புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் நடந்த ஆதிக்க சாதி வெறியர்களின் அட்டூழியம், குடிநீரில் மலத்தைக் கலந்த கொடூரம் பற்றிய செய்திகள், கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் உள்ள யூடியூப் சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் எகிற செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த அண்ணா திமுகவை சேர்ந்த முத்தையா என்பவரை, இதுவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது போலீசு. போலீஸ் செய்ய வேண்டிய புலனாய்வு பணியை தனது உயிரை பணயம் வைத்து செய்து வெளிக் கொண்டு வந்த ரூட்ஸ் தமிழ் கரிகாலன் மீண்டும், மீண்டும் மிரட்டப்படுகிறார்.

சமூக நீதி, பெரியார் பிறந்த மண் என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டிருக்கும் போதே ஆதிக்க சாதி வெறியாட்டங்கள் நிறைந்த புதுக்கோட்டை , தமிழகத்தின் அவமானச் சின்னமாக நெஞ்சை புடைத்துக் கொண்டு நிற்கிறது.

சமகாலத்தில் வெளியிடப்பட்ட இலக்கியங்கள் சென்னை புத்தகக் காட்சியில் சிறிய மற்றும் பெரிய எழுத்தாளர்கள், கவிஞர்களின் தயவில் வெளிவந்து விற்பனையில் கல்லா கட்டியது. ஆனால் வேங்கை வயல் கொடுமையைப் பற்றி தீக்குச்சியை உரசுகின்ற, நெருப்பு பொறி பறக்கின்ற வார்த்தைகள் தேவையில்லை சாதாரண கண்டன அறிக்கை கொண்ட ஒரு கவிதையைக்கூட  தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

நானும் குற்றவாளி இல்லை என்று ஈனஸ்வரத்தில் உணர்கின்ற ஒன்றிரண்டு சமூக செயல்பாட்டாளர்கள் தவிர, வேங்கை வயல் குறித்த அவமானம் பொது சமூகத்தின் மனசாட்சியையும், நெஞ்சையும் உலுக்கவில்லை.

குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்திருக்கிறது என்ற உண்மை தெரியாமல் தன் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் கணவருக்கும் கொடுத்த கைகள் பதறிக் கொண்டிருக்கிறது. கையால் விஷத்தை கொடுத்துக் கொன்று விட்டால் ஒரே தினத்தில் அந்த கொடூரம் முடிந்துவிடும். ஆனால் வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து மனதிற்குள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்ற கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சே பதறுகின்றது.

ஆனால் தமிழகத்தை ஆளும் திமுக, கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில்,    விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைத்து உண்மை குற்றவாளிகளை தப்ப வைத்தது போல, தற்போது வேங்கை வயல் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு சிபிசிஐடி விசாரணை என்று பம்மாத்து காட்டுகிறது.

தமிழன் என்று சொல்வதாலேயே சாதி ஒழிந்து விடுவதில்லை. தமிழர்களின் நெஞ்சை பிளந்து பார்த்தால் அவர்களின் சொந்த சாதி உணர்வு, சாதிய மனோபாவம், சாதிய கண்ணோட்டம் பளிச்சென்று வெளியே தெரிந்துவிடும்.

திண்ணியத்தில் தலித் மக்களுக்கு மலத்தை திணித்த போதும், வேங்கை வயலில் தலித் மக்களுக்கு குடிநீரில் மலத்தை கலந்த போதும் அந்த சமூக மக்களே அதற்கு எதிராக போராடுகின்ற அவல நிலையில் தான் தமிழகம் இன்னமும் இருக்கிறது.

இலக்கியவாதிகளின் விற்பனைக்கு தேவையான சரக்கு, வேங்கை வயலில் கிடைக்கவில்லை என்பதால் சமகால இலக்கியங்கள் நீரோக்களை போல பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றன..

திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள்   ” தலித் மக்களுக்கு இந்த நூற்றாண்டில் இழைக்கப்பட்ட ஆக மிகப் பெரும் கொடூரம்”   என்ற கண்ணோட்டத்தில் பொது நடவடிக்கையாக மாற்றுவதற்கு முயற்சிக்காமல் பெயர் அளவிற்கு  கண்டன அறிக்கை வெளியிட்டு விட்டு கடமை முடிந்தது என்று திருப்தி அடைவதும், யூடியூப் சேனலில் நரம்பு புடைக்க பேசிவிட்டு ஓய்ந்தும் போகின்றனர்.

இதையும் படியுங்கள்: புதுக்கோட்டை வேங்கை வயல்  குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு ஆதிக்க சாதி வெறியின் கொடூரம் அமைதி காப்பது அவமானம் !

எண்ணிப் பாருங்கள்! பாரதிய ஜனதா கட்சி உருவாக்கத் துடிக்கின்ற காட்டுமிராண்டி சமூகத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் தமிழகம் மௌனமாக நிற்பது அவமானமாக இல்லையா?

பார்ப்பனியத்திற்கு எதிராக தலித் மக்கள் மீது நடக்கப்படுகின்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்த தலித் இயக்கங்கள் தற்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொந்த மக்களின் முகத்தில் விழிப்பார்கள்.

ஐயோ! சோற்றில் கை வைக்கும் போது, ஒவ்வொரு பருக்கையும் தின்னும் போதெல்லாம் மலத்தை குடிநீரில் கலந்த கொடூரம் கண் முன்னே வந்து மனசாட்சியையும், நெஞ்சையும் உலுக்குகிறது என்று எவிடன்ஸ் கதிர் கதறுகின்றாரே! அதை படித்த பின்னரும் தமிழர்களின் பெருமை பேசுபவர்களுக்கு சொரணை வரவில்லை.

மு.க.ஸ்டாலின் நாயனம் வாசித்த சமூகத்தை சேர்ந்தவர் என்று ரங்கராஜ் பாண்டே பேசியவுடன் நரம்புகள் புடைக்க திமுகவிற்கு சொம்படிக்கும் அறிவு ஜீவிகள் கொதித்து எழுந்தார்கள். சரிதான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு எனும் போது கொதித்த அவர்களது நெஞ்சமும், நாவும் வேங்கை வயல் கிராமத்தில் அதிகாரம் ஏதுமற்ற தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் நெஞ்சை அடைக்காதது ஏன்? என்று தெரியவில்லை.

காலம் காலமாக கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது இந்த ஆட்சி என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி எழுப்புவோருக்கு நாம் ஒன்றை சொல்வோம். இதைத்தான் இந்தியாவில் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் இந்த அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிரானது! இந்த கட்டமைப்பை தகர்த்தெறிந்து விட்டு மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்ற புதிய வகையான ஒரு அரசு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முன்வைக்கின்ற போதெல்லாம் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று மட்டை அடித்தார்களே! தற்போது என்ன சொல்வார்கள்?.

போலீசு தனது கட்டுப்பாட்டில் இல்லை, அரசு எந்திரம் தனது கட்டுப்பாட்டில் இல்லை, அதிகார வர்க்கம் தனது கட்டுப்பாட்டில் இல்லை, நீதித்துறை தனது கட்டுப்பாட்டில் இல்லை, அமைச்சர்களில் சிலர் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்று வெளிப்படையாக பேசுவதாலேயே தமிழகத்தின் முதல்வர் அப்பழுக்கற்றவர் என்று புகழ்ச்சி பாட முடியுமா?.

கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராடுகிறவர்களை ஒடுக்குவதிலும், தற்போது வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே போலீசு குண்டான் தடியை ஏவுவதிலும் முதல்வருக்கு சிறிதும் பொறுப்பே இல்லையா?

இல்லையென்றால் அப்படிப்பட்ட பதவியை வைத்துக்கொண்டு தமிழினத்திற்கு என்ன செய்து விட முடியும் என்ற கேள்வியை எழுப்பாமல் எப்படி கடந்து போக முடியும்?

இனியும் இந்த அரசும் அரசு கட்டமைப்பும் நம்மை பாதுகாக்கும் என்ற மாயையில் இருந்து விடுபடுவோம். சாதி தீண்டாமை கொடுமைகள், போலீசின் அராஜகங்கள், கிரிமினல் கும்பலின் ஆதிக்க சாதி வெறியாட்டங்கள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள கீழிருந்து  அதிகாரத்தை கைப்பற்றுகின்ற மக்கள் அதிகாரத்தை கட்டியமைப்பதை நோக்கி வீறு கொண்டு எழுவோம்.

  • சண்வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here