அவளின் மூன்று பிள்ளைகளில் மூத்தவன் அவன். பத்து வயது தாண்டாதவன். அந்த பெட்டியில் இருக்கும் மக்களின் மனுக்களில் ஒன்றை எடுத்துப் பார்க்கிறான்.

சோபாவில் அயர்ந்து படுத்திருக்கும் அவனின் அம்மா “அதெல்லாம் முக்கியமான ஆவணங்கள். கவனம்!” என்கிறாள்.

அதில் உள்ளதை படித்து பார்த்துவிட்டு, “இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிற பையனுக்கு என் வயது தானேம்மா ஆகுது!” என்கிறான் சன்னமாய்!

ஆமாம் என்பதாய் தலையாட்டுகிறாள்.

அந்த ஆவணத்தை எடுத்த இடத்திலேயே பொறுப்பாய் வைத்துவிட்டு…. “சரி நான் கடைக்கு போயிட்டு வருகிறேன். முட்டைகள் வாங்கிவரவா?” என்கிறான்.

”ஆமாம்! வாங்கிட்டு வா!” என சொல்லிவிட்டு… அவன் போன பிறகு, தனக்கு தானே சொல்லிக்கொள்கிறாள். “Perfect Eggs”

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் செய்த பெரும் அலட்சியத்தால், அந்த தொழிற்சாலை இருந்த பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கு பலவிதமான அபாயகரமான நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. மக்கள் கடுமையாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்யும் நாயகி தற்செயலாய் கண்டுபிடிக்கிறார்., அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து எல்லோருக்கும் இழப்பீடு வாங்கித்தருவது தான் Erin Brockovich  கதை.

பொது நீதிக்காக போராடுபவர்கள் தனக்கென எந்தவித பொருளாதார நலன்களையும் எதிர்பார்க்காமல், தங்களது சொந்த நலன், சொந்த பிள்ளைகளை கவனித்துக்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவது தெரிந்தும் தெருக்களில் இறங்கி போராடியும், நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். பொதுத்தளத்தில் ஜனநாயக உணர்வுகொண்டவர்கள், மனிதாபிமானம் கொண்டவர்கள் அவர்களை புரிந்துகொள்கிறார்கள். அவர்களை அங்கீகரிக்கிறார்கள். பாராட்டவும் செய்கிறார்கள். தங்களால் சாத்தியமான அளவிற்கு அந்த போராட்டங்களுக்கு துணையும் நிற்கிறார்கள்.

ஆனால், இப்படி போராடுபவரின் சொந்த குடும்பம் பொதுநலன்களுக்காக போராடுவது குறித்து பலருடைய குடும்பத்தினர் புரிந்துகொள்வதில்லை என்பது பெரிய துயரம். அதனால் தாங்கள் இழக்கும் இழப்புகளை பெரிதாக நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கென ஒரு வாழ்க்கை கண்ணோட்டம் இருக்கும். அதெல்லாம் சீர்குலைந்ததாக கவலைப்படுகிறார்கள். அதனால் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் வெறுப்பை காட்டுகிறார்கள்.

நாயகியும் இப்படி சமூக விசயங்களில் ஆர்வத்தோடு இருப்பவளில்லை. கணவன் இல்லை. மூன்று பிள்ளைகள். மூவரும் சிறியவர்கள். தன்னை நிரூபிப்பதற்காக போராடுபவள். அந்த நிறுவனம் செய்த தவறை கண்டுப்பிடித்து, பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசி, உறவாடும் பொழுது, தான் செய்வது பெரிய வேலை என்பதை புரிந்துகொள்வாள். மக்கள் அவளை மரியாதையுடனும், அன்புடன் நடத்துகிறார்கள். அதனால், அதில் எத்தனை சோதனைகள் வந்தாலும் எதிர்கொள்கிறாள்.


இதையும் படியுங்கள்: ஒரு கோபம் எப்படி இருக்க வேண்டும்? (சர்தார் உத்தம் சினிமா)


 

அந்த நிறுவனம் செய்த தவறை நிரூபிப்பதற்கான கடுமையான வேலைகளுக்கு நடுவே தான் அந்தக் காட்சி வந்துபோகும். ”Perfect Eggs” என சொல்வதில்… நீதிக்காக போராடும் தன் போராட்டத்தை தன் மகன் கொஞ்சம் புரிந்துகொண்டான் என்பதில் தான் அவளுக்கு அத்தனை ஆசுவாசம். அதே போல வழக்கில் வெற்றி பெற்ற பிறகு, அந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்வதற்கு கவனமாக தன் (புதிய) துணைவரையும் அழைத்துக்கொண்டு செல்வாள். பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி அவளை அன்புடன் வரவேற்பதும், வழக்கில் ஜெயித்த விவரத்தை சொன்னதும், பெரு மகிழ்ச்சி கொள்வதும், கண் கலங்குவதும், அவளை அன்போடு கட்டிப்பிடித்து பாராட்டுவதும், அவர்களை உபசரிப்பதும் அருமையாக இருக்கும். பொது வேலைகளை செய்வது போலவே, நமது குடும்பத்தினருக்கும் நாமே புரிய வைப்பதற்கான வேலைகளையும் செய்யவேண்டும்.

மற்றபடி படம் குறித்து குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்….

பசிபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக் நிறுவனம், ஹிங்க்லியில் உள்ள தனது உற்பத்தி நிலையத்தின் கொள்கலன்களைக் குளிர்விப்பதற்காகப் பெருமளவு தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பிரச்னை இதுவல்ல. அந்தக் கொள்கலன்கள் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, குரோமியம் என்ற கனிமம் பயன்படுத்தப்பட்டிருப்பதுதான். அதுவும் மனிதனுக்கு விஷமாக இருக்கக் கூடிய ஹெக்சாவாலண்ட் குரோமியமான குரோமியம் 6 பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹெக்சாவாலண்ட் குரோமியம் கலந்த தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் மீண்டும் நிலத்தில் கொட்டப்பட்டதன் விளைவு ஹிங்க்லி நகரம் முழுவதும் உள்ள தண்ணீர் விஷமாக மாறியிருக்கிறது. இந்தத் தண்ணீர்தான் அங்குள்ள மக்களுக்கு ஆஸ்துமா, குழந்தையின்மை, மலட்டுதன்மை, புற்றுநோய் என அனைத்து நோய்களும் வந்ததற்கு காரணம். இது பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் இருந்ததால் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு, அந்த நோயைக் காரணம் காட்டியும், அவர்களது ஏழ்மையைக் காரணம் காட்டியும், பணம் கொடுப்பதாகச் சொல்லி அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

90களில் நடந்த உண்மை நிகழ்வு. அமெரிக்காவில் அந்த காலக்கட்டத்தில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்று, 28 பில்லியன் டாலர் தொகை மக்களுக்கு இழப்பீடாக பெற்ற புகழ்பெற்ற வழக்கு. அதுவரை அவ்வளவு பெரும் தொகை அதற்கு முன்பு கொடுக்கப்பட்டதில்லை. அதை அடிப்படையாக கொண்டு தான் Erin Brockovich  2000ல் வெளிவந்தது. எரின் படம் பார்த்துவிட்டு, 98% உண்மைக்கு நெருக்கமாய் எடுத்துவிட்டார்கள் என சான்றிதழ் தந்திருக்கிறார். பல விருதுகளை வென்ற படம். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இருக்கிறது. அவசியம் பார்க்கவேண்டிய படம்.

இந்த ஆலை, விஷம், மக்கள் கடுமையாக பாதிப்பு, போராட்டம், நீதிமன்றம் என எல்லாவற்றையும் படித்தால், நம் ஊரிலும் இப்படி ஒரு ஆலை இருப்பது நினைவுக்கு வரும். ஆட்சியில் இருப்பவர்கள் எத்தனை ஆதரவாக இருந்தாலும், மக்கள் விடாப்பிடியாக போராடினால் நிச்சயம் நிரந்தரமாய் மூட வைக்கமுடியும். இழப்பீடும் பெறமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here