ரு சிறந்த வழக்கறிஞராக லஜபதிராயை எண்ணி இருந்தேன். அவரது கருப்பா? காவியா? என்ற நூல், மற்றும் மதுரை பகுதியை ஒட்டிய அவருடைய ஆய்வு பதிவுகள், எமது அமைப்புக்களின் பல்வேறு மாநாடுகள் நிகழ்வுகளில் அவர் பங்கேற்று ஒத்துழைப்பு நல்கியது என பலவற்றின் மூலம், அவர் மீது ஓரளவு பற்றும் மதிப்பும் கொண்டிருந்தேன்.

ஆனால் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் Vs வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விடயத்தில் லஜபதிராய் மீது வைக்கப்பட்டிருந்த எனது மதிப்பீடு முழுவதும் சுக்குநூறாகச் சிதைந்து விட்டது.ஒரு சில வழக்குகளில் GRS வழங்கியதாகக் கூறும் ‘நல்ல’ தீர்ப்புகளை மட்டும் எடுத்து கூறி பாராட்டி விட்டு, தோழர் வாஞ்சிநாதனின் GRS-க்கு எதிரான நியாயமான யுத்தத்தை தவறு என்கிறார்.

வெற்றுடம்புடன் பூணூல் அணிந்து கொண்டு கூடியிருந்த வேத விற்பண்ண பார்ப்பனர்கள் அரங்கு கூட்டத்தில் சனாதன தர்மத்தை ஓங்கி ஒலித்து பேசுவதும், ஒரு அப்பாவி மனிதரை ஒரு பார்ப்பனப் பெண்மணி காரேற்றி கொலை செய்த வழக்கில் அந்தப் பெண்மணிக்காக அவருடைய அண்ணன் குற்றத்தை சுமந்து கொண்டதால் அவருக்கு 18 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட ‘கொடுமை’யை கண்ணீர் சிந்த எடுத்து இயம்பி, ‘வேதம் படித்த வாளுக்கு இப்பேற்பட்ட தண்டனையா’ என்று கொதித்து ‘தீர்ப்பின் சாட்சிய ஓட்டை உடைசல்களைக் கண்டறிந்து அப்போது வழக்கறிஞராக இருந்த தான், அந்த வழக்கில் தானே மேல்முறையீடு செய்து, இவ் வழக்கு கொண்டு செல்லப்படும் பொழுது இருந்த தனது வகுப்பு தோழன் நீதிபதியாக இருந்ததால், அவரது அமர்வுக்கே வழக்கைக் கொண்டு சென்று வேதம் அறிந்த பிராமணனை விடுதலை செய்விக்க வைத்து விட்டேன்; வேதம் அறிந்த பிராமணன் தண்டிக்கப்படவே கூடாது; அப்படியானால் சனாதனமே செத்துப் போயிற்று என்றே அர்த்தம்’ என்ற கண்ணோட்டத்தில் புளகாங்கிதத்துடன் ஜி ஆர் எஸ் பேச, அங்கிருந்த ‘அவாள்’ கூட்டம் கைதட்டி புல்லரித்துப் போனது. ஆக GRS-ன் இந்தப் பேச்சுக்களை யெல்லாம் நியாயம் என்று லஜபதிராய் கூற வருகிறாரா?

பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்டு விட்ட எச்சில் இலைகளில் பக்தியின் பெயரில் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்கள் உருண்டு புரள்வதை தவறுயென இரு நீதிபதிகள் அமர்வு தடை செய்த பொழுது, அதன் மேல்முறையீட்டில், ‘பிராமணர்களின் எச்சில் இலையில் உருள்வதால் அம்மக்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது; எனவே இறை நம்பிக்கை சார்ந்த இவ்விசயங்களில் நீதிமன்றக் குறுக்கீடு தேவையில்லை என்று சொல்லி பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்கள் தாராளமாக உருண்டு புரளட்டும்’ என்று தீர்ப்பளித்தார் ஜி. ஆர். எஸ். — இது மிக அருமையான தீர்ப்பு என்று லஜபதிராய் புளகாங்கிதம் அடைகிறாரா?

அனைத்து சாதி யினரும் அர்ச்சராக அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கில், பிற்படுத்தப்பட்ட அர்ச்சக மாணவர்கள்… அவர்கள் என்ன பிராமணர்களா… என்ற கேள்வியை எழுப்பி விட்டு, ‘நானே ஒரு ஸ்மார்த்த பிராமணன்; நானே அர்ச்சராக முடியாது; என்று இருக்கும் பொழுது பிராமணர் அல்லாதவர் எப்படி அர்ச்சராக முடியும்’ என்று ஜி ஆர் எஸ் ‘நானே’ ‘நானே’ என்று உரத்துக் கூவினாரே அது முழுக்க நியாயமானது என்று கூற வருகிறாரா லஜபதி ராய்?

ஆளுநராக இருந்து கொண்டு ஜிஆர்எஸ் போலவே, ஆர் எஸ் எஸ் – க்காக பணியாற்றும் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை எல்லாம் மூட்டை கட்டி ஓரங்கட்டி விட்டு, ‘நான் கையெழுத்து போடவில்லை என்று சொன்னால் அது தள்ளுபடி ஆகிவிட்டது என்று அர்த்தம் – எனப் புரிந்து கொள்ள வேண்டும்’ – என கொக்கிரித்தாரே, பின் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆர். என். ரவியின் உச்சந்தலையில் சம்மட்டியால் அடித்து பத்து மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஆளுநருக்காக ஒப்புதல் கொடுத்து தீர்ப்பளித்ததே, அது எவ்வளவு பெரிய வெற்றி!?

அந்தப் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு காலியாக உள்ள பல துணைவேந்தர் பணியிடங்களில் இரண்டுக்கு மட்டும் தேர்வர்களை தேர்வு செய்ய குழு அமைத்த நேர்விலேயே, திருநெல்வேலி மாவட்ட பாஜக செயலாளர். வெங்கடேசன் குறிப்பறிந்து தாம் தடை கோரி விண்ணப்பிக்க உரிய இடமான மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சை விட்டுவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வில் வீற்றிருந்த தமக்கு ஏதுவான ஜி. ஆர். சுவாமிநாதனின் அமர்வில் வழக்கு தாக்கல் செய்து, அந்த அமர்வில் அமர்ந்து அரசு தரப்புக்கு தனது முகாந்திரத்தை அளிக்க இம்மியளவும் வாய்ப்பு அளிக்காமல் மூத்த வழக்கறிஞர்கள் ராமன் மற்றும் வில்சன் எவ்வளவோ மன்றாடியும் ஒரு நாள் கூட தவணை தர முடியாது என்று சொல்லி தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு தடையானை பிறப்பித்தாரே GRS, அதனை சரி என்று சொல்கிறாரா லஜபதி ராய்?  அவ்வழக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்ந்த போது, அதில் மூத்த வழக்கறிஞர் வில்சனை தரக்குறைவாக நடத்தினார் என்று சொன்னால்… அதெல்லாம் நியாயம் தான் என்று வாதிட முன் வருகிறாரா லஜபதி ராய்?

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதியினை நீதிபதி புகழேந்தி அமர்வு வழங்கிய பின், மீண்டும் பாஸ் வாங்காமல் வாகனங்களை எடுத்து வருவதற்கு அனுமதி கோரி அதே நீதிபதி புகழேந்தியிடம் சங்கிக் கூட்டம் சென்ற பொழுது அதனை அவர் நிராகரித்து உத்தரவிட்டதும், பின்பு இந்த சங்கிகள், உச்ச நீதிமன்றம் சென்ற பிறகும் அங்கேயும் கொட்டுப்பட்ட பிறகு, அதில் கிடைத்த சிறிய தொரு இடைவெளியில் நுழைந்து ஜி.ஆர். சாமிநாதன் அமர்வில் வழக்கை கொண்டு சென்ற பொழுது வாகனங்களுக்கு பாஸ் என்பதே தேவையில்லை; நீங்கள் எத்தனை வாகனங்களை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள் என்று அனுமதித்தாரே, அதை மாபெரும் சாதனை என்று விளம்புகின்றாரா லஜபதி ராய்?

தோழர் வாஞ்சிநாதன், ஸ்டெர்லைட் போராட்டமாக இருந்தாலும் சரி; தாது மணல் திருடன் வைகுண்ட ராஜனுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி; வேதாந்தாவின் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க தொழிற்சாலைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி;
சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி… அனைத்திலும் முன்னணி படையில் நின்ற மாவீரன் வாஞ்சிநாதன்.
அவருக்கு சில வழக்குகளில் GRS பிணை கொடுத்து விட்டார் என்பதற்காக அனைத்திற்கும் தூக்கி வைத்துக் கொண்டு ஆடச் சொல்கிறாரா லஜபதி ராய்?

தந்நலம் கருதாமல் மக்கள் நலன் சார்ந்து நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புகள் அனைத்தும் எப்படி சாதி – மதம் சார்ந்ததாக, கடும் குற்றவாளி மாரிதாஸ் போன்றவர்களுக்கு சார்பாக, ஊடகங்களில் குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்ட சவுக்கு சங்கர் போன்றவர்களுக்கு சார்பாக, சங்கிகளுக்கு சார்பாக, பாஜக, ஆர் எஸ் எஸ் காரர்களுக்கு சார்பாக, எத்தனை எத்தனை அநியாயமான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார் இந்த ஜி.ஆர் சாமிநாதன்?

இதையெல்லாம் இந்த மிக மூ..த்..த.. வழக்கறிஞர் லஜபதி ராய் சீர்தூக்கி பார்க்க மாட்டாரா?

இன்னும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு GRS மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அனுப்பிய புகார் பட்டியலில் எத்தனை எத்தனை இருக்கிறதோ எமக்குத் தெரியாது.

ஜூலை 24 மற்றும் 28 தேதிகளில் நீதிபதிகள் ஜி ஆர்.சுவாமிநாதன் கே.ராஜசேகரன் அமர்வில் எண்ணற்ற வழக்கறிஞர்கள் மத்தியில் இதே ஜி ஆர் சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை அவர் சம்பந்தப்படாத வழக்கிற்கு சமன் அனுப்பி வரவழைக்கச் செய்து, GRS கூறும் குறிப்பிட்ட வழக்கிற்கு தற்போது நான் வழக்கறிஞர் இல்லை என்று தோழர் வாஞ்சிநாதன் அறிவித்த பின்னரும், அவரை நோக்கி திடீரென என்னைப் பற்றி நீங்கள் சாதி மதம் பார்த்து தீர்ப்பளிப்பவன் என்று கருதுகிறீர்களா என்று கோபக்கனலுடன் மிரட்டும் பாணியில் கேள்வி கேட்டதும், வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக குற்றச்சாட்டை தெரிவிக்குமாறும் அதன் பிறகு எழுத்துப்பூர்வமாக பதில் தருவதாக கூறிய பின்னரும், ‘You are a covered’ நீ ஒரு கோழை என்று வரம்பு மீறி முதல் நாள் அமர்வில் பேசியதும், இரண்டாவது நாள் அமர்வில் ‘நான் உங்களை கோழை என்று சொன்னது தவறுயென எண்ணியிருந்தேன்; ஆனால் நீங்கள் போராளி அல்ல; உறுதியாக கோழை தான்; நீங்கள் ஒரு காமெடி பீஸ்’ என்று திமிர்த்தனமாக தடித்த வார்த்தைகளில் பேசியதும், வீடியோ காட்சியை போட்டு காண்பித்து வழக்கறிஞரை படிக்கச் சொன்னதும், அப்பொழுது வழக்கறிஞர் மனப் புழுக்கத்தில் இவரது செய்கைகளை உள்வாங்கி தயக்கம் காட்டிய பொழுது, ‘ஏன் உங்களுக்கு கண் தெரியவில்லையா? வேறு கண்ணாடி வேண்டுமா? அரவிந்தர் மருத்துவமனைக்கு அழைத்துப் போகவா?’ என்றெல்லாம் நாக்கில் நரம்பின்றி ஒரு வழக்கறிஞரை நோக்கி கிண்டலடித்து பேசுவதற்கு இந்த ஜி ஆர் எஸ் – க்கு யார்? எங்கே? அதிகாரம் – கொடுத்தது? இது Contempt of Court இல்லையா? அந்த வகையில் இது அடங்காதா?
GRS-ன் இந்த அநியாயங்களைப் பற்றி – கொடுமைகளைப் பற்றி ஒரு வார்த்தையை கூட மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் உதிர்க்க முன் வரவில்லையே, ஏன்?

மன வேதனையோடு ஒன்றைப் பதிவிடுகிறேன். ஒன்று மட்டும் புரிகிறது. லஜபதி ராயும் சுயநலவாத – பிழைப்புவாதக் கண்ணோட்டத்தினாலேயே, தன்னுடைய ‘பரந்து விரிந்த பார்வை உடையவர்’ என்று காண்பித்துக் கொண்ட பிம்பத்தை, தோழர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு எதிராகவும் ஜி.ஆர். சாமிநாதனுக்கு ஆதராகவும் மாறிவிட்டார் என்பதை லஜபதிராய் 28-07-2025-ல் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாகவே உடைத்துப் போட்டு விட்டார்.

இதன் மூலம் போராளியையும், அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திரண்ட வழக்கறிஞர்களையும், பல்வேறு விதமான அரசியல் இயக்கங்களையும், முற்போக்காளர்களையும், பரந்துபட்ட மக்களையும் கடும் மன வேதனை அடையச் செய்துள்ளது லஜபதி ராயின் கருங்காலித்தனமான அறிக்கை.

எழில்மாறன்,
மக்கள் அதிகாரம்.
நாள்:29-07-2025

5 COMMENTS

  1. , வணக்கம் தோழர் எழில்மாறன் பதிவிட்ட கருத்து மிக மிக தெளிவாக அனைத்தையும் தெரிவித்துள்ளது உண்மையிலேயே லஜபதிராய் வழக்கறிஞர் அவர்கள் தன்னுடைய கடந்த கால செயல்கள் எல்லாம் மறந்து தற்போது இந்த சங்கிகளிடம் ஏதோ எதிர்பார்ப்பில் இது மாதிரியான ஆதரவு கருத்துக்களை தெரிவிக்கிறாரோ என்று என்ன தோன்றுகிறது என்பது என் கருத்து ஆகவே இது போன்ற கருங்காலிகளின் கருத்து இந்த மண்ணில் இந்த சமூகத்தில் எடுபடாது என்பது நாடறிந்த உண்மை ஆகவே நாம் உண்மையான போராளி வாஞ்சிநாதன் வழக்கறிஞர் அவர்கள் பின்னால் அணிவகுப்பு நன்றி வணக்கம்

    • பதிவுக்கு நன்றி. மேலும் தங்களின் யூகம்
      முற்றிலும் உண்மை. இவர் ‘நீதிபதி’ பதவி உயர்வினை எதிர் பார்த்து காத்திருக்கிறார் என்பதால் ஜி.ஆர்.சுவாமிநாதனின் அரவணைப்புத் தமக்கு அவசியம் தேவை எனவும் எதிர்பார்த்திருக்கலாம்.

      வழக்கறிஞர் தோழர் அவாஞ்சிநாதன் அவர்களுக்கு 50 வழக்குகளில் GRS பிணை வழங்கியதாக எச்சில் ஒழுகப் பதிவிடுகிறாரே லஜபதிராய், வாஞ்சிநாதன்
      என்ன சொத்துத் தகராறு, கொலை வழக்கு, வழக்கம்போல் நீதிமன்றங்கள் எதிர் கொள்ளும் இன்னபிற சில்லரை வழக்குகளில் மாட்டிக் கொண்டார்? இந்த நீதிபதி GRS சட்டத்தை மீறி பிணை வழங்கி விட்டார்!!?? அனைத்து வழக்குகளுமே மக்கள் நான் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டதன் மூலமாக உருவான வழக்குகள். அவை யாவும் மக்களால் இவருக்கு பின்புலமாக நின்ற வழக்குகள். தூத்துக்குடி வேதாந்தாவின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றினார்; சில பகுதிகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்; அன்று அரசாங்கமும், காவல்துறையும், வேதாந்தா நிறுவனமும்
      சுட்டுக்கொன்ற தீர்க்க பட்டியலிடப்பட்டவர்களில் தோழர் வாஞ்சிநாதனும் ஒருவர். சில பகுதிகளில் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்கு சற்று தாமதமாகி விட்ட காரணத்தினால் அன்று வாஞ்சிநாதன் துப்பாக்கிச் சூட்டுக்கு இறையாமல் இன்று உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். லஜபதி ராய் பெருமைபடக் கூறுகிறாரே, வாஞ்சிநாதனுக்கு GRS பிணை வழங்கிய வழக்குகளில் இதுவும் ஒன்று. அதுவும் இந்த நீதிபதி எந்த நிபந்தனையின் அடிப்படையில்
      பினை வழங்கினார் தெரியுமா? இனி எத்தருணத்திலும் ‘வாஞ்சிநாதன் தூத்துக்குடி
      எல்கையிலேயே கால் பதிக்க கூடாது’ என்ற நிபந்தனையின் பேரில் தான் பிணை வழங்கினார். இந்தக் கேவலத்தை எங்கே போய் சொல்லி அழ? இதனை இந்த லஜபதிராய், GRS-ஐப் போற்றி புகழ்கிறார்
      என்றால் லஜபதி ராயை எந்த கணக்கில் கொண்டு போய் சேர்ப்பது? வாழ்க வசவாளர்கள் என்று கடந்து போவோம்!

      • எழுத்துப் பிழைகள் சில உள்ளன. வருந்துகிறேன். கூர்ந்து பார்த்து தவற்றை திருத்திப் படிக்கவும்.

  2. பெரும்பான்மை மக்களின் இறுதி புகழிடம் நீதி மன்றம், அனைவருக்கும் வான நீதியை வழங்கக்கூடிய நீதி அரசர்கள் காவிமயமாக மாறிவிட்டால் அல்லது வழக்குரைஞர்கள் காவிக்கு துணை போய்விட்டாலோ நீதி எவ்வாறு நிலைநாட்டப்படும், சாதிக்கு ஒரு நீதி என்றல்லவா செல்லும், இதை தான் வேத மனுதர்மம் மனுநீதி எதிர்பார்க்கிறது அப்போக்கில் தான் சென்று கொண்டிருக்கிறது நீதித்துறை வட்டாரங்கள்,என்பதனை தெளிவாக விளக்கிய கட்டுரை..
    தோழருக்கு மிக்க நன்றி ✊✊🙏

  3. தோழர் எழில் மாறன் கட்டுரை மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் முற்போக்கான நூல் வெளியிட்டவர் தற்போது நீதிபதி G.R.சுவாமிநாதன் தோழர் வாஞ்சிநாதன் மீதான அவமதிப்பு வழக்கு தொடுத்து நீதிமன்ற வளாகத்தில் நீ.கோழையா.?கண் தெரியாதா?அரவிந்த் மருத்துவமனைக்கு செல்.கண்ணாடி தரட்டுமா ?நீ.போராளி அள்ள ஒரு கோழை ?என்று சர்வதிகார முறையில் சாரமரியாக கேல்விகேட்டார் அப்போழுது வழக்கறிஞர் லஜபதிராய் வாய் திறக்கவில்லை சங்கி நீதிபதி ஜி ஆர் சாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டது சந்தர்ப்ப வாதம் ஆகும் தமிழகத்தில் ஒரு பிராமணர்க்கு 18 மாதம் சிறை தண்டனை என்பது ஏற்றுகொள்ள முடியாது என்றார் ஜி ஆர் சாமிநாதன் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இயற்றிய சட்டத்தை கிடைப்பில் போடுகிறார் இதை தட்டி கேட்பதற்கு பதிலாக சங்கிகளுக்கு ஆதரவாக பேசும் வழக்கறிஞர் லஜபதிராய் ஒரு சந்தர்ப்ப வாதி என கட்டுரை ஆசிரியர் மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்

    ஆசிரியர் தோழர்.எழில்மாறன்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here