“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவிற்கு சொந்தமான இடத்தில் உள்ள நில அளவைக் கல் (Theodolite stone) மீது ஆர்எஸ்எஸ் – பாஜக – நீதிமன்றம் ஏற்றத் துடிப்பது தீபம் அல்ல; மக்களின் வளர்ச்சிக்கும் மத ஒற்றுமைக்கும் வைக்கும் நெருப்பு!” -என்ற தலைப்பில் மதுரை ஒத்தக்கடையில் டிசம்பர் 21 அன்று மாலை மிகவும் சிறப்பான பொதுக்கூட்டம் ஒன்று “மக்கள் அதிகாரம்” அமைப்பின் சார்பாக எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

இது குறித்து “போராட்டங்களினூடே நடந்து முடிந்த மதுரை பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில் 22.12.25 அன்று பதிவிடப்பட்டது. கூடுதல் தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

உரை வீச்சில் பங்கேற்றோர் அனைவரும் தத்தமது கருத்துக்களை ஒருவர் பேசியதை மற்றவர் வழிமொழிந்தது போலன்றி, ஒவ்வொருவரும் புதிய புதிய கண்ணோட்டங்களில் தத்தமது கருத்துக்களை ஆர்எஸ்எஸ் – பாஜக, பாசிச காவிக் கூட்டத்தை அம்பலப்படுத்தி உரை வீச்சுக்களை எடுத்துரைத்தது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

மகஇக மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன் தலைமையிலான கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி பகுதியை அதிரடித்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இவ்வளவு காலம் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எந்த வகையிலாவது மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் உள்ள, தர்காவிற்கு சொந்தமான இடத்தில் அமையப் பெற்றுள்ள நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றுவது என்று ஆர் எஸ் எஸ் – பாஜக இந்துத்துவா சங்பரிவார் கூட்டம் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியது.

அதற்காக ஏற்கனவே செட்டப்பாக காவி(லி)களின் நாசகரக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கென்றே, மதுரை உயர்நீதிமன்றத்தில் அமர்த்தி வைக்கப்பட்டுள்ள ஜி.ஆர். ஸ்வாமிநாதன் என்ற ‘நீதி அரசர்'(?) அமர்வு முன்னர் தற்குறி மற்றும் காலித்தனங்களை ஒருங்கே பெற்ற ராம. ரவிக்குமார் மூலமாக திருட்டுத்தனமான வழக்கு ஒன்றைத் தொடுத்து, அந்த நில அளவைக்கல்லை தீபத்தூண் எனக்கூறி டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற அநியாயமான- கேவலமான தீர்ப்புரையைப் பெற்றனர்.

அது அநியாயம் என்பதை உணர்ந்தும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் கெடும் என்பதை உணர்ந்தும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் தமது அதிகார வர்க்கத்தைக் கொண்டு, ஜி.ஆர். ஸ்வாமிநாதனின் தீர்ப்புரையை முடக்கிப் போட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மூலமாக 144 தடை உத்தரவு போட்டு, தீபம் ஏற்றும் சதி முறியடிக்கப்பட்டது.

இதனை ஒட்டி டிசம்பர் 14 அன்று மாலை மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக 40 அமைப்புகளின் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியும் பொதுக்கூட்டமும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், தோழர் மீ.த.பாண்டியன், தோழர் ஹென்றி திபேன் தலைமையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகள் சார்பான தோழர்கள், காவிக் கூட்டத்திற்கு தமிழ் மண்ணில் புதை குழி தோண்ட வேண்டும் என்ற நோக்கில் எழுச்சி உரை நிகழ்த்தினர். இது மதுரையை குலுங்க வைத்தது. எதிரிகளை ஆட்டம் காண வைத்தது.

இதே தருணத்தில் “மக்கள் அதிகாரம்” மதுரை ஒத்தக்கடையில் டிசம்பர் 17-ல் மேலே கண்ட தலைப்பில் காணும் முழக்கத்தின் அடிப்படையில் பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி நடத்திட மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. அவர்களோ, அதனை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு விண்ணப்பம் அளித்த பின்னரும், அவர்களும் ஒத்தக்கடை காவல் ஆய்வாளரின் உத்தரவையே உறுதிப்படுத்தினர்.

பின்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்ததில், அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்த நீதிபதி ஸ்ரீமதி நாட்டில் இதுவரை கேள்விப் படாத அளவிற்கான நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தார்.

நிபந்தனைகள்:

1)ஒரு மைக் தான் பயன்படுத்த வேண்டும்.

2)நூறு பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

3) முழக்கமிட அனுமதியில்லை; மந்திரங்களை மட்டுமே ஜெபிக்கலாம்.

4) கூட்டத்தின் மொத்த நிகழ்ச்சியையும் போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி எடுத்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

5) கூட்டத்தை மாலை 5 மணிக்குத் துவங்கி இரவு 9 மணிக்குள் முடித்து விட வேண்டும்.

….இவைதான் அரசியலமைப்புச் சட்டம், மக்களுக்கு – அரசியல் இயக்கங்களுக்கு அளித்திருக்கக்கூடிய பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, போராடும் உரிமை…

இதுதான் அம்மையார் ‘நீதி அரசர்’ ஸ்ரீமதி அவர்கள் டிசம்பர் 21 பொதுக் கூட்டத்திற்கு அளித்த அனுமதி! பாவம். நீதியரசியின் மனதில் எப்போதும் சங்கிகள்தான் நிலை கொண்டிருப்பார்கள் போல! கோரிக்கையே வைக்காத நிலையில் மந்திரங்களை ஜெபிக்க அனுமதி வழங்கியுள்ளார். 100 பேருக்கு மேல் கூடக்கூடாது, ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பவை உலகத்தில் எங்கும் வழங்கப்படாத மகத்தான கண்டு பிடிப்பு! இதற்காக அம்மையாருக்கு ‘சபாஷ்’ கூறி ‘பாராட்டுவோம்!’

அதே நேரத்தில், இதே மதுரை உயர்நீதிமன்றம் இந்து முன்னணியின் முருகன் மாநாட்டிற்கோ, பிப்ரவரி 4-ல் எச்ச ராஜா, அர்ஜுன் சம்பத் வகையறா பழங்காநத்தத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கோ இவ்வாறான நிபந்தனைகளை விதிக்கவில்லை என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? மட்டுமல்ல, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று திருப்பரங்குன்றம் கோவிலில் பாஜக கொடிகளுடனும் காவிக் கொடிகளுடனும் “ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜே” போன்ற கோஷங்களை எழுப்பி கலவரங்கள் செய்ததை எப்படி எடுத்துக்கொள்வது?

அதே ஆர்ப்பாட்டத்தில் “ஹைகோர்ட்டாவது; மசுராவது” என்ற வார்த்தைகளுக்கு சொந்தக்காரனான தமிழ்நாட்டின் கலவரக்காரன் எச்ச. ராஜா “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா Relocate செய்யப்படல் வேண்டும்; டிசம்பர் 6, பாபர் மசூதிக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தர்காவிற்கும்தான்“ என்று ஊளையிட்டான்.

இப்படிப்பட்ட ஈனத்தனமான பேச்சுக்களுக்கு வெறுமனே எஃப் ஐ ஆர் மட்டும் போட்டுவிட்டு அவனைக் கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறையோ, அரசாங்கமோ முன் வராதது வினோதமானது.

நல்ல வேளையாக மதுரை மக்கள், குறிப்பாக திருப்பரங்குன்றம் மக்கள் காவி(லி)க் கூட்டத்தின் அனைத்து விதமான சட்டாம் பிள்ளைத்தனங்களுக்கும் சவுக்கடி கொடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ‌ ஆம், மக்கள் மத்தியில் இந்துத்துவ வெறியர்களின் ஆட்டம் ஒன்றும் விலை போகவில்லை.

தான் உத்தரவிட்ட பின்னும் தமிழக அரசும் கோவில் நிர்வாகமும் கலவர தீபம் ஏற்ற முன்வராத்து கண்டு இருப்புக் கொள்ளாத நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன், அவசர அவசரமாக வெறிகொண்டு நீதிமன்ற அவமதிப்பு (Contempt) வழக்கு எடுத்து மனுதாரரான சங்கி ரவிக்குமாரே 10 பேருடன் எண்ணெய், தீப்பந்தம் போன்ற உபகரணங்களோடு சென்று கொள்ளி வைக்கலாமென்றும், உயர் நீதிமன்ற காவலுக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் (CISF) அவனுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டுமென்றும் அனுப்பி வைத்தார் இந்த ஸ்வாமிநாதன். அதனையும் தடுத்து நிறுத்தியது அரசாங்கம். (நல்ல வேளையாக மத்திய தொழில் பாதுகாப்புப்படையும் தமிழக காவல் படையும் மோதிக்கொள்ள வேண்டுமென்ற நீதியரசரின் விருப்பம் அரங்கேறவில்லை! தமிழகம் தப்பித்தது!) ஆனால், இதற்காக நயினார் நாகேந்திரன் எச் ராஜா அர்ஜுன் சம்பத் போன்ற சங்கிகள் குய்யோ முறையோ என்று ஊளையிட்டனர்.
“கடவுள் நம்பிக்கை இல்லாத ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கிறார்கள்” என்ற பொய்ச் செய்தியை வேண்டுமென்றே கட்டவிழ்த்து விட்டார்கள். என்னமோ ஆண்டாண்டு காலமாக தர்கா அருகில் உள்ள நில அளவைக்கல்லில்தான் கார்த்திகை தீபம் ஏற்றி வந்தது போலவும், ஸ்டாலின் வந்த பிறகுதான் தடுத்து நிறுத்திவிட்டார் என்பது போலவும் கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட முயற்சித்தனர்.

காரைக்குடியில் இருந்து கலவரம் செய்வதற்காகவே பறந்து வந்த எச்ச ராஜாவை கீழவளவுக்கு முன்னாலேயே வழி மறித்து கைது செய்தது போலீஸ். வழக்கம்போல் சண்டியர் தனமாக நடந்து கொண்டான் எச்ச ராஜா. நான் என் காரில் வருகிறேன் உங்கள் வண்டியில் ஏற மாட்டேன் என்று அடம் பிடித்தான். அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறிய பொழுது “நான் இந்த நாய்கள் ஏற்றும் வண்டியில் ஏற மாட்டேன்” இன்று அடம் பிடித்தான். கடைசியில் வேறு வழியின்றி ‘நாய்கள் ஏற்றும் வண்டி’யிலேயே ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டான்.

மேலும் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம், துவக்கத்தில் கோட்டை விட்டு இந்த பிரச்சினை வளரக்காரணமாக இருந்தாலும், கடைசி நேரத்தில் மிகச் சரியாகவே மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு கலவரத்தை தடுத்துள்ளார்கள் என்பதற்காக பாராட்டத்தான் வேண்டும்! அரசாங்கமும், அனைத்து முற்போக்கு இயக்கங்களும், மக்களும் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

படிக்க:

 திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆர்எஸ்எஸ்-காரனாய் அம்பலப்பட்ட பச்சோந்தி பழ.கருப்பையா! 

 கலவர நெருப்பைப் பற்ற வைக்க திருப்பரங்குன்றத்தைச் சுற்றும் காவிக் கும்பல்!

கலவர தீர்ப்பு வழங்கிய ஜி ஆர் ஸ்வாமிநாதன் மீது பாராளுமன்றத்தில் 110 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் (impeachment) தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்திற்கு உட்படுத்திய பொழுது, அதற்கு எதிராக சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்து அனுராதாக்கூர், அமித்ஷா போன்றவர்கள் மிகக் கடுமையாக தாக்கிப் பேசியதைக் கண்ணுற்றோம்.

“கார்த்திகை தீபம் ஏற்ற சொன்னால் தீர்ப்பளித்த நீதிபதி மீதே தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வருவீர்களோ” என்று பொங்கி எழுந்த அமித்ஷா, கண் தெறித்து கீழே விழுகின்ற அளவிற்கு கோபம் கொப்பளிக்க கொக்கரித்தார்.

ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் பர்திவாலா – மகாதேவன் அமர்வு ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது கையொப்பமிட கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டபோது “நீதிபதிகள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களோ; பாராளுமன்றத்தை விட – மக்கள் மன்றத்தை விட நீங்க உயர்ந்த ஸ்தானத்தை பெற்றவர்களோ..” என்று அன்றைய துணை ஜனாதிபதி தன்கர் முதல் கண்ட காவிக் காலிகளும் ஊளையிட்டனர். உனக்கு வந்தால் ரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியோ அமித்ஷா என்றுதான் கேட்க வேண்டியுள்ளது.

அப்படி இருந்தும் தீபம் ஏற்றும் கோரிக்கைக்காக (மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர்) பாஜக – ஆர்எஸ்எஸ் – அதிமுக-வினர் இணைந்து திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். “உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம்” என்று அறிவித்துவிட்டு, உள்ளூர் மக்கள் எவரும் பங்கேற்காத சூழ்நிலையில் வெளியூர் ஆட்களை வைத்து குறைந்தபட்ச எண்ணிக்கையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இவ்விதம் மதுரையும் திருப்பரங்குன்றமும் அனலாக பறந்து கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 21 திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக “மக்கள் அதிகாரம்” சார்பாக மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்திற்காக மாவட்டம் முழுமைக்கும் பல்வேறு நகரங்களில் கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் வீச்சாக விநியோகிக்கப்பட்டன. மக்கள் அதிகாரம் தோழர்கள் பம்பரமாக சுழன்று பிரச்சாரப் பணிகளை முடுக்கி விட்டிருந்தனர்.

பொதுக்கூட்ட நாளான டிசம்பர் 21 காலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதியில் மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் தோழர் வழக்கறிஞர் நடராஜன் தலைமையில் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சார இயக்கம் மேற்கொண்டு இருந்த தருணத்தில், காவி கூட்டக் காலிகள் சிலர் காவல்துறையில் புகார் அளித்து நமது பிரச்சாரத்தை தடுக்க கோரியதை ஏற்று, காவல்துறையும் தோழர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டது.

“மக்கள் அதிகாரம்” தோழர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு காவல் நிலையத்திற்கு சென்று உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற்று இருக்கின்ற பொழுது எப்படி நீங்கள் கைது செய்யலாம் என்று கடுமையான வாக்குவாதம் செய்து தோழர்கள் மீட்டு வந்தனர். அந்த எழுச்சிமிகு தருணத்தோடு பொதுக்கூட்ட பணிகள் மிகச் சிறப்பாக கூட்டம் துவங்கும் வரை பிரச்சார இயக்கம் வீச்சாக எடுத்துச் செல்லப்பட்டது.

பொதுக் கூட்டத்தில் ஒட்டுமொத்த தோழர்களின் கருத்துரைகள் – உரை வீசுக்கள் – புரட்சிகர கலை நிகழ்ச்சி இவற்றின் சாரம் இதுவாகத்தான் இருந்தது:

“வடநாட்டைப் போல் தமிழ்நாட்டையும் கலவரக் காடாக மாற்றுவதற்கு நாங்கள் அனுமதியோம்!

பாசிசக் காவிகளின் சவால்களையும், அத்துமீறல்களையும், அடாவடித்தனங்களையும் துணிந்து எதிர்த்து நிற்க எமது அமைப்புக்களும், தோழமை அமைப்பினரும், எங்களோடு இணைந்து கொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களும் உங்களை எதிர் கொண்டு முறியடிப்போம்!

பாசிச காவிக் கூட்டத்திற்கு தமிழகத்தில் சமாதி எழுப்புவோம்”

என்று அறைகூவல் விடுக்கும் வகையில் கூட்டம் எழுச்சிகரமாக அமைந்திருந்தது!

கூட்டத்தில் பங்கேற்றோரும் பொதுமக்களும், வணிகர்களும், தொழிலாளர்களும் இந்நிகழ்வில் வரவேற்று மகிழ்ந்தனர் என்பதோடு பாராட்டிக் கௌரவிக்கவும் செய்தனர்.

எவ்வாறாயினும், ஆங்கிலேயர் காலத்து சர்வே கல்லை, தீபத்தூணாக சித்தரித்து ஒரு கலவரத்தை ஏற்படுத்தி கட்சியை வளர்க்க வேண்டுமென நீதித்துறை உள்ளிட்ட சகல பரிவாரத்தையும் இறக்கி விட்டு சங்கிகள் மேற்கொண்ட முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு, தமிழக அரசு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி, அதுதான் உண்மை என்பது போல மக்களை நம்ப வைக்கும் காவி பாசிஸ்டுகளின் சதியை தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். அத்துடன் விவரமறிந்த உள்ளூர் மக்களை கள நடவடிக்கைக்கு திரட்ட வேண்டும். அதன் மூலம் மட்டுமே பெரியார் பிறந்த மண்ணை காவிகளின் கல்லறையாக மாற்ற முடியும் உணர்ந்து செயல்படுவோம்!

தகவல்:
தோழர்.காளிதாஸ்,
மக்கள் அதிகாரம்,
மதுரை மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர்.
பேச: 94428 96228

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here