இன்று காலை செய்தித்தாளைப் பார்த்தவுடன் முதல் பக்கத்தில் கண்ணில்பட்டது அரசு நிதி ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவருக்கு 5 ஆண்டு சிறை என்ற செய்தி!. “முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை முன்னாள் இயக்குனர் சண்முகம் ஆகிய 3 பேர்களின் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே இவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் அபராதம்” என்று தண்டனையை நீதிபதி அறிவித்தவுடன் இந்திரகுமாரி கண்ணீர் வடித்துக் கொண்டு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி மயக்கமடைந்தாராம்.

நன்றி: நக்கீரன்

சிலப்பதிகாரத்தில் கண்ணகி கால் சிலம்புடன் ’தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று போர்க்குரல் எழுப்பிய உடன் உண்மையை உணர்ந்து, ’யானோ அரசன்! யானே கள்வன்!’ என்று நெஞ்சுக்கு நீதி பாடி அரியணையில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட பாண்டிய மன்னன் ஆரியப் படை கடந்த முதலாம் நெடுஞ்செழியன் மாண்ட கதையை இலக்கியத்தில் படித்திருக்கிறோம்.

ஆனால் ஊழல் பெருச்சாளிகள் அல்லது தவறு செய்து கொண்டு மாட்டிக் கொள்பவர்கள் அல்லது தான் மட்டும் தான் உலகில் இருப்பதாக கருதிக்கொண்டு புளுகி தீர்ப்பவர்கள் அனைவரும் அம்பலமாகும் போது அல்லது மாட்டிக் கொள்ளும்போது உடனடியாக கையில் எடுத்துக் கொள்ளும் மந்திர ஆயுதம் நெஞ்சு வலி அல்லது மனம் பாதிக்கப்பட்டு விட்டது என்ற மருத்துவ கவசம் தான். இங்கே கண்ணகிகளுக்கே கடுக்காய் கொடுக்க பயிற்சி பெற்று விட்டனர்.

ஊரார் சொத்தை கொள்ளை அடிப்பதற்கும் அது பிறருக்கு தெரியாமல் அனுபவிப்பதற்கும் திறமை வேண்டும். இந்த திறமை கல்வி அறிவினால் அல்லது வேறு பல அம்சங்களின் மூலம் வருவது அல்ல! இது கடைந்தெடுத்த சுயநலம் கொண்ட பிழைப்பு வாதத்தின் உச்சகட்டமாக ஒவ்வொரு படியிலும் அனுபவத்தைப் பயன்படுத்தி முன்னேறுகின்றவர்களுக்கு மட்டுமே இந்த தனித்திறமை வாய்க்கப் பெறுகிறது.

சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு சமூக நலத்துறை சார்பில் ரூபாய் 15.45 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தத் தொகையை ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சுருட்டிய திருடர்கள் தான் தற்போது மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாட்டிக் கொண்டவுடன் நெஞ்சுவலி நாடகத்தை நடத்தி அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளின் பணத்தை கொள்ளையடித்த குற்ற உணர்ச்சி அவர்களின் நெஞ்சை உறுத்தவில்லை. ஆனால் ஜெயிலுக்கு போக வேண்டும் என்ற அச்ச உணர்ச்சி நெஞ்சுவலியை உருவாக்கிவிட்டது.

அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், அரசு சாராத தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆயுட்காலம் இவ்வளவுதான். ஒன்று அதை இயக்குகின்ற நபர்கள் கிடைக்கின்ற பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடுவார்கள் அல்லது அவர்களின் பெயரை பயன்படுத்தி அந்தக் கூட்டத்திலேயே ’திறமையான சிலர்’ தனது வாழ்க்கையை சுகப்படுத்திக் கொண்டு செட்டிலாகி விடுவார்கள். இடையில் இந்த நிறுவனங்கள் மக்களுக்கு உதவி செய்யும் போதெல்லாம் அற்புதமான கவிதை நயத்துடன் கூடிய சொல்லாடல்களில் மயக்கி பேசுவார்கள். வறுமையிலும், ஏழ்மையிலும் அழுத்தி வைக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் இந்த சொற் சிலம்பங்களுக்கு மயங்கி மிகப்பெரும் பரோபகாரி தனது வாழ்க்கைக்கு உதவ வந்து விட்டதாக கருதிக் கொள்வார்கள்.

தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க முடியுமா? என்ற பழமொழியை பாடலாக்கி ஊழல் பெருச்சாளிகள் ஆட்சிக்கு வருவதை நையாண்டி செய்து 90-களில் மக்கள் கலை இலக்கியக் கழகம் ’தேனை எடுத்தவன் புறங்கையை நக்குறான்னு ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டுறான்’ என்று பாடியது. இன்று அந்த மந்தைக்குள்ளும் சில கருப்பு ஆடுகள் நுழைந்து அமைப்பின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பது தனிக் கதை.

பார்ப்பன பாசிச ஜெயாவின் ஆட்சியில் வளர்ப்பு மகன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பல் தமிழகத்தை மொட்டை அடித்துக் கொண்டிருந்த காலத்தில் பாஸ்கரன் கைது செய்யப்பட்ட போது நெஞ்சு வலி வந்து துடியாய் துடித்தார். பின்னர் சில காலத்தில் விடுவிக்கப்பட்டார்.

ஜெயா கும்பல் ஊழல் செய்து திமிருடன் வலம் வந்த போதே புரட்சிகர அமைப்புகளினால் ’ஜெயா-சசி சொத்துக்களை பறிமுதல் செய்!’ என்ற முழக்கத்துடன் மன்னார்குடி கும்பலின் வாரிசான தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம் குறித்து பெங்களூரில் டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கையில் வந்த செய்திய பார்த்து விட்டு ”இனி இது போன்ற போராட்டங்கள் தான் ஆளும் கும்பலுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும் அச்சத்தை தரும்” என வாசகர்கள் சிலர் பேசிக் கொண்டதாக செய்தி பரவியது.

முன்னாள் அமைச்சர், முன்னாலுக்கு முன்னாள் அமைச்சர்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி போன்ற அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரம்பி வழிகிறது. ஆனால் அதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட காலத்திலிருந்து அரசியல்வாதிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொள்வதும், விதிவிலக்காக சிலர் கைது செய்யப்படுவதும் தண்டனை பெறுவதும் நடக்கிறது. ஆனால் இவர்களுக்கு பின்னிருந்து இயங்கும் அதிகார வர்க்கம் எப்போதும் போல் அதிகாரம் பணபலத்துடன், மீண்டும் புதியவர்களுக்கும் ஊழல் செய்யும் வழிமுறையை கற்றுக் கொடுத்துக் கொண்டே உள்ளனர். ’வாழு! வாழவிடு’ என்ற கொள்கை அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிரவி விட்டது.

ஊழல் பெருச்சாளிகளை இந்த சமூக அமைப்பிற்குள் பெரிதாக தண்டிக்க முடியாது. இந்த துணிச்சல் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கிறது. அது மட்டுமல்ல ஊழல் பணபரிமாற்றம் என்பதை தாண்டி சாதாரண மக்களுக்கும் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க அசிம் பிரேம்ஜி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் அறக்கட்டளைகளை நாடுவது, மகளை வர்க்க வாழ்க்கைக்கு மேல் தேடி, மேட்டுக்குடிகளை அமுக்கி திருமணம் செய்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் சிந்தனையை சீரழிப்பதும் கூட ஒருவகை ஊழல்தான். இதனால் போராடும் தார்மீக எண்ணம் பாழாகிறது. சமூக கொடுமைகளை சகித்துக் கொண்டு போக வைக்கிறது.

இதையெல்லாம் இப்படியே நாம் அனுமதிக்க முடியாது. ஆளும் கும்பலுக்கு உண்மையான நெஞ்சு வலியை உருவாக்க வல்ல போராட்ட முறைகளை உழைக்கும் மக்களுக்கு பயிற்றுவிப்போம். குற்றவாளிகளை மக்களே தண்டிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு முறையை விரைந்து உருவாக்குவோம்.

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here