மூன்று விவசாயி விரோத சட்டங்களை இரத்து செய்யக் கோரி நடந்து வரும் விவசாயிகளுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாக, அரியானா விவசாயிகள் சூலை 11 அன்று மாநிலம் முழுவதும் பல எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்தினர். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக மாநில அரசு நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எதிர்ப்பைத் தெரிவிப்பதென முடிவெடுத்திருப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

சிர்சா மாவட்டத்தில், அரியானா சட்டமன்றத் துணைத் தலைவர் ரன்பீர் சிங் கங்வாவை முற்றுகையிட்டு விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்பு படம்

போராட்டத்தில் பங்கேற்ற ஐந்து விவசாயிகளை கைது செய்து தேசத் துரோகக் குற்றஞ்சாட்டி அரியானா அரசு சிறையில் அடைத்திருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைமைச் செயலகம், சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகம், பகத்சிங் மைதானம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை நிறுத்தி சாலை மறியல் நடத்தனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா-வின் பல தலைவர்கள், ஐந்து விவசாயிகளை விடுவிப்பதற்கான போராட்டத்தை முடுக்கிவிடுவதாக உறுதியளித்து விவசாயிகளிடம் உரையாற்றினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா-வின் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இறுதியாக, சூலை 21 அன்று, கைது செய்யப்பட்ட ஐந்து விவசாயிகளையும் அரசாங்கம் விடுவித்தது.

ஃபதேஹாபாத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள், அரியானா கூட்டுறவுத் துறை அமைச்சர் பன்வாரி லால் மற்றும் சிர்சா பாராளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக சென்றனர். அங்கு காவல்துறையின் கடுமையான தடுப்புகளையும் மீறி, தங்களுடைய கோரிக்கைகளுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஜாஜ்ஜார் மாவட்டத்தில், மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கர் உரையாற்றவிருந்த ஒரு அரசாங்கக் கூட்டத்தில் கறுப்புக் கொடிகளை ஏந்தி விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தி நிகழ்ச்சி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தினர். விவசாயி விரோத சட்டங்கள் ஒழிக்கப்படும் வரை எந்த மாநில அரசு நிகழ்ச்சிகளும் நடைபெற அனுமதிக்க மாட்டோமென்ற தங்கள் உறுதியை மீண்டும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அம்பாலா மாவட்டத்தில், அம்பாலா-சஹா சாலையில் ஒரு அரசாங்க நிகழ்ச்சியில் எதிர்ப்பைத் தெரிவித்து விவசாயிகள் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர். பானிபட்டில் ஆர்பாட்டம் நடத்திய விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர், ஆனால் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை விடாப்பிடியாகத் தொடர்ந்ததால் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்-லிருந்து தில்லியில் உள்ள சிங்கு எல்லை வரை டிராக்டர்கள் மற்றும் பல்வேறு வாகனங்களுடன் அணிவகுப்பு நடத்தியதன் மூலம் அரசாங்கத்தின் மீது தங்களுடைய கோபத்தையும் வெறுப்பையும் விவசாயிகள் காட்டியிருக்கிறனர்.

விவசாயி எதிர்ப்பு சட்டங்களை ரத்து செய்வதற்கும், எல்லா விவசாய விளை பொருட்களுக்கும் இலாபகரமான குறைந்தபட்ச ஆதார விலைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கும் தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

நன்றி.

http://tamil.cgpi.org/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here