உலகமயமாக்கலின் விளைவாக ஏற்படும் கலாச்சார மாற்றங்கள் – சாதகமா, பாதகமா?
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும், தகவல் தொடர்பில் ஏற்படடுள்ள அபரிதமான முன்னேற்றமும் உலகை சுருக்கிக்கொண்டுள்ள சூழலில், ஏகாதிபத்தியங்களின் பொருளாதார நலனுக்காக புகுத்தப்பட்ட உலகமயமாக்கல் எனும் கொள்கையால் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரங்களில் ஒற்றைத்தன்மை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்த ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள், இருக்கின்ற நிலைமையை அப்படியே பதிவு செய்கின்றனர். சமீபத்தில் வெளியான அத்தகைய கட்டுரை ஒன்றில், காலனி ஆதிக்கத்தின் போது அல்லது ஆக்கிரமிப்பின் போது வலுக்கட்டாயமாக கலாச்சாரத் திணிப்பு நிகழ்வதையும், மற்றொரு புறம் இயல்பாக நிகழ்வதாக சொல்லி ஏற்படுத்தப்படும் கலாச்சார ஓர்மை குறித்தும் விளக்கப் பட்டிருந்தது.
இன்றைய உலகமய சூழலில், நன்கு வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள், பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடையும் நாடுகளின் மீது செல்வாக்கு செலுத்துவதை அக்கட்டுரை விளக்குகிறது. நிலையான, வெற்றிகரமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள வளர்ந்த நாடுகளின் அடியொற்றி வளரும் நாடுகள் பயணிக்கின்றன. பொருளாதார ரீதியாக வளர வேண்டும் எனும் இலக்கில், அவர்களது அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்குகின்றன.
சோவியத் ரசியாவிலிருந்து பிரிந்த அஜர்பைஜான் நாட்டை உதாரணமாக எடுத்து, உலகமய சூழலின் விளைவாக மொழி, சித்தாந்தம், கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றங்களை கட்டுரை ஆசிரியர் ஆய்வறிக்கையாக எழுதியுள்ளார். தகவல் தொடர்புக்கான தேவை அதிகரிப்பதால், சர்வதேச மொழிப் பயன்பாடும் அதிகரிக்கிறது. வளர்ந்த நாடுகளின் கலாச்சாரத்தை வரித்துக் கொள்ளும் நோக்கில் அஜர்பைஜான் மக்கள், குறிப்பாக இளம்வயதினர் ஆங்கிலம் கற்க துவங்குவதும், ரசிய மொழியின் சில அம்சங்களை தங்களது பேச்சு வழக்கில் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
நன்கு வளர்ச்சியடைந்த நாடுகள் மதச்சார்பற்று உள்ளன. அவை ஆன்மீக, மத விசயங்களில் பெரும்பாலும் தலையிடாமல் உள்ளன. இத்தகைய வளர்ந்த நாடுகளின் கலாச்சாரக் கூறுகளை பின்பற்ற முயலும் வளரும் நாடுகள், மதச்சார்பின்மையை பின்பற்ற முயல்கின்றன. அஜர்பைஜானில் பெரும்பான்மை மக்கள் மதரீதியான பழமைவாதத்தில் ஊறிய ஷியா முஸ்லிம்கள்தான் என்றபோதிலும் அரசியல் சித்தாந்த ரீதியாக ஜனநாயகம் மற்றும் முற்போக்கை கடைபிடிப்பதால் தற்போது மதச் சார்பற்ற நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில நாடுகள் அதன் கலாச்சாரம், பெரும்பான்மை மதம் மற்றும் புவிசார் இருப்பிடம் போன்றவற்றில் பெருமிதம் கொண்டு மதச்சார்பு நாடுகளாகவே நீடிக்கின்றன.
ஒரு நாட்டின் கலாச்சார, பண்பாட்டு கலை வடிவங்கள் மரபு சார்ந்த தனித்துவத் தன்மை கொண்டவை. வளர்ந்த நாடுகளின் நவீனத்துவ கலை வடிவங்களை விட மதிப்பு வாய்ந்த அவை உலகமய சூழலால் அழிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன. அனைத்து நாடுகளின் ஒற்றைக் கலை வடிவமாக மேற்கத்திய கலைகளே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியாக மொழி, அரசியல் சித்தாந்தம் மற்றும் கலாச்சாரத்தின் ஒருமைத்தன்மை உருவாகும் நிலையை விளக்கும் கட்டுரை ஆசிரியர், அதன் சாதக அம்சங்களை விரிவாகவும், பாதகங்களை மேலோட்டமாகவும் எழுதியுள்ளார்.
உலகமயத்தின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில் உணவு, உடை உள்ளிட்ட அனைத்து பண்பாட்டுக் கூறுகளிலும் ஒருமைத்தன்மை ஏற்படும் நிலை உள்ளது. இது பாரம்பரிய உணவு, உடை மற்றும் கலாச்சாரங்களை சிதைத்து அனைத்திலும் ஒற்றைத்தன்மை எனும் கேடான நிலையை, அதாவது ஏகாதிபத்திய பொருளாதாரம் முன் தள்ள விரும்பும் ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நகர்கிறது. வரலாற்று ரீதியாக பல்வேறு நாடுகளின் பாரம்பரியத் தன்மைகளை ஒழித்து சர்வதேச மொழி, அரசியல் சித்தாந்தம், பண்பாடு என்பதை ஏற்படுத்தவே ஏகாதிபத்தியங்கள் விழைகின்றன. மறுகாலனியாக்கத்தின் இன்றைய நவீனவடிவம்தான் உலகமயம். காலனி ஆதிக்கத்தின் போது கட்டாயமாக திணிக்கப்பட்டதைப் போல இல்லாமல் அனைவரும் விரும்பி ஏற்பது போல ஒரு மறைமுகத் திணிப்புதான் இப்போது நடக்கிறது. KFC, McDonalds மூலமாக ஒரு சர்வதேச ருசியை உலகெங்கும் பரப்புகிறார்கள். காய்கறிகள், பழங்கள், கோழி, மாடு போன்றவற்றில் கலப்பினங்களை உருவாக்கியதைப் போல இப்போது மனிதப் பண்பாட்டிலும் கலப்பு கலாச்சாரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களது சுரண்டலை நிறைவேற்றும் முனைப்பில் செயல்படும் ஏகாதிபத்தியங்களின் சதியைப் புரிந்துகொண்டு அதற்கான எதிர்வினையாற்றுவோம்.
மூலக் கட்டுரை : https://countercurrents.org/2021/11/is-globalization-leading-to-a-homogenized-global-culture/
கருத்தாக்கம் & தமிழில்: குரு.