இலாப வேட்கை கொண்ட நிறுவனங்களின் பசுமையான தோற்றம் மற்றும் பிற தந்திரோபாயங்களால் உலக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி

(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

செய்தி வெளியீடு

236வது நாள், 20 ஜூலை 2021.

நாடாளுமன்ற எதிர்ப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டபடி நடக்கின்றன – போராடும் விவசாயிகள், விவசாயிகளின் நாடாளுமன்றத்தை, நாடாளுமன்ற அமர்வின் ஒவ்வொரு வேலை நாளிலும் நாடாளுமன்றத்திற்கு அருகில் நடத்துவார்கள் : எஸ்.கே.எம் !

‘ஐக்கிய நாடுகளின் உணவு முறைகள் உச்சி மாநாட்டை’ கார்ப்பரேட்கள் தங்கள் கைகளில் கொண்டுவரக்கூடிய நிலை இருக்கிறது. – மிகச் சரியாக இதற்கு எதிராகத்தான் இந்தியாவில் நமது போராட்டம் நடக்கிறது : ஐக்கிய விவசாயிகள் முன்னணி !

சிர்சாவில், எஸ்.கே.எம் மற்றும் அரசுக்கு இடையிலான நிலைப்பாடு தொடர்கிறது – சிர்சாவில், சர்தார் பல்தேவ் சிங்கின் உண்ணாவிரதம் 3வதநாளாகத் தொடர்கிறது – கைது செய்யப்பட்ட 5 விவசாயிகளை உடனடியாக விடுவிக்குமாறு எஸ்.கே.எம் மீண்டும் கோருகிறது – அரியானாவில் பாஜக மற்றும் ஜேஜேபி தலைவர்களுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டங்கள் எல்லா இடங்களிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன !

ஏற்கனவே அறிவித்தபடி, மழைக்கால கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும், நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களுக்கான திட்டங்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணி முன்னெடுத்து வருகிறது. ஜந்தர் மந்தரில் ஒவ்வொரு நாளும் 200 போராடும் விவசாயிகள், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த, ஆழமாக ஆராய்ந்து அறிந்த ஜனநாயக வழிமுறைகள் மூலம், விவசாயிகளின் நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டுவார்கள். எஸ்.கே.எம்மின் 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு, டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் சந்தித்து பேச்சுவாத்தை நடத்தியது. அதன்படி, நாடாளுமன்ற எதிர்ப்புத் திட்டங்கள் ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும் செயல்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் 200 பேரும், ஒவ்வொரு நாளும் சிங்கூர் எல்லையிலிருந்து அடையாள அட்டைகளுடன் புறப்பட்டுச் செல்லுவார்கள். எந்தவொரு ஒழுங்கு மீறலும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் எஸ்.கே.எம். கூறியுள்ளது.

தற்போதைய விவசாயிகள் போராட்டம் ஏற்கனவே நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த பெரிதும் உதவியுள்ளது. மக்களின் முக்கிய பிரச்சினைகளை எழுப்புவதில் விவசாயிகள் போராட்டம் இதுவரை ஒரு எதிர்க்கட்சியின் ஆக்கபூர்வமான பங்கை அளித்துள்ளது. இந்திய குடிமக்களில் பெரும் பகுதியினராகிய விவசாயிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து பொறுப்பேற்றலை (accountability) எதிர்பார்ப்பதோடு, ஆட்சிமுறையானது சாதாரண குடிமக்களுக்கு நெருக்கமாகவும், எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் கோருகின்றனர். விவசாயிகள் போராட்டம், வேளாண்மை மற்றும் (விவசாய) சந்தைகள் தொடர்பான சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றுவதற்கு எதிராக ஒரு பெரிய சவாலை முன்வைத்துள்ளது; ஏனைனில் இது மாநில அரசின் அதிகாரத்திற்குள்பட்டது. தற்போதைய போராட்டம் கொள்கை மற்றும் சட்டங்களை உருவாக்கும்போது, குடிமக்களின் பார்வையில், அவர்கள் தேவைகள் மற்றும் அனுபவங்களை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சட்டப்பூர்வமான கருத்துக்களையும் எழுப்பியுள்ளது. விவசாயிகள் ஏற்கனவே “விவசாயத்தைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளனர். ஜூலை 22 முதல் ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள், களப் பிரச்சினைகளை முன்வைக்கும். மேலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட மக்களின் ஆணை (People’s Whip), நாடாளுமன்றத்திற்குள் விவசாயிகளின் பிரச்சினைகள் எழுப்பப்படுவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என எஸ்.கே.எம். கூறியுள்ளது.

பாராளுமன்றத்தின் மழைக்கால அமர்வின் 2 ஆம் நாளான இன்றும், விவசாயிகள் போராட்டங்களின் கோரிக்கைகளும் முழக்கங்களும் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தன. கோடிக்கணக்கான விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கவனமாகக் கவனித்து வருகிறார்கள் என்பதையும், மக்களின் வேண்டுகோள் பின்பற்றப்படுகிறதா இல்லையா என்பதையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எஸ்.கே.எம் விரும்புகிறது.

இந்திய உணவு மற்றும் விவசாய முறைகள் மீதான பெருநிறுவன கட்டுப்பாட்டிற்கு எதிராகவும், குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் கடமையை இந்திய அரசாங்கம் கைவிடுவதற்கு எதிராகவும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த் கிசான் மோர்ச்சா) போராடுகிறது. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சர்வதேச செயல்பாடு நடந்து வருகிறது. அதாவது ‘ஐக்கிய நாடுகளின் உணவு முறை உச்சி மாநாடு’ (UNFSS) என்று அழைக்கப்படும் உச்சிமாநாட்டிற்கு, முந்தைய கூட்டம் 2021 ஜூலை 26 முதல் 28 வரை ரோமில் நடைபெற உள்ளது. ஆனால் உண்மையான உச்சி மாநாடு அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் நடைபெறும்.

‘ஐக்கிய நாடுகள் சபையின் உணவு முறைகள் உச்சி மாநாட்டில்’ (UNFSS), கார்பரேட் பெருநிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துவதை ஐக்கிய விவசாயிகள் முன்னணி புரிந்து கொண்டுள்ளது. நமது உணவு முறைகளில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு “இயற்கையான நேர்மறை தீர்வுகள்” பற்றி UNFSS, பேசினாலும், கார்ப்பரேட் கையில் எடுத்துக்கொள்ளுவதால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகத் தோன்றுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட குடிமக்களின் கூட்டுறவுகளால் இத்தகைய செயல்முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்குப் பதிலாக, இலாபம் மற்றும் செல்வக் குவிப்பு ஆகியவற்றைக் குறியாகக் கொண்டுள்ள பெரும்பாலும் டாவோஸில் காணப்படும் நிறுவனங்களால், பொறுப்பேற்கப்பட இருக்கிறது. இவை உள்நாட்டு அறிவு மற்றும் கண்டுபிடிப்புகள் உட்பட அடிமட்டத்திலிருந்து உருவான முற்போக்கான தீர்வுகளைப் பிரதிபலிக்கும் நிறுவனங்களாகப் பொய் தோற்றமளிக்குமே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காகத் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இலாப வேட்கை கொண்ட நிறுவனங்களின் பசுமையான தோற்றம் மற்றும் பிற தந்திரோபாயங்களால் உலக மக்கள் ஏமாற மாட்டார்கள். சமூக சமத்துவம், பொருளாதார நீதி மற்றும் சாதாரண குடிமக்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கான இலாபம், சுற்றுச்சூழல் நிலைப்புத் தன்மை, ஊட்டச்சத்து பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தைக் மட்டுப்படுத்தல் மற்றும் அதற்கேற்றபடி மாற்றியமைத்தல், இயற்கை வளங்களை மீட்டுருவாக்கம் செய்தல், அத்தகைய வளங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில், அவைகளை விவசாயிகள் கையில் எடுத்து, உணவு முறைகளை கூட்டாக நாங்கள் சரி செய்து கொள்ளும் நேரம் இது. உண்மையான உள்ளூர்மயமாக்கப்பட்ட தீர்வுகளை மாற்றுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதோடு, அடிப்படை கட்டமைப்பு மாற்றங்களுடன் நமது உணவு முறைகள் மீது சமூகத்தின் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்று மீண்டும் உறுதிப்படுத்துகிறது. UNFSS செயல்பாடுகளில் கார்பரேட் பெருநிறுவன ஆலோசகர்கள் மற்றும் பிறரின் உத்தரவின் பேரில் இத்தகைய உள்ளூர்மயமாக்கப்பட்ட நிலையான உணவு முறைகளை புறக்கணிக்க முடியாது.

சிர்சா நகரில், சர்தார் பல்தேவ் சிங் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், இன்று 3 வது நாளாகத் தொடர்கிறது. நிர்வாகத்துக்கும் உழவர் தூதுக்குழுவிற்கும் இடையே நேற்று ஒரு சந்திப்பு நடந்த பின்னரும், அதே நிலைப்பாடுதான் தொடர்கிறது. ஜூலை 11, 2021 அன்று அரியானா சட்டமன்ற துணை சபாநாயகர் ரன்பீர் கங்வாவுக்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயரில் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட ஐந்து எதிர்ப்பாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் எஸ்.கே.எம். கோருகிறது. சிர்சாவில், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு எதிராக நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ரமாயன் டோல் பிளாசாவிலிருந்து, அங்குக் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு பெரிய கூட்டம் அவரைத் திருப்பி அனுப்பியது. சார்க்கி தாத்ரியில், மற்றொரு பாஜக தலைவர் பபிதா போகாட்டுக்கு எதிராக விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டங்களை நடத்தினர்.

சண்டிகரில், கைது செய்யப்பட்ட மூன்று வேளாண் ஆர்வலர்களுக்கு நேற்று பிணை கிடைத்தது. இரண்டு பாஜக தலைவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக, சண்டிகர் காவல்துறையால் குற்றத்தை நிரூபிக்க முடியாததால், பிணை வழங்கப்பட்டது. சண்டிகர் காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் மீது பொய்யான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட வழக்குகளுக்கு வழிவகுத்த எஃப்.ஐ.ஆர்களை ரத்து செய்ய போராட்டக்காரர்கள் சார்பாக வக்கீல்கள் குழு விண்ணப்பிக்கும்.

கர்நாடகாவில், விவசாயிகள் 2021 ஜூலை 21ஆம் நாளை கடக் மாவட்டத்தின் நர்கண்டில் 41வது தியாகிகள் நினைவு தினமாக கொண்டாடுகிறார்கள். 1980இல் இந்த நாளில்தான், அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட “மேம்பாட்டு வரி” என்று அழைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் இரண்டு விவசாயிகள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு தியாகிகள் நினைவிடத்தில் எஸ்.கே.எம். முக்கியமாக இடம்பெறும்.

அறிக்கையை வழங்கியவர்கள்
பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் தல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவ்குமார் சர்மா ‘கக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா) samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here