ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு

285வது நாள், 7 செப்டம்பர் 2021.

••• நிர்வாகம் மற்றும் விவசாய சங்கங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், லட்சக்கணக்கான விவசாயிகள் கர்னால் மினி செயலகத்தை முற்றுகையிட பேரணியாகச் செல்ல தொடங்கினர் !

••• கர்னலில் உள்ள விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் எஸ்.கே.எம். தலைவர்கள் கலந்து கொண்டனர் – கர்னல் தானிய சந்தையில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடியிருந்தனர் – பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டது, இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன – போராட்டத்தைத் தடுக்க அரசு எடுத்த முயற்சி தோல்வியடைந்ததால், போராட்டம் திட்டமிட்டபடி நடக்கவுள்ளது – எஸ்.கே.எம். !

••• எஸ்.டி.எம். ஆயுஷ் சின்ஹாவைப் பதவி நீக்கம் செய்து கொலை வழக்கில் குற்றம் சாட்ட வேண்டும், ஷாஹீத் சுஷில் காஜலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் காவல்துறை வன்முறையில் காயமடைந்த விவசாயிகளுக்குத் தலா 2 லட்சம் வழங்க வேண்டும் !

••• செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்புக்கான ஆயத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகிறது – நாடு முழுவதும் ஆயத்தக் கூட்டங்கள் நடைபெறுகின்றன – செப்டம்பர் 8ஆம் தேதி லக்னோவில் எஸ்.கே.எம். கூட்டம் நடைபெறுகிறது!

••• பஞ்சாப் அரசு சின்ன சின்ன வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நெருங்குகிறது – செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் பஞ்சாப் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்குவார்கள் !

விவசாயிகளின் தலைகளை உடைக்க உத்தரவிட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு மறுத்து விட்டதால், கர்னல் தானிய சந்தையில் கிசான் மகாபஞ்சாயத்துக்காக இன்று இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடியிருந்தனர். செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அரியானா அரசுக்கு விவசாய சங்கங்கள் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த காவல்துறையினரின் வன்முறையின் விளைவாக, ஒரு விவசாயி இறந்தார் மற்றும் எண்ணற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அப்போதைய SDM ஆயுஷ் சின்ஹாவினால் விவசாயிகளின் தலையை உடைக்க காவல்துறைக்கு நேரடியாக உத்தரவிடப்பட்டது. அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவரது செயலுக்கு வெளிப்படையாக ஒப்புதல் அளித்தார். அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிய போதும், அரசு அவருக்கு பதவி உயர்வு அளித்துள்ளது. அதிகாரியைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த விவசாயி ஷாஹீத் சுஷில் காஜலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், காவல்துறை வன்முறையில் காயமடைந்த விவசாயிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசிடம் விவசாயிகள் கோரினர். தவறினால், கர்னல் மினி செயலகம் முற்றுகையிடப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை அரியானா அரசு ஏற்க மறுத்ததால், விவசாயிகள் போராட்டங்களுக்கான திட்டங்களை முன்னெடுத்தனர்.

நேற்று, முசாபர்நகர் விவசாயி-தொழிலாளி மகாபஞ்சாயத்தில் விவசாயி இயக்கத்தின் வலிமையை பார்த்த பிறகு, அரியானா நிர்வாகம் கர்னலில் 144 தடையை விதித்ததோடு, ஐந்து மாவட்டங்களில் இணையதள சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை இடைநிறுத்தியது. மத்திய ஆயுத காவல் படைகளின் (சிஏபிஎஃப்) 10 நிறுவனங்கள் உட்பட 40 கம்பெனி பாதுகாப்புப் படைகள் கர்னலில் நிறுத்தப்பட்டன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, விவசாயி இயக்கத்தின் வலிமைக்கு நிரூபணமாகி விட்டது.

நேற்று மாலை, அரசு தடைகளை உருவாக்கிய போதிலும், திட்டமிட்டபடி விவசாயிகளின் மகாபஞ்சாயத்து தொடரும் என்று எஸ்.கே.எம். அறிவித்தது. இன்று, எஸ்.கே.எம். தலைவர்கள் பல்பீர் சிங் ராஜேவால், டாக்டர் தர்ஷன் பால், குர்ணம் சிங் சாருனி, யோகேந்திர யாதவ், ராகேஷ் திக்கைட் மற்றும் பலர் கர்னல் சென்றடைந்தனர். காலை 10 மணியளவில் தானிய சந்தை மக்களால் நிரம்பி வழிந்தது. விவசாய இயக்கத்தின் அசாதாரண வலிமையின் வெளிப்பாடாகவும், ஷாஹீத் சுஷில் காஜலுக்கு அஞ்சலியாகவும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.

விவசாயிகளின் மகாபஞ்சாயத்தை நிர்வாகம் அனுமதித்தபோதும், விவசாயிகள் மினி செயலகத்திற்குச் செல்ல நிர்வாகம் அனுமதிக்கவில்லை. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு 11 விவசாயிகள் கொண்ட குழு அழைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கும், கலந்துரையாடலுக்கும் விவசாயிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை எஸ்.கே.எம். தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது அணிவகுப்பை அனுமதிக்கவோ மறுத்ததால், பேச்சுவார்த்தை முறிந்தது.

தானிய சந்தையில் இருந்து மினி செயலகம் வரை 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் செல்வார்கள் என்று எஸ்.கே.எம். அறிவித்தது.

யோகேந்திர யாதவ் மற்றும் ராகேஷ் திக்கைட் உள்ளிட்ட பல எஸ்.கே.எம். தலைவர்கள், லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் நடைபயணத்தைத் தொடங்கிய பின்னர், நிர்வாகத்தால் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டனர். “விவசாயிகள் தீர்மானமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்; அரசாங்கம் கொலையில் இருந்து தப்பிக்க முடியாது; நாங்கள் போராட்டத்தில் உறுதியாக நிற்கிறோம்; அரியானா அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம்; முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு விவசாயிகள் பாடம் புகட்டுவார்கள்” என்று எஸ்.கே.எம். கூறியுள்ளது.

இதற்கிடையே, செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீகாரில், விவசாய சங்கங்கள் செப்டம்பர் 11ஆம் நாள், பாட்னாவில் ஒரு மாநாட்டை நடத்தவுள்ளன. மத்திய பிரதேசத்தில், அனைத்து தயாரிப்புக் கூட்டங்களும் செப்டம்பர் 10க்குள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன் பிறகு விவசாய சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு திரட்ட, பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன. உத்தரபிரதேசத்தில், எஸ்.கே.எம்.இன் மிஷன் உத்தரபிரதேச திட்டத்திற்கான
எஸ்.கே.எம். நடத்தும் கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், பஞ்சாபில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய்யான பல்வேறு வழக்குகளும் நாளைக்குள் வாபஸ் பெறப்பட வேண்டும் என பஞ்சாப் விவசாய சங்கங்கள் காத்திருக்கின்றன. தவறினால், அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் முடிவு செய்யப்படும்.

அறிக்கையை வழங்கியவர்கள்

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here