அதிகரிக்கும் வேலையின்மை;
அதிகரிக்கப்போகும் சமூக குற்றங்கள்!


            மோடியின் 2.0 ஆட்சியில், கொரோனா இரண்டாம் அலைக்கு பிந்தைய நாட்டின் நிலைமை ஒரு படுமோசமான தன்மைக்கு வந்தடைந்துள்ளது! ஒன்றிய அரசு செயல்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஒருபுறம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளை மேலும் மேலும் கொழுக்க வைப்பதாகவும், மறுபுறம் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு வேலை இழப்பையும், அவர்களின் அரைகுறை நிம்மதியை பறித்து வறுமையில் தள்ளுவதோடு, பெரும் எண்ணிக்கையில் வேலை தேடும் ரிசர்வ் பட்டாளத்தையும் உருவாக்குகிறது.

குறைவான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையைவிட கீழான நிலைக்கு வேலைவாய்ப்புகள் அருகி வருவதாக முதலாளித்துவ பத்திரிக்கைகளே செய்திகள் வெளியிடும் நிலையில் இருக்கிறோம். இந்நிலையில் இந்தியாவின் பெருநகரங்களில் ஆகப் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்த சிறு தொழிற் பட்டறைகள் (Small scale industries) மூலப்பொருட்களின் விலை ஏற்றம், உற்பத்தி தேக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற காரணங்களால் தொடர்ந்து நசிவை சந்தித்து வருகின்றன. உதாரணத்திற்க்கு திருப்பூரின் இன்றைய நிலையை பார்த்தாலே போதும். (அதற்கு நாங்கள் ஏற்கனவே பதிவிட்டுள்ள ’தொழில் நகரம் திருப்பூர் திவாலாகும் கொடூரம்! அனுமதிக்காதே! என்ற கட்டுரையை படித்துக்கொள்ளவும்)

வேலையின்மை ஏற்படுத்தும்
கொடூரமான விளைவுகள்;

தொழில் நகரங்களில் வாழும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களின் அன்றாட வருவாயை வைத்துதான் குடும்பமே நடத்துகிறார்கள்! பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிரந்தர வேலைக்கு செல்லும் மிக சொற்பமான தொழிலாளர்களைத் தவிர ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அன்றாடம் கூலிக்கு உழைப்பை விற்கும், தினக்கூலி தொழிலாளர்கள்தான்!

அதிலும் வெளிமாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காக வேலை தேடிவந்து, வாடகை வீடெடுத்து குடும்பமாக வாழ்பவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை சொல்லி மாளாது! அவர்களிடம் சேமிப்பு என்பது அறவே இருக்காது; ஆனால் கடன் மட்டும் நிரந்தரமாக நிச்சயம் இருக்கும்! திடீரென்று அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால் அக்குடும்பத்தின் நிலை என்னவாகும்?

நுகர்வு கலாச்சாரம் உருவாக்கும்
சீரழிந்த இளம்தலைமுறை!

திடீரென்று வேலை இழந்த அப்பாவிடமிருந்து செலவுக்கு பணம் கிடைக்காத இளைஞன் எப்படி எதிர்வினையாற்றுவான்? திருப்பூரில் சனிக்கிழமைகளில் தங்களது வார கூலியாக பெற்ற சில ஆயிரங்களை பையில் வைத்தபடி நண்பர்களுடன், அடுத்தநாள் (ஞாயிறு) இரவு வரை குடித்து சீரழிந்து, கும்மாளமிட்ட இளைஞர் கூட்டம் வேலையிழந்த நிலையில் என்ன மனநிலைக்கு போகும்? “எப்படியாவது அனுபவித்துவிட வேண்டும், எதைப்பற்றியும் கவலையில்லை” என்று இளைய சமுதாயதின் மனநிலையை வடிவமைத்து நுகர்வுவெறிக்கு பழக்கப்படுத்திய கார்ப்பரேட்டுகளோ இது பற்றி கண்டுக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். கடந்த 16ஆம் தேதியன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் செல்போனை பறிக்க முயற்சித்த போது பெண்ணை சாலையில் 100 மீட்டர் வரை இழுத்த சென்ற கொடூரம் நடந்துள்ளது.

குடும்பத்துக்கு சோறு போடவேண்டும். பிள்ளைகளின் படிப்புக்கு செலவு செய்தாக வேண்டும், ஊரில் உள்ள வயதான பெற்றோருக்கும் கொஞ்சம் பணம் அனுப்பியாக வேண்டும், இதற்கெல்லாம் பீஸ்ரேட்டில் எந்திரத்தோடு எந்திரமாக ஓடி உருக்குலைந்து வந்த தொழிலாளி வேலை இழந்தவுடன் இனம் புரியாத பரிதவிப்புக்கு உள்ளாகிறான். பதில் சொல்லவோ, வழிகாட்டவோ, உதவவோ யாருமற்ற ரிசர்வ் பட்டாளம் பெருகுகிறது! இந்த சூழலில் இளைஞர்கள் வழிதவறி செல்கின்றனர்.

அதிகரிக்கும் வழிப்பறி!
சினிமா உருவாக்கும் கயவர் கூட்டம்!

நாம் தமிழ் சினிமாவில் பார்ப்பதுப்போல கொள்ளையடிப்பதற்கென்றே வட மாநிலங்களில் இருந்து வந்து நன்கு நோட்டம் இட்டு பெரும் பணக்காரன் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது தனிவகை!  நம்மூரிலும் அப்படிப்பட்ட கிரிமினல்கள் உண்டு. ஆனால் 100, 1000க்கு வண்டியை மறித்து கத்தியை நீட்டுபவர்களை அந்த பட்டியலில் சேர்க்க முடியாது! அவர்கள் நேற்றுவரை உதிரித்தொழிலாளியாக கிடைத்த வேலை செய்து அந்த வருவாயில் விருப்பம்போல் விலை உயர்ந்த செல்போன்கள், பைக், வாரக்கடைசியில் நண்பர்களுடன் பார்ட்டி என கூத்தடித்த வர்க்கம்.

உலக அளவில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகின்றன. உலக அளவில் 15 முதல் 39 வயதுக்குள்ளான ஒட்டுமொத்த ஆண்கள் தற்கொலை எண்ணிக்கையில் 25% பேர் இந்தியர்கள், அதேபோல மேற்கூறிய வயது வரம்பில், உலகின் ஒட்டுமொத்த பெண்கள் தற்கொலை எண்ணிக்கையில் 36 சதவீதத்தினர் இந்தியர்கள்

இனி இவர்கள் பழைய வாழ்க்கையை விடமுடியாமல் வழிப்பறியில், திருட்டில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம். இது படிப்படியாக சிறு நகரங்கள் வரை பெருகும். மாறாக குடும்பத்தலைவனாக இதுவரை பொறுப்புடன் வாழ்ந்துவிட்டு, வழிப்பறி, திருட்டுக்கு மனம்வராதவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் பெருகும். நெட் பிளிக்ஸில் Money Heist தொடர் வரவேற்பை பெற்றதையும் இணைத்து பாருங்கள்! நிலைமையின் விபரீதம் புரியும். ஆனால் இவர்கள் குற்றவாளிகளா அல்லது இவர்களை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் குற்றவாளிகளா?

IT துறையில் அப்ரைசல்,
அதிகரிக்கும்  வேலை நெருக்கடி!

உதிரித்தொழில் செய்யும் இளைஞர்களுக்கும் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இளைஞர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வீட்டிலிருந்தே வேலை (Work from home)  என்ற பெயரில் 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை வாங்கப்படுகிறார்கள். மறுத்தால் வேலை போய்விடும் என்ற அச்சம். இந்த வாழ்க்கைத்தரம் போய்விடும் என்ற கவலை. அதையும் தாண்டி வேலை இழப்புகளும் நடக்கிறது.

கடும் மன அழுத்தத்துடன் விருப்பத்துக்கு மாறாக உழைத்துக் கொண்டிருக்கிறர்கள். நட்சத்திர உணவகம், பீச் ரிசார்ட் பார்ட்டி என்று கார்பரேட் நுகர்வு பழக்கவழக்கங்களில் ஊறிவிட்ட இவர்களில் சிலர் வேலை பறிக்கப்படும்போது எதார்த்தத்தை ஏற்று கிடைக்கும் வேலைக்கு போக முயற்சிக்கிறார்கள். மேல்தட்டு வாழ்க்கை முறையிலிருந்து உழைக்கும் வர்க்க வாழ்நிலைக்கு மாறுகிறார்கள். அப்படி கீழிறங்க விரும்பாதவர்கள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

அக்கம் பக்கம் பார் தம்பி!
ராசா! உண்மையை உணர்!

ஒரு பானை சோற்று பதமாக 16.12.2021 தேதி தினகரன் செய்திதாளில் ஒரே தினத்தில் வெளிவந்த சில செய்திகளை கவனிப்போம்.

1.சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தன் குடும்பதுடன் தங்கி கடந்த 6வருடங்களாக தையல் கடை நடத்தி வந்த விழுப்புரத்தை சேர்ந்த சிவாஜி (வயது45) தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், கடையை விட்டுவிட்டு கூலி வேiலைக்கு சென்றுவந்த நிலையில், ஏற்கனவே தொழில் நடத்த வாங்கிய கடனை கட்ட முடியாமல் தான் பெற்ற 10 வயது மகனை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு கடிதம் எழுதி வைத்திவிட்டு தன் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

2.தமிழகத்தில் விசைதறியை நம்பி வாழ்ந்து வரும் 10 லட்சம் விசைதறி தொழிலாளர்கள் பஞ்சு தட்டுப்பாடு, அரசின் ஆதரவு இல்லாமை காரணமாக வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

3.வேலூர் பகுதியில் பிரபல நகை கடையில் 15 கிலோ தங்க, வைர நகைகள் சுவற்றில் துளையிடப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பாக வெளிவந்துள்ளது.

4.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியத்தில் உள்ள ரங்கம்பாளையம் பகுதியில் 7.5 பவுன் தங்க நகை, 75 ஆயிரம் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக 70 வயது முதிய தம்பதிகள் கொடுரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்ல அன்றாடம் ஐ.டி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இழப்பு, பணிச்சுமை, மன இறுக்கம் ஆகிய காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை கேள்வி படுகிறோம். சிறு கிராமம் முதல் தலை நகரம் வரை குற்ற சம்பவங்களும், மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளும் அதிகரித்து வருவதையே மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

வெவ்வேறு செய்திகளாக தினசரிகளில் நாம் சாதாரணமாக கடந்து செல்லும் வழிப்பறி, திருட்டு, தற்கொலைகளுக்கும், சமூகத்தில் நிலவும் வேலை இழப்பு, வருமான இழப்பு, நுகர்வு வெறி பிரச்சனைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதைத் தான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

’இந்திக்கார தொழிலாளிகள்’,
அனைவரும் திருடர்களா?

சொந்த மாநிலத்தில் பிழைக்க வழி இல்லாமல் அகதிகளைப்போல் தமிழகம் வந்து, கிடைக்கும் வேலைக்கு போய், தமிழர்களை விட அதிக வேலைகளை செய்து, அவர்களை விட குறைந்த கூலியை வாங்கிக் கொண்டு ஒரு நவீன கொத்தடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள் ’இந்தி’ (அவர்கள் வேறு எந்த மொழி பேசினாலும், அவர்களை இந்திக்காரன் என்றுதான் அழைக்கிறோம்)பேசும் தொழிலாளிகள்!

கொரானா முதல் அலையின் போது ஏற்பட்ட வேலையிழப்பில் கால்கடுக்க நடந்தே ஊர் திரும்பிய அவர்களில் சிலர் அங்கும் பிழைக்க முடியாமல் மீண்டும் நம் ஊர்களுக்கு வருகின்றனர். இவர்கள் உழைத்து வாழும் வர்க்கம். அதேபோல் சொந்த ஊரில் போக்கிரித்தனம், சமூக விரோத வேலையில் ஈடுபடுபவர்களில் ஒரு சிலரும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலுள்ள தொழில்நகரங்களுக்கு வந்துவிடுவதுண்டு! நம்மூரிலிரும் அடிதடி, வழக்கு, காதல் போன்ற காரணங்களால் திருப்பூருக்கு வந்தவர்கள் அதிகம்.

எனவே ஆகப் பெரும்பான்மையினரான உழைக்கும் வர்க்கத்தையே குற்றப்பரம்பரை போல் அணுகுவது தவறு! அவர்கள் நம் வேலையை பறிக்கிறார்கள் என்று நம் எதிரியாக பார்ப்பதும் தவறு. உழைக்கும் மக்களின் வாழ்க்கை இன்னல்களுக்கு காரணமான பெரும், பெரும் ஏகபோக கார்ப்பரேட்டுகளை நமது எதிரியாக வைக்கவேண்டிய இடத்தில் வடமாநில தொழிலாளிகளை எதிரிகளாக நிறுத்த சிலர் முயற்சிப்பதும் அயோக்கியத்தனமானது.

வரலாறு கற்பிக்கும்
சமூகம் பற்றிய பாடம்!

பிழைப்புக்கு வழியற்ற தென்மாவட்டங்களில் திருட்டை தடுக்க ’குற்றப்பரம்பரை’ என்று ஒரு சமூகத்தையே முத்திரை குத்தி இரவு முழுவதும் போலீஸ் ஸ்டேசனில் உட்கார வைத்துப்பார்த்தான் பிரிட்டிஷ்காரன். இதற்கு நிரந்தர தீர்வுகாண அப்பகுதியில் பாசன வசதி கிடைத்தால் அனைவரும் உழைத்து வாழ வழிபிறக்கும் என்று முடிவெடுத்தனர். அந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஓடும் ஆறுகளை ஆய்வு செய்தனர். பென்னிகுக்கும் முல்லைபெரியாறு அணையை கட்டி மதுரை, ராமநாதபுரம் வரை மாற்றத்துக்கு வித்திட்டார்.

இன்று கிராமத்திலும் வேலை இல்லை. தொழில் நகரங்களிலும் வேலை இல்லை என்றால் குற்றம் பெருகத்தானே செய்யும். பிரிட்டிஷ்காரனே நாம் வாழ அக்கரை காட்டியுள்ள போது நம் நாட்டு அரசு கைவிட்டுவிடுமா என்ற கருத்து இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். உழைத்து வாழ வழிசொல்ல துப்புக் கெட்ட பாசிச மோடி அரசு பட்டதாரிகளை பக்கோடா விற்கக் சொல்லி இழிவுபடுத்தியது என்பது தான் நிதர்சனம்.

நம்மை எதற்கும் துணிகின்ற குற்றவாளிகளாகவோ, தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளாகவோ மாற நிர்பந்திக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்திடம் நேர்மையை எதிப்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும்.

வேலை இழந்தவர்கள், இழக்கப் போகிறவர்கள்!
துணிந்து நில்! போராடி முன்னே செல்!

இதற்கு இந்திய ஒன்றிய அரசுதான் பொறுப்பெடுத்து பதில் சொல்ல வேண்டும். ஆனால் கார்ப்பரேட் சேவையில் ஊறித்திளைக்கும் இந்த பாசிச ஆர்.எஸ்.எஸ்-மோடி அரசு பதில் சொல்லாது! ’செத்துப்போ’ என ஒழித்துக் கட்ட பார்க்கும். மீறி உயிருடன் இருப்பவனை திருட்டு, கொள்ளையில் ஈடுபடுபட வைக்கும். பிறகு அவர்களையே ’சமூக விரோதிகள்’ என்று பெயர் சூட்டி அவர்களை சுட்டுத்தள்ளும். உழைக்க தயாராக உள்ள நாமும், நமது குடும்பமும் ஏன் சாகவேண்டும் என எதிர்த்து நின்றாலோ, சங்கமாக ஒன்றிணைந்தாலோ அப்பொழுது நம்மை அச்சுறுத்தவும், அடக்கவும் மட்டுமே அரசு வரும்.

எனவே அதிகரிக்கும் சமூக குற்றங்களுக்கு பொறுப்பு பாசிச மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தொழிற்கொள்கையும், அதை பயன்படுத்தி சுரண்டி கொழுக்கும் கார்ப்பரேட்டுகளும்தான் என்பதை புரிந்துகொள்வோம். நண்பர்களுக்கும் புரியவைப்போம். கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக் கிடையில் நாம் வாழவே முடியாது. ஆனால் கார்ப்பரேட்-காவி பாசிச அரசை வீழ்த்த அமைப்பாய் அணிதிரள நம்மால் முடியும். திரள்வோம்! போராடி வீழ்த்துவோம்!

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here