சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் இடையிலான லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிய உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி அமர்வு கடந்த ஏப்ரல் மாதம்  உத்தரவிட்டது. அரசே மாதம் மும்மாரி பொழிந்ததா என கொக்கரிக்க இது மன்னராட்சியல்ல! ஏசி பங்களாவில் குடியிருந்துவிட்டு ஏசி அறைக்குள் புகுந்துக் கொண்டு நீதியை தேடும் நீதிமான்களின் பார்வையில் மீனவர்கள் குடியிருப்பு ஆக்கிரமிப்பு போல தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் என மீனவர்களின் கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முற்பட்டபோது, சாலையில் மீன்களை கொட்டியும், படகுகளை நிறுத்தியும் அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் போராட்டம் நடைபெற்ற போதும் காவல்துறை உதவியுடன் ஏப்ரல் 12-ம் தேதி முதல் 18 தேதி வரை 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் மட்டுமின்றி, சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள உணவகங்கள், நடமாடும் உணவகங்கள் அகற்றப்பட்டு விட்டன.

சூ மோட்டோ வழக்கும்!
நீதிபதிகளின் தேவையும்!

லூப் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் மீன் கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், மீன் வாங்க வரும் மக்களின்  வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தாமாக முன்வந்து சூ மோட்டோ வழக்காக எடுத்து விசாரித்தனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். இது மக்கள் மீதான அக்கறையில் இருந்து வந்தது என நினைத்துக் கொண்டால் அவ்வாறு நினைப்பவர்கள் முட்டாள்களே.

மெரினா அழகாகிறது! மீனவர்கள் வாழ்வு நாசமாகிறது!

 

காமராஜர் சாலைக்கு இணையான சாலையாக, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டது லூப் சாலை. இச்சாலை கடலுக்கு மிக அருகில் இருப்பதால், கடல் அழகை ரசித்துக் கொண்டும், கடற்கரை காற்றை வாங்கிக் கொண்டும் பயணம் செய்யலாம். இதற்காகவே கிரீன்வேஸ் சாலை, தினகரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் நீதிபதி குடியிருப்பில் இருந்து நீதிபதிகள், இந்த வழியாகவே பெரும்பாலும் நீதிமன்றத்திற்கு செல்வார்கள்.

மீனவர்களின் கடைகள் மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்திற்கும், நீதிபதிகள் மற்றும் குடும்பத்தினர் நிம்மதியாக  காற்று வாங்குவதற்கும், மீன் கவுச்சி இவர்களின் அக்கிரஹார நாசியின் சுவாசத்திற்கு தடையாகவும் இருப்பதால், தானாக முன்வந்து சூ மோட்டோ வழக்காக எடுத்தார்களே தவிர, மக்கள் மீது அக்கறை கொண்டு மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சனையாக இருக்கிறது என்ற தன்மையில் எடுக்கவில்லை.

மக்கள் சொத்துகளை, அரசின் பொதுத்துறைகளை பல்வேறு பித்தலாட்டங்கள் செய்து அதானி சூறையாடியுள்ளார் என்று ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது. மக்கள் மீது அக்கறை இருக்கும் நீதிபதிகள் மக்கள் சொத்துக்களை கொள்ளையிட்ட அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தாமாக முன்வந்து சூ மோட்டோ வழக்கு போட்டு அவனை உள்ளே தள்ளி இருக்க வேண்டும்.

குஜராத்தில் இந்து மத வெறியை உருவாக்கி 2000 இஸ்லாமியர்களை கொன்றது ஆர்.எஸ்.எஸ் – மோடி – அமித்ஷா கும்பல் என மீண்டும் தனது ஆவணப்படத்தின் மூலம் நிரூபித்தது பிபிசி.மக்கள் மீது அக்கறை இருந்தால் 2000 இஸ்லாமியர்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் என தாமாக முன் வந்து சூ மோட்டோ வழக்கு போட்டு கூண்டோடு சிறைப்பிடித்து இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: பிபிசி ஆவணப்படம் இந்தியா: தி மோடி கொஸ்டின் ஒரு விவாதப் பார்வை!

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட நேரமில்லாத இந்த நீதிமான்கள், தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரம் உள்ள மீனவர்கள் கடைகளை அப்புறப்படுத்த தாமாக முன்வந்து வழக்கு எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி உத்தரவிட்டுள்ளனர்.

கார்ப்பரேட் – காவி பாசிசத்தினால்  மக்களை பாதிக்கின்ற ஏதேனும் ஒரு பிரச்சனை தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவைகளை எப்போதுமே  கண்டுகொள்ளாத நீதிபதிகள் பெரும்பாலும்  தங்களது தேவை, அதிகார வர்க்கத்தின் தேவை, கார்ப்பரேட் நலன்களை பாதிக்கப்படும் பிரச்சனைகள் என்றால் மட்டுமே தாமாக முன்வந்து சூ மோட்டோ வழக்காக எடுக்கின்றனர். அதே நேரத்தில், மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட ஜனநாயக பூர்வமாக சிந்திக்கும் நீதிபதிகளும் கூட அத்தி பூத்தாற் போல் எப்போதாவது தான் மக்களை பாதிக்கின்ற பிரச்சனைகளுக்கு சு மோட்டோ வழக்காக எடுப்பது நடக்கிறது.

லூப் சாலையில் ஆக்கிரமிப்பா?
லூப் சாலையே ஆக்கிரமிப்பா?

நொச்சிக்குப்பம், டுமீல்குப்பம், பட்டினப்பாக்கம் ஆகிய கிராமங்கள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளன.  ஆரம்பத்தில் மண் சாலைகள் மட்டுமே இருந்தன. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தலையிட்ட பிறகே மீனவ கிராம மக்களின் பயன்பாட்டிற்கே சாலைகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக, இந்தப் பகுதியில் தான் மீனவர்கள் காலங்காலமாக மீன்களைக் காய வைத்து விற்பனை செய்தும் வலைகளை சரிசெய்து, படகுகளை தரையிறக்கியும் வந்துள்ளனர். தற்போது உள்ள லூப் சாலை 20 முதல் 30 வருடங்கள் முன்பு வரை பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல், மீனவ மக்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே இருந்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல பொதுமக்கள் அந்த வழியாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் சாந்தோம் சாலை விரிவாக்கப்படும் வரை மட்டும் தற்காலிகமாக பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. அதன் பிறகு 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சாந்தோம் பகுதியில் குறுகலான காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் பஸ்நிலையம் வரையில் 2.55 கி.மீட்டர் தொலைவிலான லூப் சாலையை ரூ.35 கோடி மதிப்பீட்டில் 18.2 மீட்டர் அகலத்தில் மாற்றியது சென்னை மாநகராட்சி. முக்கியமாக லூப் சாலையை விரிவாக்கம் செய்யக் கூடாது. நடைபாதைகள் அமைக்கக் கூடாது என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறியே இந்த சாலையை மாநகராட்சி விரிவுபடுத்தியது. இதன் பிறகு நிரந்தரமாகவே பொது போக்குவரத்து சாலையாக மாற்றப்பட்டு விட்டது.

மீனவர்கள் லூப் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்க வில்லை. மீனவர்களின் பயன்பாட்டிற்காக இருந்த லூப் சாலையை விதிகளை மீறி விரிவுபடுத்தி பொது போக்குவரத்திற்காக மாநகராட்சி தான் ஆக்கிரமித்து விட்டது. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக காலம் காலமாய் அந்த பகுதியின் பூர்வ குடிகளாக வாழ்ந்து வரும் மீனவர்களை தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் என அகற்றப் பார்க்கிறது நீதிமன்றமும் மாநகராட்சியும்.

மெரினாவை அழகுபடுத்துவதும்!
மீனவர்களை அப்புறப்படுத்துவதும்!

மெரினாவ கடற்கரையை உலகத் தரத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழக ஆளும் வர்க்கம் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இதற்காக மீனவ மக்களை அப்புறப்படுத்தும் வேலையை பல்வேறு குறுக்கு வழிகள் மூலம் செய்தும் வருகிறது. குறிப்பாக, கடற்கரையை மீனவ மக்களின் வாழ்வாதாரப் பகுதியாக பார்ப்பதற்குப் பதிலாக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அணுகும் போக்கு 1980 -களில் அதிகரித்தது.  எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே மெரினாவை அழகுபடுத்தும் முயற்சிகள் என்ற பெயரில் நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் பகுதிகளில் அரசின் அடாவடித்தனங்கள் தொடங்கின. அப்போதே மீனவர்கள் எதிர்ப்புப் போராட்டமும்  தொடங்கியது. அந்தப் போராட்டத்தில் நடந்த போலீசின் அடக்குமுறையால் ஒன்பது மீனவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி கொல்லப்பட்டனர்.

அன்று முதல் இன்று வரை அடிக்கடி மெரினா கடற்கரை அழகுபடுத்துவதற்கு அரசு திட்டமிடுவதும், அதற்காக மீனவ மக்களை அப்புறப்படுத்த முயற்சி எடுப்பதும் மீனவ மக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக திட்டத்தை வாபஸ் பெறுவதும் என்பதும் நடைமுறையாக மாறி விட்டது.

இதையும் படியுங்கள்: அதிகரிக்கும் மீனவர்கள் மோதலும், அழிக்கப்படும் கடல் வளமும்!!

2017 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம்  மெரினாவை அழகுபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டும், மீனவர்களை வேறு இடத்திற்கு மாற்றவும் வலியுறுத்தியது. உடனடியாக, கடற்கரையில் இருந்து மீனவர்களை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியை நகராட்சி மேற்கொண்டது. இதனால், ரூ. 27 கோடி செலவில் 900 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

2019 ஆண்டிலும் கடற்கரை அழகு படுத்துவது என்ற திட்டத்தின் அடிப்படையில் மீண்டும் மீனவர்கள் அப்புறப்படுத்தும் படலம் தொடங்கியது. 2022 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான வேலைகள் தொடங்கி நடக்கும் போது தான் சென்னை உயர்நீதிமன்றம் லூப் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டது. அதன் பிறகு மீனவர்களின் போராட்டம் தொடங்கியது. லூப் சாலையிலேயே மீனவர்கள் நலனுக்காக போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், பொதுமக்கள் எளிதாக மீன்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் சென்னை மாநகராட்சியால் ரூ.10 கோடி மதிப்பில் 384 கடைகள் கொண்ட நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்ட பிறகே மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

கடலும், கடல் சார்ந்த நிலமும் மீனவருக்கே!
வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்!

லூப் சாலையிலேயே மீனவர்களுக்கு கடையமைத்து கொடுப்பதாக அறிவித்தாலும், மெரினாவை அழகுப்படுத்தும் திட்டமோ மீனவர்களை கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கும் திட்டமோ இந்த நொடி வரை கைவிடப்படவில்லை.

நாட்டின் வளர்ச்சி,  தேசத்தின் வளர்ச்சி என்று கூப்பாடு போட்டு  தரையில் இருக்கும் நமது காட்டையும் வயல்வெளிகளையும், மலைகள், நதிகளையும் அபகரித்து நாட்டைச் சூறையாடிய கூட்டம்,  நமது வாழ்வைச் சூறையாடிய கூட்டம், இன்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை  கடற்பரப்பை, அழகுபடுத்துதல் என்ற பெயரில் அபகரிக்க வருகிறது.. கர்ப்பரேட் கொள்ளைக்கு கடலும் கடல் சார்ந்த நிலமும் விதி விலக்கல்ல1

நமது ஒட்டு மொத்த நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால், இந்த எதிரிகளை விரட்ட மீனவர்களின் துடுப்புகளும், விவசாயிகளின் மண்வெட்டிகளும், தொழிலாளர்களின் சுத்தியலும் இணைய வேண்டும். .மீண்டும் மெரினாவை அழகுப்படுத்தும் திட்டம் எனும் பெயரில் மீனவர்களை அப்புறப்படுத்த ஆரம்பித்தால் மீனவர்களோடு கைகோர்த்து நிற்க வேண்டியது அவர்கள் பிடித்து வரும்  மீன்களை வாங்கி நாக்கு ருசியாக உண்ணும்,  வாழ்வை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கடற்கரை காற்று வாங்கச் செல்லும் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

  • செம்பியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here