ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

செய்தி வெளியீடு

267வது நாள், 20 ஆகஸ்டு 2021.

••• மத்திய இணை அமைச்சர்களுக்குப் பிறகு, விவசாயிகளின் கறுப்புக் கொடி போராட்டங்களை எதிர்கொள்வது மத்திய கேபினட் அமைச்சரின் முறையாக உள்ளது !

••• பஞ்சாப் மாநிலத்தில், கரும்பு விவசாயிகள், கொள்முதல் விலையை உயர்த்திக் கேட்டும், நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் போராடுகிறார்கள் – கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அமிர்தசரஸ் – கொல்கத்தா பாதையில் ரயில் தண்டவாளத்தை ஆக்கிரமித்துப் போராட்டம் !

••• பஞ்சாபில் அழிவை நோக்கி செல்லும் பாஜகவை, மேலும் பல பாஜக தலைவர்கள் கைவிடுகின்றனர் !

••• விவசாயிகள் போராட்டம், இந்தியா முழுவதும் அதிக ஆதரவைத் திரட்டுகிறது : SKM !

••• மத்திய கேபினட் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிக்கைகள் பொய்யானவை மற்றும் தவறானவை !

••• விவசாயிகள் மீது விரோதத்தை வளர்க்கும் அரியானா மாநில அரசின் ‘அன்னபூர்ணா உத்சவ்’ அரியானா குடிமக்களால் மாநிலம் முழுவதும் பரவலாக எதிர்க்கப்படுகிறது !

மத்திய இணை அமைச்சர்கள் ஷோபா கரண்ட்லாஜே மற்றும் அஜய் பட் ஆகியோருக்குப் பிறகு, தற்போது மோடி அரசின் கேபினட் அமைச்சர்களின் முறை என்பது போல, விவசாயிகளின் கோபத்தையும், கறுப்புக் கொடி எதிர்ப்பையும் கேபினட் அமைச்சர் எதிர்கொண்டிருக்கிறார். இளைஞர் மற்றும் விளையாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புக்கான மத்திய கேபினட் அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், மக்களிடம் ஆசீர்வாதப் பயணமாக இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்லும் போது, சண்டிகரில் நேற்று விவசாயிகள் போராட்டத்தை எதிர்கொண்டார். மோடி அரசின் விவசாயிகள் விரோத சட்டங்கள் மற்றும் தற்போதைய போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராக் தாக்கூருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டினார்கள். போராட்டம் நடத்திய நான்கு விவசாயிகளைச் சண்டிகர் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தது. சண்டிகரின் மத்திய மார்க்கில் நேற்று நடந்த போராட்டத்தின் போது, ​​பாஜகவினர், பெண் போராளிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்திகள் மற்றும் வீடியோக்கள் வந்துள்ளன. SKM இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோருகிறது.

கரும்பு விலையை உயர்த்தக் கோரியும், விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய 200 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும், பஞ்சாப் விவசாய சங்கங்கள், ஜலந்தர் NH-1 இல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த, சுமார் 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் ஜலந்தர்-பாக்வாரா இடையே, பரபரப்பான நெடுஞ்சாலையில் தனோவலியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழ் கூடியிருந்தனர். போராட்ட இடத்தின் அருகே உள்ள அமிர்தசரஸ்-கொல்கத்தா இரயில் பாதையில் தண்டவாளத்தை மாலையில் இருந்து ஆக்கிரமிக்க தற்போது விவசாயத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகள் மாநில அரசுக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, பஞ்சாப் முதல்வர் வரும் அரவைப் பருவத்தில் (crushing season) இருந்து கரும்பு மீதான SAPஐ (மாநில பரிந்துரை விலை) குவிண்டாலுக்கு 15 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்தார். இதை விவசாயத் தலைவர்கள் உறுதியாக நிராகரித்து, இந்த அற்ப உயர்வால் போராடும் விவசாயிகளை அரசாங்கம் கேலி செய்கிறது என கூறியுள்ளனர். SAPயின் (மாநில ஒப்புக்கொள்ளப்பட்ட விலை) கீழ் நிர்ணயிக்கப்பட்ட கரும்பின் விலை பஞ்சாபில் 2017-18க்கு பிறகு உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபில் விலை குவிண்டாலுக்கு 295 முதல் 310 ரூபாய், ஆனால் அண்டை மாநிலமான அரியானாவில் குவிண்டாலுக்கு ரூ.340-345.

பஞ்சாபில் அழிவை நோக்கி சென்று கொடிருக்கும் பா.ஜ.க.விலிருந்து, மேலும் பல தலைவர்கள் விலகியுள்ளனர். அதன் விவசாயி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக, பாரதீய ஜனதா கட்சியைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் தைரியமாக பேசியதற்காக வெளியேற்றப்பட்ட முந்தைய கேபினட் அமைச்சர் தவிர, அரை டஜன் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். இந்த விலகல்கள் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின், விவசாயிகள் விரோத நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தவையாகும். இன்னும் அதிக விலகல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பல பிஜேபி தலைவர்கள் கடந்த காலங்களில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு, போராட்டத்தின் காரணத்திற்காகவும், கோரிக்கைகளுக்காகவும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். இப்போது, ​​ஆர்எஸ்எஸ்-இன் உறுப்பு அமைப்பாக உள்ள பாரதிய கிசான் சங்கம் (பி.கே.எஸ்) பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதில் அனைத்து விவசாயிகளுக்குமான குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குமாறும், தவறினால் அகில இந்திய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் எம்எஸ்பி உத்தரவாத சட்டத்தை இயற்றுவது குறித்து மோடி அரசு உறுதியளிக்கவில்லை என்றால், செப்டம்பர் 8ஆம் தேதி மாவட்ட அளவிலான போராட்டங்களை நடத்தப்போவதாக பி.கே.எஸ் இறுதி அறிவிப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையில், போராடும் விவசாயிகள் இந்தியா முழுவதும் அதிக ஆதரவைத் திரட்டிக் கொண்டிருக்கின்றனர். தெரிந்தபடி, செப்டம்பர் 5 ஆம் தேதி உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்காக, மேற்கு உ.பி.யில் பல்வேறு காப்ஸ் (ஜாட் இன குழுக்கள்) தங்களுடைய கூட்டங்களை நடத்துகின்றன. அவைகளில் சில காப்களில் பழைய பிரச்சினைகளை மறந்து, நிகழ்ச்சியின் வெற்றிக்காக ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.

பீகாரில் விவசாய சங்கங்கள், சம்பாரனிலிருந்து வாரணாசிக்கு, நவ நிர்மாண் கிசான் சங்கதன் தலைமையில் அக்டோபர் 2ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அக்டோபர் 19, 2021 வரை, கிசான் சத்தியாகிரகப் நடைபயணத்தை அறிவித்துள்ளன.

ஜார்கண்டு மாநிலத்தில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு (AIKSCC) சார்பாக, செப்டம்பர் 12ஆம் தேதி ராஞ்சியில் மாநில அளவில் மாநாடு நடத்தவும், அக்டோபர் 4ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தவும் திட்டமிட்டு, அவைகளுக்கான தயிரிப்புக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. சத்தீஸ்கர் கரியாபந்தின் ராஜிமில், டெல்லி எல்லையில் 9 மாத போராட்டத்தை நிறைவு செய்யும் வகையில், செப்டம்பர் 28ஆம் தேதி மாநில அளவிலான விவசாயிகள் மகாபஞ்சாயத்துத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயச் சட்டங்களுக்கு ஆதரவாக நேற்று வெளியிட்ட அறிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. சட்டங்களில் சிக்கல் என்பது ஒன்று அல்லது இரண்டு உட்பிரிவுகளில் அல்ல; மாறாக சட்டங்களின் குறிக்கோள் மற்றும் கொள்கை திசைவழி என, சட்ட விதிகளுக்குள் பல உள்ளன என்று SKM சுட்டிக்காட்டுகிறது. இதைப் போராடும் விவசாயிகள் மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு விளக்கியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த விவசாயிகளின் நாடாளுமன்றத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் கணிசமான நேரத்தை, விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களின் தன்மையைப் பகுப்பாய்வு செய்வதற்கும், விளக்குவதற்கும் செலவழித்தார்கள். விவசாயிகள் சட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் மற்றும் அதன் அமைச்சர்கள் கூறிய நொண்டி சாக்கு இனி பலிக்காது. ராஜ்நாத் சிங் போன்ற அமைச்சர்கள் இந்த வார்த்தைகளை கூறி விவசாயிகளை அவமதிக்கக் கூடாது. மேலும், குறைந்தபட்ச ஆதாரவிலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறுவது தவறு. சட்டங்களில் சில குறிப்பிட்ட விதிமுறைகள் மட்டுமே மாற்றப்படும் என்ற மோடி அரசின் நிலைப்பாடு ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்குப் பொருந்தாது என்று எஸ்.கே.எம் கூறுகிறது.

அரியானாவில், “அன்னபூர்ணா உத்சவ்” என்ற பெயரில் விவசாயிகளுக்கு எதிரான முகங்களை (தலைவரின் படங்களை) ஊக்குவிக்கும் மாநில அரசின் முயற்சிக்கு எதிராக, மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளூர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எம்எல்ஏக்கள் பங்கேற்க முயன்ற அந்த நிகழ்வுகளில், பெரிய எதிர்ப்புகள் மற்றும் விரைவான நெடுஞ்சாலை சாலைமறியல் இருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாயிகளுக்கு எதிரான பாஜக தலைவர்களுக்கு எதிரான போராட்டம் என்று தெளிவுபடுத்தினர். சில நிகழ்வுகளில், கறுப்புக்கொடி போராட்டங்கள் மற்றும் விவசாயிகள் அதிக அளவில் திரண்டதால் எம்எல்ஏக்கள் தங்கள் பங்கேற்பை ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில், விவசாயிகள் பிரதமர் மோடி, முதலமைச்சர் கட்டார் மற்றும் துணை முதல்வர் சவுதாலாவின் (ரேசன் கடைகளில் வினியோகிக்கப்பட்ட தானியங்களுக்கான பைகள்) புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பைகளை எரித்தனர். பல இடங்களில் பல விவசாயிகள் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராடும் விவசாயிகளின் திடமான உறுதிக்கு எஸ்.கே.எம் வணக்கம் செலுத்துகிறது. நேற்று பல்வால் போராட்ட களத்தில் பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்திய போதிலும், உள்ளூர் ஆதரவைத் திரட்டிய பிறகு, களத்தில் வழக்கம் போல் போராட்டம் தொடர்கிறது.

அறிக்கையை வழங்கியவர்கள் :

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here