட்டி தொழிலாளர்களை இழிவுப்படுத்துகிறார்.


டத்தில் இந்திய உளவுத்துறையில் வேலைப் பார்த்து, வேலையை விட்டு வந்த நாயகனுக்கு செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை வாங்கித்தர அழைத்துவருகிறார் நாயகி. அந்த முதலாளி வயதான தொழிலாளர்களை வைத்து நிறுவனத்தை நடத்துகிறார். நாலு வயதான தொழிலாளர்களைப் பார்த்து ”முதல்ல ஜிப்பை போடுங்கய்யா!” என்கிறார். வேலையை ஒழுங்காக செய்யவில்லை என விதவிதமாய் திட்டுகிறார். படத்தில் ஆங்காங்கே ஒரு வயதான செக்யூரிட்டியை வைத்து கேலி செய்துகொண்டே இருக்கிறார்.

இது என்ன வகையான மனநிலை? இயக்குநர் நெல்சனின் நகைச்சுவை குமட்டுகிறது.  ஒரு மனிதன் வேலை செய்வதற்கான வயது என்பது 58 என சட்டம் தீர்மானித்திருக்கிறது. இந்தியர்களின் சராசரி வயது 70 என வரையறுக்கிறார்கள். 40லிலும் ஒரு மனிதன் சாகலாம். எங்க பாட்டி 95 வரைக்கும் வாழ்ந்தார்.  இறப்பவர்களின் வயதை, எண்ணிக்கையை கணக்கிட்டு தான் 70 வயதை சராசரி என்கிறார்கள்.

இயக்குனர் நெல்சன்

ஆக சராசரியாக ஒரு மனிதன் 20 வயதில் உழைக்க துவங்குகிற மனிதன் சமூகத்தில் ஏதோ ஒரு உற்பத்தி கண்ணியில் தன்னை இணைத்துக்கொண்டு 38 வருடங்கள் உழைக்கிறான். அதற்கு பிறகு அவனுக்கு கண் மங்கும். காது மங்கும். நோய்கள் வாட்டும். மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருப்பான். அதனால் செயல்படுவதின் வேகம் குறையும். ஆகையால், அதற்கு பிறகும் வேலை வாங்குவது சரியல்ல என்று தான் ஓய்வு தருகிறது. அவர் தனக்கு பிடித்தமான வேலைகளை செய்யட்டும் என அனுமதிக்கிறது. இப்படி சமூகத்திற்காக  உழைத்த மூத்தவர்களை மதிப்பது தான் நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.

 

58 வயதுவரை வேலை என்பது அரசு வேலைகளுக்கும், பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு எல்லாம் நடைமுறையில் அமுலாகிறது. தங்கள் குடும்பத்தின் தேவைக்காக பெரும்பாலான உழைக்கும் மக்கள், சாகும்வரைக்கும் வேலை செய்யவேண்டியிருப்பது மிகப்பெரிய அவலம். அதற்காக இந்த மக்களை ஆளும் அரசு தான் வெட்கப்படவேண்டும்.

மற்ற வேலைகளை விட செக்யூரிட்டி வேலை என்பது கொஞ்சம் சிக்கலானது. சென்னையில் பல விளம்பரங்களை பார்த்து இருக்கிறேன். சில நிறுவனங்களின் செக்யூரிட்டி பில்லை பார்த்திருக்கிறேன்.  பெரும்பாலான செக்யூரிட்டி வேலை என்பது 12 மணி நேரம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. என்ன ஒரு அநியாயம். இந்த வேலையில் மட்டும் இப்படி ஒரு மாற்றத்தை யார் ஏற்படுத்தியது? அதிலும் பெரும்பாலானவர்கள் ஏதொவொரு வேலைப் பார்த்து 58 வயதை கடந்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை வைத்து 12 மணி நேரம் வேலை வாங்குவது என்ன ஒரு நியாயம்? பகல் சிப்ட் என்றால் கூட சமாளித்துவிடுவார்கள். காலை 7 மணியிலிருந்து இரவு 7 வரை ஒரு சிப்ட்.  இரவு 7 துவங்கி காலை 7 மணி வரை ஒரு சிப்ட். பகலில் கூட சமாளித்துவிடலாம்.  இரவில் எப்படி 12 மணி நேரம் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை செய்யமுடியும்?

செக்யூரிட்டி வேலை செய்யும் நண்பர் ஒருவர் இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்.  ஒரு நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்தார்.  தூங்காமல் இருப்பதை கண்காணிக்கிறேன் என ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சிசிடிவி முன்பு தனது இருப்பை உறுதிசெய்யவேண்டும். செய்தார். இப்படி எல்லாம் வேலை செய்த பிறகு, இரண்டு மாதமும் சம்பளம் தரவில்லை.  இழுத்தடித்துக்கொண்டே இருந்தார்கள். பிறகு நமக்கு தெரிந்த ஒரு வழக்கறிஞர் நண்பரை அழைத்துக்கொண்டு கேட்டதற்கு, ஒரு வாரத்தில் தருகிறோம் என்றவர்கள், அலுவலகத்தை மூடிவிட்டு காணாமல் போய்விட்டார்கள்.  இப்பொழுது அவர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்.

சென்னையில் எல்லா பகுதிகளிலும் கடுமையான கொசுத்தொல்லை உண்டு. அதிலிருந்து தப்பிக்க ஒரு பாதுகாப்பாக ஒரு வேலை செய்யும் இடத்தை உருவாக்கி தந்திருக்கிறார்களா? என்றால் இல்லை. பல இடங்களில் பார்க்கிறோம். ரெம்ப பெருந்தன்மையோடு ஒரு இரும்பு சேர் தந்துவிடுவார்கள். இப்படி எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வேலை செய்வது, அவர்களின் ஆயுளை வெகுவாக குறைந்துவிடுகிறது.

இப்படி பார்க்கும் 12 மணி நேர வேலைக்கு பெரும்பாலோர் தரும் சம்பளம் 10000, 12000 தான் தருகிறார்கள். தொழிலாளர்களின் சமூக நலத் திட்டமான இ.எஸ்.ஐ, பி.எப் கூட பெரும்பாலோர் கட்டுவதில்லை. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்தால், ஒருநாள் ஓய்வு தரவேண்டும் என சட்டம் சொல்கிறது. சட்டத்தை எல்லாம் இவர்கள் மதிப்பதேயில்லை. ஏழு நாளும் வேலை செய்யவேண்டும். மாதத்தில் ஒரு நாள் போகாவிட்டாலும், சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்கள்.

வங்கியில் துப்பாக்கியோடு காவல் இருக்கிறார்கள். பணத்தை ஏடிஎம் மிஷினில் உள்ளே பொருத்துகிறவர்கள் துப்பாக்கியோடு வருகிறார்கள். சில லட்சங்களை போட்டுவிட்டு, ஒரு செக்யூரிட்டியை எந்தவித ஆயுதம் இல்லாமல் நிறுத்திவிட்டு போவது என்ன லாஜிக்? இந்தியா முழுவதும் ஏடிஎம் கொள்ளை நடக்கும் பொழுதெல்லாம் செக்யூரிட்டிகள் கழுத்தை அறுத்தோ, தலையில் அடித்தோ கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். ஏடிஎம்மில் மட்டுமில்லை. பல இடங்களில் கொலை செய்யப்படுகிறார்கள். செக்யூரிட்டி கொலை என தேடிப்பாருங்கள். இணையம் கொட்டுகிறது. ஒவ்வொரு செக்யூரிட்டி சாகும் பொழுதும், ஒரு குடும்பம் ஆதரவு இல்லாமல் தெருவுக்கு வருகிறது.

 

செக்யூரிட்டி தொழிலாளர்கள் இப்படி இரவும் பகலும் அயராமல் உழைப்பதால் தான் பல பங்களாக்களிலும் பெரிய பெரிய அபார்ட்மெண்ட் வீடுகளிலும் நிம்மதியாக தூங்குகிறார்கள்.  நகரமும், நாடும் அமைதியாக உறங்குகிறது.

பாதுகாப்பு வேலைகளை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம், வேலை செய்யும் இடம் என எல்லாவற்றையும்  ஒழுங்குப்படுத்த வேண்டிய அரசுகள் கவலைப்படாமல் இருக்கிறார்கள். சிவில் சமூகமும் குறைவான சம்பளத்திற்கு ஆட்கள் கிடைத்தால் போதுமென கமுக்கமாய் பயன்படுத்திக்கொள்கிறது. சமூகத்தைப் பற்றி அறிவற்ற நெல்சன் போன்ற இயக்குநர்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள்.  நெல்சனின் கோரமான நகைச்சுவைக்கு உடைமை வர்க்கம் சிரிக்கலாம். உழைக்கும் வர்க்கமாகிய நாமும் சிரித்தால், வர்க்க உணர்வற்று போயிருக்கிறோம் என அர்த்தம். இதை கொஞ்சம் உரைக்கும்படி சொல்லவேண்டுமென்றால், மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பிக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here