ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
பத்திரிகை செய்தி
363வது நாள், 24 நவம்பர் 2021.
வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 கறுப்பு சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை ஒன்றிய அமைச்சரவை நிறைவு செய்துள்ளது – ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) ஏற்கனவே இந்திய பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நினைவூட்டுகிறது.
விவசாயிகளின் இந்த வரலாற்றுப் போராட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன – டில்லியைச் சுற்றியுள்ள போராட்டக் களங்களுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யும் வகையில், வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மசோதா தாக்கல் செய்ய, இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 19ஆம் தேதி திரு.நரேந்திர மோடியால் சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்குவதற்கான முறையான நடைமுறை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், குளிர்காலக் கூட்டத்தொடரில் பட்டியலிடப்பட்டுள்ள 26 மசோதாக்கள் தொடர்பான நாடாளுமன்றத்தின் செய்தி அறிக்கை, மின்சார சட்டத் திருத்த மசோதா 2021ஐயும் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் உணர்வுகளையும், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த் கிசான் மோர்ச்சா) தலைவர்கள் வழங்கிய இறுதி எச்சரிக்கையையும் கருத்தில் கொண்டு, லக்கிம்பூர் கேரியில் உள்ளூர் சர்க்கரை ஆலைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் அஜய் மிஸ்ரா டேனி தவிர்க்கப்பட்டார். எனினும் இந்த விடயத்தில் இந்தியப் பிரதமரால் தார்மீகப் பொறுப்புடன் செயற்பட முடியாமை வேடிக்கையானது. அஜய் மிஸ்ரா டேனி, லக்கிம்பூர் கேரி விவசாயிகளின் படுகொலையின் சூத்திரதாராக இருந்தும் மத்திய அரசின் அமைச்சர்கள் குழுவில் தொடர்ந்து நீடிக்கிறார்.
இன்று, சர் சோட்டு ராமின் பிறந்தநாள் நிகழ்ச்சி, போராட்ட களங்களில் கொண்டாடப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மதம் மற்றும் சாதி எல்லைகளுக்கு அப்பால் அவர்களை ஒன்றிணைப்பதற்கும் அவர் எடுத்த முயற்சிகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். மாகாணத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சரான பிறகு, சர் சோட்டு ராம், கந்துவட்டியைத் தடுக்கவும், விவசாயிகளுக்கு நிலத்தை மீட்டெடுக்கவும் சட்டப்பூர்வ மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சர் சோட்டு ராம் மற்றும் அவர் விட்டுச் சென்ற உத்வேகம் தரும் மரபுக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்துகிறது.
ஒரு ஊடக நிறுவனத்தால் எடுக்கப்பட்ட களக் கணக்கெடுப்பு, பெரும்பான்மையான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆதரவாளர்களும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் காட்டுகிறது. மறுபுறம், தேசிய புள்ளியியல் (NSO)வின் விவசாயக் குடும்பங்களின் நிலைமை மதிப்பீட்டுக் கணக்கெடுப்பின் சமீபத்திய 77வது சுற்றில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, பெரும்பான்மையான விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இது, இந்த விவசாயிகள் இயக்கத்தின் சட்டப்பூர்வ உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான கோரிக்கையை வலுப்படுத்துகிறது.
கர்நாடகாவில் நவம்பர் 26ஆம் தேதி விவசாயப் போராட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், விவசாயிகள் முக்கிய நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 25 இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து பேரணிகள் நடத்தப்படும். சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடைபெறும். ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி போன்ற பல மாநில தலைநகரங்களில் டிராக்டர் பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ராய்ப்பூர் பேரணி நவம்பர் 25 காலை கரியாபந்தில் இருந்து புறப்படும். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில், நாளை நவம்பர் 25-ம் தேதி இந்திரா பார்க் அருகே உள்ள தர்ணா சவுக்கில் மகா தர்ணா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாட்னாவில் விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்திற்குப் பேரணியாக சென்று மனு அளிக்கும்.
இதற்கிடையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் ரேஷன் மற்றும் பிற பொருட்களுடன் டெல்லியைச் சுற்றியுள்ள மோர்ச்சா தளங்களுக்கு வருகிறார்கள்.
இந்த இயக்கத்தில் உயிர் தியாகம் செய்த ஸ்ரீ சுக்தேவ் சிங் சக்கிவாலா அவர்கள், பாவ்தீன் சுங்கச்சாவடியில் போராடும் விவசாயிகளுக்குச் சமைத்து உணவளித்து விவசாயிகள் இயக்கத்தில் தனது சேவையை ஆற்றி வந்துள்ளார். SKM தனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறது.
குறைந்தபட்சம் 80 போலி சமூக ஊடக கணக்குகள், அதுவும் சீக்கியர்களின் பெயரில் வலையமைப்பு முறையில் (networked manner) இயக்கப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் போலி கணக்குகள் சீக்கியர்களைக் குறிவைத்து, பிளவுபடுத்தும் நோக்கத்தை ஊக்குவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகள் இப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக சேனல்களில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த முறையில் பிரித்தாளும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த் கிசான் மோர்ச்சா) கவலைப்படுவதோடு, ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்தும் இந்த நடவடிக்கை குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு குடிமக்களைக் கேட்டுக் கொள்கிறது. அமைதியான போராட்டத்தைத் தாக்குவதற்கு, போராடும் விவசாயிகள் மற்றும் ஆதரவாளர்களின் கணக்குகளை இடைநிறுத்துவதற்கும், நிறுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சித்ததுவரை, பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் எல்லாவிதமான உத்திகளையும் பயன்படுத்த தயங்கவில்லை.
அறிக்கையை வழங்கியவர்கள்
பல்பீர் சிங் ராஜேவால், டாக்டர் தர்ஷன் பால், குர்னம் சிங் சாருனி, ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் தலேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா ‘கக்காஜி’, யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com
வெளியீடு –
ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.