ஒரே நாடு, ஒரே வரி என்ற கோஷத்துடன் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பானது இந்தியாவின் தேசிய தொழில்கள் அனைத்தையும் முடக்கியது.

கோடிக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் சிறு, குறு தொழில்களை நாசமாக்கியது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வருவதற்கு உகந்த வகையில் சில்லறை வர்த்தகர்கள் மீது கடும் வரிகளை விதிப்பதன் மூலம்  தானாகவே சிறு கடைகளை மூடுவதற்கு வழிவகுத்தது.

அத்தனை கொடூரங்களையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி வரி பற்றி அதனுடன் நேரடியாக பரிச்சயமான ஒருவரின் ரத்த சாட்சி இதோ!

000

ஜி.எஸ்.டி என்பது சின்ன சின்ன தொழில் செய்பவர்களை தொழிலிருந்து விரட்டுகிறது.  ஒவ்வொரு மாதமும் பில் போடுகிறார்கள். அடுத்த மாதமே   20தேதிக்குள் கட்டச்சொல்லி ஜி.எஸ்.டி சொல்கிறது. இல்லையெனில் சரக்கை  கொண்டு செல்லும்  இ வே பில்லை (E waya Bill) ஜி.எஸ்.டி முடக்குகிறது.. மீறி பொருளை எடுத்துச்செல்லும் பொழுது, அதிகாரிகளிடம் மாட்டினால், இரண்டு மடங்கு அபராதம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதிகாரிகளை கணிசமாக கவனிக்கவேண்டும்.

ஆனால்,  அந்த முதலாளிக்கு பில் போட்டதற்கான பணம் ஒவ்வொரு கிளைண்ட்டுக்கு ஏற்ப ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, அதிகப்பட்சம் நான்கு மாதங்கள், ஐந்து மாதங்கள் கூட  தராமல் இழுத்தடிக்கிறார்கள். இதைச் செய்வது சிறுமுதலாளிகள் அல்ல! பெரும் முதலாளிகள்.

ஆகையால்,  சம்பந்தப்பட்ட சிறுமுதலாளியின் தொழிலை நடத்தி செல்வதற்கான மூலதனம் (Working Capital) கடுமையாக அடிவாங்குகிறது.

விளைவு. துவக்கத்தில் வட்டிக்கு கடனை வாங்கி சமாளிக்கிறார். முன்பை போல தொழிலில் இலாபமும் வெகுவாக குறைந்திருக்கிறது. ஓடுகிற வரை இந்த ஓட்டம் ஓடி, ஒரு நாளில் தொழில் படுத்துவிடுகிறது.

அந்த சிறுமுதலாளியின் சிரமம் பற்றிய எந்த  கவலையும் ஒவ்வொரு மாதமும் இத்தனை கோடிகள் வசூலனாது என்பதை பெருமையாக அறிவித்துக்கொண்டு இருக்கிறது அரசு.

000

ஒரு ஜி.எஸ்.டி அதிகாரியின் அனுபவம்


லுவலகத்திற்கு இன்று நண்பகல் ஒரு Tax payer வந்தார். 50 வயதைக் கடந்தவர். உடன் ஒரு இளைஞர். வரி நிலுவையில் இருந்ததால் அவரது நிறுவனத்தின் GST பதிவை ரத்து செய்துவிட்டோம். வரித்தொகையை வசூலிப்பதற்காக அவருடைய வங்கி கணக்கையும் முடக்கி விட்டோம். நிலுவை வரியை வட்டியோடு செலுத்தினால் (தாமதமாக ரிடர்ன் file செய்வதற்கு late fee தனி) மட்டுமே வங்கிக் கணக்கை விடுவிப்போம். எல்லாம் மொத்தமாக லட்சங்களில் இருந்தது. தொகையை செலுத்திய ரசீதுகளை எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்திருந்தார்.

அவருடைய பேச்சிலிருந்து தொழிலைத் தவிர GST சம்மந்தமாக வேறொன்றையும் அறியாதவர் என்பது விளங்கியது. ரிடர்ன் file செய்வது எல்லாம் உடன் வந்த அவரது உறவுக்கார பையன்.  அந்த மனிதர் அங்கிருப்பதை அருவருப்பாக உணர்ந்தார் என்று சொல்ல முடியும். அவர் என்னை வெறுத்தார். என் மேசையில் இருந்த கோப்புகள், கணிப்பொறி, ஸ்டேஷ்னரிகளை வெறுத்தார், என் அலுவலகத்தை வெறுத்தார், என் துறையை வெறுத்தார். அவர் அங்கே இருந்தார், ஆனால் இல்லை. எல்லாம் அவர் உடல்மொழியில் விளங்கியது.

நான் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து அந்தப் பையனுடன் மட்டுமே பேசினேன். “ரிடர்ன்ஸ் எல்லாம் பெண்டிங் வைக்காம அப்பப்போ கட்டியிருந்தா, இவ்வளவு தொல்லை இருக்காதில்லையா ?” என்று எவ்வளவு கரிசனத்தோடு கூற முடியுமா அவ்வளவோடும் கூறினேன். கேள்வியாக அல்ல. ஒரு அறிவுரையாக. அந்த மனிதர் “சப்ளை பண்றோம். வாங்குன கம்பெனி பணம் போட்டா நாங்களும் பணம் கட்டிருவோம். உங்களுக்கு பணம் வரலைன்னு என்னைய பிளாக் பண்ணிட்டிங்க. எனக்கு பணம் வரலைன்னு நான் என்னோட கஸ்டமருங்கல பிளாக் பண்ண முடியுமா? பண்ணா நான் தொழில் பண்ண முடியுமா?”  என்று உச்சமாக குரல் எழுந்து, நான்கு வரியை பேசுவதற்குள் வாய் கோணி அழும் நிலைக்கு போய்விட்டார்.

உடன் வந்திருந்த பையன் “தப்பா நினைச்சுக்காதிங்க சார். அடுத்த வாரம் அவர் பொண்ணுக்கு கல்யாணம். நகைக்கு வச்சிருந்த காச எடுத்து சலான் கட்டி எடுத்து வர்றோம்” என்றார். பெரும் பெரும் பாவங்கள் என் தலையில் வந்து இறங்குவதைப் போல் சிறுமையாக உணர்ந்தேன். அதைக் கேட்டதிலிருந்து பதட்டமாக இருந்தது.

“இவர் வரி கட்டவில்லை, இவரது வங்கிக் கணக்கை முடக்குங்கள்” என்று propose செய்பவர் ஒரு அலுவலர். அதை பரிசீலனை செய்து நான் என் உயர் அதிகாரிக்கு பரிந்துரை செய்வேன். அவர் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி முடக்குவார். சம்மந்தப்பட்டவர் நிலுவைத் தொகையை செலுத்திவிட்டு எங்களிடம் வந்தால் மீண்டும் அதே நடைமுறைதான். Propose செய்தவர் ரசீதுகளை சரி பார்த்து எனக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். நான் என் உயர் அதிகாரிக்கு அதன் பேரில் பரிந்துரை செய்வேன். அவர் நோட்டீஸை திரும்பப் பெறுவார். அரசு அலுவலக நடைமுறைகளை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எல்லாம் standard operating procedures. அவரது பணியை நான் செய்ய முடியாது. என் பணியை அவர் செய்ய முடியாது.

வழக்கமாக இப்படி முடக்கப்பட்ட கணக்குகள் எல்லாம் சரியாக இருந்தால் மீட்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும். நாளையிலிருந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் என் உயர் அதிகாரி மதிய உணவு முடிந்ததும் சொந்த ஊருக்குக் கிளம்ப இருந்தார். அவரை பொறுக்க சொல்லிவிட்டு , range officer இருந்த தளத்திற்குச் சென்று , ரசீதுகளை நானே சரிபார்த்து , அவர் தர வேண்டிய ரிபோர்ட்டை நானே தட்டச்சு செய்து அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, என் சீட்டிற்கு வந்து நோட்டீஸை திரும்பப் பெரும் தபாலை தயார் செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். மற்றொரு பிரிச்சனை அலுவலக தபால்களை Register post ல் தான் அனுப்புவார்கள் ( அது வேறு பிரிவு). இன்று அனுப்பினால் என்று போகுமோ (சென்னை கிளை) . அதனால் வங்கி மேலாளருக்கு போன் செய்து மெயில் அனுப்புகிறேன், பின்னால் தபால் வருகிறது என்று பேசி சம்மதம் வாங்கி , இரண்டு மணி நேரங்களில் கணக்கை மீட்டுக் கொடுத்துவிட்டேன். கரிசனம் ஏற்படுவதற்காக சொல்லவில்லை. எல்லாம் சுபமாக முடிந்த பிறகுதான் நான் மதிய உணவு சாப்பிடவில்லை என்பது உரைத்தது. நேரம் கடந்து விட்டதால் அதற்கு மேல் சாப்பிடவும் தோன்றவில்லை.

இடையில் மலைபோல் குவிந்து விட்ட என் வழமையான வேலைகளை முடித்து வீடு திரும்புவதற்கு இரவு பத்து ஆகிவிட்டது.  ஒரே நாளில் அவமானமாகவும் ஆசுவாசமாகவும் உணர்ந்தேன். இப்படி எத்தனை பேருடைய துன்பங்களுக்கு நான் காரணமாக இருந்திருப்பேனோ என்று நினைக்கும்பொழுது மனதில் சன்னமான ஓலம் எழுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் இந்த வேலையை செய்ய வேண்டியிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற்று விட வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here