மனித குலம் தோன்றிய காலம் வேட்டையாடிய மனிதனின் துணைத் தொழிலாக தொடர்ந்து இருந்து வருவது மீன் பிடித் தொழிலாகும். மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இந்திய தீப கற்பத்தில் சுமார் 7,516 கிலோ மீட்டர் கடற்கரையில் மீன் பிடிக்கப்படுகிறது. மீன் பிடி தொழில் மூலம் 10 மில்லியன் டன் மீன் பிடிக்கப்படுகிறது. இதன் ஆண்டுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. உலக அளவில் இந்தியா மீன் பிடித் தொழிலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. எனினும் இதன் பலன்கள் மீனவர்களுக்கு கிடைப்பது இல்லை. இந்திய – இலங்கை மீனவர்கள் மத்தியில் மோதல் இரண்டாம் பட்சமாகி, உள்நாட்டு மீனவர்கள் அன்றாடம் மோதி கொள்ளும் நிலைமை அன்றாட செய்தியாகி விட்டது.

கடந்த ஆகஸ்ட் 28 ம் தேதியில் புதுச்சேரியில் மீனவர்கள் தமக்குள் மோதிக்கொண்டனர். புதுச்சேரி அடுத்துள்ள வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம் ஆகிய மீனவ கிராமத்தினரிடையே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.

நல்லவாடு மீனவர்கள் அரியாங்குப்பம் கடல் பகுதியில் சுருக்கு மடி எனப்படும் வலையை பயன்படுத்தி மீன் பிடித்தனர். அது மீன்வளத்தை அழிக்கிறது என்றும் சுருக்குமடி வலையை தடைசெய்ய வேண்டும் என்றும் வீராம்பட்டினம் மீனவர்கள் ஏற்கனவே அரசிடம் கோரிவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நல்லவாடு மீனவர்களின் சுருக்கு மடி மீன்பிடிப்பை தடுத்ததால் மோதல் ஏற்பட்டது..

தொடர்ந்து தடையை மீறி சுருக்குமடி வலைகள் மூலம் மீன் பிடிக்கும் நல்லவாடு மீனவர்களின் நடவடிக்கையை கண்டு ஆவேசமடைந்த வீராம்பட்டினம் மீனவர்கள், நல்லவாடு மீனவர்களை தாக்க ஈட்டி, சுளுக்கி, சூலாயுதம் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், கடல் வழியாக படகுகளில் நல்லவாடு கிராமத்திற்கு புறப்பட்டனர். அதனை அறிந்த நல்லவாடு மீனவர்களும் வீச்சரிவாள், ஈட்டி, சுளுக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடற்கரையில் திரண்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி மோதலை தடுத்தனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அந்த 3 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

தொடரும் மீனவர்கள் மோதல்!

புதுச்சேரியில் மட்டுமல்ல, தமிழக கடற்பரப்பு முழுவதிலும் மோதல்கள் நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்ட தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடிக்கின்றனர். பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கும் போது மோதலில் ஈடுபட்டு மோதியவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. நாகை முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

தூத்துக்குடி மீனவர்களின் ஒருகோடி மதிப்பு கொண்ட லான்ச் எனப்படும் விசைப்படகையே பெரியதாழை மீனவர்கள் 2014 இல் கொளுத்தியுள்ளனர். 2019 ஜூலையில் குமரியில் சின்ன முட்டம் துறைமுகத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்று மோதலை தவிர்க்க போடப்பட்ட தற்காலிக தடையை மீறி கடலுக்கு சென்று கூத்தன்குழி மீனவர்களின் நாட்டுப்படகு மீது மோதியது. நம் மீனவர்கள் ஏன் இப்படி தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள் என்பதற்கு விடையை தேடுவோம்.

மீன்பிடி தொழில் எப்படி நடக்கிறது?

நம் முன்னோர்கள் காலம் காலமாக கட்டுமரத்தில் சென்று குறைவான தூரத்திலேயே தேவையான மீன்களை பிடித்து வந்தனர். கரைவலை எனப்படும் கரையில் நின்று மீன்பிடித்தலும் நடந்தது. இதில் படகில் சென்று கரையோரமாக வலையை விரித்துவிட்டு கரையில் இருபிரிவாக நின்று இரு முனைகளையும் இழுத்து மீன்பிடித்தனர். மரத்தால் கட்டப்படும் நாட்டுப்படகும் இருந்தது. பின்னர் கண்ணாடி இழை எனப்படும் பைபர் படகும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஞ்சினை கொண்டு மேலும் சில நாட்டிக்கல் மைல் தொலைவு ஆழத்திற்கு சென்று மீன்பிடிக்க ஆரம்பித்தனர். வசதி படைத்தவர்கள் கோடிகளில் மூலதனம் போட்டு, இரும்பினாலான லான்ச் எனப்படும் நவீன விசைப்படகுகளை கட்டி ஆழ்கடல் மீன் பிடிப்பை செய்கின்றனர். இவர்கள் ஒரு வாரம் வரை கடலிலேயே தங்கி தங்கு கடல் மீன் பிடிப்பையும், தூத்துக்குடியில் மட்டும் தினம்தோறும் சென்று திரும்பியும் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

மீன் பிடி முறைகள்

இப்படி நம் மீனவர்கள் கட்டுமரம், பைபர் படகு, அதிநவீன விசைப்படகு என மூன்று பிரிவுகளாக தொழில் செய்கின்றனர். கரைவலை மீன்பிடிப்பு முற்றாக அழிந்து வருகிறது. இதில் நமக்கு போட்டியாக இன்னொரு பிரிவும் கடலில் நுழைந்துள்ளது.

நமது கடல் எல்லையை தாண்டிய சர்வதேச கடல் பரப்பில் டிராலர்கள் எனப்படும் நவீன மீன்பிடி கப்பல்கள் விருப்பம்போல் நம் கடல் வளத்தை கொள்ளையடிக்கின்றன. பெயரளவிற்கு இந்தியாவில் இருக்கும் ஒருவரை கப்பல் உரிமையாளராக அல்லது பங்குதாரர்களில் ஒருவராக கணக்குக் காட்டி நம் கடல் எல்லைக்குள்ளும் வந்து போட்டிபோடுகின்றனர்.

அழிக்கப்படும் கடல்வளம்!

பெரும்பாலான மீனவர்கள் பாரம்பரிய நூல்வலைகளை கைவிட்டு அதேபோன்ற நைலான் வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் சூழலில், அதே கடற்பரப்பில் சுருக்குமடி இரட்டை மடி வலைகளை சில மீனவர்கள் பயன்படுத்தி சிறு மீன் குஞ்சுகளை கூட விட்டுவிடாமல் மொத்தமாக அள்ளி  எடுத்துவிடுகின்றனர். நம் தமிழக கடலோரப் பகுதிகளில் காலம் காலமாக இருந்த மீன்வளம் இன்று இல்லாமல் போனதற்கு இந்த வகை வலைகளே முக்கிய காரணம்.

நம் பைபர் படகு மீனவர்களில் சிலர் சுருக்குமடி அல்லது இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். விசைப்படகுகளும் இழுவைமடி எனப்படும் முறையில் மீன்பிடிக்கின்றனர். இந்த மீன்பிடி முறையானது கடல் வளத்தை குறிப்பாக மீன் வளத்தை அழிப்பதால் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதி என்பது பவளப் பாறைகள் நிறைந்தது. அதிக அளவில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பல்கிப் பெருகும் பரப்பாகவும் உள்ளது. இப்பகுதியில் குறைந்த தொலைவு சென்று போதுமான மீன்களை காலம் காலமாக பிடித்து வந்துள்ளோம். நவீன விசைப்படகுகள் வந்தபின் அவை பயன்படுத்திய மீன்பிடி முறைகளால் அந்தப் பவளப்பாறைகள் இன்று சிதைக்கப்படுகிறது.

பவளப்பாறை

குறிப்பாக லான்ச்களில் இழுவைமடி எனப்படும் முறையில் மீன்பிடிக்கின்றனர். இரட்டை மடி வலை போன்ற தடைசெய்யப்பட்ட வலைகளை கடலில் விரித்து  பெரிய பலகையை கடற்பரப்பின் அடியாளத்திற்கு இறக்கி கடலையே உழுவது போல் ஓட்டிச் செல்கின்றனர்.  அப்பொழுதான் ஆழத்தில் இருக்கும் மீன்கள் மேலே வந்து சிக்கும். இதனால் மீன்வளத்தை பெருக்கும் பவளப்பாறைகள் சிதைவுறுகின்றன. ஏற்கனவே பைபர் படகில் சென்ற மீனவர்கள் மேற்பரப்பில்  விரித்துள்ள வலைகளையும், முந்தைய நாளே சென்று ஆழ்கடலில் சங்கு நண்டு உள்ளிட்டவற்றை பிடிக்க அடியாழத்தில் விரித்துவிட்டு வந்திருந்த வலைகளையும் இந்த நவீன விசைப்படகுகள் இழுத்துச்சென்று சேதப்படுத்துகின்றன.

ஐரோப்பிய பாணி  நமக்கு ஒத்துவராது!

ஐரோப்பிய பாணிகளில் பன்னாட்டு மீன்பிடி கப்பல்கள் நம் கடல் வளத்தை சூறையாடுகின்றனர்.  அதாவது கடலின் மேற்பரப்பு குளிரால் உறையும் தட்பவெப்பநிலை உள்ள நாட்டில் சில மாதம் மட்டுமே மீன்பிடிக்க முடியும். அச்சமயத்தில் அடுத்த 6 மாதத்திற்கானதை மொத்தமாக பிடித்து விடுகிறார்கள். அதைத்தொடர்ந்து சில மாதம் கடலுக்குள் செல்ல முடியாது. இந்த இடைக்காலத்தில் மீண்டும் மீன்வளம் பெருகிவிடுகிறது.

கார்ப்பரேட் மீன் வேட்டை!

 

இந்தியாவில் ஆழ்கடல் மீன்பிடிப்பு பணம் கொட்டும் சுலப வழியாக உள்ளது. பன்னாட்டு கப்பல்கள் ஒட்ட சுரண்டுவதற்கு ஏற்ப மீன்பிடி மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவர்களின் நிர்பந்தம் காரணமாக 24 மணி நேரமும் செயல்படும் பிரம்மாண்ட ஆலைகளைப் போலவும், அதில் ஓய்வின்றி இயக்கப்படும் இயந்திரங்கள் போலவும் மீன் பிடிக்கும் தொழில் மாற்றப்பட்டு வருகிறது.

இந்த முறையை (Intensive) பயன்படுத்தி, நம் கடலில் வருடம் முழுவதும் தீவிரமாக, மொத்தமாக இங்குள்ள மீன் வளத்தை அழிக்கின்றனர். நாம் ஊட்டச்சத்தின்றி தவிக்கும் நிலையில் பன்னாட்டு கப்பல்களை பயன்படுத்தும் ஏகபோக நிறுவனங்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகள் பற்றியோ அல்லது அவர்கள் ஆழ்கடலில் சுறா போன்ற மீன்களைப் பிடித்து மிக அதிக விலை கிடைக்கும் அவற்றின் துடுப்புகளை மட்டும் வெட்டி எடுத்து குளிர்பதனப் பெட்டிகளில் நிரப்பிக் கொண்டு, துடுப்புகள் அறுக்கப்பட்ட சுறாக்களின் உடலை வீணாக கடலில் வீசி செல்லும் கொடுமையோ யாரும் பார்ப்பதும் இல்லை: தடுப்பதும் இல்லை.

மீன்வளம் குறைவதுதான்  மோதலுக்கு அடிப்படை!

முன்னர் கைக்கெட்டும் தூரத்தில் பலவகையான மீன்களை பிடித்து வந்தனர். இன்று ஆழ்கடலுக்கு சென்றே அவற்றை பிடிக்க வேண்டியுள்ளது; அல்லது அருகில் மீன் கிடைக்கும் ஒரு சில இடங்களுக்கு முதலில் செல்ல போட்டி போடுகின்றனர். எத்தனை கடல் மைல் தொலைவுக்கு செல்கின்றனரோ அதற்கேற்ப டீசல் செலவு மிக கடுமையாக அதிகரித்துவிடுகிறது. எனவே நேற்று குறைந்த அளவு மீன்களை அருகிலேயே பிடித்தபோது கிடைத்த வருவாயை விட, இன்று அதிக எரிபொருள் செலவு செய்து அதிக அளவு மீன்களைப் பிடித்தும் அதே பழைய அளவு வருவாயைத்தான் பெற முடிகிறது. எனவே தமக்குள் மோதிக் கொள்கின்றனர்.

இப்படி நம் கடற்பரப்பில் நாம் பயன்படுத்திய அன்னிய மீன்பிடி முறைகளால் மீன்வளத்தை இழந்துள்ளோம். நமக்கு போட்டியாக ஆழ்கடலில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களும் இதே முறையில்தான் கடல் வளத்தை அழிக்கின்றன. இதனால்தான் இலங்கையை நோக்கி செல்ல வேண்டியுள்ளது.

மீன்வளத்தை பராமரிக்கும்  இலங்கை மீனவர்கள்!

இதற்கு நேர்மாறாக இலங்கை மீனவர்கள் பாரம்பரிய வலைகளை மட்டுமே பயன்படுத்துவதால் அங்கு மீன்வளம் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அவர்களின் கடற்பரப்பில்  நம் விசைப்படகுகள் இரட்டைமடி வலையை போட்டு இழுத்துச் செல்வதால் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுபடுகின்றன. எனவேதான் இலங்கையிலுள்ள யாழ்ப்பாண தமிழ் மீனவர்களே நம் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி முறையை எதிர்க்கின்றனர். இதுவே தமிழக இலங்கை மீனவர்களின் கைகலப்பிற்கும்  காரணமாகிறது.

நம் ஒன்றிய அரசு பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு கடலை தாரை வார்க்க கடல்வள மீன்வள மசோதா 2021 ஐ கொண்டு வருகிறது. இது மீனவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி தொழிலை விட்டு ஓட வைப்பதாகும்.

இதுவரை இரட்டைமடி, சுருக்குமடி, இழுவை மடிக்கு பயன்படுத்தும் வலைகளை தயாரிக்கும் நிறுவனங்களை எச்சரித்து உற்பத்தியை நிறுத்தாமல், இவ்வலைகளை விற்பனை செய்யும் கடைகளை முடக்காமல் மீனவர்களை மட்டும் மிரட்டுகிறது. இரட்டை மடி சுருக்குமடி வலையை பயன்படுத்திய படகுகளை பறிமுதல் செய்து மீன்வளத்தை பாதுக்காப்பதுபோல்  காட்டிக்கொள்ளும் நாடகத்தையும் அவ்வப்போது நடத்துகிறது.

மீனவர்கள் பிளவுபட்டு நமக்குள் மோதுவது தீர்வாகாது!

தமிழக மீனவர்கள் தமக்குள் பைபர் படகு விசைப்படகு என பிரிந்து மோதுவதை தவிர்த்து ஒன்றுபட்டே தீரவேண்டிய அவசியத்தை பாசிஸ்ட் மோடியே உருவாக்குகிறார். கார்ப்பரேட்டுகளுக்கு கடலை தாரைவார்க்க கொண்டுவரப்பட்டுள்ள கடல்வள மீன்வள மசோதா 2021 உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்க வேண்டும். இரட்டைமடி சுருக்குமடி வலைகளின் உற்பத்தியை தடுக்க வேண்டும். கரைவலைக்கு மட்டும் மிக குறைவாக உற்பத்தி செய்யலாம்.

நம் மீனவர்கள் கடல் வளத்தை அழிக்கும் இரட்டைமடி சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். மன்னார் வளைகுடா பிராந்தியத்தில் அன்னிய மீன்பிடி கப்பல்கள் நுழைவதை, அதாவது இந்தியர்களில் ஒருவரையும் பங்குதாரராக காட்டி குறுக்கு வழியில் மீன்பிடிக்க ஒப்புதல் பெறுவதையும் முறியடிக்க வேண்டும். இதன் மூலம் இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்குமான பிரச்சனை முடிவுக்கு வரும்.

இலங்கை கடற்படை நடத்தும் துப்பாக்கி சூட்டை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு தனது கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களையும் ரோந்து படகுகளையும் நிரந்தரமாக மன்னார் வளைகுடா பகுதியில் நிறுத்தி பாதுகாப்பு தரவைக்க வேண்டும். இவர்கள் தகுந்த பாதுகாப்பு தர முடியாத போது மீனவர்கள் ஆயுதம் ஏந்தி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமைவேண்டும். இதை செய்ய வைக்க மீனவர்கள் தமக்குள் ஒன்றுபடுவதோடு, உள்நாட்டில் உள்ள பாதிக்கப்பட்டு போராடும் விவசாயிகள், தொழிலாளர்களோடும் ஒன்றிணைய வேண்டும். ஏனென்றால் விவசாயிகளை வயலைவிட்டு விரட்டும் அதே கார்ப்பரேட்-காவி பாசிச கொள்கைகள் தான் மீனவர்களையும் கடலை விட்டு விரட்டுகிறது. எனவே நம் அனைவருக்கும் பொது எதிரி ஒன்றுதான் அதை வீழ்த்த துடுப்புகளும், கலப்பைகளும் ஒன்றிணையும் வகையில் போராடுவோம்.

இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here