கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்?
திசை திருப்பும் போலீசு – ஆர் எஸ் எஸ் கைக்கூலி ஊடகங்கள்!
என்ன செய்யப் போகிறோம்?


ள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த போராட்டம் கூலிப்படையினரால் வன்முறையாக கலவரமாக மாற்றப்பட்டது.

மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய போராட்டத்தையும், போராட்டத்தை ஒடுக்குவதற்கு நடைபெற்ற வன்முறையும் தனித்தனி என்பதை கூட சூடான மண்டைகள் புரிந்து கொள்வதில்லை.

“பள்ளியின் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது, அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டது. பள்ளிக்கு சொந்தமான பெஞ்சு, நாற்காலி, மாடுகள் உள்ளிட்டு திருடப்பட்டது” என்று இந்து, தினமலர் போன்ற பார்ப்பன கழிசடை பத்திரிகைகளும், தந்தி போன்ற கருப்பு பார்ப்பன ஊடகங்களும் பொதுக்கருத்தை உருவாக்கியது.

திமுக அரசாங்கத்தின் அச்சுறுத்தலான அறிவிப்பின் காரணமாக பள்ளி வளாகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொருள்கள் அனைத்தையும் மக்கள் மீண்டும் கொண்டு வந்து சக்தி மெட்ரிக் பள்ளி முகத்தில் வீசி எறிந்து விட்டனர். உழைக்கும் மக்கள் எப்போதும் பணக்காரர்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகளை போல பிறரது பொருள்களுக்கு ஆசைப்படுவதில்லை.

எரிக்கப்பட்ட காயலாங்கடை வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஈடாக நட்டஈடு பெறும்  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் அவரது மனைவி சாந்தி ரவிக்குமார் சேலம் சிறையில் உள்ளே இருக்கின்ற போது பள்ளி நிர்வாகம் ஸ்தம்பித்து விடவில்லை. மாறாக புதிய பொலிவுடன் செயல்பட துவங்கி விட்டது.

3500 மாணவர்களின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என்ற ‘நல்லெண்ணத்தில்’ கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி தந்தை எ.வ. வேலு தயவில் சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் கல்வி வியாபாரம் அறுந்து போகாமல் தனது சேவையை துவங்கி விட்டது.

ஆனால் “உளவுத்துறை சூரப்புலிகள்” அளந்துவிட்ட கட்டுக்கதையான தலித்துகள், கவுண்டர்கள் இடையிலான மோதல் நடக்கப் போகிறது என்ற திரைக்கதை வசனத்திற்கு பொருத்தமாக உளவுத்துறை  ஆள்காட்டி வேலை செய்தது. இதன் காரணமாக கைது செய்யப்பட்ட 308 பேரில் குறிப்பாக தலித் மாணவர்கள், இளைஞர்கள் 70 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தற்செயலாக நடந்தது சவுக்கு சங்கர் பித்தலாட்டம்!


 

உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் சதீஷ்குமார் ஆணைக்கு இணங்க ‘கருப்பு சட்டை போட்டவர்கள்’ அனைவரும் கலவரக்காரர்கள் என்ற வன்மத்தை நிஜமாக்குவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு, மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம் உட்பட 5 பேரிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்குவதில் துவங்கி வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பகிர்ந்த இணைய போராளிகளில் வரை அனைவரையும் கைது செய்து தனது எஜமானர்களான ஆர்எஸ்எஸ் மனம் குளிர பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கலவரத்தை திட்டமிட்டு நடத்திய பள்ளி முதல்வர் ரவிக்குமார் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் மகாபாரதி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் மோகன் மற்றும் அவர்கள் எடுபுடியான அருள் சுபாஷ் போன்ற அனைவருக்கும் பின்புலமாக ஆர்எஸ்எஸ் நின்று கொண்டுள்ளது.


இதையும் படியுங்கள்: கள்ளக் குறிச்சி சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ் பின்னணி என்ன?


 

உள்ளூரில் உள்ள திமுக, அதிமுக எம்எல்ஏ, எம்பி துவங்கி அதிகாரிகள், போலீசு வரை அனைவரையும் பல்வேறு வகைகளில் கட்டுப்படுத்தி வரும் ஆர்எஸ்எஸ், கலவரத்தை பயன்படுத்தி திமுகவிற்கு எதிரான பிரச்சார வேலைகளை முடுக்கி விட்டுள்ளது.

மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற முழக்கம், தற்போது போராடியவர்களை விடுதலை செய் என்ற திசையில் செல்ல துவக்கியுள்ளது. இது தமிழகத்திற்கு புதியது அல்ல. குறிப்பிட்ட பிரச்சினையை ஒட்டி போராடும்போது போராடியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தவுடன் போராட்டத்தின் குறிக்கோளை பேசாமல் கைது செய்தவர்களை விடுதலை செய் என்று பேசுவது ஒரு பொது போக்காகவே உள்ளது.

 

உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் திசையில் தனது விசாரணையை கொண்டு செல்லாத உளவுத்துறை தனது ஒன்றிய எஜமானர்களின் கட்டளைகளை அமல்படுத்தும் திசையில் விசாரணையை மாற்றிவிட்டதால் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு இன்று வரை நீதி கிடைக்காத நிலையிலேயே ஊத்தி மூடுவதற்கு பல்வேறு சதித்தனங்களை செய்து வருகின்றனர்.


இதையும் படியுங்கள்: கள்ளக்குறிச்சி  ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்


பல கோடி மதிப்புள்ள பள்ளி நாசமாகிவிட்டது என்று கூச்சல் போட்ட ஈர நெஞ்சம் படைத்தவர்களின் மனம் குளிர பள்ளிக்கூடம் மீண்டும் செயல்பட துவங்கி விட்டது. மீண்டும் ஸ்ரீமதிகளை வேட்டையாடுவதற்கு ரவிக்குமாரின் இரண்டு மகன்களும் தலைமறைவாக உள்ளனர்.

பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடித்த கோடிக்கணக்கான ரூபாயை கொண்டு சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்த இருவரும் எலும்பை கவ்வியவர்களின் ஆசியுடன் பள்ளியில் நடத்திய காம, போதை உல்லாச ஊதாரித்தனத்தை வெளியில் செய்து கொண்டிருப்பார்கள் என்பதே நிதர்சனம்.

ஆனாலும் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ஹெச் ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பை அவதூறு செய்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாய் ஓயாமல் அறிக்கை விடுகின்றனர். தங்களது கைத்தடிகளை கொண்டு அடக்குமுறையை ஏவி மக்கள் அதிகாரத்தை முடக்கி விடலாம் என்றும் மனப்பால் குடிக்கின்றனர்.

புராண, இதிகாச குப்பைகளில் ஒழுக்கம் பற்றி என்ன போதிக்கப்பட்டிருக்கிறது. திருக்குறளில் உள்ளதை போல பிறன் இல் விழையாமை என்ற வாழ்வியல் நெறி போதிக்கப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.  குடிவெறியர்கள், பிறர் மனைவியை கவர்ந்து தூக்கிச் சென்ற கயவர்கள், சூதாடி தோற்ற இழிபுத்தி கொண்டவர்கள் இதுதான் புராண, இதிகாச குப்பைகள் முன் வைக்கும் ‘பாரதப் பண்பாடு’.

இந்த பார்ப்பன இந்து பண்பாட்டை துணிச்சலாக பேசும் அர்ஜுன் சம்பத், ஹெச். ராஜா வகையறாக்கள், ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கு போராடிய பெரியார், அம்பேத்கர் மற்றும் கம்யூனிஸ்டுகளில் மீது குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.


இதையும் படியுங்கள்: மாணவி ஸ்ரீமதி படுகொலை!திட்டமிட்டு குற்றவாளிகளை பாதுகாக்கும் தமிழக காவல்துறை!


 

பெற்றோர்களுக்கு மருந்து வாங்கி வருவதற்கு சென்ற மாணவர்கள், வெளியூருக்கு செல்வதற்கு பேருந்து நிலையத்திற்கு வந்த மாணவர்கள், மறுநாள் தொழிலுக்கு செல்வதற்கு முன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க கடைவீதிக்கு வந்த இளைஞர்கள், போராட்டத்தின் இறுதியில் கூலிப்படையினர் செய்த வன்முறையை கேள்விப்பட்டு வேடிக்கை பார்க்க சென்றவர்கள் என்ற அனைவரையும் 17 ஜூலை மாலை 2 மணிக்கு மேல் இரவு 10-12 மணி வரை  கைது செய்து கலவரக்காரர்கள், போலீசை தாக்கியவர்கள் என்று பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து பேசும் போது பல்வேறு நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் மனதை பிசைகிறது. நரியை பரியாக்கும் போலீசின் புத்தி எளிய உழைக்கும் மக்களின் மத்தியில் அம்பலமாகி நாறிக்கொண்டுள்ளது.

பெற்ற மகளை நன்றாக படிக்க வைத்து முன்னேற்றி அழகு பார்க்க நினைத்த ஸ்ரீமதியின் தாயார் தனது மகளை இழந்து கதறிக் கொண்டிருப்பது அதிகாரிகளுக்கும், இந்து, தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்களுக்கும் தந்தி டிவி போன்ற கருப்பு பார்ப்பனர்களுக்கும் உறைக்கவில்லை.

கலவரக்காரர்கள் போராட்டத்தை திசை திருப்புவதற்கு திட்டமிட்டு எரித்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் அனைத்திற்கும் இணையாக பள்ளிக்கல்வித்துறையில் நகல்  ஒரிஜினலாக உள்ளது. தொலைந்து போன அல்லது எரிந்து போன அல்லது வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன பள்ளிக்கல்வி சான்றிதழ்களை பெறுவது ஒன்றும் பெரிய செய்தி அல்ல ஆனால் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டு விட்டது, மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிட்டது, வகுப்புகள் நடத்தாததால் பாடத்திட்டம் முடியவில்லை என்று பல கோணங்களில் பள்ளி முதலாளிகளின் கண்ணோட்டத்தில் இருந்து கூச்சலிடுகிறது ‘இந்து’ பார்ப்பன ஏடு.

மாணவியின் மரணம் மட்டுமின்றி பள்ளியில் நடந்த பல்வேறு கிரிமினல் குற்ற செயல்களை திசை திருப்புவதற்கு தீ வைத்து கொளுத்தப்பட்டதாக அதிகமாக கிளப்பி விடப்பட்ட கட்டுக்கதைகளுக்கு பின்னால் தனது கிரிமினல் குற்ற செயல்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்ட பள்ளி 15 நாட்களில் மீண்டும் உயிர் பெற்று எழத் துவங்கிவிட்டது.

இதில் எந்தப் பக்கம் நின்று உண்மையை நிலைநாட்டப் போகிறோம் என்பதில் தான் நமது சமூகப் பொறுப்பும் அக்கறையும் அடங்கியுள்ளது.

கல்வி முதலாளிகளின் பக்கத்தில் நின்று அவர்களது சொத்துக்கள் பறிபோனதற்காக கண்ணீர் விடப் போகிறோமா? அல்லது பள்ளிக்கு படிக்கச் சென்ற மாணவியை வேட்டையாடிய மிருகங்களை தண்டிப்பதற்கு போராடிய மாணவர்கள், இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கும், மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் கதறி அழுது கொண்டிருக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர் பக்கம் நின்று போராடப் போகிறோமா?

மாணவி ஸ்ரீமதி மரணம் மட்டுமின்றி இனி ஒரு பள்ளி கல்லூரி மாணவர், மாணவிக்கும் இது போன்ற நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்வுடன் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எதிராக போடப்படும் பொய் வழக்குகள், அடக்கு முறைகளுக்கு எதிராக  போராட போகிறோமா? என்பதுதான் நம் முன்னே உள்ள கேள்வி.

  • பா.மதிவதனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here