Shyam Sinka Rai

கடந்த இரு வாரங்களாக தென்னிந்தியாவை கலக்கி வருகின்ற திரைப்படம். ஆர்எஸ்எஸ்,பிஜேபி சங்பரிவார கும்பல் சனாதன தர்மம் என்ற பெயரில் முன்வைக்கின்ற பார்ப்பன பண்பாட்டு சீரழிவுகளை, குறிப்பாக சாதி தீண்டாமை, தேவதாசி முறை போன்றவற்றை கேள்விக்குள்ளாக்கி வெளிவந்துள்ள இந்த திரைப்படம் எதிரிகளிடம் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகர் நானி மற்றும் திரைப்பட இயக்குனர் ராகுல் சான்கிரித்தியன் போன்றவர்களை ‘ஆன்ட்டி இந்தியன்’ என்று விமர்சித்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் குண்டர் படை.

கருத்து சுதந்திரம், திரைப்படம் எடுக்கும் சுதந்திர சிந்தனை போன்றவற்றிற்கு கல்லறை கட்டி விட்டு அந்த சமாதியின் மீது ஏறி நின்று பார்ப்பன பேரரசை அமைக்க துடிக்கிறது ஆர் எஸ் எஸ்.
இன்றும் தென்னிந்தியாவில் கர்நாடகா,ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் தேவதாசி முறை கொடி கட்டி பறக்கிறது. ஆணாதிக்கப் பொறுக்கிகள் இதற்கு எதிராக தனது சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை. ஆனால் தனது காமவெறிக்கு தேவதாசிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் டாக்டர்.முத்துலட்சுமி கடுமையாகப் போராடியதால் தேவதாசி முறையை சட்டபூர்வமாகவும், சமூக ரீதியாகவும் திராவிட இயக்கம் ஒழித்துக் கட்டியது. என்ன கிழித்து விட்டது திராவிட இயக்கம் என்று புறம் பேசித் திரிகின்ற பார்ப்பன ஆதிக்க சக்திகளின் முகத்திரையை கிழித்தெறிவதற்கும் தேவதாசி முறை என்ற கொடூரத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு புரிய வைப்பதற்கும் இந்த திரைப்படம் உதவுகிறது.
இதுபோன்ற திரைப்படங்களை நாம் ஆதரித்து நிற்பதும், சங்பரிவாரக் கும்பலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கும் வாய்ப்பாக பயன்படுத்துவோம்.

எப்படி வாழ்வது?
எப்படி சாவது?

எப்படி வாழ்வது? என்பதைத் தவிர, அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! என்கிறார் ழீன் பால் சார்த்தர்.

எப்படி வாழ்வது? என்பது மட்டுமல்ல, எப்படி சாவது? என்பதும் ஒரு சிலருக்குதான் தெரிந்திருக்கிறது.

எப்படி வாழ்வது? என்பது தெரிந்தவர்கள் மார்கஸ், அம்பேத்கர், பெரியார் போன்றோர்.

எப்படி சாவது? எனத் தெரிந்தவர்கள் சேகுவேரா, பகத்சிங், காந்தி போன்றவர்கள்.

இப்படி வாழவும் சாகவும் தெரிந்த ஒருவனின் கதைதான்
ஷியாம் சிங்கா ராய்.

‘இறப்பதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை. அது காதலுக்காக என்றால்! ‘ என்றவர் கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்.

மானுடத்தின் மீதுள்ள காதலுக்காக இறந்தவர்களை மக்கள் புதைப்பதில்லை. தம் நெஞ்சில் விதைக்கிறார்கள். தங்களுக்காக இறந்தவர்களை மக்கள் சாக அனுமதிப்பதில்லை, மறதியில் புதைய அனுமதிப்பதில்லை. அவர்களை புத்துயிர்ப்பு பெறச் செய்கிறார்கள்.

முச்சந்தி தோறும், அதிகாரத்துக்கு எதிராக திமிரி எழும் தோழர்கள் கைகளில் தினந்தோறும், பதாகைகளாக , கோஷங்களாக உயிர்த்தெழுகிறார்கள் மார்க்சும் லெனினும்.

அப்படி, தீண்டாமைக்கு எதிராக, தேவதாசி முறைக்கு எதிராக, சாதி ஆணவத்துக்கு எதிராக உயிர்விட்ட ஒரு வீரனை உயிரோடு எழுப்பிப் பார்க்கும் புனைவுதான் ஷியாம் சிங்கா ராய்.

எழுத்து கொல்லும் என்றார் புதுமைப்பித்தன். ஷியாம் சிங்கா ராய் என்ற முற்போக்கு எழுத்தாளனை அவன் எழுத்து கொல்கிறது. மறு பிறவியிலும் எழுத்து அவனை சிறைக்கு அனுப்புகிறது. ஆனாலும் மக்களுக்கான எழுத்து இறுதியில் வெல்லும்! எனக் காட்டுகிறான்
இந்த ஷியாம் சிங்காராய்.

இந்தியாவின் சாதித் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் இரண்டுக்கும் காரணம் வருணாசிரமம், இந்து மதம்! என உடைத்துப் பேசுகிற வெகுசன ரசனைக்குரிய படம்.

பூணூல் அணிந்த ஒரு வில்லனை,
புரட்டி எடுக்கும் நாயகனைக் காட்டும் இயக்குநரின் துணிச்சல் பாராட்டுக்குரியது. இயக்குநரின் பெயர் ராகுல் சாங்கிருத்தியனாம். வால்காவிலிருந்து கங்கைவரை ராகுல்ஜி மறுபிறவி எடுத்து படம் இயக்கியதுபோல இருக்கிறது.

மனிதரை மனிதர் இழிவு செய்யும் சாஸ்திரத்தை, சம்பிரதாயத்தை, வேதத்தை, கடவுளை விளாசி எடுக்கும் தீப்பொறி சொல்லாடல்கள்.

சொல்பவன் ஓர் எழுத்தாளன் என்பதால் இயல்பானதாகவும் இருக்கிறது.

அம்பேத்கரும் பெரியாரும் மீளப் பிறந்து வரமாட்டார்களா? எனும் ஏக்கத்தை தீர்க்கிற படம்.

நானி ருத்ரதாண்டவம், ஆடுகிறார் . சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டியன் அற்புதம் செய்கிறார்கள்.

நெட்ஃபிளிக்ஸிஸ் ஒளிபரப்பாகிறது.

உங்கள் தசையை வெதுவெதுப்பாக்கிக் கொள்ள விருப்பமிருந்தால், உங்கள் குருதியை சூடாக்கிக் கொள்ளும் உந்துதல் இருந்தால், ஷியாம் சிங்கா ராய் பார்க்கலாம்.

கரிகாலன்.

2 COMMENTS

  1. சில ஆண்டுகளுக்குப் பிறகு வீரியமிக்க, உணர்ச்சிகளை தூண்டுகின்ற சொல்லாடல்களை பயன்படுத்தி எழுதியதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இது போன்ற எழுத்துக்கள் தொடரட்டும் கரிகாலன் அவர்களே!….
    வாழ்த்துக்கள்.

  2. அருமையான விளக்கம் ஆர்வத்தை தூண்டும்,
    அதன் வழி ஆழத்தையும் தோண்டும்……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here