ஜனநாயகம் கிலோ என்ன விலை? என்று கேட்கக் கூடிய நிலையில் தான் இந்திய ‘ஜனநாயகத்தின்’ நிலை உள்ளது. பத்திரிக்கை சுதந்திரமோ, கருத்துச் சுதந்திரமோ இல்லாத நிலையில் ‘ஜனநாயகம்’ என்ற ஒன்று இருப்பதாக கருதிக் கொண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலியாவின் பத்திரிக்கையாளர் வலுக்கட்டாயமாக இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தேசிய ஊடகத்தின் தெற்காசிய தலைவரும் பத்திரிக்கையாளாருமான அவானி தியாஸ் “நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டில் பத்திரிக்கையாளார்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதன் காரணமாகவும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2022 முதல் ABC (Australian Broadcasting Corporation) ஊடகத்திற்காக டெல்லியில் பணிபுரிந்து வரும் தியாஸ் தனது வேலையை தொடர்ந்து செய்ய மோடி அரசாங்கம் கடினமாக்கியுள்ளதை தான் உணர்ந்தாக கூறுகிறார்.
அவரது நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தடை ஏற்படுத்தியும், புதிய பதிவுகளை யூடியூப்பில் பதிவிட முடியாமால் தடை செய்ததுடன் அவரது விசா புதுப்பித்தலையும் மறுத்து விட்டது பாசிச மோடி அரசு. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கவும் அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு கனடாவில் சீக்கியர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது. இது தொடர்பான killing of Hardeep singh Nijjar தொடரை எடுத்திருந்தார் அவானி தியாஸ். YouTube-ல் வெளியாகிருந்த இந்த தொடரை இந்திய அரசு தடை செய்தது.
தனது விசா தொடர்பான முடிவை தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் அழைத்திருந்தாக கூறும் அவானி தியாஸ், “எனது சீக்கிய பிரிவினைவாதியின் தொடர்(series) காரணமாக விசாவுக்கான வாய்ப்பை அரிதாக்கி விட்டதாக” அந்த அதிகாரி குறிப்பாக கூறியதாக தியாஸ் தெரிவித்திருந்தார்.
இதுவே இந்திய பத்திரிக்கையாளர் இதனை செய்திருந்தால் தேசதுரோகி குற்றம் சாட்டி வாழ்நாள் சிறையில் தள்ளியிருக்கும் பாசிச பாஜக அரசு. இதனை செய்தது ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் என்பதால் நாட்டை விட்டு விரட்டியதோடு நிறுத்திக் கொண்டது. இல்லையென்றால் ஒருவேளை கௌரி லங்கேசின் நிலைமைக் கூட ஏற்பட்டிருக்கலாம்.
விசா மறுப்பிற்கு பின்னும் ஆஸ்திரேலிய அரசின் தொடர் வற்புறுத்தலின் காரணாமாக அவானி தியாஸுக்கும் அவரது சக பத்திரிக்கையாளாருக்கும் 2 மாதங்களுக்கு விசாவை புதுப்பித்து இந்திய அரசு. ஆனால் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே நாட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்து விட்டதாக அவானி தியாஸ் கூறுகிறார்.
எனினும் சுதந்திரமான பத்திரிக்கையாளராக தங்கி தனது பணியை இந்தியாவில் தொடர்வது கடினம் என்பது இந்திய அரசின் நடவடிக்கையில் தெளிவாக தெரிகிறது என்று கூறிய தியாஸ் கடந்த வார இறுதியில் ஆஸ்திரேலியா திரும்பினார். இது எல்லாமே திட்டமிட்ட செயல். நரேந்திர மோடி அரசாங்கம் நாங்கள் பணி செய்யவிடாமல் தடுத்ததே வெளியேற முடிவு செய்ததற்கான காரணம், என்று பாசிச மோடி அரசை உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளார் அவானி தியாஸ்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் “அவானி தியாஸ் வழக்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கையாண்டதில் திருப்தி அளித்ததாக கூறினர். கடந்த வாரம் அவானி தியாஸ் தனது “விசா நீட்டிப்பு” மறுக்கப்படும் என்று கூறப்பட்டதால் ”திடீரென்று” இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வெளியுறவுத்துறையின் (MEA) ஒத்துழைப்பினை ஆஸ்திரேய அரசாங்கமும், ABC யும் பாராட்டுகின்றன…” என்று பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு சப்பைக்கட்டு கட்டியுள்ளது.
இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லை என்பது உலகம் அறிந்த செய்தியே. சங்பரிவார் கும்பலை பொறுத்தமட்டில் ஊடகம் என்றால் கோடி மீடியா மட்டுமே. வேறு எந்த ஊடகங்களும் இயங்கக்கூடாது. அதில் மோடி புகழ் பாடும் செய்திகளும் நிகழ்ச்சிகளும் மட்டுமே ஒளிப்பரப்பப்படும். இந்தியாவில் தலைவிரித்தாடும் வேலையின்மை குறித்தோ, வறுமை குறித்தோ, பசி பட்டினி குறித்தோ பேசவோ விவாதிக்கவோ படாது. இது தான் கோடி மீடியா, மோடியின் மீடியா.
ஆனால் அவானி தியாஸ் போன்ற நிருபர்கள் இந்தியாவின் உண்மை முகத்தை காட்ட முயன்றனர். இதை எப்படி பாசிஸ்டுகள் அனுமதிப்பார்கள். ஹத்ராசில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக் காப்பனை கைது செய்து சிறையில் அடைத்தது உத்திரபிரதேச யோகி சாமியார் அரசு. இவ்வளவு தான் இவர்களின் பத்திரிக்கை சுதந்திரம்.
காஷ்மீரில் 370 சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியுலகிற்கு தெரியாமல் செய்தது பாசிச மோடி அரசு. காஷ்மீரில் வெளிநாட்டு பத்திரிக்கையாளார்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு பத்திரிக்கையாளர்கள் காஷ்மீரை விட்டு வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்:
2001 குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட போது அங்கு முதலமைச்சராக மோடி இருந்த போது நடந்த கலவரத்தில் அவரின் பங்கை விவரிக்கும் ஆவணப்படத்தை கடந்ந்த ஆண்டு பிபிசி வெளியிட்டது. இந்த ஆவணப்படம் பாசிஸ்டுகளால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மும்பைஇ, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையால் ரெய்டு நடத்தப்பட்டது. ஆவணப்படத்தை தடை செய்வதற்கான அவசர சட்டங்களையும் மோடி அரசாங்கம் செயல்படுத்தியது.
சமீபத்தில் நியூஸ் க்ளிக் மீது பாசிச பாஜகவின் தாக்குதல்! குறித்து மக்கள் அதிகாரம் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதுபோல் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதும், ஊடகங்களின் மீதும் பாசிச சங்பரிவார் கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏராளம்.
மோடி பதவியேற்ற 2014 முதல் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்தித்ததில்லை. இனியும் சந்திக்கப் போவதில்லை. அவரே கேள்வியை தயார் செய்து சந்திக்கும் கோடி மீடியாக்களில்(Godi Media) மட்டுமே பேட்டிக் கொடுப்பார் அவ்வளவு தான். கடந்த 10 ஆண்டுகளில் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்த மோடி, பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை என்றோ அறுத்துவிட்டார். ABCயின் அவானி தியாஸ் போன்றோர் மிச்சம் மீதி உயிர் துடித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள். அவர்களும் இன்று வெளியேற்றப்படுகிறார்கள்.
பத்திரிக்கையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். அது மோடிக்கும் அவரது முதலாளிகளுக்கு விலை போய் நீண்ட நாட்களாகி விட்டது. மீதமிருக்கும் ஊடகங்களையும் வேட்டையாட துடித்துக் கொண்டிருக்கிறது பாசிசம். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. பாசிஸ்டுகளுக்கு எதிரான பத்திரிக்கைகளையும், ஊடகங்களையும் ஒன்றிணைத்து போராட வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும்.
- நலன்