(தமிழ்நாட்டிலிருந்து கொங்குநாட்டைப் பிரிக்கவேண்டிய காரணங்களாக ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிச கும்பல் கூறுவதைக் காட்டிலும் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க ஆயிரம் மடங்கு அதிகமான காரணங்கள் உள்ளது. GST நிலுவை சுமார் 12000 கோடி ரூபாய்க்குமேல் தராமல் ஏமாற்றுவது; தமிழ்நாட்டை நாசமாக்கும் திட்டங்களான அணுமின் நிலையங்கள், நியூட்ரினோ; காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாகும் ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் திட்டங்கள்; தமிழக துறைமுகங்களை அதானியிடம் அடகுவைக்கும் சாகர்மாலா; தமிழ்நாட்டு மீனவர்களை கடலிலிருந்து விரட்டியடித்து தமிழக கடற்பரப்பை பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கூறுபோட்டுத்தரும் புதிய சட்டங்கள்; இந்தி திணிப்பு; சமூக நீதிக்கு வேட்டுவைக்கும் புதிய கல்விக்கொள்கை; காவிரி நீர் விவகாரத்தில் துரோகம்; நீட் தேர்வு மூலம் தமிழக மருத்துவக்கல்லூரி இடங்களை வடநாட்டு மாணவர்களுக்கு தாரைவார்ப்பது; கல்வராயன், வேடியப்பன் மலைகளை கபளீகரம் செய்ய எட்டுவழிச்சாலை; பேரிடர் நிவாரணத் தொகையில் ஓரவஞ்சனை; கொரோன தடுப்பூசி ஒதுக்குவதில் ஓரவஞ்சனை; கொங்குநாட்டில் உள்ள சிறு குறு தொழில்களை அழித்துவிட்ட பணமதிப்பிழப்பு, GST, கொரானா லாக்கடவுன் போன்ற ஏராளமான காரணங்கள் இருந்தாலும் தமிழக மக்கள் சகித்துக்கொண்டு இந்திய ஒன்றியத்துடன் இணைந்து இருக்கிறார்கள். அனைத்தையும் தெரிந்துகொண்ட பிறகும் தமிழக மக்களை தங்களது சுயநலத்துக்காகப் பிரிக்கப்பார்க்கும் சங்கிகளையும் கொங்குநாட்டின் சில சொங்கிகளையும் எதிர்த்து முறியடிக்கும் வலிமையும், ஆற்றலும் பாரம்பரிய போராட்ட மரபுடைய தமிழக மக்களுக்கு உண்டு. இதை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட மூத்த சங்கியான L. முருகன் கொங்குநாடு என்று பதிவிட்டது “எழுத்துப்பிழை (clerical mistake)” என்று தற்காலிகமாகப் பம்மியுள்ளது. தமிழ்நாட்டில் மதகலவரம் நடத்த வாய்ப்பில்லாத நிலையில், சாதிரீதியாக பிரித்துமோதவிட்டு இரத்தம் குடிக்கப்பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஓநாய் கூட்டமும் அவர்கள் கொண்டுவரத் துடிக்கும் கார்ப்பரேட் – காவிப் பாசிசமும். இவர்களை தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்து விரட்டியடிக்காமல் நமக்கு வாழ்வில்லை என்பதைத்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். நாம் எச்சரிக்கையுடன் கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்து போராடாமல் அவர்களை வீழ்த்த முடியாது என்பதே கொங்குநாடு அறிவிப்பு நமக்குத் தரும் படிப்பினையாகும்).

பா.ஜ.க. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக கூறு போட்ட பிறகு மாநில பிரிவினை என்ற ஆயுதத்தை தங்கள் அரசியல் எதிரிகள் ஆளும் மாநிலங்களின்மீது தலைமேல் கத்தியாக தொங்கவிட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்-காவி கும்பல்களுக்காக கூறுபோடப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலம்

பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒருமனதாக பிரித்து அதன் மாநில அந்தஸ்த்தைக் குறைத்து ஒன்றிய பிரதேசமாக (Union Territory) மாற்றியது. அப்போது பெரும்பாலானவர்கள் பா.ஜ.க.-வின் இச்செயல் அந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும்தான் ஏனெனில் அது மட்டுமே இந்திய ஒன்றியத்தில் சிறப்பு அந்தஸ்துடனும் தேசிய நீரோட்டத்தில் கலக்காமலும் தொடர்ந்து நீடித்து வந்தது என்றும் மோடி அத்தகைய நடவடிக்கையை மற்ற மாநிலங்களில் மேற்கொள்ளமாட்டார் என்றும் கூறினர். மற்றோரு தரப்பினரோ, பா.ஜ.க.-வால் கட்டுப்படுத்தப்படும் நாடாளுமன்றம் தனது இஷ்டம்போல் மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இம்மாதிரியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த முனையும் என்று எச்சரித்தார்கள்.

மாநிலங்களை பிரிப்பது என்ற நடவடிக்கையை வேறு இடங்களில் பா.ஜ.க. இதுவரை செய்யவில்லை என்றாலும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி தனது பல ஆண்டு கனவை நிறைவேற்றி அக்கட்சி தனது அந்தஸ்த்தைக் கூட்டிக்கொண்டது.

பரபரப்பான அரசியல் போட்டியில் தோற்றபிறகு மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.-வின் உள்ளூர் தலைவர்கள் மேற்கு வங்காளத்திலிருந்து “வடக்கு வங்காளம்” எனப் பிரித்து அதை ஒரு ஒன்றிய பிரதேசமாக ஆக்கவேண்டும் என்று கூறினர். இதை அக்கட்சியின் தேசியத் தலைமை கண்டுகொள்ளவில்லை என்றாலும், இம்மாதிரியான கோரிக்கைள் தங்கள் மாநிலத் தலைவர்களிடமிருந்து வருவதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. இத்தகைய கோரிக்கைகள் மாநிலங்களின் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிறுவ உதவும் என்று பா.ஜ.க.-வின் தேசியத் தலைமை எண்ணுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வென்ற வடக்கு வங்காள தொகுதிகள்

இதுவே தற்போது தமிழ்நாட்டிலும் நடக்கிறது. இங்கும் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்றபிறகு அதே கோரிக்கையை அதன் மாநிலத்தலைவர்கள் எழுப்புகின்றனர். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றதற்கு முக்கியக் காரணம் அக்கட்சி பா.ஜ.க.-வுடன் கூட்டணி வைத்ததுதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கு வங்காளத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க.வும் கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தும் கட்சியாக உள்ளது. மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் டெல்லியின் அதிகார தலையீட்டை எதிர்க்கும் வகையிலான மாநில சுயாட்சியையும் வலியுறுத்துகிறது.

அத்தகைய தலையீடுகளைத் தடுக்கும் ஒரு விதமாக மத்திய அரசு (Central Government) என்பதற்கு பதிலாக “Union Government” என்பதன் தமிழ் பதமாகிய “ஒன்றிய அரசு” என தனது அரசின் அனைத்து கடிதப்போக்குவரத்திலும் தி.மு.க. பயன்படுத்திவருகிறது. “ஒன்றிய அரசு” என்பதுதான் அரசியலமைப்புச் சட்டப்படி சரியான வார்த்தையாக இருந்தாலும் “ஒன்றிய அரசு” என்ற சொல்லாடல் பா.ஜ.க-வை திணறடித்திருக்கிறது என்பது உண்மை. அதனால்தான் அத்தகைய சொற்பிரயோகம் தி.மு.க.-வின் பிரிவினைவாதப் போக்கை காட்டுவதாக குற்றம் சுமத்துகிறது.

சமீபத்தில் அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழ்நாடு பா.ஜ.க.-வின் தலைவரான L.முருகன் “கொங்கு நாட்டிலிருந்து” வருவதாக அக்கட்சி தனது பதிவில் தெரிவித்திருந்தது. ஆனால் கொங்குநாடு என்பது ஒரு அதிகாரப்பூர்வமான பகுதியாக அரசு ஆவணங்களில் எங்கேயும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய தமிழ்நாட்டின் மேற்குப்பகுதிகள் ஒன்றாக “கொங்கு மண்டலம்” என்று அழைக்கப்பட்டாலும் அது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதல்ல.

தினமலர் நாளிதழ் ஜூலை 10-ம் தேதி எந்தவிதமான நம்பகமான ஆதாரமுமின்றி ஒன்றிய அரசு தி.மு.க.-வின் மோதல் போக்கிற்கு எதிர்வினையாற்ற தமிழ்நாட்டைப் பிரித்து பா.ஜ.க.-விற்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ள பகுதிகளை இணைத்து கொங்குநாடு உருவாக்கத்திற்கான வரைவு வேலைகளைத் தொடங்கிவிட்டதாக அறிவித்தது.

சங்கிகள் முன்வைக்கும் தனி “கொங்குநாடு.”

மேற்கு வங்காளத்தைப்போலவே தமிழ்நாட்டிலும் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால் பா.ஜ.க. தனது உள்ளூர் தலைவர்களை மட்டும் இப்படி பேசவைத்து மாநில அரசுகளை மிரட்டிப்பார்க்கிறது.

பா.ஜ.க.-யின் சட்டமன்ற தலைவரான நைனார் நாகேந்திரன் பேசும்போது, “எல்லாமே தமிழ்நாடுதான் என்றாலும் ஆந்திர பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்கள் மக்களுடைய கோரிக்கைக்கேற்ப பிரிக்கப்பட்டதையும் நினைவில் கொள்ளவேண்டும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அரசின் கடமை” என்றார்.

பா.ஜ.க.- வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், “இப்பிரிவினை என்பது தி.மு.க. தொடர்ந்து பிரயோகித்து வரும் ஒன்றிய அரசு என்பதற்கான எதிர்வினை” என்றார். “ஒன்றிய அரசு என்று அழைப்பது அவர்களின் (தி.மு.க.) விருப்பம் என்றால், கொங்குநாடு என்று அழைப்பதும் மக்களின் விருப்பம் என்றும், மற்ற மாநிலங்களில் குறிப்பாக தெலுங்கானா பிரிவினை இப்படித்தான் நடந்தது” என்றும் கூறினார்.

பா.ஜ.க. கட்சியினர் பலவிதமாகப் பேசிவந்தாலும், இதுவரை கோவையைச் சேர்ந்த ஒரு மாவட்ட குழு மட்டுமே கொங்குநாடு வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மற்ற பகுதிகளில் இதைப் பற்றி பேச வேண்டாமென்று பா.ஜ.க.-வினர் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பா.ஜ.க. கட்சி தலைமையே இவ்விசயத்தில் குழப்பமாகத்தான் பேசிவருகின்றனர்.

தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான ஆளும் தி.மு.க.-வும் சரி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.-வும் சரி மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. ஆனபோதிலும், இவ்விவகாரத்தைப் பொறுத்தவரையில் மாநில கட்சிகள் பெரிதாக எதுவும் செய்யமுடியாது. நாடாளுமன்றம் நினைத்தால் மாநிலங்களை பிரிக்கமுடியும், மாநில சட்டமன்றத்தின் கருத்தைக் கேட்கவேண்டும் என்றாலும், அதன்படிதான் செயல்படவேண்டும் என்ற கடப்பாடு நாடாளுமன்றத்துக்கு இல்லை. நடைமுறையில் இத்தகைய சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் பா.ஜ.க.-வுக்கு பாதகமாகவே முடிய வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி கடைசியில் அந்த இரண்டு மாநிலங்களிலிருந்தும் ஏறக்குறைய துடைத்தெறியப்பட்டுவிட்டது.

கையில் மேப்புடன் மோடி

மேற்கு வங்காளம், தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் உள்ள ஆளுங்கட்சிகள் பா.ஜ.க.-வின் இத்தகைய கருத்துக்களை தங்களுக்கு ஒரு வகையில் சாதகமாகவே பார்க்கின்றன. மக்களை மதவாரியாகவும், சாதிவாரியாகவும் பிரித்து மோதவிடும் கட்சி என்ற தங்களின் பிரச்சாரத்திற்கு அதன் தலைவர்களின் இப்படிப்பட்ட கருத்துகள் வலுசேர்க்கும் என்று நம்புகின்றன.

ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் நலன்களுக்காக மாநிலங்களை பிரிப்பது என்பது கடும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகவே அமையும். 2000-ம் ஆண்டுவாக்கில் வாஜ்பாய் தலைமையிலனான ஒன்றிய அரசு உத்திரப்பிரதேசத்தைப் பிரித்து உத்தரகண்ட், பீஹாரைப் பிரித்து ஜார்கண்ட், மத்தியபிரதேசத்தைப் பிரித்து சட்டிஸ்கர் என்ற மூன்று புதிய மாநிலங்களை உருவாக்கியது. ஆனால் அது உள்ளூர் மக்களின் கோரிக்கையாகவும், மேம்பட்ட நிர்வாகத்துக்காகவும், கூடுதல் வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் ஆந்திராவில் நடைபெற்ற தனி தெலுங்கானா போராட்டங்களைத் தொடர்ந்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்கிய தேசிய கட்சியான காங்கிரஸ் அம்மாநிலக் கட்சிகளுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பின்னடைவை சந்தித்துவருகிறது. ஆகவேதான், தேசியக்கட்சிகள் மாநிலப் பிரிவினை போன்ற விவகாரங்களை மிகவும் கவனத்துடன் அணுகுகின்றன.

தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்கவேண்டும் என்ற எப்போதாவது எழும் கோரிக்கையைவிட, தெலுங்கானா, ஜார்கண்ட் போல தனி கொங்குநாடு என்ற கோரிக்கையே எப்பொழுதும் இருந்ததில்லை. ஆனால், இந்த சர்ச்சையை உருவாக்கியதுமூலம், தனக்கு செல்வாக்கே இல்லாத மாநிலங்களில் பா.ஜ.க. தான் பேசுபொருளை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

எல்லாவற்றும் மேலாக, மாநிலப் பிரிவினை என்ற கத்தியை தனது அரசியல் எதிரிகளின் தலைக்குமேல் தொங்கவிடுவது என்ற போக்கை பா.ஜ.க. தற்போது எடுத்துள்ளது. இது அப்பகுதிகளில் உள்ள பிற்போக்கு, சாதி, அரசியல் ரவுடிக்கூட்டங்களுக்கு வலு சேர்ப்பதாகவும் அமையக்கூடும்.

நன்றி: Scroll.in

மொழிபெயர்ப்பு: செந்தழல்.

https://scroll.in/article/1000330/kongu-nadu-north-bengal-is-the-threat-of-bifurcation-a-go-to-weapon-for-the-bjp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here