சூத்திரர்கள், பஞ்சமர்கள் பற்றி மநுதர்மம் எவ்வளவு இழிவாகப்
பேசுகிறது என்பதை எடுத்துக் காட்டினார் ஆ ராசா. உடனே
அதை அவரே சொன்னது போல தில்லுமுல்லு செய்கிறார்
பாஜகவின் அண்ணாமலை!

அதை அப்படியே எதிரொலிக்கிறார் அதிமுகவின் எடப்பாடி;
அதுவும் அண்ணா பிறந்த நாள் மேடையில்! ஐயகோ, அந்த
மநுவுக்கு எதிராகத்தான் காலம் முழுக்க போராடினார்
அண்ணா. அதுகூடத் தெரியவில்லை ‘கம்பராமாயணம்
எழுதிய சேக்கிழார்’ புகழ் கோமாளிக்கு.

மநு தர்மமே சநாதனா தர்மம், இந்து தர்மம் என்கிறார்கள்.
அப்படியெனில் அந்த தர்மம் விமர்சனத்திற்கு ஆளாகத்தானே
செய்யும் ? ஆளாகக் கூடாது என்றால் மநுதர்மம் இந்து தர்மம்
அல்ல என்று அறிவிக்க வேண்டும். அதைச் செய்யாமல்
ஐயோ, இந்துக்களை அவமதித்து விட்டார் என்று திசை
திருப்புகிறார்கள். ஒருவரைத் தாக்க அடியாளை அனுப்பி
விட்டு அந்த ஆளைக் காப்பாற்றுவது நாங்களே என்பது
மகா பித்தலாட்டம்!

மநு தர்மம் சூத்திர இந்துக்களின் பரம எதிரி என்பதற்கு
அதன் 8 ஆவது அத்தியாயத்தில் உள்ள கடைசி சூத்திரங்கள்
தக்க சாட்சியங்கள். ஒன்றிய அரசின் இந்திய கலாச்சாரத்
துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள மநு
தர்ம ஆங்கில பெயர்ப்பிலிருந்து இவை எடுக்கப்பட்டுள்ளன:

“வாங்கப்பட்டவரோ இல்லையோ ஒரு சூத்திரன் அடிமை
வேலையே செய்ய வேண்டும்; காரணம் பிராமணருக்கு
அடிமை வேலை செய்யவே சுயம்புவால் அவன் படைக்கப்
பட்டுள்ளான்”(413)

“யஜமானரால் சூத்திரன் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அடிமை
வேலையிலிருந்து அவன் விடுவிக்கப்படவில்லை; காரணம்
அது அவன் கூடவே பிறந்தது; அதிலிருந்து அவனை யாரால்
விடுவிக்க முடியும்?”(414)

“அடிமைகளில் ஏழு வகை உண்டு; அதில் ஒன்று அடிமைப்
பெண்ணுக்கு பிறந்தவன்” (415) (மேதாதி பாஷ்யத்தின்படி
இங்கு அடிமைகள் என்பது சூத்திரர்களே)

“சூத்திரனின் பொருட்களை பிராமணர் தைரியமாகக்
கைப்பற்றலாம்; காரணம் சூத்திரனுக்கு சொத்துரிமை
கிடையாது; அவனது சொத்து யஜமானரால் கைப்பற்றத்
தக்கதே” (417)

சூத்திரர்கள் அடிமைகள், சூத்திரச்சிகள் அடிமைப் பெண்கள்
என்பதே மநு வகுத்த நியதி. அடிமைப் பெண் என்றால்
நடைமுறையில் என்ன அர்த்தம், யஜமானர் எப்படி
பயன்படுத்தியிருப்பார் என்பது எவருக்கும் புரியும்.
இப்படி சூத்திரர்களையும் சூத்திரச்சிகளையும் கேவலப்
படுத்தியிருக்கிறது மநு தர்மம்!

தாழ்ந்த வருணத்துப் பெண்கள் ஓர் உயர்ந்த வருணத்த
வருக்கு ஒரு போதும் மனைவியாக முடியாது, வைப்பாட்டி
யாகத்தான் இருக்க முடியும்! இதுவும் மநுவின் விதியே;
3வது அத்தியாயத்தில் உள்ள அது:

“புனிதமான திருமண பந்தத்திற்கு சொந்த சுயசாதிப்
பெண்ணே ஒரு பிராமணருக்கு பரிந்தரைக்கப்படுகிறாள்;
ஆசைக்காக இதர மூன்று வருணங்களிலிருந்து மனைவி
யைக் கொள்ளலாம்; அவளின் மதிப்பு மரியாதை அவளது
வருணத்தைப் பொறுத்திருக்கும்” (12)

சூத்திரப் பெண்ணை மட்டுமல்ல ஷத்திரிய, வைசிய
வருணத்து பெண்களையும் இழிவு படுத்தியிருப்பதைக்
கவனியுங்கள். இவர்களுக்கே இந்த கதி என்றால் நால்
வருணத்திற்கு அப்பால் ‘சண்டாளர்கள்’ என ஒதுக்கி
வைக்கப்பட்டிருந்த பஞ்சமர்களின் நிலை எவ்வளவு
கொடூரமாக இருந்திருக்கும் என்று யோசியுங்கள்.

ஏதோ அந்தக் காலத்தில் யாரோ எழுதிவைத்தது என்று
நினைக்காதீர்கள். இதுவே அன்று நடப்பு சட்டவிதியாக
இருந்தது. இதன்படியே ஆட்சி நடந்தது, நீதிபரிபாலனம்
நடந்தது. அப்படி நடந்த ஆட்சியே ‘மநுநீதி ஆட்சி’ எனப்
புகழப்பட்டது!

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் இந்தியாவில் பல பகுதி
களைப் பிடித்ததும் தங்களின் நீதிபரிபாலனத்திற்காக முதலில்
மொழிபெயர்த்தது இந்த மநு தர்மத்தைதான். 1776இல் இதைச்
செய்தது சர் வில்லியம் ஜோன்ஸ். இந்த மநு சாஸ்திரமே ‘இந்து
சட்டம்’ எனப்பட்டது. இதை மாற்றி எழுதவே சட்ட அமைச்சராயிருந்த
அண்ணல் அம்பேத்கர் அரும்பாடு பட்டார். அதனாலேயே அவரை
எதிர்த்து கலகம் செய்தது ஆர்எஸ்எஸ் 1949இல். ஒருவழியாக
1955-56ல்தான் மநு சட்டம் ஒழிந்து மனிதச் சட்டமானது இந்து சட்டம்!

மீண்டும் மநு சட்டத்தைக் கொண்டுவருவோம், சகலமும்
வருண முறைப்படி நடக்கும் என்று ஒரு புதிய அரசியல்
சாசனத்தை சனாதன சங்கிகள் தயாரித்துக் கொண்டிருப்பதாக
செய்தி வந்துள்ளது! இந்தப் பின்புலத்தில் ஆ ராசாவின் பேச்சு
முக்கியமானது, தேவையானது. அதை அப்படியே திருகி இந்துக்
களுக்கு எதிரானது என்கிறார்கள் சங்கிகள். உண்மையில்
மநுவாத சங்கிகளே இந்துக்களுக்கும், இந்துப் பெண்களுக்கும்
பயங்கர எதிரிகள் என்பதை உலகிற்குச் சொல்லுவோம்.

பேராசிரியர்.அருணன்
முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here