விநோதய சித்தம் (2021) ஒரு பார்வை


முகநூலில் இந்தப்படத்தைப் பற்றி சிலர் பாராட்டி எழுதியிருந்தார்கள்.  Zee5 தயாரித்து, இயக்குநர் சமுத்திரகனி இயக்கிய படத்தை தங்கள் சானலிலேயே வெளியிட்டும் இருக்கிறார்கள்.

கதையை ஒரு பறவைப் பார்வை பார்த்தால்…. 50+ ஐ கடந்த நாயகன் ஒரு பெரிய நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு 20+ வயதில் பையன். இரண்டு பெண்பிள்ளைகள்.  எப்பொழுதும் பிசியாக இருக்கிறார்.  தான் இல்லாமல் நிறுவனத்திலோ, வீட்டிலோ அசையாது என்ற ‘நம்பிக்கையில்’ இருக்கிறார்.

தொழில் விசயமாய் வெளியூர் போயிருக்கும் பொழுது, ஒரு மோசமான விபத்து ஏற்படுகிறது. அதில் இறந்துவிடுகிறார்.  ’உயிரை’ எடுத்துக்கொண்டு போக காலன் வருகிறார்.  இன்னும் தன் பிள்ளைகள் யாருக்கும் திருமணம் செய்யவில்லை. ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. இப்போதே அழைத்துக்கொண்டு போனால் எப்படி? என காலனிடம் பதைபதைப்புடன் சண்டையிடுகிறார். (அவர் மூலம் மக்களுக்கு பல விசயங்கள் சொல்லலாம் என்ற காலனின் முடிவால்) எவ்வளவு காலம் வேண்டும் என பேரத்தில், 90 நாட்கள் என முடிவு செய்கிறார்கள்.

இந்த 90 நாட்களில் என்ன ஆனது? என்பதை நகைச்சுவையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் கதை சொல்லியிருக்கிறார்கள்.

நேரம் இல்லை. நேரம் இல்லை என சொல்லிக்கொண்டு நிகழ்கால கணத்தை ‘ரசிக்காமல்’ கடப்பது!  மனிதர்கள் எல்லாம் தன்னால் தான் எல்லாம் நடக்கின்றன என ‘அப்பாவித்தனமாய்’ நம்பிக்கொண்டிருப்பது! பிள்ளைகளிடம் அன்பாய், மதித்து நடக்காமல் இருப்பது என இந்த கதையின் மூலம் சொல்லப்படுகிறது.   இப்படி சில நல்ல விசயங்களை படம் முழுவதும் தூவியிருக்கிறார்கள். அதைத்தான் பலரும் பாராட்டி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் அடிநாதம் அதுவல்ல! காலனாக வருபவர் அழுத்தம் கொடுத்து துவக்கத்திலிருந்து சொல்வது!  இந்த பூமியில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஒரு ‘கணக்கு’ இருக்கிறது. நாயகனுக்கு கணக்கு முடிந்துவிட்டது.  அந்த பாரில் மொடா குடியாய் குடித்துக்கொண்டிருக்கும் மது பிரியருக்கு இன்னும் முப்பது ஆண்டுகள் வாழ்வு இருக்கிறது என்கிறார்.   உங்களுக்கு ஒரு நல்ல வேலை வைத்திருந்தோம்.  ஆனால், நீங்கள் மோசமாய் ஒருவரை ஏமாற்றி, அந்த வேலையை பெற்றுக்கொண்டீர்கள். உங்களால் ஏமாற்றப்பட்ட அந்த ஏழை ஐயங்கார் அதற்கு பிறகு உங்களை விட 100 மடங்கு பணமும், புகழும் சம்பாதித்தார். அவருடைய பையன் உங்களுக்கு மேலே உயரதிகாரியாய் வந்து அமர்ந்தார்.  ஆக, எல்லாமே கணக்கு தான்.  அது தெரியாமல் மனிதர்கள் தைய்யா, தக்கா என குதித்துகொண்டிருக்கிறீர்கள் என படம் போதித்து கொண்டேயிருக்கிறது.

இங்கு எல்லாமே ”கணக்கு” தான். யார் யாரை எங்கு வைக்கவேண்டும் என சொல்லும் பொழுது, நமக்கு சட்டென்று தோணவில்லையா? இந்த குரல் தமிழக மண்ணில் இரண்டாயிரம் வருடமாய் சமூகத்தில் எங்கெங்கு திரும்பினாலும் ஒலித்துக்கொண்டிருக்கும் மனுதர்மத்தின் குரல் அல்லவா! இது தானே சாதிய கட்டுமானத்தை நியாயப்படுத்துகிறது. இது தானே எல்லா சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாக இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்தை ஒன்று சேர்க்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.

கதையை ஸ்ரீவத்சன் எழுதி, மேடை நாடகமாக பலமுறை மேடை ஏறியிருப்பதாக சொல்கிறார்கள். இதில் சமுத்திரக்கனி உள்ளே புகுந்து நல்ல விசயங்களை தூவி, பலருக்கும் சென்று சேரும்படியான படமாக சேர்த்திருக்கிறார்.   ’ஸ்ரீவத்சன்கள்’ எப்பொழுதும் ’கவனமாக’ தான் நமக்கு கதை சொல்கிறார்கள். நாம் தாம் ’கவனமில்லாமல்’ விழுந்துவிடுகிறோம்.

  • சாக்ரடீஸ்

நாம் எழுதிய பதிவைப் படித்துவிட்டு, முகநூலில் ஒருவர் பாராட்டினார்.

நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அவசியம் என சொன்னதும்…

அவரும் ஒரு பதிவு எழுதியுள்ளார்.

***

அன்புக்குரியவர்களே வணக்கம்.

இப்போது வந்து வினோதய சித்தம் எனும் திரைப்படம் நன்றாக இருப்பதாக பலரும் விமர்சனம் எழுதி இருந்தார்கள். ஆனால் நம்மை முடக்கக்கூடிய தத்துவத்தின் அடிப்படையில் அந்தக் கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்மில் பலர் உணரவில்லை.  எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்கின்ற பிராமணிய சொல்லாடலின் மேல் கட்டப்பட்ட கதைதான் வினோதய சித்தம். இதை ஆங்கிலத்தில் fatalism என அழைக்கிறார்கள். அப்பா படம் எடுத்த, எதையும் மாற்ற முடியும் என்ற கருத்தை கொடுத்த சாட்டை படத்தில் நடித்த தோழர் சமுத்திரக்கனியா இப்படத்தின் இயக்குனர் என நினைக்கும்போது மனம் மிக நெருடலாகவே உணர்கின்றது. எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதால், உன்னுடைய பங்கு  என்று இவ்வுலகில் எதுவுமே இல்லை என்று கூறி ஒரு தேக்க நிலைக்கும் ஒரு இயக்கமற்ற நிலைக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. நம்மீது திணிக்கப்பட்ட சாதிய, மத, இன அடக்குமுறைகளை, அடிமைத் தனங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள செய்கிறது. படத்தில் கூர்ந்து கவனித்தோம் என்றால் தனக்கு கொடுக்கப்பட்ட அந்த 90 நாட்களில் தோழர் தம்பிராமையாவின் பங்கு என்று எதுவுமே இருக்காது. எல்லாமே தானாகவே நடக்கும். அவரின் பாத்திரத்தை எடுத்துவிட்டு, அந்த காட்சிகளையெல்லாம் நீங்கள் பார்த்தாலே உங்களுக்கு அது புரியும். இப்படம் மனிதர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாலே எல்லாம் சரியாகிவிடும் என்ற கண்ணோட்டத்தை தந்திரமான வழியில் முன்வைக்கின்றது. எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி இது தெளிவான கண்ணோட்டத்தை முன்வைக்கத் தவறிவிட்டது. இன்று பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்ஸோ எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு உண்டு. அதை நாம் ஏற்றுக் கொள்வோம் என்று நினைத்திருந்தால் இன்று என்னால் இந்த உரையாடலை இந்த தளத்தில் நிகழ்த்தி இருக்க முடியாது. எனவே தோழர்களே மாற்றம் ஒன்றே மாறாதது. மனிதத்திற்கு எதிராக, அடிமைப்படுத்த ‘கட்டமைக்கப்படும்’  எல்லா தத்துவங்களையும் நம்மால் அடித்து நொறுக்க முடியும். அதற்கு வரலாறு நிறைய சான்றுகளை நமக்கு தருகின்றது.

பா.நித்தின் பிரபு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here