பகுதி – 2


ரசிய ராணுவ மேல்நிலை வல்லரசு;

வ்வாறு அமெரிக்கா, தனக்கு மிக அருகில் வந்து இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன், தனது பொருளாதார மேலாதிக்கத்துக்குத் தடையாகவும் அமையும் என்ற நோக்கில், அமெரிக்காவின் இந்த நெருக்குதலுக்கு ரசியாவும் பதிலடி கொடுத்து வருகின்றது. கிர்கிஸ்தானின் தலைநகரமான பிஸ்கேக் (BISHKEK)-ல் உள்ள அமெரிக்க இராணுவ தளத்திலிருந்து 30 கி.மீ. தள்ளி காண்ட் என்ற இடத்தில் ரசியா தனது இராணுவ தளத்தை அமைத்துள்ளது.

தஜிகிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள ரசியாவின் 201-வது இராணுவ டிவிசனுடன் ஒரு இராணுவ தளத்தையும் 2010-ல் புதிதாக உருவாக்கியது ரசியா. இதற்கு முன்னதாகவே கஜகஸ்தானில் பேலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்தறியும் தளம் ஒன்றையும், தஜிகிஸ்தானில் இராணுவ ராடார் ஒன்றையும் நிறுவியுள்ளது. காஸ்பியன் கடல் பகுதியில் தனது கப்பற்படை மேல்நிலையைத் தக்கவைக்கும் முகமாக போர்க்கப்பல்களை நிறுத்தும் முயற்சிகளை செய்து வருகிறது.

Ballistic-Missiles

டாலர் உலகப் பொது நாணயமாக இருப்பதாலும், எண்ணெய் எரிவாயு வர்த்தகம் டாலர் மதிப்பில் நடைபெறுவதாலும், அமெரிக்கா பொருளாதார ரீதியாக தன்னை மிகவும் வலுவானதாக மாற்றிக் கொண்டுள்ளது. தனது ராணுவ வலிமையைப் பெருக்கிக் கொள்வதன் மூலம், அமெரிக்காவைத் தடுப்பது என்ற நோக்கில் ரசியா இராணுவ ரீதியில் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது. அணு ஆயுத ஏவுகணைத் தொழில் நுட்பத்தில், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு துல்லியப் படுத்துவதன் மூலம் தன்னை முன்னணியில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

குறிப்பாக, அதிநவீன ஏவுகணைகளைத் தயாரித்து வருவதோடு, தனது இராணுவத்தின் புதிய வலிமையைக் காட்டும் வண்ணம் பிரம்மாண்டமான அணு ஆயுதப் போர்ப் பயிற்சியையும் ரசியா நடத்திக் காட்டியது. 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடந்த இப்பயிற்சியில் நிலம், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்பட்ட பல ரக அணு ஆயுத ஏவுகணைகள் மற்றும் மரபு வழி ஆயுதங்கள், சாதனங்கள் மிகப்பெரிய அளவில் ஈடுபடுத்தப்பட்டு சோதிக்கப்பட்டன. 2010-க்கு முந்தைய இருபது ஆண்டுகளில் நடத்தப்பட்டதில் இதுதான் மிகப்பெரிய போர்ப்பயிற்சி ஆகும்.

1982-ல், ரசியா நடத்திய ஏழுமணி நேர அணு ஆயுதப் போர் என்றழைக்கப்பட்ட போர்ப்பயிற்சியை இது ஒத்திருப்பதாக – நினைவூட்டுவதாக, கருதப்படுகிறது. அன்று அந்தப் பயிற்சி மேற்குலகை பதற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால் இன்றோ, அமெரிக்காவிற்கு முன் கூட்டியே அறிவித்து விட்டுத்தான் இந்தப் பயிற்சியை ரசியா மேற்கொண்டது.

ரசியா அமெரிக்காவுடனான தனது மேலாதிக்கப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் இராணுவக் கொள்கையையும் மாற்றி அமைத்து வருகிறது. குறிப்பாக, கட்டாய இராணுவ சேவையைப் புகுத்துவது, அதற்கேற்ப கல்வியை இராணுவமயமாக்குவது என்ற புதிய திட்டங்களை அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. மேலும், விருப்பப்படுவோரைக் கொண்ட இராணுவம் ஒன்றை அமைக்கவும், எப்போதும் நிரந்தரத் தயார் நிலையில் இருக்கும் படைப்பிரிவுகளை அமைக்கவும், மிக மிக நுட்பமும், துல்லியமும் கொண்ட மரபுவழி ஆயுதங்களை உருவாக்கவும், உளவு பார்த்தல், இலக்குகளைத் தீர்மானித்தல், தானியங்கி ஆணை மற்றும் கட்டுப்பாடுச் சாதனங்களை உருவாக்கும் முயற்சியிலும் ரசியா ஈடுபட்டு வருகிறது.

ரஷ்ய இராணுவவீரர்கள்

இப்படி இராணுவ ரீதியில் தொடர்ந்து தன்னை வலிமையாக்கி வரும் அதே வேளையில், இரண்டாம் உலகப் போரில் தேங்கியிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்களை விற்பனை செய்ததன் மூலமும், ரசிய எண்ணெய் வர்த்தகத்தை ஊக்குவித்ததன் மூலமும் கடனை அடைத்து வந்ததுடன், பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் ரசியா முயன்று வெற்றி பெற்று வருகிறது.

ஆயுத ஏற்றுமதியில் 2001-க்கு சில ஆண்டுகளுக்கு முன்பே உலகின் எட்டாவது இடத்தில் இருந்த ரசியா, 2001-ல் உலகின் இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டது. 1994-95 வரை ஏற்றுமதிகள் குறைந்து வந்தது. அதன் பின் சூடு பிடிக்க ஆரம்பித்தது. 2000-ஆம் ஆண்டு ரசியா செய்த ஏற்றுமதிகளின் மதிப்பு 770 கோடி டாலர்களாகும்; அமெரிக்காவின் அளவு 1860 கோடி டாலர்களாகும்.

அமெரிக்கா, ஐரோப்பிய எரிவாயு சந்தையை கைப்பற்றுவது என்பதுடன், திரவ வடிவத்தில் குழாய்கள் மூலம் கொண்டு செல்வது, பிற நாடுகளுக்கு விநியோகிக்க திரவ வடிவ வாயுவை, மீண்டும் எரிவாயுவாக மாற்றுவது ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்காக அட்லாண்டிக் கடற்பிரதேசம் தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான முறையில் திரவ வடிவ வாயுவை, எரிபொருளாக மாற்றும் டெர்மினல்களை நேட்டோ நாடுகளான போலந்து, லிதுவேனியா மற்றும் செக் குடியரசு உருவாக்கி வருகிறது. இதற்குப் பொருத்தமான வகையில் தனது இராணுவ நடவடிக்கைகளை அந்நாடுகளில் மேற்கொண்டு வருகிறது.

தொடரும்…

பகுதி 1 லின்க்

உக்ரைன் போர்: ஏகாதிபத்திய அமெரிக்கா – ரசியாவே போரை உடனே நிறுத்து! | தொடர் கட்டுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here