ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

செய்தி வெளியீடு

290வது நாள், 12 செப்டம்பர் 2021.

••• இன்று சிர்ஸாவில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !

••• பாஜக தலைவர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன – அரியானாவில் ஜகதரி, திக்ரா மற்றும் ஜிந்த் ஆகிய இடங்களில், விவசாயிகளின் போராட்டத்தினால் பாஜக நிகழ்ச்சிகள் முடங்கின !

••• ‘முழு அடைப்பிற்கான’ தயாரிப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் உள்ளன – இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் தங்களின் ஆதரவை அளிக்கின்றன !

அரியானாவின் சிர்சாவில் இன்று பிரம்மாண்டமான விவசாயிகள் மகாபஞ்சாயத்து நடைபெற்றது. மகாபஞ்சாயத்துக்காக தானிய சந்தையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடினர். இதில் பல எஸ்.கே.எம். தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள். நேற்று கர்னலில் விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய மகாபஞ்சாயத்து மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருந்தது. விவசாயிகள், மூன்று கறுப்பு வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், மற்றும் அனைத்து விவசாயிகளுக்கும் நியாயமான ஊதியம் தரும் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டபூர்வமான உரிமையைப் பெறுதல் மற்றும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்வது என தங்கள் பொறுப்பை மீண்டும் உறுதி செய்தனர்.

பஞ்சாப்பில் உள்ள விவசாய சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கான டிஏபி வரம்பை குறைக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாய தலைவர்கள், இது விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களின் இழப்பின் மூலம், பெரிய கார்ப்பரேட்டுகளை விவசாயத்திற்குள் அனுமதிப்பதற்கான ஒரு யுக்தி என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு இடங்களில் தொடருகின்றன. அரியானாவில் உள்ள ஜகதாரி மற்றும் திக்ராவில், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஜக கட்சியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல, அரியானாவின் ஜிந்தில், விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், பாஜகவின் கூட்டம் இரத்து செய்யப்பட்டது, மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மஹிபால் தண்டா அங்கிருந்து தப்பி செல்ல வேண்டியிருந்தது.

நாடு முழுவதும் முழு அடைப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பல தயாரிப்பு கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. தெலிங்கானாவில் மாநில அளவிலான மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்களின் வருகை கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. அதில் மாநிலம் முழுவதும் உள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து முழு அடைப்பிற்கு ஆதரவாக அழைப்பு விடுத்தனர்.

கர்நாடகாவில், விவசாய சங்கங்கள் முழு அடைப்பிற்கு தங்கள் ஆதரவை வழங்கின. மேலும் எஸ்.கே.எம்.க்கு ஆதரவாக அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஜார்க்கண்டில், மாநில அளவிலான எஸ்.கே.எம். மாநாடு நடைபெற்றது.

இதற்கிடையில், செப்டம்பர் 9ஆம் தேதி மகாராஷ்டிராவில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணியை, மத்திய பிரதேச காவல்துறையினர் போபால் அருகே தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் விவசாயிகளைத் துன்புறுத்தி, அவர்களின் சைக்கிள்களைக் கைப்பற்றினர். அமைதியான விவசாயிகளைக் குறிவைக்கும் மத்தியப் பிரதேச அரசின் நடவடிக்கை குறித்து எஸ்.கே.எம். தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிவராஜ் சிங் சவுகான் அரசால் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்ட மண்ட்சூர் காவல்துறையின் வன்முறையை நாங்கள் மறக்கவில்லை. இத்தகைய மிருகத்தனமான செயல்பாடுகள், அநீதிக்கு எதிரான போராட்டத்திற்கு இன்னும் அதிக விவசாயிகளைக் கொண்டு வரும்” என்று எஸ்.கே.எம். கூறியுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்த, காந்தி ஜெயந்தியன்று, பீகாரில் உள்ள சம்பாரனில் இருந்து வாரணாசிக்கு 18 நாள் பாதயாத்திரை தொடங்கவுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில், ஆப்பிள் விலை வீழ்ச்சிக்கு எதிராகவும், விவசாயிகள் மீதான அரசின் அலட்சியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆப்பிள் விவசாயிகள் நாளை போராட்டத்தைத் தொடங்கவுள்ளனர்.

அறிக்கையை வழங்கியவர்கள் –

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here