Ramanujan (2014) தமிழ்ப்படம் – ஒரு பார்வை

கணித மேதை இராமனுஜரின் கதை (1887 – 1920)

துவக்கப் பள்ளிச் செல்லும் வயதில் இருந்து படம் துவங்குகிறது. ”பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என பாடம் நடத்தும் ஆசிரியரிடம் ”மதிப்பு உண்டே” என முரண்படுகிறார். கல்லூரி படிக்கும் பக்கத்து வீட்டு அண்ணனின் கணித புத்தகத்தை படிக்க கேட்கிறார்.  சிரித்துக்கொண்டே கொடுக்கிறார்.  அடுத்தநாள் திரும்ப தரும் பொழுது, ”படித்து முடித்துவிட்டேன்” என்கிறார். சந்தேகம் எழுப்பினால், தயக்கம் இல்லாமல் பதில் அளிக்கிறார். வியந்துபோகிறார்கள்.

கணிதம், கணிதம் என எப்பொழுதும் கணிதத்திலேயே இருக்கிறார். பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண்ணோடு தேறுகிறார். ஆனால், கல்லூரியில் மற்ற பாடங்களில் கவனம் செலுத்ததால், தோல்வியடைகிறார்.  அவரின் குடும்பமோ எப்பொழுதும் வறுமையிலேயே இருக்கிறது. மூத்தவனான இராமனுஜன் ஏதாவது நல்ல வேலைக்கு போவான் தங்கள் சிரமம் தீரும் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இவரின் நிலை கவலை அளிக்கிறது. வழக்கம் போல கல்யாணம் முடித்தால், பொறுப்பு வந்துவிடும் என அவருக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள்.

இராமனுஜரின் திறமையை புரிந்துகொண்டு இப்பொழுது சென்னை (அப்பொழுதைய மதராஸில்) ”இவர்களை எல்லாம் போய் பார்” என அனுப்பிவைக்கிறார் உள்ளூர்காரர்.  சிலர் நிராகரித்தாலும், அரசு அதிகாரியான இங்கிலீஷ்காரர் அவரை ஆதரிக்கிறார். துறைமுகத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறார்.

இன்னொரு வெள்ளைக்காரர் இவருடைய திறனை அறிந்து, இன்னும் சலுகைகள் தருகிறார். இராமனுஜர் பிரிட்டனில் உள்ள கணித அறிஞர்களுக்கு கடிதம் எழுதுகிறார்.   அதில் ஒருவர் அவரின் திறமையை கண்டறிகிறார்.  1914ல் பிரிட்டனுக்கு வரவழைக்கப்பட்டு, கேம்பிரிட்ஜில் படிக்க துவங்குகிறார். அவருடைய கணிதத்தில் உள்ள மேதைமையை அறிந்து, பல்கலை கழகம் அங்கீகரிக்கிறது. அதன் மூலம் உலக அளவில் பெரிய அங்கீகாரம் பெறுகிறார்.

பிரிட்டனில் படிக்கும் காலத்திலேயே அவரை டி.பி என்கிற காச\நோய் தாக்குகிறது. அப்பொழுது அதற்கான மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. பலவீனமாக இருக்கும் அவரை குணமாக்க அசைவம் சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்  அசைவம் சாப்பிட மறுக்கிறார். முதல் உலகப்போர் காலம் என்பதால், அவர் இந்தியா வருவதற்கு தாமதமாகிறது. 1919ல் இந்தியா வரும் பொழுது மிகவும் சிக்கலான நிலையில் வந்து சேர்கிறார்.  1920ல் அந்த கணித மேதை 33வயதில் மரணிப்பதோடு படம் முடிவடைகிறது.

****

உலகம் கடந்து வந்த பாதையில் இந்தியாவின் பங்குக்கு தசம எண்களை தந்ததிலும், இராமனுஜரின் பங்கும் முக்கியத்துவமானவை என்கிறார்கள்.  அவருடைய கண்டுபிடிப்புகளான எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு, நீள்வளையச்சார்புகள், தொடரும் பின்னங்கள் மற்றும் முடிவிலா தொடர்கள் ஆகியவை அவருடைய கணித தேற்றங்களில் சில. அவைகள் நூற்றாண்டுகள் கடந்தும் நாம் பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரத்திலும், ஆன்ட்ராய்டுகளிலும் இன்றும் பயன்படுகின்றன. அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இராமனுஜரின் பிறந்த நாளான டிசம்பர் 22ந் தேதியை தேசிய கணித தினமாக இந்தியா அறிவித்துள்ளது.

படத்தில்…. கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் இராமனுஜரின் கணிதத் திறமையை புரிந்துகொள்கிறார்கள். அவரிடம் விவாதிக்கிறார்கள். “நீங்கள் ஒரு கணிதத்தை போட துவங்குகிறீர்கள். உடனே அதன் விடையை சொல்லிவிடுகிறீர்கள்.  நீங்கள் ஒவ்வொரு படியாக (Step by Step) போகாததால்,  எங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை”. அதற்கு, இராமனுஜர் ”ஒரு கணக்கை போட துவங்கும் பொழுதே அதற்கான பதில் உடனே நினைவில் வந்துவிடுகிறது.. எழுதிவிடுகிறேன். அடுத்த கணிதம் என்னை உள்ளிழுத்துவிடுகிறது. அதை போட துவங்கிவிடுகிறேன்” என்கிறார்.

இராமனுஜர் ”சாதியில்” அய்யங்கார்.  அவரை பிரிட்டனுக்கு அழைக்கும் பொழுது, கடல் கடந்து சென்றால், ”சொந்த சாதியைச்” சேர்ந்தவர்கள் தள்ளி வைத்துவிடுவார்கள் என அம்மா அழுகிறார்.  ”அப்ப நான் போகவில்லை” என்கிறார். அறிவியலின் மீதான பிரியத்தால், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள், இந்தியாவின் வங்காளத்திலிருந்து இருந்து படிக்கும் ஒருவரை அழைத்து கேட்கிறார்கள்.  ”அது அதுக்கு உரிய பரிகாரம் செய்துவிட்டால் போதும்” என்ற இரகசியத்தை சொல்கிறார். பிறகு தான் இராமனுஜரை வரவழைக்கிறார்கள்.  இதே சாதிக்காரர்கள் தான், இராமனுஜர் இறக்கும் தருவாயில், வெளிநாடு போனதால் தான் இந்த நிலை. இங்கிருந்தால் நமக்கும் அந்த தோஷம் பிடித்துவிடும் என தலை தெறிக்க ஓடிவிடுகிறார்கள்.  அவர் மீது மரியாதை கொண்ட மற்ற ”சாதிக்காரர்கள்” தான் இறுதி காரியங்களையும், மரியாதையும் செய்கிறார்கள்.

இராமனுஜர் வெளிநாடு செல்ல அழைப்பு வரும் பொழுது, அவருடைய அம்மா ”ஏற்கனவே நீ உடல் சரியில்லாதவன். அங்குள்ள குளிர் ஒத்துக்காது. ஆகையால் போகாதே!” என்கிறார்.  எதிர்பார்த்தது போலவே உடல்நிலை சிக்கல் வருகிறது. கணக்கிலேயே நேரம் காலம் தெரியாமல் மூழ்கி இருப்பதால், சாப்பாட்டையும் தவறவிடுகிறார். அங்கு சைவ உணவு சரியான பக்குவத்தில் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. உடல்நிலையை சரி செய்ய மருத்துவத்திற்காகவாவது அசைவம் சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.  நிலைமைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறார். உடல்நிலை இன்னும் மோசமாகிறது.

இராமனுஜருடைய துணைவியாரை வரவழைக்கலாம். உடனிருந்து சமைத்து பார்த்துக்கொள்வார் என ஆலோசனை சொல்கிறார்கள். அவரும் கடிதம் எழுதுகிறார். விசயத்தின் முக்கியத்துவதை உணராமல், அவருடைய அம்மா கடுமையாக மறுத்துவிடுகிறார்.  அதற்கு பிறகான காலத்தில் ஒரு இடத்தில் காரணம் சொல்வார். ஒரு ஜாதககாரன் “உன் மகன் அல்ப ஆயுசிலேயே செத்துருவான். அவன் பொண்டாட்டியை அவன் கூட இருக்கவிடாமல் பார்த்துக்கொண்டால், ஆயுசு கூடும்” என சொன்னதாக சொல்வார்.  இராமனுஜரை கொன்றது பாதி நோய் என்றால், சடங்குகளும், பகுத்தறிவு அற்ற உணவு பழக்கமுறையும் மூட நம்பிக்கைகளும் தான் பாதி கொன்றிருக்கின்றன. படத்தில் வெவ்வேறு இடங்களில் இராமனுஜர் அழுவார்.  அவர் மனதார ஏற்றுக்கொண்ட சாதி, மத மூட நம்பிக்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் சிக்கி கொண்டதால் வந்த அழுகை தான் என்பதாகத் தான் எனக்குப்பட்டது.

படம் பார்க்கும் பொழுது, உடைமையிலும், அதிகார வர்க்கத்திலும் என உயர் மட்ட இடங்களிலும்  ”உயர் சாதியில்” பிறந்தவர்களின் ஆதிக்கம் நன்றாகவே பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு ”உயர் சாதியில்’ பிறந்த இராமனுஜரையே அங்கீகரிக்க முடியாமல், சோத்துக்கு வழியில்லாமல் அல்லாட விட்டிருக்கிறார்கள்.  வெளிநாடு போகவேண்டும் என்ற நிலையில் சாதிய பழக்க வழக்கங்களை, சடங்குகளை சொல்லி, கட்டையை போட்டிருக்கிறார்கள்.  இதே இராமனுஜர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால், இவர்கள் எல்லாம் எப்படி கையாண்டிருப்பார்கள்? என்ற சிந்தனை வருவதை தவிர்க்கமுடியவில்லை.

இப்படி எல்லா இடங்களிலும் தங்கள் அதிகாரம் கொண்டிருந்த பார்ப்பனர்களாலும், ஆதிக்கச் சாதியை சேர்ந்தவர்களாலும், கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த சமூக மாற்றத்தை பொறுக்க முடியாமல் தான், இந்த மண்ணிலேயே தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்க தான் ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது. பொய் பிரச்சாரங்கள், கலவரங்கள் என சாம, தான, பேத, தண்ட என எல்லா வழிகளிலும் முயல்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடியதால் தான் அந்த இருண்ட காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். மீண்டும் அதே காவி இருளில் விழாமல் இருக்க.  இப்பொழுதும் அதே ஒற்றுமையுடனும், உறுதியோடும் எதிர்கொள்ளவேண்டும்.

மற்றபடி, இராமனுஜராக நடிகை சாவித்திரியின் பேரனான, பிக்பாஸ் புகழ் அபினய் வருகிறார். சரத்குமார், சுஹாசினி, இராதாரவி, செல்வா, நிழல்கள் ரவி என தெரிந்த முகங்களாக பலரும் வருகிறார்கள். அனைவரும் கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள்.  ”பாரதி” படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். யூடியூப்பில் இலவசமாகவே பார்க்க கிடைக்கிறது. பாருங்கள்.

சாக்ரடீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here