தமிழகத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் தனது அடிமை கும்பலான அதிமுகவுடன் கூட்டணி பேரத்தில் படியாத நிலையில் பாஜக தனியாக போட்டியிட்டது.

வழக்கமாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் செலவிடும் தொகையை விட அதிக பட்சமாக பல கோடி ரூபாயை வாரி இறைத்து பாரதிய ஜனதா கட்சி களத்தில் இறங்கியது.

வடமாநிலங்களில் அவர்கள் செய்கின்ற அனைத்து விதமான தகிடுதத்தங்களையும் இங்கு அமல்படுத்தி பார்த்தார்கள் வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது, கட்சிகளை விலைக்கு வாங்குவது, தொகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது போன்ற வழிமுறைகளையும், சாதிய- இனவாத பிழைப்புவாதிகளையும், கிரிமினல்களையும், குண்டர்களையும் தேர்தலில் இறக்கி விட்டது.

மாநில, மாவட்ட பிரபலங்கள் மட்டுமின்றி அகில இந்திய பிரபலங்களையும் இறக்கி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு என்று தனியே ஒரு பிரிவை உருவாக்கி ஆயிரக்கணக்கான இளம் மாணவர்களை, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டார்கள்.நிமிடம் தோறும் ஏதாவது ஒரு பிரச்சனையில் தனது பெயர் அடிபடுகின்ற வகையில் பார்த்துக் கொண்டார்கள்.

அதுமட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தல்களில் தான் வெற்றிபெற்றால் பரந்த அடித்தளத்தை உருவாக்கி கொள்ள முடியும் என்ற நீண்டகால திட்டத்துடன் அதிகபட்ச கவனத்தை குவித்தார்கள்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளில் திமுகவை ஒழித்துக் கட்டுவதே எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்து வேலை செய்து வந்தார்கள். தேர்தல் அரசியலில் உள்ள வெற்றி தோல்வியை வைத்து ஒரு கட்சியை, அதன் அதிகாரத்தை பற்றி நாம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட முடியாது என்றாலும் இந்தியாவில் தேர்தல்கள் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் சாதனமாக நிலவுகிறது.

தேர்தல் பாதைகளுக்கும், பாராளுமன்ற, சட்டமன்றங்களுக்கும் வெளியில் ஆர் எஸ் எஸ்- பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது என்பதே சரியானதாகும். அதுவே நிரந்தரமான தீர்வாகவும் உள்ளது.

அதே சமயத்தில் அவர்கள் பாராளுமன்றத்தையும், சட்டபூர்வமான வழிமுறைகளையும் புறக்கணிக்காமல் அதனை பயன்படுத்திக் கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை கட்டமைக்கிறார்கள்.

சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே, “தேசியம்” “ஒரே நாடு! ஒரே தேர்தல்” போன்ற முழக்கங்களை முன்வைத்து மக்களை மூளைச் சலவை செய்கிறார்கள். ஊடகங்களையும், நடுத்தரவர்க்க, குட்டி முதலாளித்துவ சக்திகளையும் தொடர்ந்து தனது பிரச்சார சாதனங்களாக பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய சூழலில் தேர்தலில் அவர்களை மீண்டும் பதவிக்கு வராமல் தடுப்பது, அவர்களின் அதிகார வரம்பை ஓரளவுக்கு மட்டுப்படுத்துகிறது என்ற அளவில் தேர்தலைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இத்தகைய கண்ணோட்டத்தில் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ள வாக்குகள் மற்றும் வெற்றி, தோல்விகள் நமது செயல்திட்டத்தை வீச்சாக முன்னெடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தை ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் கொண்டுவர துடிக்கும் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கு புரிய வைக்கிறது.

இந்த நோக்கத்துடன் ஊடகங்கள் பரப்புகின்ற பிரமையை பற்றி தோழர் சுகுணா திவாகர் எழுதியுள்ள இந்த பதிவையும் இணைத்து வெளியிடுகிறோம்.

000

இது பா.ஜ.க.வுக்குக் கிடைத்த வெற்றியா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களில் வழக்கம்போல் பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒற்றை வாக்குகளையும் ஒற்றை இலக்க வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள். பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களும் உண்டு. டெபாசிட் இழந்த பா.ஜ.க. வேட்பாளர்களும் அதிகம். ஆனால் பா.ஜ.க. இந்தத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றதாகப் பாஜக ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள். “மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துவிட்டோம். தமிழக மக்கள் பா.ஜ.க.வுடன் பயணிக்கத் தயாராகிவிட்டனர்” என்கிறார் அண்ணாமலை. பா.ஜ.க. ஆதரவாளர்களும் ஊடகங்களும் மட்டுமல்ல பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும்கூட “பா.ஜ.க.வுக்கு வெற்றி, சமூகநீதி என்னாச்சு?” என்கிறார்கள். பா.ஜ.க. வளர்ந்திருக்கிறதா என்றால் வளர்ந்திருக்கிறதுதான். ஆனால் பூதாகரப்படுத்தும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சியா? புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

2011ல் மாநகராட்சியில் பா.ஜ.க. வாக்கு சதவீதம் – 0.49%
இப்போது மாநகராட்சியில் பா.ஜ.க. வாக்கு சதவீதம் – 1.60%

2011ல் நகராட்சியில் பா.ஜ.க. வாக்கு சதவீதம் – 1%
இப்போது நகராட்சியில் பா.ஜ.க. வாக்கு சதவீதம் – 1.46%

2011ல் பேரூராட்சிகளில் பா.ஜ.க. வாக்கு சதவீதம் – 1.76%
இப்போது பேரூராட்சிகளில் பா.ஜ.க. வாக்கு சதவீதம் – 2.40%

நன்றி: Youturn

2011ல் தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்றே தெரியாது. 2014ல் மோடி அலை வீசி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க. 2019ல் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி. தமிழகத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன், முருகன், அண்ணாமலை, ஹெச்.ராஜா, காயத்ரி ரகுராம் என்று பா.ஜ.க பிரபலங்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஊடகங்களில் அடிபடாத, தோன்றாத நாள்கள் இல்லை. 10 ஆண்டுகளில் சமூகவலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. பொய்யான வாட்ஸ்-அப் பார்வர்டுகளும் போலி போட்டோஷாப் கார்டுகளும் அதிகரித்திருக்கின்றன. ஏராளமான சினிமா பிரபலங்களை ஒருபுறமும் ரவுடிகள், கிரிமினல்களை இன்னொருபுறமும் பா.ஜ.க. தன் கட்சியில் சேர்த்துள்ளது. வேல் யாத்திரை முதல் சமீபத்தில் தஞ்சை மாணவி மரணம் – மதமாற்றம் சர்ச்சை வரை பா.ஜ.க. தொடர்ந்து பிரச்னைகளைக் கிளப்பிவருகிறது. “தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான். உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான்” என்கிறார் அண்ணாமலை.
ஆனால் 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அடைந்திருக்கும் அதிகபட்ச வாக்கு சதவீத வளர்ச்சி 1.11% மட்டுமே.

இப்போது “தமிழகத்தில் நாங்கள் மூன்றாவது கட்சியாகிவிட்டோம்” என்று அண்ணாமலை சொல்வது பொய். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசுக்கு அடுத்தபடியாகத்தான் பா.ஜ.க.

தேர்தல் நடந்த 12,759 இடங்களில் பாஜக வெறும் 2.4% இடங்கள் அதாவது 312 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் 586 இடங்களில் அதாவது 4.5% இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அதிலும் பா.ஜ.க. 100%போட்டியிட்டு 97.6% இடத்தில் தோற்று இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் போட்டியிட்டதோ 11% இடங்கள்தான். அதில் பெருவாரியாக வெற்றிபெற்றிருக்கிறது.

பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 4.82%. பா.ஜ.க பெற்றதோ 3 சதவீதம்தான். நகராட்சி வார்டு உறுப்பினர்களில் சி.பி.எம் வாக்கு சதவீதம் 1.75% அதற்கும் கீழேதான் பா.ஜ.க. வெறும் 1.60%

சென்னை மாநகராட்சியை எடுத்துக்கொள்வோம். உமா ஆனந்தன் வெற்றிபெற்றவுடன் ஏதோ கோட்டையையே பா.ஜ.க பிடித்துவிட்டதாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் மட்டுமில்லை, பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும் கூச்சல் போடுகிறார்கள். இதற்கு முன்பே சென்னையில் வெற்றிபெற்ற பா.ஜ.க கவுன்சிலர்கள் உண்டு. 16 வார்டுகளில் போட்டியிட்டு 13 வார்டுகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். ஆனால் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு வார்டில் வென்றிருக்கிறது பா.ஜ.க.

சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகளில் பாஜக இரண்டாமிடத்தில் வந்திருக்கிறது. கட்சியே ஆரம்பிக்காத விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 2-ம் இடத்திற்கு வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். உண்மையில் இது பா.ஜ.க.வுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட அதிமுகவுக்குக் கிடைத்த பின்னடைவு.

சரி, ‘காங்கிரஸும் சி.பி.எம்மும் கூட்டணியில் இருந்துதானே வென்றிருக்கின்றன. பா.ஜ.க. தனித்து நின்றல்லவா வென்றிருக்கிறது?” என்ற கேள்வி எழலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம்.
திராவிடக் கட்சிகளைவிட தேசியக் கட்சிகளே அதிகம் செல்வாக்குள்ள மாவட்டம்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மட்டும்தான் திமுக கூட்டணி. மேற்கு மாவட்டத்தில் தாங்கள் கேட்ட இடங்களைத் திமுக தராததால் காங்கிரஸும் சி.பி.எம்மும் தனித்துப் போட்டியிட்டன. சரிபாதி இடங்களில் தனித்துப் போட்டியிட்டும் கன்னியாகுமரி பேரூராட்சியை முதன்முறையாகக் கைப்பற்றியிருக்கிறது திமுக.

2011 உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று ஒரு நகராட்சித் தலைவர் மற்றும் 13 பேரூராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றது பா.ஜ.க. ஆனால் இப்போதோ 3 பேரூராட்சிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது பா.ஜ.க.

கன்னியாகுமரி மாவட்டத்தின் 4 நகராட்சிகளில் பத்மநாபபுரத்தில் மட்டும்தான் திமுகவும் பாஜகவும் சமபலத்துடன் வென்றிருக்கின்றன. மற்ற 3 நகராட்சிகளும் காங்கிரஸ், திமுக, சி.பி.எம் வசம்தான். கன்னியாகுமரி, கோவை என்ற இரண்டு செல்வாக்குள்ள இடங்களிலும் சரிவையே சந்தித்துள்ளது பா.ஜ.க.

எனவே பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கிறது என்றாலும் அது ஊதிப் பெரிதாக்கப்படும் பிரமாண்ட வெற்றியில்லை

சுகுணா திவாகர்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here