வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு துணை நிற்போம்-
தஞ்சை, மக்கள் அதிகாரம்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு 26.07.2021 அன்று காலை 10.30 மணி அளவில் தஞ்சை மாவட்டம், பூதலூர் நால்ரோட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு, ஒருங்கிணைப்பாளர் கு.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம், மாநில பொருளாளார். தோழர். காளியப்பன் கண்டன உரை ஆற்றும் போது கூறியதாவது.
1937 ல் புது ஆறு வெட்டப்பட்ட பிறகு மாரனேரி கிராமத்தில் உள்ள அய்யனார் ஏரியில் ஏரி பாசனத்தின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் ஏரியில் பயிற் செய்யத் தொடங்கினார்கள். இதை அரசு அதிகாரிகளும் அரசாங்கமும் ஒத்துக் கொண்டு 1950 ல் கூலி ஏழை விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்கள்,குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், வினோபாவின் பூமிதான இயக்கம் ஆகியவற்றிற்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. மேலும் சிலர் அரசாங்கத்திடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தான் 80 ஆண்டு காலமாக மூன்று, நான்கு தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறார்கள்.அதே கிராமத்தை சார்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் காழ்புணர்ச்சி காரணமாக நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கிறார். மதுரை உயர்நீதிமன்றம் அதிகாரிகள் கொடுத்த தவறான விவரங்களை கொண்டு தவறான புரிதலில் மொத்த 195 ஏக்கருமே முறைகேடான முறையில் பட்டா வாங்கியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்றும் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை ஆக்கிரமிப்பு என்று சொல்லுவதே ஐயோக்கியத்தனமானது.இப்போது நீதிமன்றங்களே இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ஒரு வழக்கில் நீர்நிலையில் கட்டப்பட்டது தாஜ்மஹாலே என்றாலும் இடிக்கப்பட வேண்டும் என்று நகைப்புக்குறிய வகையில் ஒரு நீதிபதி தீர்ப்பெழுதியுள்ளார். அப்படி பார்க்கையில் ”ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீருவேன் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை சொல்லுமனால் முதலில் அகற்றப்பட வேண்டியது மதுரையில் உள்ள உலகநேரியில் கட்டப்பட்டுள்ள மதுரை உயர்நீதிமன்ற கட்டிடமே”. அதுமட்டுமல்லாமல் தோழர்கள் குறிப்பிட்டது போல சென்னையில் உள்ள பெரும்பான்மையான கட்டிடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளே. அந்த கட்டிடங்களை இடித்தால் தமிழகமே தலைகீழாக மாறிவிடும்.
திருச்சி- தஞ்சாவூர் சாலையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் திறந்தவெளி சிறைச்சாலை இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதைக் கண்டித்து நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. சாஸ்தரா முதலாளி பணம் தருகிறேன் வேறு இடத்தில் இடம் வாங்கிக்கொள் என்று அரசைப் பார்த்து கூறுகிறார். ஒரு முதலாளிக்கு சலாம் போடும் அரசு போலிசை கண்டு அச்சப்படும் ஏழை எளிய மக்களிடம் வீரம் காட்டுகின்ற செயல் மிகக் கேவலமானது. உயர்நீதிமன்ற தீர்ப்பு என்றாலும் கண்ணை மூடிக்கொண்டு எந்த வகையில் ஏற்பது? இது எந்த வகையில் நியாமானது?. மாரநேரியில் 80 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலங்களை அகற்றுவதற்கு இப்பொழுது என்ன அவசியம் வந்தது.
நீர்சேமிப்பு அவசியமெனில் தற்போது நீர்பரப்பு பகுதிலையே தரிசாக கிடக்கின்ற இடத்தை தூர்வாரி ஆழப்படுத்தி இரண்டு மடங்கு நீரை சேமிக்க முடியும். எனவே விவசாயிகளை அப்புறப்படுத்துவது என்ற நோக்கத்தை அரசு அதிகாரிகள் கைவிட வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக மாரநேரி அய்யனார் ஏரி பகுதியில் விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறித்தினார். மக்கள் அனைவரும் அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சப்படாமல் ஒற்றுமையாய் நின்று போராடுவதன் மூலம் வெற்றிபெற முடியும். உங்களின் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் என்றும் துணைநிற்கும் என்று கூறி முடித்தார்.
தகவல்:
தஞ்சை- 9365893062