சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை முதல் ஆளாக கண்டித்துவிட்டேன் – மனுஷ்யபுத்திரன்

இதெல்லாம் இஸ்லாத்துக்கு அவமானம் என்று என்கையை முறுக்குகிறார்கள் என் இஸ்லாம் வேறு அவர்கள் இஸ்லாம் வேறு என்று சொன்னால் ஏற்க மறுக்கிறரகள்

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை
முதல் ஆளாக கண்டித்துவிட்டேன்

ருஷ்டிக்கு ஃபத்வா விதிக்கப்பட்ட நாளிலிருந்தே
இதையெல்லாம் கண்டித்துக்கொண்டுதானிருக்கிறேன்

எல்லாவிதமான தாக்குதல்களையும்
கண்டித்து வருகிறேன்

என்மீதான தாக்குதலைக்கூட
நான் கண்டிக்கத் தவறுவதில்லை

ஆனால் நான் ஒரு இஸ்லாமியன் என்பதால்
இஸ்லாத்தின் பெயரால்
எங்காவது தாக்குதல் நடந்தால்
மற்றவர்களைவிட
அதைப் பத்துமடங்கு கண்டித்தாக வேண்டும்
சிலசமயம் வேலை நிமித்தமாக
எட்டுமடங்கு அல்லது’
ஏழுமடங்கோடு நிறுத்திவிடுகிறேன்
உடனே என்னை சந்தேகிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்

இதெல்லாம் இஸ்லாத்துக்கு அவமானம் என்று
என்கையை முறுக்குகிறார்கள்
என் இஸ்லாம் வேறு
அவர்கள் இஸ்லாம் வேறு என்று சொன்னால்
ஏற்க மறுக்கிறரகள்

நான் ஏன் எந்நேரமும்
குற்றவாளிகூண்டில் நின்று
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
என்று தெரியவில்லை
எனக்கு சம்பந்தமில்லாத குற்றப்பத்திரிகைகளில்
ஏன் என் பெயர் இருக்கிறது என்று தெரியவில்லை

எல்லா மதத்திலும்
யாராவது குற்றம் புரிந்துகொண்டேதான் இருக்கிறார்கள்
படுகளங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன
நான் அதற்காக
ஒரு கடவுளையும் வெறுக்கவில்லை
ஒரு மதத்தையும் வெறுக்கவில்லை
அந்த மதத்தை நம்புகிற ஒருவரையும் வெறுக்கவில்லை

நீங்கள் என்னை
ரத்தக் கறைகளின் பங்குதாரராக்குகிறீர்கள்
பலிகளின் கூட்டாளியாக்குகிறீர்கள்
நான் நாய்களையும் பூனைகளையும்
புறாக்களையும் நேசிப்பவன்
எனக்கும் குருதியைக் கண்டால் தலை சுற்றும்
இருந்தும் என்னை ஏன்
திரும்பத் திரும்ப’
குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறீர்கள் என்று தெரியவில்லை

நான் இஸ்லாமியனாக இருக்கிறேன்
ஆகவே நான் ஒரு நடுநிலையாளனாக
ஒருபோதும் இல்லாமல் இருக்கிறேன்
நான் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்
அதனாலேயே
‘ அமைதி அமைதி ‘ என
நான் கத்துவது ஒருவருக்கும் கேட்பதில்லை

நான் ஒரு இஸ்லாமியனாக பிறந்தற்காக
என்னை நானே
ஒருமுறை கண்டித்துக்கொள்ளட்டுமா?
எனக்கு வேறு வழி தெரியவில்லை

13.8.2022
பகல் 1.29
மனுஷ்ய புத்திரன்

1 COMMENT

 1. இந்தியாவில் உள்ள 20 கோடி இஸ்லாமியர்களின் வலி மிகுந்த வாழ்க்கை புரிந்துகொண்டு அவர்கள் தோளோடு தோள் நின்று பாதுகாக்கப் போவது யார்?
  பிறப்பால் இஸ்லாமியர்கள் ஜெய்ஹிந்த் என்றாலோ ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம் போட்டாலோ உயிர்வலியின் வாதையிலிருந்து தப்பத்தான் முடியுமா?
  இந்த அடக்கு முறையின் பெயர் தான் என்ன?
  பாசிசம் என்கிறது மார்க்சியம்.
  இல்லை எதேச்சதிகாரம், இந்துத்துவா என்றெல்லாம் திசை திருப்புகிறது திரிபுவாதம்.
  பாசிச ஆட்சியா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்கிறது பிழைப்புவாத மார்க்சிய கூட்டம்!
  எது எப்படியோ புண்ணியவான்களே நீங்கள் முடிவெடுக்கும் வரை நாங்கள் உயிருடன் இருந்தால் வந்து பாருங்கள்!
  இல்லையேல் சமாதியின் மேல் நின்று நீலிக்கண்ணீராவது வடியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here