சூரியன் மறையாத நாடாம் பிரிட்டன்,
ராணி – ராஜா மறையாத நாடாம் பிரிட்டன்,
உண்மையா தோழா ?

ராணித்தலை சாய்ந்தபிறகு
தேசியகீதம், நாணயங்கள், பாஸ்போர்ட் வரை
ராணிப்பதிவுகள் மாறுகின்றன.
சூட்டோடுசூடாகப் பிரிட்டனில்
‘ ராஜா நாணயம் ‘ வார்ப்பெடுத்துவிட்டார்களே,
ஏன் தோழா ?
புரட்டிப் போடும் மாற்றம்  அங்கே வாராதோ,
மாறுவதற்கு இத்தனை  வலி,வேதனையா ?
எப்போதுமாறும் இந்நிலை தோழா ?

ஃபிரான்ஸ் நாட்டு மாற்றத்தின்போது
தலைகள் உருண்ட வரலாறு கண்டோம்,
பிறகும் பிரிட்டனில் மாற்றம் நடக்கவில்லை,
இன்றுவரைகூட அறிகுறி இல்லையே,
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமாய்
மக்களுக்கு எதிரான சீரழிவாய்
பழமை இன்னமும் கலையாத ஓவியமாய்
எல்லாம் கலந்தோடும் கால்வாயாய்
இப்போது
சிதைந்து கிடப்பதைப்
பார்க்கவில்லையா தோழா ?

” காலையில் அரசன் பிதுக்குவதற்குமுன்னால்
பற்பசை உருண்டையைப் பிதுக்க
ஓர் அடிமை ஆள் தேவையா என்று கேட்டார்
ஒரு பிரிட்டிஷ் தொழிலாளி,
அது சரியானதுதானே தோழா ?

உள்ளுக்குள்ளே குமுறுகிறாய்
செயல்வடிவம் கைவரவில்லையேயென்று.
அப்படி எடுத்துக்கொள்ளட்டுமா தோழா ?

வரலாற்றில் ஜெர்மனி போலவே
பிரபுத்துவமிச்சத்தோடு
வர்க்கச் சமரசம் குலாவி
ஃபிரான்சின் வீச்சு கொடுத்த பீதியை
மேக் – அப் போட்டு மறைத்த பிறகும்
பிரிட்டன் ஆடிய நாடகத்தைக்
கண்திறந்து பார்க்கமாட்டாயா தோழா ?

 

ஆசியாமுழுக்க
‘ போர்வெறிப் பேய்களை ‘
‘ அயோக்கியக் கூட்டங்களைப் ‘
புரட்சிஎழுச்சிகள் குறுக்கே வெட்டின.
இந்தியாவில் ராணி ஆட்சியை
ரசியசோசலிசப் புரட்சிவீச்சு குலுக்கியதால்
மக்கள்இயக்கங்கள் பெருகிப்
புரட்டியெடுத்ததால்தானே,
அதுகாரணமாகவே, ‘ போலிச்சுதந்திரக்
கருணைநாடகமா ‘டிக்கொண்டே
பிரிட்டிஷ் ராச்சியம் இந்தியாவிலிருந்து
ஊர்ந்துமறைந்தது !

அன்றும் பிறகு இன்றும்
பிரபுத்துவசொச்சமிச்சத்தையும்
ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ்
ஒடுக்கு முறைகளை வைத்து நிர்வாகம் செய்தும் ;
ஸ்காட்லாந்து மக்களுக்கு சல்லிசாகப்
பாவாடை வேசங்கட்டி  டான்ஸ் ஆடி
ஏமாற்றி ஒப்பேத்தி சமாளித்தும்  ;
சர்வதேச உறவுகளில் அமேரிக்காவை அண்டியும் ;
வட்டாரத்தில் சுத்துமுத்தி
காமன்வெல்த் புளித்தமாவை அரைத்தும்
ஸ்டைல் காட்டுவதும்தானே பிரிட்டன் மாற்றம் ?

இத்தனைச் சுடும் உண்மைகளையும்
ரத்தச் சிலுவைகளில் அறைந்து
வைத்திருப்பதையெல்லாம்
நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்,
மறுக்கமாட்டீர்கள்தானே தோழா ?
பொழுதுபோக்காய்க்கூட
ராணி – ராஜா  சீட்டுப்பிரித்து ஆட நீ
வெட்கப்படுவாய்தானே தோழா ?

 

பிரிட்டிஷ் மண்ணிலே
நேற்று கொண்டுகுவிக்கப்பட்ட
சொத்துக்கள் எல்லாம் — பலநூறு
காலனிநாடுகளின்
கோடிகோடி மக்களைக் கொன்ற
ரத்தப்பலிச் சோற்றில் ஒளித்துவைத்து
கொண்டுவந்தவைதானே ?

 

கோகினூர் வைரமோ,
தங்க வைர அட்டிகை நகைகளோ,
வருங்காலத் தேதிகளிட்டு
முத்திரைச் சூடுபோட்ட
‘ அடிமை ‘ க் கடன்பத்திரங்களோ
இன்னும் என்னென்னவோ அத்தனையும்
நேற்று பிரிட்டிஷ் கஜானா கணக்கில்,
சொத்துவகைகளில் சேர்த்து
வரவு வைக்கப்பட்டவை அல்லவா ?
சரிதானே தோழா ?

இதை எல்லாம்  இன்றுகூட
நீ தட்டிக்கேட்கவில்லை என்றால்,
அங்கு சமைத்த
பாராளுமன்ற அப்பத்தில்
கொஞ்மாய்க்கிள்ளிப் பங்குபெற்றுவிட்ட
போதையில் கிடக்கிறாய் என்பதை
உணரமாட்டாயா தோழா ?

அன்று —
உலகில் எல்லோருக்கும் முந்தி
உயரே துள்ளிப்பாய்ந்த பிரிட்டன்,
இன்று —
அமெரிக்கத் துருவ வல்லரசின்
காலைக்கட்டிக்கொண்டல்லவோ
தொங்கலாடுகிறது !

அப்புறம்,
சூரியன் மறையாத நாடாம் பிரிட்டனுக்கு
வேறென்ன பெருமை தோழா ?

இயற்கைச் சூரியன் —
(  தோன்றிமறையும் மாஜிக் அல்ல )
நீடித்திருக்கும் ஓர் அக்கினிக்கோளம்,
அதுதானே அறிவியல் உண்மை
மற்றவை ஏமாற்றுப்பேச்சே !
என்றும் மாறா முடியாட்சி —
‘ அரண்மனைப் பிரம்மாண்டம் ‘
போலி கவுரவமே
இன்னமும் மக்கள் முன்னால்
மூன்றாவதுகால் சேர்த்து நடந்துகாட்டும்
ஆளும்வர்க்க மோசடியே !
உழைப்பவர் பாரம்பரியம் ஒன்று தவிர
வேறென்ன பெருமை பிரிட்டனுக்கு ?

 

எனவே,
கூட்டிக்கழித்துச் சொன்னாலும் முடிவாக,
” ராஜராஜாதிராஜாவே ஓடிப்போ ! ” என
முடியாட்சி அத்தியாயம் எப்போது முடிப்பாய்
பிரிட்டிஷ் தோழா ?
காலனி போய்,புதிய காலனியமும் போய்,
மிகக் கொடிய மறுகாலனியப் பாசிசம் இன்று,
உலகை உயிரோடு தீயிலிட்டு வதைக்கிறது.
எல்லாவற்றுக்கும் எதிராக
ஏழைநாடுகளோடுசேர்ந்து
போராட்ட ஒருங்கிணைப்பு
எப்போதுகட்டுவாய் நீ, பிரிட்டிஷ் தோழா !

” சோசலிசம் நோக்கிய நமது
போராட்டப் பயணம் ஓயாது ! ” என்ற
ஒற்றைச் சொல்லை
பதிலாய் எழுதியனுப்பு தோழா,
செய்வாயா ?

  • பீட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here