நடந்து முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் முகம் சுழிக்கும் அளவுக்கான ஒன்றாக மாறியிருக்கிறது. உலகக் கோப்பையில் இந்திய அணி எட்டாவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது. ஆனால் இந்த வெற்றியைக் கடந்து பல மோசமான காரணங்களுக்காகவே இந்தப் போட்டி இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. மைதான DJ ஜெய் ஶ்ரீ ராம் பாட்டு போட்டது, பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து ரசிகர்கள் அந்த கோஷம் எழுப்பியது, மேக் மை டிரிப் நிறுவனத்தின் பொறுப்பற்ற விளம்பரம் என கிரிக்கெட் உலகம் மட்டுமல்லாது, பகுத்தறிவு கொண்ட எவருமே வெட்கப்படும் அளவுக்கான சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. அதிதி தேவோ பவ என மேடைக்கு மேடை முழங்கும் ஒரு தேசம், உலகக்கோப்பை போட்டிக்கு வந்த ஒரு விருந்தினர் தேசத்தின் வீரர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உலகமே எக்காளமிட்டு சிரிக்கும்படி செய்திருக்கிறது.
அரசியலாக பார்க்கப்படும் போட்டி
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி என்பது ஒரு கிரிக்கெட் ரைவல்ரி என்பதைக் கடந்து ஒரு அரசியல் யுத்தமாகவே பார்க்கப்பட்டுவருகிறது. உலகக் கோப்பை அரங்கில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது, அதை வைத்து அரசியல் செய்வதற்கு தோதாகிப்போனது. அதிலும் இஸ்லாமிய வெறுப்பின் முகமாகவே மாறிப்போயிருக்கும் பாஜக இந்த போட்டியை வைத்து முடிந்த அளவுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறது. பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஐசிசி என அனைத்து கிரிக்கெட் நிர்வாகங்களும் கூட அதற்குத் துணை போய்க்கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ஏன் தனி கவனம்?
ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வைப்பது, தொடக்க விழா இல்லாத உலகக் கோப்பை தொடரின் 12வது லீக் போட்டிக்கு இசை நிகழ்ச்சி நடத்துவது என இந்தப் போட்டிக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது. காரணம், அதன் பிறகு நடக்கும் வியாபாரம். பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இரண்டும் ஜெய் ஷாவின் பிடியில் இருக்கிறது. பிசிசிஐ மூலம் வரும் வருமானம் தான் ஐசிசிக்கு முக்கியமாக இருக்கிறது. அதனால் எவரிடம் எதை எதிர்பார்க்க முடியும்?
போட்டிக்கு முன்பே விமர்சனம்; போட்டியோ இன்னும் மோசம்
பல்வேறு கம்பெனிகளும் இத்தனை நாள்கள் இந்தப் போட்டியை வைத்து எப்படி மேலேஜ் தேற்றிக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் செய்துகொண்டே இருந்தன. முந்தைய உலகக் கோப்பைகளின் போது ‘மௌகா மௌகா’ விளம்பரம் பாகிஸ்தான் அணியைக் கலாய்க்கும் வகையில் இருந்ததால், பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த முறை அப்படியான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் காட்டப்படாத நிலையில், மேக் மை டிரிப் நிறுவனம் பொறுப்பற்ற ஒரு விளம்பர அறிக்கை வெளியிட்டது. அதில் ‘பாகிஸ்தான் ரசிகர்களே கவலைப்படவேண்டாம். உங்கள் அணி எத்தனை ரன்/விக்கெட் வித்தியாசத்தில் தோற்கிறதோ அதற்கு ஏற்ப எங்களிடம் சலுகை பெறுங்கள்’ என்று பதிவிட்டது. போட்டிக்கு முன்பாக இது பெரும் விமர்சனங்களை சந்தித்தது. போட்டியோ இன்னும் மோசமாக இருந்தது.
தேசத்தின் கீதம் போல பாடப்பட்ட ஜெய் ஸ்ரீ ராம் பாடல்
மைதானங்களில் இருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்த அங்கு DJகள் இருப்பார்கள். தொடர்ந்து பாடல்கள் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள். இது எல்லா மைதானங்களிலுமே நடப்பது. இந்த போட்டி நடந்த அஹமதாபாத் மைதானத்தில் போட்டி தொடக்கத்திலேயே ஒரு ஓவருக்கு நடுவில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய் ஶ்ரீ ராம் பாடல் ஒலிக்கப்பட்டது. ஒட்டுமொத்த கூட்டமும் அதை இந்த தேசத்தின் கீதம் போல கோரசாகப் பாடி மகிழ்ந்தது. ஒருகட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தவர்கள், பாகிஸ்தான் வீரர்களை டார்கெட் செய்யத் தொடங்கினார்கள்.
பாக் வீரர்களையும் விட்டு வைக்காத மக்கள்
தங்கள் ஆளும் கட்சியின் மந்திரமான இஸ்லாமிய வெறுப்பை தங்கள் மனதிலும் பதித்துக்கொண்டுவிட்ட குஜராத் மக்கள், பெவிலியன் நோக்கிச் சென்ற ஒவ்வொரு பாகிஸ்தான் வீரரையும் பார்த்து ஜெய் ஶ்ரீ ராம் கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. உலக கிரிக்கெட் ஆர்வலர்கள் இது கிரிக்கெட் விளையாட்டுக்கே ஏற்பட்ட அவமானம் என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் பிரபலங்கள் இந்த செயலை கண்டித்துவருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்திய மக்கள் தங்கள் ஆறாவது அறிவை, மனிதத் தன்மையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
வருத்தம் தெரிவித்த பாக். இயக்குநர்
போட்டி முடிந்து பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்த்தர், “இது ஒரு ஐசிசி போட்டி போலவே இல்லை. ஏதோ ஒரு பிசிசிஐ நிகழ்ச்சி போல இருந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்தை மைக்கில் கேட்க முடியவில்லையே! இதை நான் தோல்வியின் காரணமாகக் கூறவில்லை. ஆனால் இதுவும் ஆட்டத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்தியது” என்று நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார்.
பிரபல யூடியூபர் SPEED என்பவரிடம் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவர் , ” கணபதி பாபா மோரியா சொல்லுங்கள்” என கட்டாயப்படுத்துகிறார். அவர் மறுக்க, அதில் ஒன்றும் தவறில்லை என்று மீண்டும் அந்த சிறுவர் சொல்கிறார். உண்மையில் ஒரு சமூகமாக மிக மோசமான காலத்தில் நாம் இருக்கிறோம். அடுத்த தலைமுறையையும் காப்பாற்றத் தவறிவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி மேலெழும்புகிறது. அந்தச் சிறுவனுக்கு கடைசி வரையில் அவர் செய்வது ஒரு வித கட்டாயப்படுத்துதல், திணிப்பு என்பது கூட தெரியவில்லை.
என்ன செய்யப்போகிறோம் நாம்?
கடந்த ஆண்டு இதேபோல் முகமது ஷமியைப் பார்த்து சில ரசிகர்கள் ஜெய் ஶ்ரீ ராம் கோஷம் எழுப்பினார்கள். அதுபற்றிக் கேட்டபோது கூட தனக்கு அது தெரியாது என்று மழுப்பினார் ரோஹித் ஷர்மா. இப்போது மொத்த உலகமும் பார்க்கும்படி அதே செயல் பாகிஸ்தான் வீரர்களுக்கும் அரங்கேறியுள்ளது. எப்படியும் இப்போது ஆடும் வீரர்களோ, முன்னாள் வீரர்களோ, இந்திய அணிக்காக ஆடிய, ஆடிக்கொண்டிருக்கும் எவரும் இதுபற்றிப் பேசப்போவதில்லை.
அதே சமயம் சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாக சில விஷயத்தைப் பார்க்க முடிகிறது. ஐதராபாத்தில் நடந்த போட்டிகளில் தாங்கள் நல்லமுறையில் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் கருதுகிறார்கள்.
நன்றி: புதிய தலைமுறை