பத்திரிக்கைச் செய்தி


நாள் 11-8-2021

ஆகஸ்டு 15 !
திருச்சி ரயில் நிலைய முற்றுகை!
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

74 ஆண்டு சுதந்திரம்?
அம்பானி அதானிகளின் கொள்ளைக்கு முழு சுதந்திரம்!
எதிர்ப்பவர்களுக்கு அடக்குமுறை சிறை !
ஊபா, என்.ஐ.ஏ, 124 ஏ – சட்டங்களை ரத்து செய்!
இச்சட்டங்களில் கைது செய்யப்பட்ட
சமூக செயற்பாட்டாளர்கள் 15 பேர் உட்பட அனைவரையும் விடுதலை செய்!

அன்புடையீர் வணக்கம்!
கடந்த ஓராண்டில் மட்டும் 12 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்திருக்கிறார்கள். 23 கோடி பேர் மேலும் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் 13 லட்சம் கோடி. அதிகரித்திருக்கிறது. ஏழு ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்த அநீதி வேகமாக அதிகரித்திருக்கிறது. 80 சதவீத மக்களுக்கு சுதந்திரம் இல்லாத போது இதை அனைவருக்குமான சுதந்திரம் என்று எப்படி கொண்டாட முடியும்.?.வாக்களிப்பது மட்டும் போதுமா? கண்ணியமாக வாழும் உரிமை வேண்டாமா?
இந்திய விவசாயிகளின் நிலங்களை பறித்து அவர்களின் வாழ்வாதரத்தை அழிக்கும் வேளாண் சட்டங்கள், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தொழிலாளிகளின் தியாகத்தால் உருவான தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்து அவர்களை கார்ப்பரேட் முதலாளிகளின் காலடியில் கொத்தடிமைகளாக மாற்றும் சட்டத்தொகுப்புகள், 12 நாட்டிகல் மைல் தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை, அதற்கு மேல் சிறப்பு பொருளாதார மண்டலம் என மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மறுக்கும் மீன்வள சட்ட மசோதா, சிறுவணிகர்களை ஒழிக்கும் ஜி.எஸ்டி. இப்படி பெரும்பான்மை மக்களின் உரிமைகளை பறிப்பதுடன் இது தவறு எங்களை வாழவிடு என மக்கள் போராடினால் அடக்குமுறை சிறை என ஆங்கிலேய காலனி ஆட்சிபோல் செயல்படும் நாடு, எப்படி சுதந்திர நாடாக இருக்க முடியும்?.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர், குறிப்பாக இசுலாமியர்கள் மீதான இந்துமத வெறியர்களின் தாக்குதல் ஒரு புறம், பா.ஜ.க அரசின் கைது சிறை மறுபுறம் என வதைக்கப்படுகின்றனர். இதற்கு எதிராக பேசினால் எழுதினால் அவர்களும் கைது செய்யப்படுகின்றனர்.
பாசிச பா.ஜ.க மோடி அரசு மக்களை மட்டுமல்ல மாநில உரிமைகளான கல்வி வேளாண்மை மருத்துவம், சட்டம் ஒழுங்கு, என அனைத்தையும், பறித்து கூட்டாட்சி முறையை ஒழித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தனியாருக்கு விற்பது, பொதுத் துறை வங்கிகளில் உள்ள மக்களின் லட்சக்கணக்கான கோடி பணத்தை கடன் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் ஏப்பம் விட ஒன்றிய மோடி அரசு துணைபோகிறது.
இப்படிபட்ட மக்கள் விரோத நடிவடிக்கைகளை அம்பலபடுத்தி எதிர்ப்பவர்களைத்தான், தீவிரவாதிகள், அர்பன் நக்சல்கள் என பொய்க் குற்றம் சாட்டி கொடிய ஊபா, 124 ஏ போன்ற சட்டங்களில் விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் சிறை வைத்துத் தண்டிக்கிறது. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளை நசுக்கும் ஆயுதமாக இதை பயன்படுத்தி வருகிறது. பெகாசஸ் என்ற உளவு மென் பொருளைப் பயன்படுத்தி எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், ஏன் உச்சநீதிமன்ற நீதிபதியையே மிரட்டி பணிய வைக்கும் ஒரு ஆட்சியில் என்ன சுதந்திரம் இருக்க முடியும்?.
ஆள அருகதையற்ற மக்கள் விரோத, தேச விரோத, மாநில கூட்டாட்சிக்கு எதிரான பாசிஸ்டுகளை வீழ்த்துவதுதான் உண்மையான சுதந்திரம். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் ஊபா 124 ஏ சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ஏன்ஐ.ஏ. என்ற கொலைகார நிறுவனத்தை கலைக்க வேண்டும். சிறையில் உள்ள சுதா பரத்வாஜ் என்ற பெண் மனித உரிமை செயற்பாட்டாளர், வரவரராவ், ஆனந்த் தெல்தும்டே, உள்ளிட்ட அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தலித் உரிமை போராளிகள், இசுலாமியர்கள், என அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆக -15 ரயில் நிலைய முற்றுகை போராட்டம் தமிழகம் தழுவிய அளவில் திருச்சியில் நடைபெற இருக்கிறது.அம்பானி அதானிகளின் கொள்ளைக்கு ஆதரவாக ஒன்றிய அரசால் ஒவ்வொன்றாக பறிக்கப்படும் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க ஆகஸ்டு 15 –ல் போராடுவதுதான் சரியானது. எனவே ஜனநாயக, பெரியாரிய அம்பேத்கரிய இடது சாரி இயக்கங்கள் இந்த முற்றுகையில் பங்கேற்குமாறு அழைக்கிறோம். ஜனநாயக வழியில் போராடுவது மக்களின் அடிப்படை உரிமை. எனவே தமிழக அரசு எமது போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க காவல் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு – 95971 35989

பங்கேற்பாளர்கள்:
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்
தோழர் காளியப்பன், மாநில பொருளாளர்
தோழர்.செழியன், தலைமைக்குழு
தோழர்.மருது தலைமைக்குழு
தோழர் ஜீவா, மாவட்ட செயலர் .மகஇக திருச்சி
தோழர் கோவன். ம.க.இ.க.பாடகர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி மண்டலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here