என்ன தைரியத்தில், யார் கொடுத்த தைரியத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் போராட்டம் என்பது அழிவை நோக்கி என்று விளம்பரம் செய்கிறது?
இதே தூத்துக்குடியில் கப்பலோட்டிய பெருந்தமிழர் வ.உ.சிதம்பரனார் அடிமை இந்தியாவில் (1908ல்) ஆசியாவின் முதல் தொழிற்சங்க போராட்டத்தை கோரல் ஆலைக்கு எதிராக நடத்தி வெற்றிகண்டாரே அது அழிவை நோக்கியா?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1930) கடம்பூரில் நடந்த போராட்டத்தில் விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனரே அப்போராட்டம் அழிவை நோக்கியா?
1972ல் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கந்தசாமி நாயக்கர் சுட்டுக்கொல்லப்பட்டாரே, அப்போராட்டம் அழிவை நோக்கியா?
1937லும் 1965லும் தமிழ்நாடெங்கும் இந்தித்திணிப்பிற்கு எதிராக தமிழர்கள் போராடினார்களே அது அழிவை நோக்கியா?
2017ல் தமிழர் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெரினாவில் ஆரம்பித்து தமிழ்நாடு முழுதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டம் அழிவை நோக்கியா?
இவ்வளவு போராட்டங்களும் அழிவை நோக்கி இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயல்களுக்காகவே நியாயமான கோரிக்கைகளுக்காகவே நடைபெற்றன. இனிமேலும் மக்களுக்கு எதிராக எது நடந்தாலும் அதை எதிர்த்து போராட்டம் நடைபெறும். நிலைமை இப்படியிருக்க தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் நாசகார ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மட்டும் அழிவை நோக்கி என்று விளம்பரப்படுத்துவது எவ்கையில் நியாயம்?
ஏற்கனவே ஸ்டெர்லைட் தனது ஆலைக்கழிவால் மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நச்சைக் கலந்தது போதாது என்று இப்போது பொய்பிரச்சாரங்கள் மூலமாக மக்கள் மனதிலும் நச்சை பரப்புகிறது.
மக்கள் இதுபோன்ற நச்சு விளம்பரங்களைமும், அதை விதைக்கும் நிறுவனங்களையும் கண்டு தெளிந்து புறக்கணிக்க வேண்டும்.
நாசகார நிறுவனங்களுக்கு எதிராக சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டு அணிசேர்வோம்.
போராட்டங்கள் நன்மையை நோக்கியே…
©முனைவர். ஆ.சம்பத்குமார்
பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறது வேதாந்தா ஸ்டெர்லைட் !
இப்போதும் தப்பில்லை..
அனில் அகர்வால் குமரெட்டியாபுரத்தில் குடியேறட்டும்…
வேதாந்தா ஊழியர் குடியிருப்பை வீரபாண்டியபுரத்தில் அமைத்திடுங்கள்…
அகர்வால் + ஊழியர்கள் குடும்பக் குழந்தைகளை பண்டாரம்பட்டி பள்ளியில் படிக்க வையுங்கள்…
திங்கள்தோறும் வார சம்பளத்திற்கு ஏங்கும் ஸ்டெர்லைட் ஆதரவு அரசியல் வியாதிகளை பைபாஸ் ரோட்டில் டெண்ட் அமைத்து தங்கவிடுங்கள்…
அனைவரும் சீனாவானா கண்மாய் நீரில் விளைந்த காய்கறி, தானியங்களை சாப்பிடுங்கள்…
ஸ்டெர்லைட் தொடங்கி திரேஸ்புரம் மன்னார் வளைகுடா கடலில் சேரும் பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் மீன்பிடித்து உண்ணுங்கள்…
அப்படியே குடியிருப்பு நிறைந்த எம் மண்ணில் உங்கள் நச்சு ஆலையைத் தொடங்குங்கள்…
மூலப்பொருளும் இந்தியாவில் இல்லை. விற்பனை சந்தையும் இந்தியாவில் இல்லை. வேலை ஆட்களும் தமிழர் இல்லை.
பொருநை எனும் தாமிரபரணி ஆற்று நீரையும், குவார்ட்ஸ் சீனிக்கற்களையும், ஸ்லாக் கழிவுகள் கொட்டும் கரிசல் நிலத்தையும், என்ன வருகிறது என்ன போகிறது என்று அறியாத துறைமுகத்தையும், குறைந்த விலைக்கு கிடைக்கும் அரசியல் வியாதிகளையும் பயன்படுத்தி தாமிரம் தயாரிப்பு என்று சொல்லி தங்கத்தையும், பிளாட்டினத்தையும் சுங்கவரி இல்லாமல் ஆனோடு என்று வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும்.
அதானே உன் செயல்திட்டம்.
பிள்ளைகளை படிக்க வைக்கிறானாம்…
ஆதித்தநல்லூர் செப்பு நாகரிகம் தெரியுமா மிஸ்டர் அனில்..?
– கப்பிகுளம் ஜெ.பிரபாகர்.
ஸ்டெர்லைட்டின் கோயபல்ஸ் பிரச்சாரம் தொடர்கிறது..!
திருத்தியமைக்கப்பட்ட 2013ம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின்படி (Companies Act 2013) இந்தியாவில் செயல்படும் எந்தவொரு நிறுவனமும் கல்வி, மருத்துவம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, மரம் வளர்ப்பது போன்ற சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது (Mandatory). இதை நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு (Corporate Social Responsibility-CSR ) என்பார்கள்.
இந்திய அளவில் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து டாடா குழுமங்களும் பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அணிவகுக்கின்றன. இந்தப்பட்டியலில் ஸ்டெர்லைட்டின் தாய்நிறுவனமான வேதாந்தா முதல் பத்து இடத்தில் இல்லை.
சில நாள்களுக்கு முன்பாக வெளியான ஃபோர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையின்படி கௌதம் அதானியும் ஷிவ்நாடார் எனும் தமிழரும் ஆசிய – பசிபிக் பகுதிகளில் அதிகமாக நன்கொடை அளிக்கும் தனிநபர் கொடையாளர்களாக உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பாக இறந்த பங்குவர்த்க ஜாம்பவான் ரமேஷ் ஜூன்ஜூன்வாலா பல்லாயிரம் கோடிகளை கொடையாக அளித்துள்ளார். இதில் எதிலுமே ஸ்டெர்லைட் நிறுவன அதிபர் அனில் அகர்வால் பெயர் இல்லை.
இதையும் படியுங்கள்: தூத்துக்குடி: ஸ்டெர்லைட் கொலைகார நிறுவனம் மீண்டும் செயல்பட துடிப்பது ஏன்?
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரின் மரங்கள் மக்கள் இயக்கம் அறக்கட்டளை மூலமாக அப்பகுதியில் JSW மற்றும் ராம்கோ சிமெண்ட் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடுவதற்கு உதவி புரிகின்றன.
நிறுவனங்கள் சிஎஸ்ஆர் அடிப்படையில் செலவழிக்கும் பணத்திற்கு வரிவிலக்கு உண்டு என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே, இந்திய அரசால் கட்டாயமாக்கப்பட்ட நிறுவனங்களின் சமூக பொறுப்பை (CSR) ஏதோ தான் மட்டுமே செய்வது போன்று அதிக செலவில் விளம்பரம் செய்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம்.
“ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் வரை அதைப்பற்றி திரும்ப திரும்ப உரத்த குரலில் பேச வேண்டும்” என்பது தான் கோயபல்ஸின் தத்துவம். ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கைப்பரப்புச் செயலாளர் கோயபல்ஸ் கடந்த நூற்றாண்டில் செய்த விஷமப்பிரச்சாரத்தை பதிமூன்று உயிர்களை பலிவாங்கிய ஸ்டெர்லைட் நிறுவனமும் இப்போது தொடர்ந்து செய்து வருகிறது.
மக்கள் இதுபோன்ற போலிப் பரப்புரைகளுக்கு மயங்காமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.
©முனைவர். ஆ.சம்பத்குமார்