ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கில் பொதுமக்களே குற்றவாளிகள்;

பொது மக்களை சுட்டுக் கொலை செய்த போலீசார் மீது CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை:

2018 மே -22 ல் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை அதிமுக அரசும், காவல்துறையும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் கூட்டு சேர்ந்து போராட்டத்தை சீர்குலைத்தது. மனு கொடுக்க வந்த பொதுமக்களை கார்ப்பரேட் நலனுக்காக, மீடியாக்கள் முன்னால் உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் போது சுட்டுப் படுகொலை செய்தது.

தங்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு வழி கேட்டு வந்த பல்லாயிரகக்கணக்கானவர்களில் 15 பேரின் ரத்தத்தை குடித்து வாழ்க்கையை முடித்து வைத்தது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் போலீஸ் கஸ்டடியில் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழகமே நியாயம் கேட்டது. காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் உள்ளனர். அதற்கு முன்னரே நடைபெற்ற, நெஞ்சை பதற வைத்த, உலகத்தையே உறையவைத்த, ஸ்டெர்லைட் படுகொலையில் சுட்ட போலீஸ்காரர்கள் யார்?சுட உத்தரவிட்டவர்கள் யார்? என்று தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் கேள்விகளோடு, நீதிக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான கேள்வி எழும்போதெல்லாம் சி.பி.ஐ விசாரணையில் கொலை செய்த காவல் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றது அதிகாரவர்க்கம்.

ஆனால்,
இதோ… சி.பி.ஐ 71 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. முதல் கட்டமாக 27 பேருக்கு சம்மன் அனுப்பியதால் இன்று (08-11-21) மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

எந்த தூத்துக்குடி பொதுமக்கள் & இளைஞர்கள் போராடினார்களோ, காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ, யாரெல்லாம் கைது செய்யபட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்களோ அவர்களையே மீண்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது சி.பி.ஐ.

துப்பாக்கிச்சூட்டு வழக்கை தூத்துக்குடி மாநகராட்சி- மேற்கு மண்டலம் மில்லர்புரம் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வந்த CBI விசாரணைக்கு வந்தவர்களை மிரட்டியுள்ளது. உடனடியாக வர இயலாதவர்களையும், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பும்படி கேட்டவர்களையும் வழக்கில் சேர்த்து வாழ்க்கையை தொலைத்துவிடுவதாக வெறித்தனம் காட்டியுள்ளனர். இவன் யார்? அவன் யார் என்று வீடியோவைப் பார்த்து பொதுமக்களைப் பற்றி மட்டுமே விசாரித்து குற்றவாளியாக்கிய CBI அதிகாரிகள், துப்பாக்கிக் குடு நடத்தியதையும், சுட்ட போலீஸ்காரர்களின் வீடியோவை காண்பித்து போலீசார் யார்,யார் சுட்டார்கள்கள்? என்று உப்புக்கு சப்பாக ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று விசாரணைக்கு சென்றவர்கள் கூறினார்கள். இப்படித்தான் ஒரு தலைபட்சமாக விசாரணை நடந்துள்ளது.

பட்டப்பகலில் ஊரறிய, ஊடகம் முன்பு சுட்டுக்கொன்ற காவல்துறை மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்படவில்லையே ஏன்? என்பதுதான் இப்போது மக்கள் முன்பு உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ.யே லஞ்ச, ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் சீரழிந்து உள்ளது. மோடி அகர்வாலின் சட்டைப்பாக்கெட்டில் உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 15 பேர் இறந்தது தனக்கு தெரியாது என்றும், தான் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும், அது ஒரு கற்பனை கதை என்றும் வாய் கூசாமல் புழுகினார். தமிழக மக்கள் நூற்றாண்டு கடந்தாலும் மறக்க மாட்டார்கள். இவர்களின் ஆசிகளோடுதான் சி.பி.ஐ விசாரணை ‘சிறப்பாக’ நடந்துள்ளது.

அதிமுக அரசின் முக்கிய புள்ளிகள் துணையோடும், காவல்துறை உயரதிகாரிகள், ஸ்டெர்லைட் நிர்வாகிகளின் கூட்டுச்சதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நாம் எதிர்பார்த்தபடியே காவல்துறையை சேர்ந்த குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்காக உண்மையின் பக்கம் இல்லாமல், ஒரு தலைபட்சமாக குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.

எனவே…
தமிழக மக்கள் அனைவரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலைக்கு நீதி எங்கே? என்று சி.பி.ஐ.யை நோக்கி கேள்வி எழுப்பவேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்கான சட்ட போராட்டமும்,
மக்கள் போராட்டம் தொடரும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here